தமிழ்

திருவருகைக்காலம்—இரண்டாம் வாரம்

4 தொகுதிகளும் மென்மையான அட்டையுடன் கூடிய அச்சுநூல் & மின்னூல் வடிவங்களில் கிடைக்கின்றன!

பொருளடக்கம்

பொதுமக்கள் முன்னிலையில் மனந்திரும்புதல்

திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (ஆண்டு A)

பரிசேயர், சதுசேயர் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்ட அவர் அவர்களிடம், “விரியன் பாம்புக் குட்டிகளே! வரவிருக்கும் சினத்திலிருந்து தப்பியோட உங்களுக்கு எச்சரித்தவர் யார்? நீங்கள் மனந்திரும்பியதற்குச் சான்றாக நற்கனிகளைத் தாருங்கள்” என்றார். மத்தேயு 3:7–8

இது மிகவும் கடுமையான, அதேவேளையில் மிகவும் புனிதமான ஒரு சந்திப்பாக இருந்தது. மக்களிடையே மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் பெற்று, பெரிய இறைவாக்கினராகக் கருதப்பட்ட புனித திருமுழுக்கு யோவான், பரிசேயரிடமும் சதுசேயரிடமும் கடுமையாகப் பேசியதால் இச்சந்திப்பு கடுமையானதாக இருந்தது. “விரியன் பாம்புக் குட்டிகளே!” என்று அவர் கூறுகிறார். பொதுவாகப் பரிசேயரிடமும் சதுசேயரிடமும் இவ்வாறு யாரும் பேசுவதில்லை.

அது உண்மையாக இருந்ததால்தான் யோவான் இவ்வாறு பேசுகிறார். இந்தச் சமயத் தலைவர்கள் யாரையும் கடவுளுக்கு நெருக்கமாக அழைத்துச் செல்லவில்லை. இந்தச் சமயத் தலைவர்கள் எப்படிப்பட்டவர்களாக மாறியிருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள, பின்னாளில் பரிசேயரையும் சதுசேயரையும் நோக்கி இயேசு கூறவிருந்த அனைத்தையும் சிந்தித்துப் பார்த்தாலே போதும்.

எனவே, இந்தப் பகுதி நிச்சயமாகக் கடுமையானதே. ஆனால் இது மிகவும் புனிதமானதும்கூட. இந்த “விரியன் பாம்புக் குட்டிகள்” கண்டிக்கப்பட வேண்டியிருந்ததால் இது புனிதமானது. அவர்கள் கண்டிக்கப்படவும் சவாலுக்கு உட்படுத்தப்படவும் வேண்டியிருந்தது. அவர்கள் தாழ்த்தப்பட வேண்டியிருந்தது. பொதுமக்கள் முன்னிலையில் ஒருவர் தம் பாவங்களுக்காக மனமார மனந்திரும்புவதைவிட அவரைத் தாழ்மைப்படுத்துவது வேறெதுவுமில்லை.

யோவான் அந்தத் தலைவர்களை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். மாறாக, அவர்கள் மனந்திரும்பியதற்கான “சான்றை” அவர்களிடம் கேட்கிறார். ஏன்? ஏனெனில், தங்கள் செருக்கு, தாங்களே நீதிமான்கள் என்ற எண்ணம், வெளிவேடம், பொதுமக்களின் பாராட்டுகள்மீது கொண்ட நாட்டம், பிறரைக் கண்டனம் செய்தல் போன்றவற்றால் இவர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆன்மிகத் தீங்கு விளைவித்திருந்தார்கள். அவர்கள் இறைநம்பிக்கையை அந்த அளவுக்குத் திரித்திருந்ததால், அவர்களுடைய ஆன்ம நலனுக்குப் பகிரங்கமான மனந்திரும்புதல் தேவைப்பட்டது. அவர்கள் மாறிவிட்டார்கள் என்பதன் அடையாளமாக, அவர்களுடைய வாழ்விலிருந்து உண்மையான நற்கனிகள் விளைவதை அனைவரும் காண வேண்டியிருந்தது. பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் இது நிறைவேற்றுவதற்கு மிகவும் கடினமான கோரிக்கையாக இருந்தாலும், அவர்கள் புனிதத்தை அடைவதற்கான வழி இதுவே.

இது நமக்கும் பொருந்தும். பரிசேயர்களும் சதுசேயர்களும் சிக்கிய அதே கண்ணிகளில் சிலவற்றில் நீங்களும் விழ உங்களை அனுமதித்திருந்தால், தெளிவாக வெளிப்படும் தாழ்மையான மாற்றம் உங்களுக்கும் பெரும் நன்மை அளிக்கும். தாங்களே நீதிமான்கள் என்ற எண்ணம், பிறரைக் குறைகூறும் பேச்சு, “உன்னைவிட நான் புனிதமானவன்” என்ற மனப்பான்மை அல்லது பிறரைத் தீர்ப்பிடும் மனப்பான்மை ஆகியவற்றுடன் நீங்கள் போராடியிருந்தால், தாழ்மையான, பகிரங்கமான மனந்திரும்புதல் உங்களுக்கு மிகவும் தேவையாக இருக்கலாம்.

இன்று பரிசேயர்களையும் சதுசேயர்களையும் பற்றிச் சிந்தியுங்கள். அவர்களுடைய பாவத்தையும், யோவான் அவர்களை “விரியன் பாம்புக் குட்டிகளே” என்று அழைத்ததற்கான காரணத்தையும் புரிந்துகொள்ள முயலுங்கள். அவர்களுடைய செருக்கும், தாங்களே நீதிமான்கள் என்ற எண்ணமும் உங்கள் ஆன்மாவிலும் சிறிதளவேனும் இருப்பதைக் கண்டால், திருமுழுக்கு யோவானின் இந்த அறிவுரை உங்களுக்கே நேரடியாகச் சொல்லப்படுவதுபோல் அதற்குச் செவிகொடுங்கள்: “நீங்கள் மனந்திரும்பியதற்குச் சான்றாக நற்கனிகளை விளைவியுங்கள்.” இவ்வாறு செய்யுங்கள்; உண்மையான தாழ்ச்சி என்னும் கொடையின் வழியாகக் கடவுள் உங்களுக்கு விடுதலை அளிப்பார்.

தாழ்மையுள்ள என் ஆண்டவரே, மிகுந்த தாழ்ச்சியுடனும் உண்மையான மனதுடனும் மனந்திரும்புமாறு மக்கள் அனைவரையும் நீர் அழைக்கின்றீர். என் பாவத்தைக் கண்டுணரவும், அதை எதிர்கொள்ள ஒருபோதும் தயங்காதிருக்கவும் எனக்கு உதவியருளும். இவ்வாறு அந்த மாசிலிருந்து என்னை விடுவித்துப் புனிதத்தின் பாதையில் இன்னும் உறுதியாக நீர் என்னை நிலைநிறுத்துவீராக. இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.


பாலைவனத்திற்கு அழைப்பு

திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (ஆண்டு B)

கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.

இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளவாறு: இதோ, என் தூதரை உமக்கு முன்னே அனுப்புகிறேன்; அவர் உமது வழியை ஆயத்தம் செய்வார். பாலைவனத்தில் ஒருவர் முழங்கும் குரல்: “ஆண்டவரின் வழியை ஆயத்தம் செய்யுங்கள்; அவருடைய பாதைகளை நேராக்குங்கள்.” மாற்கு 1:1–3

புனித மாற்கு நற்செய்தியின் இந்தத் தொடக்க வரிகள், புனித திருமுழுக்கு யோவானை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. மெசியாவுக்கு முன்பாக வருவார் என்று எசாயா முன்னறிவித்தவர் யோவானே. உலக மீட்பருக்காக அவருடைய வருகைக்கு மிக அண்மையில் ஆயத்தம் செய்பவராக இருக்கும் பொறுப்பும் சிறப்புரிமையும் யோவானுக்கு அளிக்கப்பட்டன.

ஆண்டவருக்காக வழியைச் சிறந்த முறையில் ஆயத்தம் செய்வது எப்படி என்று யோவானுக்கு அறிவுறுத்தும் பணி பெரும்பாலான மக்களிடம் கொடுக்கப்பட்டிருந்தால், முதலில் அவர் மக்களின் தலைவர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும், செல்வாக்குள்ளவர்களிடமும், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர்களிடமும் சென்று அவர்களைத் தம் பக்கம் ஈர்க்க வேண்டும் என்று ஒருவேளை கூறியிருப்பார்கள். அக்காலத் தலைவர்களின் முழு ஆதரவும் மெசியாவுக்குத் தேவை என்று பலர் முடிவு செய்திருப்பார்கள். ஆனால் யோவான் செய்தது அது அல்ல என்பது தெளிவு.

தூய ஆவியாரின் தூண்டுதலால் திருமுழுக்கு யோவான் வழிநடத்தப்பட்டது, பெரும் மதிப்பும் செல்வமும் கொண்டவர்களின் இல்லங்களுக்கோ, அரசு ஆளுநர்களின் மாளிகைகளுக்கோ, தொழுகைக்கூடங்களுக்கோ, திருக்கோவிலுக்கோ அல்ல. மாறாக, யோவான் பாலைவனத்திற்கே வழிநடத்தப்பட்டார். வறண்டதும் ஆளரவமற்றதுமான அந்தப் பாலைவனத்தில், அவர் பலரைத் தம்மிடமும் தமது மனந்திரும்புதலின் செய்தியிடமும் ஈர்த்தார்.

திருமுழுக்கு யோவானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றக் கடவுள் இன்றும் பலரைத் தொடர்ந்து அழைக்கின்றார். காலத்தின் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் உண்மையானதொரு பணிக்காக அனுப்பப்பட்டு வாழ்ந்தவர் யோவான். எனினும், அவர் நிறைவேற்றிய பணி இன்றும் பல்வேறு வழிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது. “ஆண்டவரின் வழி” இன்னும் ஆயத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. ஆண்டவர் இன்றும் பலரிடம் வர விரும்புகின்றார்; அருளின் வழியாக அவர் தொடர்ந்து வருவதற்கான வழியை ஆயத்தம் செய்ய அவருக்கு இறைவாக்கினர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவரா?

உண்மையில், செல்வரோ ஏழையோ, கற்றவரோ கல்லாதவரோ, இளையவரோ முதியவரோ, நாம் ஒவ்வொருவருமே ஆண்டவர் ஒவ்வொரு நாளும் அருளின் வழியாக வருவதற்கான வழியை ஆயத்தம் செய்யக் கடவுளால் அழைக்கப்படுகிறோம். உண்மையான மனந்திரும்புதலுக்கும் வாழ்வு மாற்றத்திற்கும் பிறரை அழைப்பதன் வழியாக அந்த வழியை ஆயத்தம் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். நமது செயல்களின் சான்றாலும், நமது சொற்களாலும், கடவுள் நம்மை அழைக்கும் இன்னும் பல வழிகளாலும் இது நிறைவேறுகிறது. தமது பணியைச் செய்யக் கடவுள் உங்களை எவ்வாறு அழைக்கின்றார்? நிச்சயமாக அவர் உங்களை அழைக்கின்றார். அந்த அழைப்பை ஏற்கும் திறந்த மனதுடன் இருந்து, தாராள உள்ளத்தோடு பதிலளிப்பதே நீங்கள் செய்ய வேண்டியது.

கிறிஸ்துவின் வருகைக்காக உங்களையும் பிறரையும் ஆயத்தம் செய்யும்பொருட்டு, நீங்கள் அழைக்கப்பட்டுள்ள அந்தப் “பாலைவனத்தை” பற்றி இன்று சிந்தியுங்கள். தேவைகள் உள்ள எந்த இடமும், நம் ஆண்டவர் இல்லாத ஒவ்வோர் இடமும் அந்தப் பாலைவனமே. அது உங்கள் குடும்பமாகவோ, பணிச்சூழலாகவோ, சமூகமாகவோ, நண்பர்கள் நடுவிலோ, கடவுளின் அருள் பெருக்கம் இல்லாத வேறு எந்த இடமாகவோ இருக்கலாம். அந்தப் பாலைவனங்களுக்குள் செல்ல முற்படுங்கள்; தேவையில் இருப்பவர்களுக்கு நம் ஆண்டவரின் அருளைக் கொண்டுசெல்லும் வாய்க்காலாக இருக்கத் திறந்த மனதுடன் இருங்கள்.

ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் என்னிடமும் உமது பிள்ளைகள் அனைவரிடமும் வர நீர் விரும்புகிறீர். உமது தெய்வீக வருகைக்காக என் இதயத்தையும் ஆன்மாவையும் ஆயத்தப்படுத்துவது மட்டுமன்றி, உம்மைச் சந்திக்கப் பிறரையும் ஆயத்தப்படுத்த என்னைப் பயன்படுத்தியருளும். புனித திருமுழுக்கு யோவானைப் பின்பற்றி, அருளின் வழியாக நிகழும் உமது மாட்சிமிகு வருகைக்கான வழியை நான் ஆயத்தப்படுத்தும்படி, எனக்கு ஞானத்தையும் பரிவையும், ஆழ்ந்த புரிதலையும் வலிமையையும் தந்தருளும். இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.


அருளுக்கான தடைகளை அகற்றுதல்

திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு (ஆண்டு C)

“பள்ளத்தாக்கு ஒவ்வொன்றும் நிரப்பப்படும்; மலை ஒவ்வொன்றும் குன்று ஒவ்வொன்றும் தாழ்த்தப்படும். வளைந்த சாலைகள் நேராக்கப்படும்; கரடுமுரடான வழிகள் சமமாக்கப்படும்; மனிதர் அனைவரும் கடவுளின் மீட்பைக் காண்பர்.” லூக்கா 3:5–6

இறைவாக்கினர் எசாயாவின் இந்த வார்த்தைகள் புனித திருமுழுக்கு யோவானின் பணியைப் பற்றிக் கூறப்பட்டவை. யோவான் “ஆண்டவரின் வழியை ஆயத்தப்படுத்தவும்”, “அவருடைய பாதைகளைச் செம்மையாக்கவும்” வேண்டியிருந்தது. இதை முன்னறிவிக்கும்போது, யோவானின் பணியைத் தெளிவாக விளக்கும் இந்த உருவகத்தையும் எசாயா தொடர்ந்து அளிக்கிறார். அது மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் சமப்படுத்தி, வளைந்த சாலைகள் அனைத்தையும் நேராக்கி, கரடுமுரடான நிலப்பரப்பைச் சீராக்கும் பணியாக இருக்கும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கடவுளை அணுகுவதற்குத் தடையாக இருப்பவை அனைத்தையும் அகற்றி, மெசியாவைச் சந்திப்பதை எளிதாக்கவே யோவான் வந்தார்.

யோவான் இந்தப் பணியை எவ்வாறு நிறைவேற்றுகிறார்? பொய்யான கவர்ச்சிகள் அனைத்தும் இல்லாதுபோகும் வறண்ட, வெறுமையான பாலைநிலத்திற்கு அக்கால மக்களை அழைப்பதன் வழியாகவே இதைச் செய்கிறார். அவர்கள் எதிர்கொண்ட பல பாவங்களிலிருந்தும் சோதனைகளிலிருந்தும் பற்றற்று விலகுவதன் வழியாக இது நிகழ்கிறது. அவர்களுடைய மனந்திரும்புதல், மக்கள் கடவுள்முன் தங்களைத் தாழ்த்தி, தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு, தங்களுக்கு ஒரு மீட்பர் தேவை என்பதை ஏற்றுக்கொண்ட செயலாக இருந்தது. இந்தத் தாழ்மையான ஒப்புதலுடன், தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளும் உறுதியும் இணைந்து, ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியாக வந்த அருளையும் இரக்கத்தையும் பெறுவதற்கு ஒவ்வோர் இதயத்தையும் ஆயத்தப்படுத்தியது.

இன்று எண்ணற்ற மக்கள் அருளைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும் எண்ணற்ற காரியங்களை எதிர்கொள்கிறார்கள். சிலர் இவ்வுலகச் செல்வங்களும் பொருள் வசதிகளும் தரும் நிறைவுகளில் ஈர்க்கப்பட்டு, கடவுளின் தேவை தங்களுக்கு மிகக் குறைவே என்று கருதுகிறார்கள். வேறு சிலரிடம் இவ்வுலகம் வழங்கக்கூடியவை மிகக் குறைவாகவே இருந்தாலும், பணத்தின் மீதும் அது வாக்களிக்கும் நிலையற்ற வசதிகளின் மீதும் கொண்ட ஆசையால் அவர்கள் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் வேறு பலவிதமான பாவங்களாலும் பொய்யான நிறைவுகளாலும் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால், வறண்ட, வெறிச்சோடிய பாலைநிலத்தைப் போன்று, கடவுளின் அருள் என்னும் மெல்லிய மழையை உறிஞ்சிக்கொள்ளக் காத்திருப்பவர்களும் சிலர் இருக்கிறார்கள். இவ்வுலகின் பொய்யான வாக்குறுதிகளிலிருந்து பற்றற்று விலக முயன்று, அருள் பெருவளமாக வரும்போது அதைப் பெற ஆயத்தமாயிருக்கும்படி “வெறுமையாகவும்” “வறண்டும்” இருப்பவர்கள் இவர்களே. இந்தப் புனித ஆன்மாக்கள் மனந்திரும்புதலுக்கான அழைப்புக்குச் செவிசாய்த்து, தங்களுக்கு மீட்பர் தேவை என்பதைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று, உங்கள் ஆன்மா அந்த வறண்ட, வளமற்ற பாலைநிலத்தைப் போன்று இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்: இவ்வுலகின் பொய்யான, நிலையற்ற நிறைவுகள் அனைத்திலிருந்தும் பற்றற்று விலகி, கடவுளின் இரக்கத்தையும் அருளையும் மட்டுமே உறிஞ்சிக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறதா? மனந்திரும்புதல் பற்றின்மையை உருவாக்குகிறது; பற்றின்மை ஆன்மாவைக் கடவுளுக்காக ஆயத்தப்படுத்துகிறது. ஒருவர் உண்மையாகவே பற்றற்று, கடவுளை அணுகுவதற்குத் தடையாக இருக்கும் பலவற்றிலிருந்து விடுபட்டிருக்கும்போது, கடவுளிடமிருந்து உங்கள் ஆன்மாவுக்கு வரும் பாதை நேராகவும் எளிதில் பயணிக்கக்கூடியதாகவும் இருக்கும். இன்று உங்கள் ஆன்மாவையும், அதில் தீங்கான பற்றுகள் எங்கெல்லாம் காணப்படுகின்றன என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். கடவுளின் அருளையும் இரக்கத்தையும் பெருவளமாகப் பெற முழுமையாக ஆயத்தமாயிருப்போருள் நீங்களும் ஒருவராக இருக்கும்படி, உங்கள் முழு இதயத்தோடு மனந்திரும்புங்கள்.

ஆண்டவரே, என் தேவையில் நான் உம்மை நோக்கித் திரும்புகிறேன்; இவ்வுலகின் பல பொய்களையும், நிறைவைத் தருவதாக அது அளிக்கும் பொய்யான வாக்குறுதிகளையும் விட்டு மனந்திரும்புகிறேன். வறண்ட, வளமற்ற பாலைநிலத்தில் பெய்யும் மெல்லிய மழையைப் போன்று, உம்மையும் உமது இரக்கத்தையும் என் ஆன்மா உறிஞ்சிக்கொள்ள இன்னும் முழுமையாக ஆயத்தமாகும்படி, உம்மைச் சாராத அனைத்திலிருந்தும் என்னை விடுவித்தருளும். என் ஆண்டவரே, என்னை உமக்குத் திறந்துவைக்கிறேன். வந்து என் ஆன்மாவை நிரப்பி, நிறைவடையச் செய்யும். இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.


செருக்கும் ஆணவமும் கொண்டவர்களை அன்பு செய்வது

திருவருகைக்காலத்தின் இரண்டாம் வாரத் திங்கள்

சிலர் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் படுக்கையில் தூக்கிக்கொண்டு வந்தனர்; அவரை உள்ளே கொண்டுவந்து இயேசுவின் முன் கிடத்த முயன்றனர். ஆனால் கூட்டத்தின் காரணமாக அவரை உள்ளே கொண்டுவர வழி கிடைக்காததால், அவர்கள் கூரையின்மேல் ஏறி, ஓடுகளின் வழியாக அவரைப் படுக்கையோடு நடுவில் இயேசுவுக்கு முன்பாக இறக்கினார்கள். லூக்கா 5:18–19

முடக்குவாதமுற்றவரின் நம்பிக்கை நிறைந்த நண்பர்கள் அவரைக் கூரையிலிருந்து இயேசுவுக்கு முன்பாக இறக்கியபோது, “கலிலேயா, யூதேயா ஆகியவற்றின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் எருசலேமிலிருந்தும்” வந்த பரிசேயர்களும் திருச்சட்ட ஆசிரியர்களும் இயேசுவைச் சூழ்ந்திருந்தார்கள் என்பதைக் கவனிப்பது சுவாரசியமானது (லூக்கா 5:17). சமயத் தலைவர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள்.  அவர்கள் யூதர்களில் மிகுந்த கல்வியறிவு பெற்றவர்களுள் அடங்குவர்; அன்றைய தினம் இயேசு பேசுவதைக் காணக் கூடியிருந்தவர்களுள் அவர்களும் இருந்தார்கள். அவர்களில் பெரும் எண்ணிக்கையினர் இயேசுவைச் சுற்றிக் கூடியிருந்ததும், முடக்குவாதமுற்றவரின் நண்பர்கள் கூரையைத் திறக்கும் இந்தத் துணிச்சலான செயலைச் செய்யாமல் இயேசுவை அணுக முடியாததற்கு ஒரு காரணமாக இருந்தது.

அப்படியானால், முடக்குவாதமுற்றவர் கூரையிலிருந்து தம் முன்பாக இறக்கப்படுவதைக் கண்ட இயேசு என்ன செய்கிறார்? முடக்குவாதமுற்றவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று அவரிடம் கூறினார். வருத்தத்திற்குரிய வகையில், அந்த வார்த்தைகளைக் கேட்டவுடனேயே இந்தச் சமயத் தலைவர்கள் தங்கள் உள்ளங்களில் கடுமையாக விமர்சித்தார்கள். “கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று அவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள் (லூக்கா 5:21).

ஆனால் இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, இந்தச் சமயத் தலைவர்களின் நன்மைக்காக மேலும் ஒரு செயலைச் செய்யத் தீர்மானித்தார். முடக்குவாதமுற்றவரின் பாவங்களை மன்னித்த இயேசுவின் முதல் செயல், அந்த மனிதரின் நன்மைக்காகச் செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலைக் குணமாக்கிய செயல், ஆணவமும் தாங்களே நேர்மையாளர்கள் என்ற எண்ணமும் கொண்டிருந்த இந்தப் பரிசேயர்கள் மற்றும் திருச்சட்ட ஆசிரியர்களின் நன்மைக்காகவே முதன்மையாகச் செய்யப்பட்டதுபோல் தோன்றுவது கவனிக்கத்தக்கது. “மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை” அவர்கள் அறிந்துகொள்ளும்படி இயேசு அந்த மனிதரைக் குணமாக்குகிறார் (லூக்கா 5:24). இயேசு இந்தப் புதுமையைச் செய்தவுடன், அனைவரும் “வியப்பில் ஆழ்ந்து” கடவுளை மாட்சிப்படுத்தியதாக நற்செய்தி நமக்குக் கூறுகிறது. பிறரைக் குற்றந்தீர்த்த இந்தச் சமயத் தலைவர்களும் அவர்களில் அடங்கியிருந்ததாகத் தெரிகிறது.

இது நமக்கு என்ன கற்றுத் தருகிறது? இந்தச் சமயத் தலைவர்களிடம் அளவுகடந்த செருக்கும் பிறரைக் குற்றந்தீர்க்கும் மனப்பான்மையும் இருந்தபோதிலும், இயேசு அவர்களை எவ்வளவு ஆழமாக அன்புசெய்தார் என்பதை இது காட்டுகிறது. அவர்களுடைய மனங்களை வென்றெடுக்க அவர் விரும்பினார். அவர்கள் மனம்மாறி, தங்களைத் தாழ்த்திக்கொண்டு, தம்மிடம் திரும்ப வேண்டும் என்று அவர் விரும்பினார். ஏற்கெனவே முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட ஒருவரிடம் அன்பும் பரிவும் காட்டுவது ஓரளவு எளிதானது. ஆனால், செருக்கும் ஆணவமும் கொண்டவர்கள்மீதும் ஆழ்ந்த அக்கறை காட்டுவதற்கு அளப்பரிய அன்பு தேவைப்படுகிறது.

இந்தச் சமயத் தலைவர்கள்மீது இயேசு கொண்டிருந்த அன்பை இன்று சிந்தித்துப் பாருங்கள். அவரிடம் குற்றம் காணவும், அவரைப் பற்றித் தவறாகத் தீர்ப்பளிக்கவும் அவர்கள் வந்திருந்தாலும், தொடர்ந்து அவரைச் சிக்கவைக்க முயன்றாலும், அவர்களின் மனங்களை வென்றெடுக்க இயேசு ஒருபோதும் முயற்சிப்பதை நிறுத்தவில்லை. நம் ஆண்டவரின் இந்த இரக்கத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது, உங்கள் வாழ்வில் அன்பு செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும் நபரையும் நினைத்துப் பாருங்கள். நம் தெய்வீக ஆண்டவரைப் பின்பற்றி, உங்கள் முழு இதயத்தோடும் அவரை அன்பு செய்ய மீண்டும் உறுதிகொள்ளுங்கள்.

மிகுந்த இரக்கமுள்ள என் ஆண்டவரே, பிறரை மன்னிக்கும் மனமும் அவர்கள்மீது இரக்கமும் எனக்குத் தந்தருளும். குறிப்பாக, யாரை அன்புசெய்வது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறதோ, அவர்கள்மீது ஆழ்ந்த அக்கறை கொள்ள எனக்கு உதவியருளும். உமது இறை இரக்கத்தைப் பின்பற்றி, அனைவரிடமும் முழுமையான அன்புடன் செயல்பட எனக்கு வலிமை தந்தருளும்; இதனால் அவர்கள் உம்மை இன்னும் ஆழமாக அறிந்துகொள்வார்களாக. இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.


நம் ஆண்டவரின் மகிழ்ச்சி

திருவருகைக்காலத்தின் இரண்டாம் வாரச் செவ்வாய்

“இயேசு தம் சீடர்களிடம் கூறினார்: “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் நூறு ஆடுகள் இருக்க, அவற்றுள் ஒன்று வழிதவறிச் சென்றால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுவிட்டு, வழிதவறிய ஆட்டைத் தேடிச் செல்லமாட்டாரா?”  மத்தேயு 18:12

வழிதவறிய அந்த ஓர் ஆட்டைக் கண்டுபிடிப்பவர், “வழிதவறாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைவிட அதைக் குறித்து அதிகம் மகிழ்வார்” என்று இந்த நற்செய்திப் பகுதி தொடர்ந்து கூறுகிறது. முதலில் இது நியாயமற்றதாகத் தோன்றலாம். வழிதவறாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் குறித்து முதன்மையாக மகிழ வேண்டாமா? இந்தப் பகுதியைப் பற்றி விளக்கும்போது, வழிதவறிய ஓர் ஆட்டைத் தேடிச் சென்றவர் இறைமகனே என்று புனித ஹிலாரி பொருள் விளக்குகிறார். வழிதவறிய மனிதகுலத்தைத் தேடி மண்ணுலகிற்கு இறங்கி வருவதற்காக, அவர் “தொண்ணூற்றொன்பது ஆடுகளை”, அதாவது விண்ணகப் படைகளின் மாட்சியை, விட்டுவந்தார். மனிதகுலம் முழுவதுமே காணாமற்போன அந்த ஓர் ஆடுதான். அதில் நாம் அனைவரும் அடங்குகிறோம்.

விண்ணகத் தந்தையைவிட்டு நாம் வெகுதொலைவு வழிதவறிச் சென்றபின், நம் ஒவ்வொருவரையும் தேடிக் கண்டுபிடிக்கும் பணிக்காகவே இறைமகன் அனுப்பப்பட்டார் என்பது இந்த விளக்கம் நமக்கு வெளிப்படுத்தும் முதல் உண்மை. நாம் திரும்பி வருவோம் என்று தந்தை ஏதும் செய்யாமல் காத்திருக்கவில்லை. மாறாக, நம்மைத் தேடிக் கண்டுபிடித்து, தமது தெய்வீக மந்தைக்குள் மீண்டும் அழைத்துவரும் பணியை அக்கறையுடன் நிறைவேற்றத் தம் மகனை அனுப்பினார்.

இந்தப் பகுதியைச் சிந்தித்துப் பார்க்கும்போது, நம்மைத் தேடிவரும் நம் ஆண்டவரின் பேரார்வத்தையும் மனவுறுதியையும் நாம் உணர்வது முக்கியம். உங்கள் சொந்த வாழ்வில் இதை உணர்கிறீர்களா? கடவுளைத் தேடுவது முதன்மையாக நமது பொறுப்பே என்று எண்ணும் வலையில் சில வேளைகளில் நாம் விழுந்துவிடலாம். நிச்சயமாக நமக்கு இந்தப் பொறுப்பு இருக்கிறது. ஆயினும், நாம் வழிதவறும்போது நம் ஆண்டவர் எவ்வளவு பேரார்வத்துடன் நம்மைத் தேடுகிறார், நம்மைக் கண்டுபிடிக்க எவ்வளவு ஏங்குகிறார் என்பதைப் புரிந்துகொள்ளும்போது, நமது கடமையை நிறைவேற்றுவது மிகவும் எளிதாகிறது. நாள்தோறும் நம்மைத் தேடிக் கண்டுபிடிக்க நம் ஆண்டவர் செய்துள்ள அனைத்தையும் விண்ணகத்தில்தான் நாம் முழுமையாகப் புரிந்துகொள்வோம். ஆனால் இப்போதைக்கு, இந்த ஆன்மிக உண்மையைப் புரிந்துகொள்ள நாம் முயல வேண்டும். அப்போதுதான், அக்கறையுடன் நம்மைத் தேடிவரும் இயேசுவை ஏற்றுக்கொள்ள நம் உள்ளங்கள் இன்னும் திறந்திருக்கும்.

அவர் நம்மைக் கண்டுபிடித்து, நமது பாவத்திலிருந்து நம்மைத் தூக்கிச் செல்லும் ஒவ்வொரு முறையும், இறைமகனின் இதயத்தில் எழும் மகிழ்ச்சியே இந்தப் பகுதி வெளிப்படுத்தும் இரண்டாவது உண்மை. நம்மீது கோபம்கொண்டு, நம்மைக் குற்றவாளிகளெனத் தீர்ப்பிட்டு, தண்டனைத் தீர்ப்பு வழங்கும் கடவுளாகவே அவரைக் காணும் வலையில் நாம் அடிக்கடி விழுந்துவிடலாம். ஆனால், நாம் வழிதவறும்போது நம்மைக் கண்டுபிடிப்பதற்காக இறைமகன் எந்த அளவிற்குச் சென்றார் என்பதை நாம் புரிந்துகொண்டால், நம்மைக் கண்டுபிடித்து பாவத்திலிருந்து தூக்கிச் செல்லும்போது அவரது இதயத்தில் எழும் மகிழ்ச்சியை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தால், அருளின் வழியாக அவர் நம்மிடம் வரும் ஒவ்வொரு முறையும் அவருக்கும், அவரது மென்மையான அழைப்புகளுக்கும், இரக்கமுள்ள அவரது இதயத்திற்கும் நம்மை இன்னும் மனமுவந்து திறந்துகொடுப்போம்.

நம் ஆண்டவர் உங்களைத் தனிப்பட்ட முறையில் தேடிவரும்போது, அவரது இதயத்தில் நிறைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பைப் பற்றி இன்று சிந்தியுங்கள். அது மகிழ்ச்சியை எதிர்நோக்கும் எதிர்பார்ப்பு—அவர் உங்களைத் தூக்கி, மென்மையாகத் தந்தையிடம் மீண்டும் சுமந்துசெல்லும்போது அவரை நிறைக்கும் மகிழ்ச்சியை எதிர்நோக்கும் எதிர்பார்ப்பு. நம் ஆண்டவரின் இதயத்திலுள்ள இந்த மகிழ்ச்சி நிறைவேற இடமளியுங்கள்; அப்போது நீங்களும் இந்த நிறைவான மகிழ்ச்சியில் பங்குபெறுவீர்கள்.

அக்கறையுடன் என்னைத் தேடும் என் ஆண்டவரே, நீர் இரவும் பகலும் என்னைத் தேடுகிறீர்; நான் இன்னும் முழுமையாக உம்மிடம் திரும்பிவரும்படி என்னை அழைப்பதில் நீர் ஒருபோதும் சோர்வடைவதில்லை. அன்பும் இரக்கமும் நிறைந்த உமது மென்மையான அழைப்புகளுக்கு நான் எப்போதும் பதிலளித்து, உமது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்ப எனக்கு உதவியருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.


உங்கள் சுமைகளை இறக்கி வைத்தல்

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் புதன்கிழமை

“உழைத்துச் சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” மத்தேயு 11:28

வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும் நலனையும் அளிக்கும் செயல்களில் ஒன்று உறக்கம். குறிப்பாக, ஆழ்ந்த, புத்துணர்வூட்டும் உறக்கம் கிடைக்கும்போது இது உண்மையாகிறது. ஆழ்ந்து உறங்கியவர் விழித்தெழும்போது புத்துணர்வுடனும் புதிய நாளை எதிர்கொள்ளத் தயாராகவும் இருப்பார். இதற்கு நேர்மாறானதும் உண்மைதான். உறங்குவது கடினமாகவும் உறக்கம் அமைதியற்றதாகவும் இருக்கும்போது, பல தீய விளைவுகளை ஒருவர் அனுபவிக்க நேரிடலாம். குறிப்பாக, நலமான உறக்கம் கிடைக்காத நிலை வழக்கமாகிவிடும்போது இவ்வாறு நிகழ்கிறது.

நம் ஆன்மீக வாழ்விலும் இதுவே உண்மை. பலருக்கு “ஆன்மீக இளைப்பாறுதல்” என்பது பழக்கமில்லாத ஒன்று. அவர்கள் ஒவ்வொரு வாரமும் சில செபங்களைச் சொல்லலாம், திருப்பலியில் பங்கேற்கலாம், அல்லது ஒரு புனித மணிநேர வழிபாட்டில்கூட ஈடுபடலாம். ஆனால், நம் ஒவ்வொருவரையும் ஆழமாக மாற்றியமைக்கும் செபத்தில் நாம் ஆழ்ந்தாலன்றி, நமக்குத் தேவையான உள்ளார்ந்த ஆன்மீக இளைப்பாறுதலை நம்மால் அனுபவிக்க முடியாது.

இன்றைய நற்செய்தியில், “என்னிடம் வாருங்கள்…” என்று இயேசு விடுக்கும் அழைப்பு, நம் அன்றாட வாழ்வின் சுமைகளிலிருந்து அவர் நம்மை விடுவிக்க அனுமதிப்பதன் வழியாக, நம் உள்ளத்தில் மாற்றம் பெறுவதற்கான அழைப்பாகும். சோதனைகள், குழப்பங்கள், ஏமாற்றங்கள், கோபங்கள் போன்ற ஆன்மீக இன்னல்களையும் சவால்களையும் ஒவ்வொரு நாளும் நாம் அடிக்கடி எதிர்கொள்கிறோம். தீயவனின் பொய்களும், இறைநம்பிக்கையை ஒதுக்கிவைக்கும் போக்கு அதிகரித்துவரும் பண்பாட்டின் பகைமையும், நாம் அன்றாடம் உள்வாங்கும் பல்வேறு ஊடகங்கள் வழியாக நம் புலன்கள்மீது நிகழும் தாக்குதல்களும் நாள்தோறும் நம்மை அடிக்கடி தாக்குகின்றன. இவையும், நாம் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் இன்னும் பலவும், ஆன்மீக நிலையில் நம்மை உள்ளார்ந்த விதத்தில் சோர்வடையச் செய்கின்றன. இதனால், நம் ஆண்டவரிடமிருந்து மட்டுமே கிடைக்கும் ஆன்மீகப் புத்துணர்வு நமக்குத் தேவைப்படுகிறது. ஆழ்ந்த, புதுவாழ்வூட்டும் செபத்திலிருந்து பிறக்கும் ஆன்மீக “உறக்கம்” நமக்குத் தேவை. நாம் யாராக இருக்கிறோமோ அதையும், ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து, நம் முழு இருப்போடும் தம்மிடம் வருமாறு கிறிஸ்து விடுக்கும் அழைப்புக்குச் செவிசாய்த்தால் மட்டுமே இத்தகைய செபம் சாத்தியமாகும்.

சில வேளைகளில் நீங்கள் சோர்வாக உணர்கிறீர்களா என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள். குறிப்பாக, உங்கள் மனதிலோ உணர்வுகளிலோ ஏற்படும் சோர்வைப் பற்றிச் சிந்தியுங்கள். இத்தகைய சோர்வுகள் பல நேரங்களில் உண்மையில் ஆன்மீகத் தன்மை கொண்டவை; அவற்றுக்கு ஆன்மீகத் தீர்வு தேவைப்படுகிறது. ஆழ்ந்த செபத்தில் தம்மிடம் வருமாறு நம் ஆண்டவர் விடுக்கும் அழைப்பை ஏற்று, அவரது திருமுன்னிலையில் இளைப்பாறுவதன் வழியாக, அவர் உங்களுக்கு அளிக்கும் தீர்வை நாடுங்கள். இவ்வாறு செய்வது, நீங்கள் சுமக்கப் போராடும் கனமான சுமைகள் நீங்க உதவும்.

என் அன்பான ஆண்டவரே, உம்மிடம் வந்து, உமது மாட்சிமிகு முன்னிலையில் இளைப்பாறுமாறு நீர் விடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன். அன்பு ஆண்டவரே, அருளும் இரக்கமும் பொங்கிவழியும் உமது இதயத்திற்குள் என்னை ஈர்த்துக்கொள்ளும். நான் உம்மில் இளைப்பாறி, வாழ்வின் பல சுமைகளிலிருந்து விடுதலை பெறுமாறு உமது முன்னிலைக்கு என்னை ஈர்த்துக்கொள்ளும். இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.


ஆன்மாவின் பகைவர்களைத் தாக்குதல்

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் வியாழக்கிழமை

“திருமுழுக்கு யோவானின் காலமுதல் இன்றுவரை விண்ணரசு வன்முறைக்கு உள்ளாகிறது; வன்முறையாளர்கள் அதை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுகிறார்கள்.”  மத்தேயு 11:12

“வன்முறையாளர்களாக” இருந்து, விண்ணரசை “வலுக்கட்டாயமாகக்” கைப்பற்றுபவர்களில் நீங்களும் ஒருவரா? நீங்களும் அப்படிப்பட்டவராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்!

சில நேரங்களில் இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. மேலே உள்ள பகுதி அத்தகைய ஒரு சூழலை நம் முன் வைக்கிறது. இந்தப் பகுதியைப் பற்றிப் புனித ஹோசேமரியா எஸ்கிரிவா கூறுகையில், தாங்கள் வாழும் சூழல் விசுவாசத்திற்குப் பகையாக இருக்கும்போது, “மனத்திண்மையுடனும்” “துணிவுடனும்” செயல்படும் கிறிஸ்தவர்களே “வன்முறையாளர்கள்” என்கிறார் (காண்க கிறிஸ்து கடந்து செல்கிறார், 82). விண்ணரசு “தங்களுக்கு எதிராகத் தாங்களே போராடுவோருக்கே” உரியது என்று அலெக்சாந்திரியா நகரப் புனித கிளமெண்ட் கூறுகிறார் (மீட்புப் பெறும் செல்வர் யார், 21). வேறு வார்த்தைகளில் சொல்வதானால், விண்ணரசைக் கைப்பற்றும் “வன்முறையாளர்கள்” என்பவர்கள், விண்ணரசைப் பெறுவதற்காகத் தங்கள் ஆன்மாவின் பகைவர்களுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடுபவர்களே.

ஆன்மாவின் பகைவர்கள் யார்? பாரம்பரியமாக உலகம், உடல் இச்சை, அலகை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறோம். கடவுளின் அரசில் வாழ முயலும் கிறிஸ்தவர்களின் ஆன்மாக்களுக்குள் இந்த மூன்று பகைவர்களும் பெரும் வன்முறையை ஏற்படுத்தியுள்ளனர். அப்படியானால், இறையரசுக்காக நாம் எப்படிப் போராடுவது? வலிமையோடு! சில மொழிபெயர்ப்புகள், “தாக்குபவர்கள்” இறையரசை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுகிறார்கள் என்று கூறுகின்றன. கிறிஸ்தவ வாழ்வு என்பது முற்றிலும் செயலற்ற ஒரு வாழ்வாக இருக்க முடியாது என்பதே இதன் பொருள். வெறுமனே புன்னகைத்துக்கொண்டே நாம் விண்ணகத்திற்குள் நுழைந்துவிட முடியாது. நம் ஆன்மாவின் பகைவர்கள் உண்மையானவர்கள்; அவர்கள் மூர்க்கமாகத் தாக்குபவர்கள். ஆகவே, கிறிஸ்துவின் மனத்திண்மையோடும் துணிவோடும் இந்தப் பகைவர்களை நாம் நேரடியாக எதிர்த்துப் போராட வேண்டும் என்ற பொருளில், நாமும் தீவிரமாகச் செயல்பட வேண்டும்.

இதை நாம் எவ்வாறு செய்வது? நோன்பாலும் தன்னொறுப்பாலும் ஊனியல்பு என்னும் பகைவரை எதிர்த்துப் போராடுகிறோம். கிறிஸ்துவின் உண்மையிலும் நற்செய்தியின் உண்மையிலும் வேரூன்றி நின்று, இக்காலத்தின் “ஞானத்திற்கு” ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள மறுப்பதன் மூலம் உலகை எதிர்த்துப் போராடுகிறோம். அலகை நம்மை ஏமாற்றவும், குழப்பவும், அனைத்திலும் தவறாக வழிநடத்தவும் தீட்டும் தீய திட்டங்களை அறிந்துகொள்வதன் மூலம் அதை எதிர்த்துப் போராடுகிறோம்; இவ்வாறு அதை அதட்டி, நம் வாழ்வில் அதன் செயல்களை நிராகரிக்கிறோம்.

உள்ளிருந்து தாக்கும் அந்தப் பகைவர்களை எதிர்த்துப் போராடுவதற்காக, மனத்திண்மையிலும் துணிவிலும் வளர நீங்கள் பெற்றுள்ள அழைப்பைப் பற்றி இன்று சிந்தியுங்கள். இந்தப் போராட்டத்தில் அச்சத்தால் பயனில்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையிலும் இரக்கத்திலும் கொள்ளும் நம்பிக்கையே நமக்குத் தேவையான ஒரே ஆயுதம். அவரைச் சார்ந்திருங்கள்; கிறிஸ்துவின் அமைதியை உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள இந்தப் பகைவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளுக்கு இடம்கொடுக்காதீர்கள்.

மாட்சியும் வெற்றியும் நிறைந்த என் ஆண்டவரே, உலகத்தையும், என் உடலின் சோதனைகளையும், அலகையையுமே எதிர்த்து நான் உறுதியாக நிற்கும்படி உமது அருளைப் பொழிவீர் என்று உம்மீது நம்பிக்கை வைக்கிறேன். நம்பிக்கையின் நல்ல போராட்டத்தை நான் போராடவும், உம்மையும் என் வாழ்வுக்கான உமது அதிபுனிதத் திருவுளத்தையும் நாடுவதிலிருந்து ஒருபோதும் தளராதிருக்கவும் எனக்குத் துணிவையும் அஞ்சாமையையும் மனஉறுதியையும் தந்தருளும். இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.


நடனமாடுதலும் புலம்புதலும்

திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரம் — வெள்ளி

இயேசு மக்கள் கூட்டத்தினரிடம் கூறினார்: “இத்தலைமுறையை நான் எதற்கு ஒப்பிடுவேன்? இது சந்தைவெளிகளில் அமர்ந்துகொண்டு, ‘நாங்கள் உங்களுக்காகக் குழல் ஊதினோம்; நீங்கள் நடனமாடவில்லை. நாங்கள் ஒப்பாரி பாடினோம்; நீங்கள் புலம்பவில்லை’ என்று ஒருவரையொருவர் கூப்பிட்டுச் சொல்லும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.”   மத்தேயு 11:16–17

“நாங்கள் உங்களுக்காகக் குழல் ஊதினோம்…” என்றும் “நாங்கள் ஒப்பாரி பாடினோம்…” என்றும் இயேசு கூறும்போது எதைக் குறிப்பிடுகிறார்? இந்தக் “குழலோசையும்” “ஒப்பாரியும்” முற்கால இறைவாக்கினர்கள் பறைசாற்றிய இறைவார்த்தையையே குறிக்கின்றன என்று திருச்சபைத் தந்தையர்கள் தெளிவாக விளக்குகிறார்கள். இயேசுவுக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்தப் பலர் வந்தார்கள்; ஆனால் பலரும் செவிகொடுக்கத் தவறினார்கள். திருமுழுக்கு யோவான் இறுதியானவரும் மிகப் பெரியவருமான இறைவாக்கினர். அவர் மக்களை மனந்திரும்ப அழைத்தார்; ஆனால் சிலரே செவிகொடுத்தனர். இவ்வாறு, இயேசு இந்தத் துயரமான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்.

நாம் வாழும் இக்காலத்தில், பழைய ஏற்பாட்டின் இறைவாக்கினர்களைவிட நமக்கு இன்னும் மிகுதியான கொடைகள் கிடைத்துள்ளன. புனிதர்களின் வியத்தகு சாட்சியம், திருச்சபையின் தவறற்ற போதனை, அருளடையாளங்களின் கொடை, புதிய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ள இறைமகனின் வாழ்வும் போதனையும் நமக்கு உள்ளன. ஆயினும், வருந்தத்தக்க வகையில், பலர் செவிகொடுக்க மறுக்கிறார்கள். நற்செய்திக்கு மறுமொழியாக “நடனமாடவும்” “புலம்பவும்” பலர் தவறுகிறார்கள்.

கிறிஸ்து இயேசு தம் வாழ்வு, இறப்பு, உயிர்ப்பு வழியாக நமக்குத் தம்மையே கொடையாக அளித்திருப்பது, நாம் முழு உள்ளத்தோடு மகிழ்வதற்கும் என்றென்றும் அவரை ஆராதிப்பதற்கும் காரணமாக இருக்க வேண்டும்; இந்தப் பொருளில்தான் நாம் “நடனமாட” வேண்டும். இறைமகனை உண்மையாக அறிந்து அன்புசெய்வோர் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறார்கள்! மேலும், நம் சொந்த வாழ்விலும் நம்மைச் சுற்றியுள்ள அனைவரின் வாழ்விலும் உள்ள எண்ணற்ற பாவங்களுக்காக நாம் “புலம்ப” வேண்டும். பாவம் உண்மையாகவே உள்ளது; எங்கும் பரவியுள்ளது. புனிதமான துயரமே அதற்குப் பொருத்தமான ஒரே மறுமொழி. மீட்பு உண்மையாகவே உள்ளது. நரகமும் உண்மையாகவே உள்ளது. இந்த இரு உண்மைகளும் நம்மிடமிருந்து முழுமையான மறுமொழியைக் கோருகின்றன.

உங்கள் சொந்த வாழ்வில், நற்செய்தி உங்களில் தாக்கத்தை ஏற்படுத்த எவ்வளவு முழுமையாக அனுமதித்திருக்கிறீர்கள்? புனிதர்களின் வாழ்வு வழியாகவும் நமது திருச்சபை வழியாகவும் ஒலித்துள்ள கடவுளின் குரலுக்கு நீங்கள் எவ்வளவு கவனமாகச் செவிகொடுக்கிறீர்கள்? செபத்தில் உங்கள் மனச்சான்றின் ஆழத்தில் கடவுள் உங்களோடு பேசும்போது, அவரது குரலைக் கேட்க நீங்கள் மனதை ஒருமுகப்படுத்துகிறீர்களா? செவிகொடுக்கிறீர்களா? மறுமொழி அளிக்கிறீர்களா? பின்பற்றுகிறீர்களா? கிறிஸ்துவுக்கும் அவரது பணிக்கும் சேவைசெய்ய உங்கள் வாழ்வு முழுவதையும் அர்ப்பணிக்கிறீர்களா?

உலக மீட்பரின் தெளிவான, ஐயத்திற்கிடமற்ற, மாற்றமளிக்கும், வாழ்வளிக்கும் வார்த்தைகளையும் அவரது உடனிருப்பையும் பற்றி இன்று சிந்தியுங்கள். அவர் தெளிவாகக் கூறிய அனைத்திற்கும், அவரது உடனிருப்பிற்கும் உங்கள் வாழ்வில் எவ்வளவு கவனம் செலுத்தியிருக்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். கடவுளின் மாட்சிக்காக நீங்கள் “நடனமாடாமலும்”, உங்கள் வாழ்விலும் நம் உலகிலும் வெளிப்படையாகக் காணப்படும் பாவங்களுக்காகப் “புலம்பாமலும்” இருந்தால், கிறிஸ்துவை அடியோடு பின்பற்ற உங்களை மீண்டும் அர்ப்பணியுங்கள். இறுதியில், காலந்தோறும் கடவுள் உரைத்துள்ள உண்மையும் அவரது புனிதமான, தெய்வீக உடனிருப்புமே முக்கியமானவை.

மாட்சிமிகு என் ஆண்டவராகிய இயேசுவே, என் வாழ்விலும் என்னைச் சூழ்ந்துள்ள உலகிலும் உமது இறைப் பிரசன்னம் இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் நீர் என்னிடம் பேசுகின்ற, என்னிடம் வருகின்ற எண்ணற்ற வழிகளைக் குறித்து நான் இன்னும் அதிகக் கவனத்துடன் இருக்க உதவியருளும். உம்மையும் உமது புனித வார்த்தையையும் நான் கண்டறியும்போது, என்னை மகிழ்ச்சியால் நிரப்பியருளும். என் பாவத்தையும் உலகின் பாவங்களையும் நான் காணும்போது, என் சொந்தப் பாவத்தை எதிர்த்துப் போராடவும், உமது அன்பும் இரக்கமும் மிகவும் தேவைப்படுவோருக்கு அவற்றைக் கொண்டுசெல்லவும் நான் அயராது உழைக்கும்படி எனக்கு உண்மையான மனவருத்தத்தைத் தந்தருளும். இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.


இறைவார்த்தையை அணுகுதல்

திருவருகைக்காலத்தின் இரண்டாம் வாரம் சனிக்கிழமை

“நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். ஆனால் அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளாமல், தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனும் அவர்கள் கையில் துன்புறுவார்.” அப்போது, அவர் திருமுழுக்கு யோவானைப் பற்றியே தங்களிடம் பேசினார் என்பதைச் சீடர்கள் புரிந்துகொண்டார்கள். மத்தேயு 17:12–13

பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்களுள் இறுதியாக வந்தவர் மலாக்கி. கிறிஸ்துவின் வருகைக்குச் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தமது பணியை நிறைவுசெய்தார். மெசியாவுக்கு முன்பாக அவருடைய வழியை ஆயத்தப்படுத்துவதற்கு ஒரு “தூதர்” வருவார் என்று மலாக்கி இறைவாக்குரைத்தார். ஆண்டவரின் நாளுக்கு முன்பாக “இறைவாக்கினர் எலியா” வருவார் என்றும் மலாக்கி மேலும் கூறுகிறார் (மலாக்கி 3:1–24 காண்க).

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களில் பலர் இந்த இறைவாக்கைப் புரிந்துகொள்ளவில்லை; இதைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கவுமில்லை. எனவே, “எலியா” வராததால், இயேசு வாக்களிக்கப்பட்ட மெசியா அல்ல என்பது தெளிவு என்று மறைநூல் அறிஞர்கள் கூறி, இந்த இறைவாக்கைப் பயன்படுத்தி மக்களில் பலரைக் குழப்பினர்.

புதிய எலியாவாக இருக்கவிருந்த அந்தத் “தூதர்”, திருமுழுக்கு யோவானாக ஏற்கெனவே வந்துவிட்டார் என்பதை இயேசு சீடர்களுக்குத் தெளிவுபடுத்தினார். இவ்வாறு தெளிவுபடுத்தியதன் மூலம், மறைநூல்களுக்கு விளக்கம் அளிக்க முயன்ற மறைநூல் அறிஞர்கள் சரியாக விளக்கவில்லை என்பதையும், தங்கள் தவறுகளால் மக்களைத் தவறாக வழிநடத்திக்கொண்டிருந்தார்கள் என்பதையும் இயேசு தெளிவுபடுத்தினார்.

இறைவார்த்தையை நாம் தாழ்ச்சியுடன் அணுக வேண்டும் என்பது இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளும் ஒரு பாடம். மறைநூல் அறிஞர்களின் செருக்கு, உண்மையில் அவர்களிடம் இல்லாத ஏதோ ஓர் அசாதாரண ஞானம் தங்களுக்கு இருப்பதாக நம்பச் செய்தது. இதனால், இறைமக்களுக்கு அவர்கள் தகுதியற்ற ஆன்மிக ஆசிரியர்களாகச் செயல்பட்டனர்.

பழைய ஏற்பாட்டு இறைவாக்குகளை மட்டுமல்லாமல், இயேசுவே பேசிய வார்த்தைகளையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இறைவார்த்தையின் முன் தாழ்ச்சியுடன் இருப்பது இன்றியமையாதது. இறைவார்த்தையின் முன் தாழ்ச்சி இல்லாவிட்டால், நம் ஆண்டவர் பேசிய அழகிய, புனிதமான வார்த்தைகளை நாம் அனைவருமே எளிதில் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும்.

மறைநூல்களில் உள்ள அனைத்தும் ஆழ்ந்த பொருளும் ஆழமும் உண்மையும் கொண்டவை. இந்தப் புனித இறைவார்த்தையின் வழியாக நாம் இறைவனையே சந்திக்கிறோம். ஆனால் செருக்கு நமக்குள் ஊடுருவ நாம் இடமளித்தால், நாமும் மறைநூல் அறிஞர்களைப் போல நடந்துகொண்டு, இறைவார்த்தையைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும். இதன் விளைவாக இறைவனைப் பற்றிய ஒரு திரிபான உருவகம் நம்மில் தோன்றும்; அது நம் அன்பான ஆண்டவரை நாம் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்குத் தடையாகிவிடும். ஆனால் இறைவன் நமக்கு வெளிப்படுத்தியுள்ள அனைத்தின் முன்பும் நாம் எப்போதும் தாழ்ச்சியுடன் இருக்க முடிந்தால், நம் இதயங்களில் இறைவன் பேச விரும்பும் மிக ஆழமான, மிக அழகிய உண்மைகளை இன்னும் எளிதாக மனந்திறந்து ஏற்றுக்கொள்வோம்.

இறைவார்த்தையைக் குறித்துக் குழப்பமடைந்த அனுபவங்கள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், அவற்றை இன்று சிந்தித்துப் பாருங்கள். நம் ஆண்டவர் உங்களிடம் கூற விரும்புவதை ஏற்றுக்கொள்ள, தாழ்ச்சியுடன் உங்கள் இதயத்தை இன்னும் முழுமையாகத் திறக்க முயலுங்கள். திறந்த மனத்துடனும் இதயத்துடனும் செவிகொடுங்கள். நம் நம்பிக்கையின் மிக ஆழமான உண்மைகளுக்கு நீங்கள் வழிநடத்தப்படும்படி, தூய கொடையாகிய நம்பிக்கை உங்கள் வழிகாட்டியாக இருக்க அனுமதியுங்கள்.

மறைபொருளும் அழகும் நிறைந்த என் ஆண்டவரே, எழுதப்பட்ட உமது வார்த்தையின் வழியாக வாழ்வின் மிக ஆழமான மறைபொருள்களை நீர் எங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளீர். உம்மை இன்னும் முழுமையாக அறிந்துகொள்ளும்படி, நான் எப்போதும் உமது வார்த்தையைத் தாழ்ச்சியுடனும் திறந்த மனத்துடனும் அணுகுவேனாக. இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

பொருளடக்கம்


4 தொகுதிகளும் மென்மையான அட்டையுடன் கூடிய அச்சுநூல் & மின்னூல் வடிவங்களில் கிடைக்கின்றன!

(விரைவில் வருகிறது!)

Amazon – Google Play – iTunes – Barnes and Noble

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: