இரண்டாம் உறைவிடங்கள்
செபத்தில் சாந்தத்துடன் நிலைத்திருத்தல்
பாடம் பதினான்கு: இரண்டாம் உறைவிடங்களுக்குள் நுழைதல்
இந்த அத்தியாயத்தில், செப வாழ்விலும் மனமாற்ற வாழ்விலும் தொடக்க நிலையில் இருக்கும் தம் சகோதரிகள், அந்தப் பயணத்தில் நிலைத்திருக்குமாறு புனித தெரேசா ஊக்குவிக்கிறார். மனச் செபப் பயிற்சியையும் நற்பண்புகளில் வளர்வதையும் ஊக்குவிப்பதன் வழியாக அவர் இதைச் செய்கிறார்.
ஏற்கெனவே செபப் பயிற்சியைத் தொடங்கி, முதல் மாளிகைகளிலேயே [உறைவிடங்களிலேயே] தங்கிவிடாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களைப் பற்றியது இந்த அத்தியாயம். எனினும், அந்த மாளிகைகளை [உறைவிடங்களை] விட்டு வெளியேறுவதற்குப் போதிய மனஉறுதி பெரும்பாலும் அவர்களுக்கு இன்னும் இல்லை; பாவத்திற்கு இட்டுச்செல்லும் சந்தர்ப்பங்களையும் அவர்கள் தவிர்ப்பதில்லை. இது மிகவும் ஆபத்தான ஒரு நிலையாகும் (II.I #2).
இரண்டாம் உறைவிடங்களில் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தடைகளில் இரண்டு: செபத்தை விட்டு விலகுவதும், மீண்டும் பாவத்தில் விழுவதும் ஆகும். மனச் செபப் பயிற்சியின் வழியாகத் தங்கள் நற்பண்புகளை வலுப்படுத்துவதே இவற்றுக்கான தீர்வாகும்.
மனச் செபம் என்பது உதடுகளால் மட்டுமல்ல, மனத்தாலும் கடவுளோடு உறவாடுவதைக் குறிக்கிறது. ஒருவருடைய மனம் வேறெங்கோ இருக்கும்போதும், அவர் தம் உதடுகளால் செபங்களைச் சொல்லக்கூடும். புனித தெரேசாவைப் பொறுத்தவரை, இது செபம் அல்ல. ஒருவர் மரபுவழிச் செபம் ஒன்றைச் சொல்லும்போது, சொல்லப்படும் அனைத்திலும் கவனம் செலுத்துவது மனச் செபத்தின் ஒரு வடிவமாகும். பலருக்கு, இது பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், உண்மையில் அவ்வளவு எளிதானதல்ல. எடுத்துக்காட்டாக, “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே” என்னும் செபத்தைச் சொல்லும்போது, ஆழ்ந்த மனநோக்கமோ, நாம் சொல்வதைப் பற்றிய உணர்வோ பெரிதாக இல்லாமல், பெரும்பாலும் சொற்களை மட்டுமே சொல்கிறோம். இதற்கான ஒரு தீர்வு, ஒவ்வொரு சொல்லையும் சொல்லும்போதே அதைத் தியானித்தவாறு, அந்தச் செபத்தை மெதுவாகச் சொல்வதாகும்.
மனச் செபத்தின் மற்றொரு வடிவம் தியானம். மறைநூல் பகுதி ஒன்றையோ, கடவுளைப் பற்றிய மறைக்கோட்பாட்டு உண்மை ஒன்றையோ போன்ற நமது நம்பிக்கையின் ஓர் உண்மையை ஆழ்ந்து சிந்திக்கும் பயிற்சியே தியானம். ஒருவர் தியானிக்கும்போது, அந்த உண்மையை வேண்டுமென்றே தம் மனத்தில் பதித்து, பல்வேறு கோணங்களிலும் பல்வேறு வழிகளிலும் அதை மீண்டும் மீண்டும் சிந்திக்கிறார். சில வேளைகளில் இந்தத் தியானத்தில் கற்பனை அதிகமாக ஈடுபடுகிறது; வேறு சில வேளைகளில் மனிதப் பகுத்தறிவு முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. செபத்தின் பல்வேறு முறைகளைப் பற்றிய விரிவான விளக்கத்திற்கு இந்நூலின் முன்னுரையைப் பார்க்கவும்.[1]
ஒருவர் மனச் செபத்தைப் பயிலத் தொடங்கும்போது, அவருடைய சித்தம் வலுப்பெறுகிறது; நற்பண்புகளின் மீதான ஆர்வத்திலும் அவர் வளரத் தொடங்குகிறார். தமது கடந்தகாலப் பாவங்களின் மதியீனத்தை உணர்ந்து, அவற்றை மேற்கொள்ளத் தொடங்குகிறார். ஆனால் இது ஒரு போராட்டம். இந்த அத்தியாயத்தின் பெரும்பகுதி அந்தப் போராட்டத்தையே மையமாகக் கொண்டு, ஆன்மா நிலைத்திருக்கவும், முந்தைய வாழ்க்கை முறைக்குத் திரும்பிச் செல்லாமல் இருக்கவும் ஊக்குவிக்கும்.
சிந்தனை: உங்கள் செப வாழ்வை விவரிக்க வேண்டுமென்றால், அதைப் பற்றி என்ன சொல்வீர்கள்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் நீங்கள் எவ்வாறு செபிக்கிறீர்கள்? எவ்வளவு அடிக்கடி செபிக்கிறீர்கள் என்பதைச் சிந்திப்பதிலிருந்து தொடங்குங்கள். செபத்தைத் தவிர வேறு எதற்கும் அல்லாமல், செபத்திற்காக மட்டுமே ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்குகிறீர்களா? இல்லையென்றால், புனிதத்தின் இந்த இரண்டாம் நிலைக்குள் நீங்கள் நுழையத் தொடங்குவதற்கு இது அவசியமான ஒரு படியாகும்.
ஒவ்வொரு நாளும் செபிப்பதற்கு நீங்கள் நேரம் செலவிடுகிறீர்கள் என்றால், அந்தச் செபம் எவ்வளவு ஆழமானதாக இருக்கிறது? உண்மையான பொருளில் ஒருவர் செபிக்கிறார் என்பதற்கு, செபங்களை வாயால் சொல்வது மட்டுமே போதாது. நீங்கள் செபங்களைச் சொல்லும்போது, நீங்கள் சொல்லும் அனைத்தையும் கவனமாகச் சிந்திக்கிறீர்களா? அந்தச் செபங்களையோ, மறைநூல் பகுதிகளையோ, நமது நம்பிக்கையின் மறைக்கோட்பாடுகளையோ தியானிப்பதற்கும் நேரம் செலவிடுகிறீர்களா?
ஒவ்வொரு நாளும் செபிக்கத் தீர்மானியுங்கள்; அந்தச் செபத்தை உண்மையான செபமாக்கவும் தீர்மானியுங்கள். கடந்த காலத்தில் உங்கள் செப வாழ்வு குறுகிய அளவிலேயே இருந்திருந்தால், மனம் தளராதீர்கள். மாறாக, இதை உணர்ந்துகொண்டதற்காக நன்றியுடன் இருங்கள்; ஒவ்வொரு நாளும் உண்மையாகச் செபிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள உறுதியாகத் தீர்மானிக்க இந்த உணர்வைப் பயன்படுத்துங்கள்.
என் அன்பு ஆண்டவரே, உண்மையான செப வாழ்வுக்கு நீர் என்னை அழைத்திருக்கிறீர். நீர் விரும்பும் விதங்களில் செபப் பயிற்சிக்கு உண்மையுள்ளவனாக இருக்க நான் தவறிவிட்டேன். என் வாழ்வின் மிக அடிப்படையான இந்தப் பகுதிக்கு ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்குவதற்கான என் தீர்மானத்தை வலுப்படுத்த எனக்கு உதவியருளும். அன்பு ஆண்டவரே, நான் உம்மை என் முழு இதயத்தோடும் அறிந்து அன்புசெய்யும்படி, செபிக்க எனக்குக் கற்றுத்தாரும்.
என்னுள் உறையும் அதிபரிசுத்த மூவொரு இறைவனே, நான் உம்மை அன்பு செய்கிறேன், உம்மை நம்புகிறேன், என் வாழ்வை உம்மிடம் ஒப்படைக்கிறேன்.
பாடம் பதினைந்து: ஆண்டவர் பேசுவதைக் கேட்டல்
இரண்டாம் உறைவிடங்களில் இருக்கும் ஒருவர் பெறும் மிகப்பெரிய ஆறுதல்களில் ஒன்று, தமது செபத்தின் வழியாகக் கடவுள் பேசுவதைக் கேட்கும் திறனாகும். எனினும், கடவுளின் மென்மையான குரலுக்கு முழுமையாகப் பதிலளிக்க இயலாதது அவருக்குப் பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.
நம்முடைய இந்த ஆண்டவர், நாம் அவரை விரும்பி, அவருடைய தோழமையை நாடி முயல வேண்டும் என்பதில் மிகுந்த ஆவலுடன் இருப்பதால், தம்மை அணுகி வருமாறு இடைவிடாமல், மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கிறார். அவருடைய இந்தக் குரல் எவ்வளவு இனிமையானது என்றால், அவருடைய விருப்பத்தை உடனடியாக நிறைவேற்ற இயலாததால் அந்த எளிய ஆன்மா துயரத்தில் ஆழ்ந்துவிடுகிறது. இவ்வாறு, நான் சொல்வதுபோல, அவருடைய குரலைக் கேட்க முடியாமல் இருந்திருந்தால் அடையும் துன்பத்தைவிட அதிகமாக அது துன்புறுகிறது (II.I #4).
இந்த உறைவிடங்களில் இருக்கும் ஒருவர் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுவார்; பின்னர் செபத்தின் வழியாக அந்தப் பாவத்திலிருந்து மீண்டும் எழுவார். இது வேதனைமிக்க ஒரு போராட்டம்; முன்பைவிட அதிகமான ஆன்மிகத் துன்பத்தை இது ஏற்படுத்துகிறது. தாம் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதை அவர் காணத் தொடங்கியிருப்பதாலும், தமது பலவீனத்தையும் பாவத்தையும் கண்டு மனம் தளர்வதாலும் இந்தத் துன்பம் ஏற்படுகிறது. சில விதங்களில், முதல் உறைவிடங்களில் இருப்பது எளிதாக இருந்தது; ஏனெனில் தம்முடைய பல பாவங்களைப் பற்றி அவர் அப்போது அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் இரண்டாம் உறைவிடங்களில் அனுபவிக்கும் துன்பம் நல்லதே; ஏனெனில் தொடர்ந்து முன்னேறவும் மாற்றம் அடையவும் அது ஓர் உந்துதலாக அமைகிறது. இறையன்பால் தமது இதயம் எவ்வளவு அதிகமாகப் பற்றியெரிகிறதோ, அவ்வளவு அதிகமாக உள்ளார்ந்த ஆன்மிகத் துன்பத்தை அனுபவிக்கும் திறனும் தமக்கு ஏற்படுகிறது என்ற முரணாகத் தோன்றும் உண்மையை அவர் புரிந்துகொள்ளத் தொடங்குகிறார். இதுவும் நல்லதே; ஏனெனில் ஓர் ஆன்மா ஆழமாக அன்புசெய்யும் திறனைப் பெறும்போது, அந்த அன்பில் தவறும் வேளைகளில் இன்னும் அதிகமான துன்பத்தை அனுபவிப்பதற்கும் தன்னைத் திறந்துகொள்கிறது.
இந்த நிலையில் இவையெல்லாம் சாத்தியமாகின்றன; ஏனெனில் முதன்முறையாக, கடவுள் தம்மிடம் பேசுவதை ஒருவர் கேட்கத் தொடங்குகிறார். மறைநூல்களைத் தியானிப்பதன் வழியாகக் கடவுளின் திருவுளத்தை அவர் புரிந்துகொள்ளத் தொடங்குகிறார். இயேசுவின் வாழ்வைச் சிந்திப்பதன் வழியாக அவரைப் பின்பற்றி வாழ உந்துதல் பெறுகிறார். பல்வேறு மரபுவழிச் செபங்களைச் செப உணர்வுடன் சொல்வதன் வழியாக, தாம் சொல்வதை உள்ளத்தில் ஆழமாக ஏற்கத் தொடங்குகிறார். ஆன்மிக வாசிப்பு, மறையுரைகளைக் கவனமாகக் கேட்டல் மற்றும் பிற ஆன்மிகப் பயிற்சிகள் வழியாகக் கடவுளின் குரல் மேலும் மேலும் தெளிவாகிறது. இவ்வழிகளில் கடவுள் பேசுகிறார்; அவரும் கேட்கிறார்.
சிந்தனை: செப உணர்வுடன் தியானிக்கும் பயிற்சியில் நீங்கள் ஈடுபடும்போது, கடவுள் உங்களிடம் என்ன பேசுகிறார்? நீங்கள் என்ன “கேட்கிறீர்கள்?” கடவுள் பல்வேறு வழிகளில் பேசுகிறார்; அவருடைய குரலை உணர்ந்தறிய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த வாரத்தில், ஒரு குறிப்பிட்ட செபத்தைச் செபித்து, அதன் பொருளைத் தியானித்தபோது, அந்தச் செபத்தின் ஏதாவது ஓர் அம்சம் உங்களை ஈர்த்ததா? அப்படியானால், கடவுள் உங்களிடம் பேசுவதாக அது இருக்கலாம். அன்றாடப் பணிகளில் நீங்கள் ஈடுபட்டிருக்கும்போதும், உங்கள் செபத்தில் தோன்றிய ஏதாவது ஓர் உருவகத்திற்கு உங்கள் மனம் மீண்டும் மீண்டும் திரும்புகிறதா? அப்படியானால், தமது திருவுளத்தை உங்களுக்கு வெளிப்படுத்தும் கடவுளின் குரலாக அது இருக்கலாம். ஒரு மறையுரையோ, ஆன்மிக நூலோ, வேறு ஏதாவது பக்திமுயற்சியோ உங்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறதா? அப்படியானால், அந்தப் புனிதப் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுங்கள்.
நீங்கள் செப உணர்வுடன் தியானித்த பிறகு, உங்கள் செபத்தில் உங்களை மிகவும் தொட்டது எது என்பதைச் சிந்திப்பதற்குச் சிறிது நேரம் செலவிடுங்கள். பின்னர், அந்தத் தியானத்திற்குப் பிறிதொரு வேளையில் மீண்டும் திரும்புங்கள். சுவையான உணவையோ விடுமுறையையோ ஒருவர் ரசித்து அனுபவிப்பதுபோல், அதை ரசித்து அனுபவியுங்கள்.
உங்கள் பாவத்தையும் எண்ணிப் பாருங்கள். நீங்கள் செபிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட பாவம் உங்கள் நினைவுக்கு வந்து, அந்தப் பாவத்தைக் குறித்து நீங்கள் வெட்கமடைந்தால், உங்கள் வாழ்வில் இப்போது நீங்கள் கவனம் செலுத்த வேண்டுமென்று கடவுள் விரும்புவது அதுவாகவே இருக்கக்கூடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதைப் பற்றியே அளவுக்கு மீறிச் சிந்தித்துக்கொண்டிருக்காதீர்கள்; அதை உணர்ந்திருங்கள், அதை வெல்வதற்கான அருளை வேண்டிச் செபியுங்கள், அந்த அருளுடன் ஒத்துழைக்க உறுதியாகத் தீர்மானித்து, முன்னேறுங்கள். மீண்டும் அந்தப் பாவத்தில் விழுந்தால், முயற்சியைக் கைவிடாதீர்கள்; மனமும் தளராதீர்கள். தொடர்ந்து செபியுங்கள்; கடவுளின் குரலைத் தொடர்ந்து கேளுங்கள். உங்கள் பங்கை நீங்கள் செய்து, ஒருபோதும் முயற்சியைக் கைவிடாமல் இருந்தால், உங்கள் வாழ்விலுள்ள ஒவ்வொரு பாவத்தையும் வெல்ல அவர் உங்களுக்கு உதவ முடியும், உதவுவார் என்று நம்புங்கள்.
மிகுந்த பொறுமையுள்ள இயேசுவே, இரவும் பகலும் நீர் என்னிடம் பேசுகிறீர்; இருந்தும் பல வேளைகளில் நான் செவிகொடுக்கத் தவறுகிறேன். உமது மென்மையான, தெளிவான குரலை நான் அறிந்துகொள்ளும்படி, என் நம்பிக்கையின் செவிகளைத் திறந்தருளும். உமக்குச் செவிகொடுத்து, நீர் சொல்வதையெல்லாம் செய்ய மகிழ்ச்சியுடனும் உறுதியான தீர்மானத்துடனும் மறுமொழி அளிக்க எனக்கு உதவியருளும்.
என்னுள் குடிகொண்டிருக்கும் அதிபரிசுத்த மூவொரு இறைவனே, நான் உம்மை அன்புசெய்கிறேன், உம்மை நம்புகிறேன், என் வாழ்வை உம்மிடம் ஒப்படைக்கிறேன்.
பாடம் பதினாறு: விடாமுயற்சி
செபம், மறையுரைகள், ஆன்மிக வாசிப்பு அல்லது பிற வழிகள் மூலம் கடவுள் நம்மிடம் பல்வேறு விதங்களில் பேசும்போது, அவருடைய குரலை நாம் கேட்கவும் புரிந்துகொள்ளவும் தொடங்குகிறோம். அப்போது நாம் போராட வேண்டிய ஓர் உள்மனப் போராட்டம் இருக்கும். சில வேளைகளில், தொடர்ந்து முன்னேறும் நமது திறனைக் குறித்து நாம் ஐயப்படுவோம்; வாழ்வு எளிதாக இருந்த நமது முந்தைய ஆன்மிக நிலைக்குத் திரும்புவதைப் பற்றியும் எண்ணுவோம். நாம் விடாமுயற்சியுடன் நிலைத்திருந்து, புனிதத்தில் வளர வேண்டும் என்ற விருப்பத்தை அணைத்துவிடாமல் இருந்தால், கடவுள் நம்மிடம் பொறுமையுடன் இருப்பார்.
…ஏனெனில் மாண்புமிகு ஆண்டவர் பல நாள்கள், ஏன் பல ஆண்டுகள்கூடக் காத்திருக்க முற்றிலும் ஆயத்தமாக இருக்கிறார்; குறிப்பாக, நாம் விடாமுயற்சியுடன் நிலைத்திருப்பதையும் நல்ல விருப்பங்களைக் கொண்டிருப்பதையும் அவர் காணும்போது அவ்வாறு இருக்கிறார். இங்கு மிகவும் தேவையானது இதுவே; இது நம்மிடம் இருந்தால், நாம் பெரும் பயன் அடையாமல் போக முடியாது (II.I #6).
ஆன்மிக வளர்ச்சியின் இந்த நிலையில் விடாமுயற்சியுடன் நிலைத்திருப்பது மிக முக்கியம். நம்மீது ஆயிரம் சோதனைகள் வீசப்படும். நமது பயணத்தைக் கைவிடும் எண்ணங்களைத் தூண்டி, தீய ஆவிகள் நம்மைக் கொடூரமாகத் தாக்கும். நமது முந்தைய பாவங்களை நினைவுகூர்ந்து, அவற்றிற்குத் திரும்புவதைப் பற்றி நாம் எண்ணுவோம். கடவுளை அன்புசெய்ய வேண்டுமென்ற நமது விருப்பம் வளரும்போது, நாம் மாற வேண்டியதன் அவசியத்தையும், இந்தப் பயணத்தில் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதையும் கண்டுணர்வதால், ஒரு புதிய வகையான உள்மனத் துன்பத்தை அனுபவிப்போம். இது நிகழும்போது, நாம் குறைவாக அன்புசெய்த காலத்திற்குத் திரும்பும் சோதனைக்கு ஆளாவோம்; ஏனெனில் சில விதங்களில் அந்த வாழ்க்கை முறை எளிதாக இருந்தது. இந்த நிலையில், நாம் விடாமுயற்சியுடன் நிலைத்திருக்காவிட்டால், அனைத்தையும் இழந்துவிடுவோம்.
இந்த நிலையில் விடாமுயற்சியுடன் நிலைத்திருக்கச் சிறந்த வழி, உங்கள் ஆன்மாவின் ஆற்றல்களைக் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்பப் பயன்படுத்துவதே. குறிப்பாக, இந்தப் போராட்டத்தில் உங்கள் மனிதப் பகுத்தறிவு, நினைவாற்றல், மனவிருப்பம், புரிந்துணர்வு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் அழைக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் செல்வது எவ்வளவு அறிவீனமானது என்பதை உங்கள் பகுத்தறிவால் உணர வேண்டும். உங்கள் பகுத்தறிவை விசுவாசம் நெறிப்படுத்த வேண்டும்; நல்ல முடிவுகளை எடுக்கவும் தெளிவாகச் சிந்திக்கவும், விசுவாசத்தின் வழியாக நீங்கள் கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்த வேண்டும். பாவத்தின் தீய விளைவுகளை நினைவுகூர உங்கள் நினைவாற்றல் உதவும்; அந்தக் கசப்பான நினைவுகள், இனிவரும் நாள்களில் அவற்றிலிருந்து விலகியிருக்க உங்களைத் தூண்ட வேண்டும். உங்கள் மனவிருப்பத்தால், தெய்வீக அன்பரிடம் நீங்கள் ஈர்க்கப்பட இடமளித்து, அனைத்திற்கும் மேலாக அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது, கடவுளைத் தேர்ந்தெடுப்பதிலுள்ள ஞானத்தையும், உங்கள் வாழ்விற்கான அவரது திருவுளத்தையும், சரியான பாதையில் நீங்கள் செல்லும்போது வரவிருக்கும் பல நன்மைகளையும் உணர்ந்துகொள்ள உங்கள் புரிந்துணர்வு உதவும்.
சிந்தனை: உங்கள் ஆன்மிகப் பயணத்தில் சில நேரங்களில் மனம் தளர்கிறீர்களா? அப்படியானால், உங்கள் மனம் மீண்டும் எதை நோக்கிச் செல்கிறது? முன்பு உங்களிடமிருந்த பாவப் பழக்கங்களையா? நலனுக்குக் கேடான ஓர் உறவையா? கடவுளைக் குறைவாக அன்புசெய்வது எளிதாக இருந்த ஒரு காலத்தையா? நிலையற்ற இன்பங்களையும் சுகபோகங்களையுமா? இவை அறிவீனமான, நலனுக்குக் கேடான நாட்டங்கள் என்று உணர்ந்து ஒதுக்கிவிடுங்கள். உங்களுக்காகக் காத்திருக்கும் மகிமையான வாழ்வை நீங்கள் கண்டறியவிடாமல் தடுக்க முயலும் எண்ணற்ற தீய ஆவிகளிடமிருந்து வரும் சோதனைகளே இவை.
அண்மையில் கடவுள் உங்களிடம் பேசியவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள். ஆறுதலும் ஊக்கமும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பெற்று நீங்கள் உள்ளம் எழுச்சியடைந்த தருணங்களை நினைத்துப் பாருங்கள். இந்த எண்ணங்களை மீண்டும் உங்கள் மனத்தில் நிறுத்துங்கள். உங்கள் மனவிருப்பமும் ஆசைகளும் அவற்றின்மீது நிலைகொள்ள இடமளியுங்கள். கடவுளிடமிருந்து விலகிச் செல்வதிலுள்ள அறிவீனத்தையும், அவரை நோக்கிச் செல்லும் கடினமான, குறுகிய வழியைப் பின்பற்றுவதிலுள்ள ஞானத்தையும் ஆராய்ந்து பாருங்கள். அன்பினால் வரும் துன்பத்திற்கு அஞ்சாதீர்கள். இந்தத் துன்பம் தியாக அன்பாகும்; இது எப்போதும் வாழ்வில் இன்னும் ஆழமான மனநிறைவை அளிக்கிறது. கடவுள் உங்களுக்குத் தந்துள்ள ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்துங்கள். விடாமுயற்சியுடன் நிலைத்திருங்கள், நிலைத்திருங்கள், நிலைத்திருங்கள். கைவிடாதீர்கள், நம்பிக்கை இழக்காதீர்கள்; ஏனெனில் நிறைவு மிகுந்த ஓர் உலகம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.
ஞானமுள்ள என் ஆண்டவரே, எனக்கு மிகச் சிறந்தது எதுவென்று நீர் அறிவீர்; நான் நிறைவடைவதற்கான மிகச் சரியான பாதையையும் நீர் அறிவீர். உமது ஞானத்தைக் கண்டுணரவும் உமது பேரன்பை அனுபவிக்கவும் எனக்கு உதவியருளும். அவ்வாறு நான் செய்யும்போது, அனைத்திற்கும் மேலாக உம்மைத் தேர்ந்தெடுப்பது தொடக்கத்தில் எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், அவ்வாறு தேர்ந்தெடுக்கத் தேவையான மனத்தெளிவை எனக்குத் தந்தருளும். என் ஆன்மாவின் ஆழத்தில் வாழும் உம்மை நோக்கிய என் பயணத்தில் விடாமுயற்சியுடன் நிலைத்திருக்க எனக்கு உதவியருளும். அன்பு ஆண்டவரே, நான் உம்மைத் தேர்ந்தெடுக்கிறேன்; உலகையும், அதன் கவர்ச்சிகளையும், அதன் பொய்களையும் பின்னால் விட்டுச் செல்கிறேன்.
என்னுள் குடிகொண்டிருக்கும் அதிபரிசுத்த மூவொரு இறைவனே, நான் உம்மை அன்புசெய்கிறேன், உம்மை நம்புகிறேன், என் வாழ்வை உம்மிடம் ஒப்படைக்கிறேன்.
பாடம் பதினேழு: நரகத்தின் அனைத்துச் சக்திகளையும் எதிர்த்துப் போராடுதல்
மனத்தளர்ச்சியை வெல்லச் சிறந்த வழிகளில் ஒன்று, உண்மையை ஆயுதமாகக் கொள்வதாகும். நீங்கள் அறிந்திருக்க வேண்டிய ஓர் உண்மை இதுதான்: நீங்கள் புனிதத்தில் வளர்வதைத் தீய ஆவிகள் காணும்போது, தங்களிடமுள்ள ஆற்றல் அனைத்தையும் கொண்டு உங்களைத் தாக்கும்.
இந்த நேரத்தில் ஆன்மா நிச்சயமாகப் பெரும் சோதனைகளைச் சந்திக்கும். குறிப்பாக, அதன் பண்பும் பழக்கங்களும் அது மேலும் முன்னேறத் தயாராக இருப்பதைக் காட்டுகின்றன என்று அலகை கண்டுகொண்டால், அதை மீண்டும் பின்னோக்கித் தள்ள நரகத்தின் ஆற்றல்கள் அனைத்தும் ஒன்றுசேரும் (II.I #11).
இந்த எண்ணம் அச்சமூட்டுவதாக இருக்கலாம்; ஆனால் அது அப்படியிருக்க வேண்டியதில்லை. நம் உலகிலுள்ள வீழ்ச்சியடைந்த தீய ஆவிகள், தாக்கத்தை ஏற்படுத்தவும் எண்ணங்களைத் தூண்டவும் தங்களுக்கு இயல்பாக உள்ள ஆற்றல்களை இன்னும் கொண்டுள்ளன. விண்ணகத்திலிருந்து வீழ்ந்துவிட்டதால், இப்போது அவை அந்த இயல்பான ஆற்றல்களைப் பயன்படுத்தி உங்களைக் கடவுளிடமிருந்து விலக்கவும், தங்களது துயரத்தில் நீங்களும் பங்குகொள்ளும்படி உங்களை இணங்கச் செய்யவும் முயல்கின்றன.
தீயோனிடமிருந்தும் அவனது படைகளிடமிருந்தும் வரும் இந்தச் சோதனைகளை எதிர்த்துப் போராட, அவற்றின் குரல்களை அறிந்துகொள்வது முக்கியம். அவற்றுக்குச் செவிசாய்ப்பதற்காக அல்ல, அவை பேசும் கணமே அவற்றை ஒதுக்கிவிடுவதற்காகவே அவற்றின் குரல்களை அறிந்துகொள்கிறோம்.
ஆன்மிக வளர்ச்சியின் இந்த நிலையில், உங்களை மீண்டும் முந்தைய நிலைக்குத் தள்ளவும், உங்கள் ஆன்மிகப் பயணத்தில் முன்னேறவிடாமல் தடுக்கவும், “நரகத்தின் ஆற்றல்கள் அனைத்தும் ஒன்றுசேரும்” என்று அவிலா புனித தெரேசா மீண்டும் மீண்டும் மிகத் தெளிவாகக் கூறுகிறார். நீங்கள் போதிய அளவு நல்லவரல்ல, போதிய அளவு புனிதமானவரல்ல, முன்பு நீங்கள் அனுபவித்து மகிழ்ந்த பலவற்றைக் கைவிட வேண்டியிருக்கும் என்ற எண்ணங்களை அவை உங்களுக்குள் தூண்டும்; உங்களைத் தடுத்து நிறுத்த இன்னும் ஆயிரம் பொய்களையும் சொல்லும். இந்தத் தீய ஆவிகளின் நம்பிக்கையற்ற தவிப்பிலிருந்து எழுந்து உங்களை நெருக்கும் இந்தப் பொய்களின் படைகளை நீங்கள் எதிர்கொள்ளும்போது, ஆன்மிகப் பயணத்தின் இந்தப் பகுதி மிகவும் வேதனைக்குரியதாக இருக்கலாம். இந்தப் பொய்களை எளிமையாகவும், பகுத்தறிவுடனும், மென்மையாகவும், அமைதியாகவும் பகுத்துணர்ந்து ஒதுக்கிவிடுவதே நோக்கம். அவ்வளவுதான்.
சிந்தனை: நம் ஆண்டவருடனான உங்கள் உறவில் நீங்கள் முன்னேறும்போது, உங்கள் கடந்த காலம், உங்கள் பாவம், உங்கள் போராட்டங்கள் அல்லது மனத்தளர்ச்சியை உண்டாக்கும் பிற எண்ணங்கள் ஆகியவற்றைப் பற்றிச் சில நேரங்களில் இடைவிடாமல் சிந்தித்துக்கொண்டே இருக்கிறீர்களா? அப்படியானால், இவை பெரும்பாலும் உங்கள்மீது பொறாமைகொள்ளும் இந்த வீழ்ச்சியடைந்த வானதூதர்களின் நம்பிக்கையற்ற தவிப்பிலிருந்து வரும் சோதனைகளாக இருக்கக்கூடும். ஆனால் அஞ்சாதீர்கள்; அவற்றை வெல்லும் ஆற்றலைக் கடவுள் உங்களுக்குத் தந்துள்ளார். இருப்பினும், உங்களைத் தடுத்து நிறுத்த அவை எடுக்கும் முயற்சிகளை அறிந்திருப்பது உதவியாக இருக்கும்.
நீங்கள் போராடிக்கொண்டிருக்கும் வலுவான சோதனைகள் எவையேனும் இருந்தால் அவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள். அவற்றை நினைவுகூரும்போது, தீயோன் உங்களிடம் சொல்லும் பொய்களாக அவற்றை அடையாளம் காணுங்கள். அவற்றுக்கு அஞ்சாதீர்கள்; ஏனெனில் இயேசுவும் தாம் சோதிக்கப்பட இடமளித்தார். எல்லாச் சோதனைகளையும் வென்று, நாமும் அவரது பாதையைப் பின்பற்ற இயலச் செய்வதற்காகவே அவர் இவ்வாறு செய்தார்.
நீங்கள் அனுபவிக்கும் சோதனைகள் உங்கள் உள்ளத்தில் துன்பத்தை ஏற்படுத்தினால், அது நல்லதே என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்யும் நன்மையையும் அடைந்துவரும் முன்னேற்றத்தையும் அலகை காண்கிறது என்பதற்கு இது ஓர் அடையாளம். பாவத்தை விலக்கி, இன்னும் அதிகமாகச் செபித்து, நற்பண்புகளில் வளர்வதன் வழியாகக் கடவுளை மேலும் நெருங்கிச் செல்ல உறுதிகொண்டு, அதன் முயற்சிகளை முறியடியுங்கள்.
அனைத்து வல்லமையின் ஆண்டவரே, சோதனையையே வெற்றி கொள்வதற்காகவும், உமது இறை வல்லமையில் நானும் பங்குபெறச் செய்வதற்காகவும், உமது மனித வாழ்வில் பல சோதனைகளைத் தாங்கிக்கொண்டீர். இன்னும் அதிகப் பக்தியுடன் உம்மைப் பின்பற்ற நான் உறுதிகொள்ளும் வேளையில், ஒவ்வொரு தடையையும் சோதனையையும் வெல்ல எனக்குத் தேவையான அருளை வேண்டுகிறேன். நரகத்தின் வல்லமைகள் பல்வேறு வழிகளில் என்னைத் தாக்கும்போது, எனக்காக நீர் போரில் வெற்றி பெறும்படி, அமைதியோடும் நம்பிக்கையோடும் நான் உம்மை நாடுவேனாக.
என்னுள் குடிகொண்டிருக்கும் அதிபரிசுத்த மூவொரு இறைவனே, நான் உம்மை அன்புசெய்கிறேன், உம்மை நம்புகிறேன், என் வாழ்வை உம்மிடம் ஒப்படைக்கிறேன்.
பாடம் பதினெட்டு: ஆன்மிகத் தோழர்கள்
தமது அறிவுரைகளுக்கு இடையே, புனித தெரேசா சற்று நின்று, நடைமுறைக்கு உதவும் ஓர் அறிவுரையை வழங்குகிறார்:
சரியான வழியில் நடக்கும் பிறருடன் ஒருவர் பழகுவது மிகச் சிறந்தது. தாம் இருக்கும் அறைகளில் தம்முடன் இருப்பதாகக் காண்பவர்களோடு மட்டுமல்லாமல், மையத்திற்கு அருகிலுள்ள அறைகளுக்குள் நுழைந்திருப்பதாகத் தாம் அறிந்தவர்களோடும் அவர் பழக வேண்டும். ஏனெனில், அவர்கள் அவருக்குப் பெரிதும் உதவுவார்கள்; அவர்களுடன் அவர் அவ்வளவு நெருக்கமாகப் பழக முடியும் என்பதால், அவர்கள் தங்களுடன் அவரையும் அழைத்துச் செல்வார்கள் (II.I #12).
நம் உள்ளத்தின் ஆழத்தில் ஆன்மிக நட்புக்கான ஏக்கம் உள்ளது. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்து, விண்ணகத்தை நோக்கிய தங்கள் பயணத்தில் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். மற்ற குடும்ப உறுப்பினர்களும் நமது பயணத்தில் ஆன்மிகத் துணையாக விளங்க வேண்டும்.
ஆனால், சில வேளைகளில் குடும்ப உறுப்பினர்கள் நமது பயணத்தில் உதவியாக இருப்பதைவிடத் தடையாகவே இருக்கிறார்கள். அத்தகைய சூழல்களில், அவர்கள்மீது அன்பும் இரக்கமும் காட்டுவதே நமது முதன்மையான அக்கறையாக இருக்க வேண்டும். இருப்பினும், நமது பயணத்தில் நமக்கு ஆன்மிகத் துணைவர்கள் தேவைப்படுகிறார்கள். நமது வாழ்வில் குடும்ப உறுப்பினர்கள் இந்தப் பணியை நிறைவேற்றவில்லை என்றால், நமது பாதையில் நமக்கு ஆதரவளித்து ஊக்குவிக்கக்கூடிய பிறரை நாம் தேட வேண்டும்.
ஓர் ஆன்மிக நண்பர் சாதாரண நண்பரிலிருந்து வேறுபட்டவர். நமக்கும் அவருக்கும் பொதுவான ஓர் ஆர்வம் இருந்து, அதில் ஒன்றாக ஈடுபடுவதில் மகிழ்ச்சி காண்பவராக ஒரு சாதாரண நண்பர் இருக்கலாம். ஆனால் ஓர் ஆன்மிக நண்பர் நமது நம்பிக்கையையும், கடவுளை மேலும் நெருங்கி வளர வேண்டும் என்ற நமது ஆவலையும் பகிர்ந்துகொள்கிறார். இத்தகைய மனிதர்களைப் புனித தெரேசா இரண்டு வகைகளாகக் குறிப்பிடுகிறார். முதலாவதாக, நாம் இப்போது வாழும் அதே அக உறைவிடத்தில் இருப்பவர்களாகச் சிலர் தோன்றுகிறார்கள். இவர்களுடைய நம்பிக்கைப் பயணம் நம்முடையதைப் போன்றது. இரண்டாவதாக, சிலர் தங்கள் ஆன்மிக வாழ்வில் முன்னேறியவர்களாகத் தோன்றுகிறார்கள். நமது பயணத்தில் அவர்கள் நமக்கு உதவும்படி, இத்தகைய துணைவர்களை நாம் தேடி, அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும்.
சிந்தனை: உங்களுக்கு ஊக்கமளிப்பவர் யார்? தமது நம்பிக்கையை வெளிப்படையாக வாழ்ந்து, உங்களுக்கு ஊக்கமளிப்பவராக விளங்கும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் குடும்பத்தில் ஒருவரோ பலரோ இவ்வாறு இருப்பது மிகவும் நல்லது. உங்கள் ஆலயத்தில் நீங்கள் இன்னும் அதிக நேரம் செலவிடக்கூடிய ஒருவர் இருக்கலாம். நீங்கள் புனிதத்தில் வளர உதவும் பலர் உள்ள ஒரு செபக் குழு இருக்கலாம். தங்கள் நம்பிக்கையை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளும் ஓர் ஒலிப்பதிவுத் தொடரிலிருந்தோ, ஒரு வலைப்பதிவரிடமிருந்தோ, ஒரு சமூக ஊடகப் பயனரிடமிருந்தோ நீங்கள் ஊக்கம் பெறக்கூடும்.
ஆன்மிகத் துணை நமது ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்வதை மேலும் எளிதாக்குகிறது. உங்கள் வாழ்வில் அத்தகைய ஒருவரைக் கண்டுபிடிப்பதில் சிரமப்பட்டால், இதையும் உங்கள் செப வேண்டுதல்களில் ஒன்றாக்குங்கள். இது உங்கள் வாழ்வில் தேவையான ஒன்று என்று கடவுள் கண்டால், இந்தக் கொடையை நீங்கள் அவரிடம் கேட்கும்போது அவர் உங்கள் செபத்திற்குப் பதிலளிப்பார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். கடவுளின் வழிநடத்துதலுக்குத் திறந்த மனத்துடன் இருங்கள். ஆரோக்கியமான ஆன்மிக நட்பு உங்களுக்குக் குழப்பத்தையோ சோதனையையோ ஏற்படுத்தாது. அதில் நலமற்ற உடைமை உணர்வு இருக்காது. மாறாக, அத்தகைய ஒருவர் உங்களை மென்மையாக ஊக்குவிப்பார்; கடவுளை நோக்கிய உங்கள் அகப் பயணத்தில் மேலும் முன்னேறுவது எப்படி என்பதை உங்களுக்குக் கற்பிக்கக் கடவுள் அவரைப் பயன்படுத்துவார்.
மிகவும் புனிதரான ஆண்டவரே, நீர் இந்த மண்ணில் நடந்தபோது உமக்குப் பல துணைவர்களும் நண்பர்களும் இருந்தார்கள். உமது அன்புத் தாயுடன் நீர் சிறப்பான நெருக்கம் கொண்டிருந்தீர்; அவர் வழியாக மிகுந்த அன்பையும் ஆறுதலையும் பெற்றீர். என்னுடன் விண்ணகத்தை நோக்கிய அதே பாதையில் நடக்க விழையும் உண்மையான நண்பர்களை எனக்குத் தந்தருளும். அவர்கள் வழியாக எனக்கு ஆதரவளித்து, என்னை வழிநடத்தும்; தேவையில் இருப்போருக்கு நானும் அத்தகைய துணைவராக இருக்க உதவியருளும்.
என்னுள் குடிகொண்டிருக்கும் அதிபரிசுத்த மூவொரு இறைவனே, நான் உம்மை அன்புசெய்கிறேன், உம்மை நம்புகிறேன், என் வாழ்வை உம்மிடம் ஒப்படைக்கிறேன்.
பாடம் பத்தொன்பது: தளராத மனவுறுதி
பின்வரும் அறிவுரையைப் புனித தெரேசா ஏற்கெனவே நமக்கு வழங்கியிருந்தாலும், ஒருவர், “இதை நீங்கள் மறந்துவிடக் கூடாது; ஏனெனில் இது மிகவும் முக்கியமானது” என்று சொல்லும்போதெல்லாம், நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
செப வாழ்வைத் தொடங்குபவர் செய்ய வேண்டியதெல்லாம்—இதை நீங்கள் மறந்துவிடக் கூடாது; ஏனெனில் இது மிகவும் முக்கியமானது—தமது விருப்பத்தைக் கடவுளின் திருவுளத்திற்கு இசைவாக்குவதற்காக உழைத்து, உறுதியுடன் இருந்து, இயன்ற அளவு முழு அக்கறையோடு தம்மைத் தயார்படுத்திக்கொள்வதே ஆகும் (II.I #15).
உழையுங்கள், உறுதியுடன் இருங்கள், உங்கள் விருப்பத்தைக் கடவுளின் திருவுளத்திற்கு இசைவாக்குங்கள். இந்த அறிவுரையை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே புனித தெரேசாவின் ஆழ்ந்த விருப்பம்.
நமது விருப்பத்தைக் கடவுளின் திருவுளத்திற்கு எவ்வாறு இசைவாக்குவது? இயன்ற அளவு முழு அக்கறையோடு நம்மைத் தயார்படுத்திக்கொள்ளும்போது இதை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும். இத்தகைய அக்கறையுடன் செயல்படுவதற்கு, நாம் பெரிதும் உழைக்க வேண்டும்; புனிதராக வேண்டும் என்று உறுதியாகத் தீர்மானிக்க வேண்டும்.
நமது விருப்பத்தை இறைவனின் திருவுளத்துடன் ஒத்திருக்கச் செய்வதற்கு அசாதாரணமான மறைஞான அனுபவங்கள் தேவையில்லை. நமக்குக் காட்சிகளோ, அருள்மொழிகளோ, தனிப்பட்ட வெளிப்பாடுகளோ தேவையில்லை. நமது புனிதத்தன்மைக்காகப் பிறர் நம்மைக் கவனிக்க வேண்டும் என்பதும் தேவையில்லை. ஒவ்வொரு நாளும் இறைவன் நம்மிடம் என்ன கேட்கிறார் என்பதைப் பகுத்தறிந்து, அதை உறுதியான மனத்துடன் செய்வதே நாம் செய்ய வேண்டியதெல்லாம்.
சில நேரங்களில் நாம் செபிக்கும்போது, இறைவனை நமது விருப்பத்திற்கேற்பச் செயல்பட வைக்க முயல்கிறோம். எது சிறந்தது என்று நாம் நினைக்கிறோமோ அதை அவரிடம் சொல்லிவிட்டு, நாம் கேட்பதை அவர் செய்ய வேண்டுமென்று செபிக்கிறோம். ஆனால் நாம் செல்ல வேண்டிய பாதை இதுவல்ல. நமது விருப்பத்தை இறைவனின் திருவுளத்துடன் ஒத்திருக்கச் செய்வது என்பது, நமது சொந்த விருப்பத்தையும், நமக்குப் பிடித்தவற்றையும், நமது இலக்குகளையும், ஆசைகளையும் அகற்றுவதற்கு அக்கறையுடன் முயல்வதாகும். இதற்கு நாம் உண்மையாகவே நமக்கே இறக்க வேண்டும். நமக்குப் பிடித்ததை விட்டுவிட்டு, இறைவனின் திருவுளத்தை மட்டுமே விரும்புவதற்கு நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். நமது சொந்த விருப்பத்திலிருந்து இவ்வாறு உள்ளத்தில் பற்றற்று இருப்பதே, செபத்தின் வழியாக இறைவனின் திருவுளத்திற்கு ஏற்ப வாழ நாம் செய்யக்கூடிய சிறந்த ஆயத்தமாகும். நாம் திறந்த உள்ளத்தோடும், ஆயத்தமாகவும், விருப்பத்தோடும் இருப்பதை இறைவன் காணும்போது, நம் வாழ்வுக்கான தமது நிறைவான திட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்குவார். தொடக்கத்தில் இதற்கு மிகுந்த முயற்சியும், தியாகமும், சரணடைதலும், திறந்த உள்ளமும், மனவுறுதியும் தேவைப்படும். ஆனால் உங்கள் சொந்த விருப்பத்திலிருந்து நீங்கள் எந்த அளவுக்கு விடுதலை பெறுகிறீர்களோ, அந்த அளவுக்கு இறைவனின் திருவுளத்தை ஏற்க ஆயத்தமாவீர்கள்.
சிந்தனை: உங்கள் சொந்த விருப்பத்தையும், உங்களுக்குப் பிடித்தவற்றையும், உங்கள் கருத்துகளையும் விட்டுவிடுவது உங்களுக்கு எவ்வளவு எளிதாக இருக்கிறது? இறைவன் உங்களை வழிநடத்தும்படி, உங்களுக்கே நீங்கள் இறக்க முடிகிறதா? நம் முழு வாழ்வையும் இறைவனின் திருவுளத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்வது, தொடக்கத்தில் மலைக்க வைக்கும் பணியாகத் தோன்றலாம். ஆனால் படிப்படியாக முன்னேறினால், அதைச் செய்ய முடியும்.
நீங்கள் செபிக்கும்போது, இறைவன் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குச் சொல்கிறீர்களா? செல்லம் கொடுத்துக் கெடுக்கப்பட்ட குழந்தை தன் விருப்பத்தைச் சாதித்துக்கொள்ள முயல்வதுபோல், இறைவனைக் கட்டுப்படுத்த முயல்கிறீர்களா? அப்படியானால், அந்தத் தன்னலப் பாவத்தை ஏற்றுக்கொண்டு, அதன் மதியீனத்தை ஒப்புக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும், உங்களால் அதைச் செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். சிறிய செயல்களில் தொடங்குங்கள். “உமது திருவுளத்தின்படியே எனக்கு நிகழட்டும்” என்று சொன்ன நம் புனித அன்னையின் செபத்தைச் செபியுங்கள். தோட்டத்தில் இயேசு, “என் விருப்பமல்ல, உமது திருவுளமே நிறைவேறட்டும்” என்று சொன்ன செபத்தையும் செபியுங்கள். இந்தச் செபங்களை ஒவ்வொரு நாளும் சொல்லுங்கள். அவற்றைத் தியானியுங்கள், ஆழ்ந்து சிந்தியுங்கள்; அவை உங்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதியட்டும். அப்போது, நீங்கள் செபிப்பதை ஒவ்வொரு நாளும் இன்னும் உண்மையான உள்ளத்துடன் சொல்ல முடியும்.
இந்தச் செபங்களைப் படிப்படியாக நீங்கள் இன்னும் முழுமையாகச் செபிக்கக் கற்றுக்கொள்ளும்போது, நீங்கள் இன்னும் பற்றிக்கொண்டிருக்கும் சிறியவற்றையும் இறைவன் உங்களுக்கு வெளிப்படுத்தத் தொடங்குவார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நமது வாழ்வில் அனைத்தும் இறுதியில் இறைவனின் திருவுளத்திற்கு ஏற்ப அமைய வேண்டும். அவ்வாறு செய்ய உறுதியாக முடிவெடுத்து, அதற்கான முயற்சியைத் தொடங்குங்கள். இறையருளால், நீங்கள் விடாமுயற்சியுடன் நிலைத்திருந்தால், இறைவனின் திருவுளமே உங்கள் விருப்பமாக மாறும்; உங்கள் விருப்பம் இறைவனின் திருவுளமாக மாறாது.
என் தன்னலமற்ற ஆண்டவரே, கெத்சமனித் தோட்டத்திலும் உமது புனித வாழ்வு முழுவதிலும், உமது மனித விருப்பத்தை எப்போதும் தந்தையின் திருவுளத்திற்கு ஏற்ப அமைத்துக்கொண்டீர். உமது புனித அன்னையும் மங்கள வார்த்தை அறிவிக்கப்பட்டபோது இதே முழுமையான சரணடைதலை வெளிப்படுத்தினார்; தமது விண்ணேற்பு வரை இந்தச் செபத்தைத் தொடர்ந்து செபித்தார். என் செபத்தையும் சரணடைதலையும் உம்முடையவற்றுடனும் உமது புனித அன்னையினுடையவற்றுடனும் இணைக்க எனக்கு உதவியருளும். நீவிர் இருவரும் விண்ணகத் தந்தைக்குத் தொடர்ந்து உங்களையே ஒப்புக்கொடுக்கும்போது, நானும் உங்களுடன் இணைய அனுமதித்தருளும். தந்தையே, உமது திருவுளம் விண்ணகத்தில் நிறைவேறுவதுபோல மண்ணகத்திலும் நிறைவேறட்டும். உமது திருவுளத்தின்படியே எனக்கு நிகழட்டும்.
என்னுள் குடிகொண்டிருக்கும் அதிபரிசுத்த மூவொரு இறைவனே, நான் உம்மை அன்புசெய்கிறேன், உம்மை நம்புகிறேன், என் வாழ்வை உம்மிடம் ஒப்படைக்கிறேன்.
பாடம் இருபது: பாவத்திலிருந்து விளையும் நன்மை
பாவம் இறைவனிடமிருந்து வருவதல்ல. அது இறைவனைப் புறக்கணிப்பதாகும். ஆனால் தமது எல்லையற்ற வல்லமையால், நமது பாவத்திலிருந்தும்கூட இறைவனால் நன்மை விளையச் செய்ய முடியும்.
ஆகவே, சில நேரங்களில் நீங்கள் தவறிவிட்டால், மனம் தளராதீர்கள்; முன்னேறுவதற்கான முயற்சியையும் கைவிடாதீர்கள். ஏனெனில், உங்கள் வீழ்ச்சியிலிருந்தும்கூட இறைவன் நன்மை விளையச் செய்வார்… (II.I #16).
நமது பாவத்திலிருந்து என்ன நன்மை விளைய முடியும்? நாம் பாவம் செய்து, அதன் தீய விளைவுகளை அனுபவிக்கும்போது, இறைவனால் நம்மை மீண்டும் தம்மிடம் அழைத்து வர முடியும். இறைவன் நம்முடன் இல்லாததை உள்ளத்தில் உணர்வதாகவும், உங்கள் ஆன்மா என்னும் கோட்டைக்குள் அவரைத் தேடுவதற்கான விருப்பம் புதுப்பிக்கப்படுவதாகவும் இது அமையும்.
முதலாவதாக, அகச்செபத்தின் வழியாக நம்பிக்கையின் பயணத்தை நீங்கள் தொடங்கிய பிறகு, சில வேளைகளில் பல்வேறு சோதனைகளை அனுபவிப்பீர்கள். இறைவன் சில நேரங்களில் உங்கள் நன்மைக்காக இந்தச் சோதனைகளை அனுமதிக்கிறார். எடுத்துக்காட்டாக, ஒருவர் மீதுள்ள கோபம், உடைமைகள் மீதுள்ள பேராசை, உடல் இச்சைகள் அல்லது வேறு ஏதேனும் ஓர் எண்ணம் உங்களை ஆட்கொண்டு, அதிலேயே நீங்கள் தொடர்ந்து மூழ்கியிருந்தால், அந்த எண்ணம் அவரிடமிருந்து வரவில்லை என்பதை உங்களுக்குக் கற்பிப்பதற்காக, அது தரும் சோர்வை நீங்கள் அனுபவிக்க இறைவன் அனுமதிக்கக்கூடும். அல்லது, நீங்கள் செபத்தில் நிலைத்திருக்க முயன்றும், அது வறண்டதாகவும் ஊக்கமளிக்காததாகவும் இருப்பதைக் கண்டால், செபிப்பதற்கான உங்கள் மனவுறுதியை வலுப்படுத்தும் வழியாக இறைவன் இந்த வறட்சியை அனுமதித்துக்கொண்டிருக்கலாம்.
ஒருவேளை சோதனை பாவமாக, பெரும் பாவமாகக்கூட மாறிவிட்டால், கடவுள் உங்களுக்காக இரண்டு காரியங்களைச் செய்யத் தயாராகவும் விருப்பமுள்ளவராகவும் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். முதலாவதாக, நீங்கள் மனந்திரும்பினால் அவர் உங்களை மன்னிக்க விரும்புகிறார். இரண்டாவதாக, அந்தப் பாவத்தின் விளைவுகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். உங்களை வெட்கத்திலோ குற்றவுணர்விலோ விட்டுவிடுவதற்காக அல்ல; மாறாக, அத்தகைய தெரிவுகள் எவ்வளவு அறிவீனமானவை என்பதை அவை தொடர்ந்து உங்களுக்கு நினைவூட்டுவதற்காகவே. இவ்வாறு உங்கள் சோதனைகளும் பாவமும் ஓர் அருளாக மாற்றப்படுகின்றன. அதன் வழியாகக் கடவுள் உங்களை வலுப்படுத்தி, நீங்கள் மீண்டும் வீழ்ந்துவிடாமல் காக்கிறார்; இதனால் உங்கள் ஆன்மிகப் பயணத்தில் நீங்கள் முன்னேற முடியும்.
சிந்தனை: இப்போது உங்களை விடாமல் ஆட்கொண்டு, மனதை அழுத்தும் எண்ணங்கள் ஏதேனும் உங்களிடம் உள்ளனவா? நீங்கள் மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டிருக்கும் ஏதேனும் ஒன்று, உங்களை மனத்தளர்ச்சிக்கும் அக வெறுமைக்கும் இட்டுச் செல்கிறதா? அப்படியானால், அந்த எண்ணங்களை அகற்ற வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வதற்காகக் கடவுள் இப்போது அனுமதிக்கும் சோதனைகளே அவை என்பதை உடனே அடையாளம் கண்டுகொள்ளுங்கள். அந்த எண்ணங்களைப் புறக்கணியுங்கள்; உங்கள் ஆன்மாவில் அமைதி மீண்டும் நிலவும்படி, கடவுளிடமிருந்து தெளிவைப் பெற வேண்டிக்கொள்ளுங்கள்.
மேலும், நீங்கள் மீண்டும் மீண்டும் விழுந்துள்ள பாவங்கள் ஏதேனும் உள்ளனவா? அப்படியானால், அந்தப் பாவத்தைச் செய்தபோது உங்கள் அக அனுபவம் எவ்வாறு இருந்தது? அதை நீங்கள் தெளிவாகப் பார்க்கிறீர்கள் என்றால், அந்த அனுபவம் ஒரு பெருஞ்சுமையாக இருந்ததையும், உங்கள் அகத்தில் கடவுளை உணர்ந்திருக்கும் நிலையை இழக்கச் செய்ததையும் கவனிப்பீர்கள். எதிர்காலத்தில் அந்தப் பாவத்தையும், நீங்கள் செய்யத் தூண்டப்படும் மற்ற ஒவ்வொரு பாவத்தையும் எதிர்த்துப் போராட, அந்த அனுபவத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துங்கள்.
உங்களால் செபத்தில் விடாமுயற்சியுடன் நிலைத்திருக்க முடிகிறதா? அல்லது இப்போது உங்கள் செபம் வறண்டதாகவும், உயிரோட்டமற்றதாகவும், ஆர்வமற்றதாகவும் இருப்பதை உணர்கிறீர்களா? செபிப்பது கடினமாக இருந்தால், அதில் உண்மையுடன் நிலைத்திருக்கத் தீர்மானியுங்கள். தொடர்ந்து செபியுங்கள்! செபத்தில் கவனச்சிதறல்களுக்கு நீங்கள் விரும்பியே இடமளிப்பதால் இந்த வறட்சி ஏற்படலாம்; அல்லது கடவுள்மீதான உங்கள் உறுதியும் பக்தியும் வலுப்பெறும்படி அவர் இதை அனுமதிப்பதாலும் ஏற்படலாம். எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுபவிக்கும் எந்த வறட்சியையும், முன்பைவிட அதிக அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செபிப்பதற்கான உந்துதலாகப் பயன்படுத்துங்கள்.
மன்னிப்பும் பொறுமையும் நிறைந்த என் ஆண்டவரே, என் முழு இதயத்தோடும் உம்மை அன்புசெய்ய நீர் என்னை அழைக்கிறீர். சில வேளைகளில் இந்த அன்பில் நான் தவறி, பாவத்தின் எளிதான வழிக்குத் திரும்பிவிடுகிறேன். என் பாவத்தை மன்னித்து, என் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள எனக்கு உதவியருளும். இதனால் என் கடந்தகாலப் பாவங்களும், என் சோதனைகளும், செபத்தில் நான் அனுபவிக்கும் வறட்சியும்கூட, ஆர்வத்துடனும் உறுதியுடனும் உம்மிடம் திரும்புவதற்கான உந்துதல்களாக மாறட்டும்.
என்னுள் குடிகொண்டிருக்கும் அதிபரிசுத்த மூவொரு இறைவனே, நான் உம்மை அன்புசெய்கிறேன், உம்மை நம்புகிறேன், என் வாழ்வை உம்மிடம் ஒப்படைக்கிறேன்.
பாடம் இருபத்தொன்று: அக ஒருமைப்பாட்டுச் செபம்
இரண்டாம் உறைவிடங்களில், வாய்மொழிச் செபத்தோடும் தியானத்தோடும் சேர்த்து, “அக ஒருமைப்பாட்டுச் செபம்” என்று தாம் அழைக்கும் செபத்தையும் நீங்கள் பழக வேண்டும் எனப் புனித தெரேசா விளக்குகிறார்.
கடுமையாக முயற்சி செய்வதன் மூலம் அக ஒருமைப்பாட்டைத் தொடங்க முடியாது; அது மென்மையாக உருவாக வேண்டும். அதன் பின்னர், ஒவ்வொரு முறையும் நீண்ட நேரம் அதை உங்களால் கடைப்பிடிக்க முடியும் (II.I #18).
முதலில் நம் சொந்த ஆன்மாவிற்குள் நுழையாமல்—நம்மையே அறிந்துகொள்ளாமல், நமது இயல்பின் பரிதாப நிலையையும் கடவுளுக்கு நாம் செலுத்த வேண்டியவற்றையும் பற்றிச் சிந்திக்காமல், இடைவிடாது அவரது இரக்கத்தை மன்றாடாமல்—நாம் விண்ணகத்திற்குள் நுழைய முடியும் என்று நினைப்பது அறிவீனமானது (II.I #19).
தியானம் என்பது ஒரு செப முறை. இதில், நமது நம்பிக்கையின் கோட்பாடுகள், நற்செய்திகளில் உள்ள நிகழ்வுகள் அல்லது அழகிய செபங்கள் போன்ற வெளிப்புற உண்மைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை உங்கள் மனத்தில் மீண்டும் மீண்டும் சிந்தித்து உள்ளத்தில் பதியச் செய்கிறீர்கள். தியானத்தின் வழியாகக் கடவுள் நமக்குப் பலவற்றைக் கற்பித்து, உருவங்கள் மற்றும் கருத்துகள் வாயிலாகத் தமது அன்பை நமக்கு வெளிப்படுத்துகிறார்.
அடுத்த செப முறை “அக ஒருமைப்பாடு” எனப்படுகிறது. தியானத்தைப் போலவே, இதுவும் நாம் “மனச் செபம்” என்று குறிப்பிடும் வகையைச் சேர்ந்தது. அதாவது, நமது சொந்த முயற்சியால் இந்தச் செப முறையில் ஈடுபட நாம் தேர்ந்துகொள்ள முடியும். அவர் எழுதிய நிறைவின் வழி என்னும் நூலின் 28 மற்றும் 29 ஆம் அத்தியாயங்களில் அக ஒருமைப்பாட்டுச் செபம் விரிவாகக் கற்பிக்கப்படுகிறது. கடவுள் நமக்குள் குடிகொண்டிருக்கிறார். செபம் என்பது, உங்கள் ஆன்மாவின் மையத்திலுள்ள மறைவான அறையை நோக்கி இன்னும் ஆழமாகச் செல்லும் ஒரு பயணம். அங்குதான் உங்கள் செபம் நிறைவுபெறும்; அங்குதான் கடவுளின் முழுமை குடிகொண்டிருக்கிறது. எனவே, கடவுளுடன் தனித்திருக்கும்படி, நீங்கள் மனமுவந்து உங்களுக்குள்ளே நுழையத் தொடங்குவதற்கான ஒரு முறையே அக ஒருமைப்பாட்டுச் செபம் ஆகும்.
நடைமுறையில், தொடக்கத்தில் உங்கள் கண்களை மூடி, வெளிப்புலன்கள் அனைத்திலிருந்தும் கவனத்தை விலக்கி, உள்ளத்தில் இருக்கும் அரசரைத் தேடுவதே இந்தச் செப முறையைச் சிறப்பாகக் கடைப்பிடிப்பதற்கான வழியாகும். எடுத்துக்காட்டாக, உங்கள் ஆன்மாவை நகைகளும் பொன்னும் நிறைந்த ஓர் அழகிய கோட்டையாகக் கற்பனை செய்ய முயலலாம். கடவுள் அமர்ந்திருக்கும் அரியணை உங்கள் இதயம் என்று கற்பனை செய்யலாம். பின்னர், இந்தக் கோட்டைக்குள் உள்ள அலங்காரங்களை உங்கள் நற்பண்புகளாகக் கருதலாம். இந்த அக ஒருமைப்பாட்டின் வழியாக, நீங்கள் கடவுளைச் சந்திக்கத் தொடங்குவது மட்டுமல்லாமல், மாட்சிமைமிக்க அரசரின் ஒளியில் உங்கள் பாவங்களையும் நற்பண்புகளையும் பற்றிச் சிந்திக்கும்போது, உங்களைப் பற்றிய அறிவிலும் இன்னும் முழுமையாக வளரத் தொடங்குகிறீர்கள்.
உங்களுக்குள் நோக்கும்போது, ஆண்டவர் கற்பித்த செபத்தை மிக மெதுவாகவும், தனிப்பட்ட முறையிலும், தெளிவான நோக்கத்துடனும், அன்புடனும் கடவுளிடம் சொல்ல நீங்கள் விரும்பலாம். அல்லது உங்கள் ஆழ்ந்த போராட்டங்கள், அச்சங்கள், கவலைகள், பாவம் ஆகியவற்றை வெளிப்படுத்த விரும்பலாம். அதன் பின், புகழ்ச்சிகளையும் நன்றிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக அவருக்கு ஏறெடுக்கலாம். தொடக்கத்தில், நீங்கள் பேசுகிறீர்கள், செவிமடுக்கிறீர்கள். பின்னர், அக ஒருமைப்பாட்டை அடைந்ததும், அரசருடன் அங்கே அமைதியாக அமர்ந்து, அன்புடன் அவரை உற்றுநோக்குகிறீர்கள். எதுவும் பேசாமல், உங்கள் சித்தம், உணர்வெழுச்சிகள், முழு ஆன்மா ஆகியவற்றால் அவரை அன்புசெய்கிறீர்கள். பல மாதங்கள் பயிற்சி செய்த பின், இந்தச் செபம் ஒரு பழக்கமாக மாறும்; அக ஒருமைப்பாட்டுடன் உங்கள் அன்றாட வாழ்வைக் கடப்பது உங்களுக்கு இன்னும் எளிதாகும்.
சிந்தனை: உங்கள் ஆன்மாவின் ஆழத்தில் கடவுளிடம் உங்களால் பேச முடிகிறதா? உங்களுக்குள் இருக்கும் அவரது தெய்வீகப் பிரசன்னத்தை நீங்கள் கவனிக்கிறீர்களா? உங்களிடமுள்ள பலவீனங்களையும்—உங்கள் பாவங்கள், சோதனைகள், காயங்கள், குழப்பம் ஆகியவற்றையும்—உங்களால் காண முடிகிறதா? உங்கள் ஆன்மாவின் அக உலகம் வாழ்வதற்கு ஓர் உன்னதமான இடம். ஆயினும், பலர் அங்கு ஒருபோதும் நுழைவதே இல்லை. பலர் தங்களைச் சுற்றியுள்ள உலகிலேயே முழுமையாக ஈடுபட்டிருக்கிறார்கள்; தங்களுக்குள் இருக்கும் உலகைக் கண்டறிய நேரம் ஒதுக்குவதோ முயற்சி செய்வதோ இல்லை. நீங்களும் அவர்களில் ஒருவரா?
அக ஒருமைப்பாட்டுச் செபத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பயிற்சி செய்வதன் வழியாக மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். இந்தப் பயணத்திற்கு உங்களை அர்ப்பணியுங்கள். செபத்திற்கு ஏற்ற ஓர் இடத்தில் அமைதியாக அமர ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்குங்கள்; கண்களை மூடிக் கடவுளிடம் பேசத் தொடங்குங்கள். இதைச் செய்வது கடினமாகத் தோன்றினாலும், தொடர்ந்து செய்யுங்கள். மீண்டும் மீண்டும் இவ்வாறு செபியுங்கள். ஒவ்வொரு நாளும் அந்தச் செப நேரத்தை ஆவலுடன் எதிர்நோக்குங்கள். இவ்வாறு செபிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்; அந்தப் பழக்கத்தை உங்கள் அன்றாட வாழ்விலும் தொடர முயலுங்கள். இந்த உலகம் தரக்கூடிய அனைத்தையும் வெகுவாக விஞ்சியிருக்கும் உங்கள் அக உலகைக் கண்டறிவதற்கு, இவ்வாறு செய்வது தேவையான ஒரு படியாகும்.
என் ஆண்டவரே, என் அரசரே, நீர் எனக்குள் வாழ்கிறீர்; என் ஆன்மாவின் மிக மறைவான அறையில் உமது முழுமையோடு குடிகொண்டிருக்கிறீர். நான் மனமுவந்து என் பார்வையை உம்மை நோக்கித் திருப்பவும், உம்மிடம் பேசவும், உமது குரலைக் கேட்கவும், அமைதியாக உம்முடன் இருக்கவும் எனக்கு உதவியருளும். நான் இவ்வாறு செய்யும்போது, நான் யார் என்பதையும், நான் எவ்வாறு மாற வேண்டும் என்பதையும் கண்டறிய எனக்கு உதவியருளும். என் நாள் முழுவதும் அக ஒருமைப்பாட்டுடனும் உம்மை மையமாகக் கொண்டும் அமையும்படி, இந்தச் செப முறையில் விடாமுயற்சியுடன் நிலைத்திருக்க எனக்கு உதவியருளும்.
என்னுள் குடிகொண்டிருக்கும் அதிபரிசுத்த மூவொரு இறைவனே, நான் உம்மை அன்புசெய்கிறேன், உம்மை நம்புகிறேன், என் வாழ்வை உம்மிடம் சரணடையச் செய்கிறேன்.
