4 தொகுதிகளும் மென்மையான அட்டையுடன் கூடிய அச்சுநூல் & மின்னூல் வடிவங்களில் கிடைக்கின்றன!
கலங்கிய இதயம்
பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு (ஆண்டு A)
இயேசு தம் சீடர்களிடம் கூறினார்: “உங்கள் இதயங்கள் கலங்க வேண்டாம். கடவுள்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்; என்மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தையின் இல்லத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அவ்வாறு இல்லையெனில், உங்களுக்கு ஓர் இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன் என்று உங்களிடம் சொல்லியிருப்பேனா?” யோவான் 14:1–2
இறுதி இராவுணவின்போது இயேசு திருத்தூதர்களிடம் கூறிய இந்த ஆறுதலும் ஊக்கமும் தரும் வார்த்தைகள், யூதாசு அவரைக் காட்டிக்கொடுக்க வெளியே சென்ற உடனேயும், சேவல் கூவுமுன் பேதுரு தம்மை மூன்றுமுறை மறுதலிப்பார் என்று மற்றவர்கள் முன்னிலையில் இயேசு அவரிடம் கூறிய பின்னரும் வருகின்றன. இதனால், பன்னிருவரும் (இப்போது பதினொருவர்), குறிப்பாகப் பேதுரு, மனந்தளர்ந்திருப்பார்கள். இயேசு இதை உணர்ந்து, “உங்கள் இதயங்கள் கலங்க வேண்டாம்…” என்கிறார்.
தாம் விரைவில் இயேசுவுக்கு எதிராக ஒரு கடுமையான பாவத்தைச் செய்யப்போவதாகப் பேதுருவிடம் கூறப்பட்டது. பின்னர் நமக்குச் சொல்லப்படுவதுபோல், இந்தப் பாவங்களைச் செய்தவுடனேயே பேதுரு வெளியே சென்று மனங்கசந்து அழுதார். அவ்வாறு அழுதபோது, “உங்கள் இதயங்கள் கலங்க வேண்டாம்…” என்ற இயேசுவின் வார்த்தைகளை ஒருவேளை அவர் நினைவுகூர்ந்திருக்கலாம்.
பாவம் செய்யத் தூண்டப்படும் சோதனை மனச்சோர்வை ஏற்படுத்தலாம். ஆனால் அதுவே ஒரு நன்மையாக மாறக்கூடும். நமக்கு ஏற்படும் சோதனைகள் நம்மைச் சிறிதும் பாதிக்கவில்லை என்றால், கடவுள்மீது நமக்கு அன்பு குறைவாக உள்ளது என்று பொருள். அந்தச் சோதனைகளுக்கு இடங்கொடுத்துவிட்டும் நாம் வருந்தாமல் இருந்தால், அது இன்னும் மோசமானது. எனினும், நம் பாவங்களால் ஏற்படும் மனச்சோர்வு நீடிக்கக்கூடாது; அதற்கு நேர்மாறான எதிர்நோக்கு என்னும் நற்பண்பாக அது மாற வேண்டும். மேலே காணப்படும் இயேசுவின் வாக்குறுதியைக் கேட்டு உணர்ந்துகொள்ளும்போதுதான், பாவத்திலிருந்து எதிர்நோக்கு பிறக்கும்.
மனம் கலங்க வேண்டாம் என்று இயேசு சீடர்களிடம் கூறுவதோடு, அதற்கான காரணத்தையும் அவர்களுக்குச் சொல்கிறார். அவர்களுடைய தவறுகளையும் மீறி, விண்ணகத்தில் அவர்களுக்காக ஓர் இடத்தை ஏற்பாடு செய்வதாகவும், தம் தந்தையின் இல்லத்திலுள்ள அந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல வருவதாகவும் இயேசு அவர்களுக்கு வாக்களிக்கிறார். இதை நம்புவதன் வழியாக, பேதுருவும் மற்ற திருத்தூதர்களும் தங்கள் தவறுகளால் முதலில் ஏற்படும் மனச்சோர்வை அகற்றி, விண்ணகத்தை எதிர்பார்த்துக் கடவுளிடம் திரும்ப முடியும்.
உங்கள் பாவத்தால் நீங்கள் மனச்சோர்வு அடைகிறீர்களா? நீங்கள் தொடர்ந்து போராடிவரும் ஏதேனும் ஒரு பாவத்தை நினைவுகூர்ந்து தொடங்குங்கள். குறிப்பாக, பழக்கமாகிவிட்ட பாவம், துயரம், மனந்திரும்புதல், எதிர்நோக்கு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்; அல்லது நம்பிக்கையிழப்பிலும் நற்பண்பைக் கைவிடுவதிலும் முடியும் மனச்சோர்விற்கு வழிவகுக்கும். புனித பேதுருவைப் போல, நம் பாவங்களுக்காக மனங்கசந்து அழ நாம் முயல வேண்டும். நம் பாவங்களும், நம்பிக்கையிழக்கத் தூண்டும் சோதனையும், எதிர்நோக்கு, துணிவு, மனவுறுதி ஆகியவற்றை மீண்டும் பெறுவதற்கான உந்துதலாக மாற நாம் இடமளிக்க வேண்டும். “உங்கள் உள்ளங்கள் கலங்க வேண்டாம்…” என்று இயேசு நம்மிடம் கூறுவதை நாம் எப்போதும் கேட்டால்தான் இது சாத்தியமாகும். அவரது இரக்கத்தையும் கனிவையும் நாம் உணர வேண்டும். ஒருநாள் நாம் எல்லாப் பாவங்களையும் வென்று, தந்தையின் இல்லத்தில் வரவேற்கப்படுவோம் என்ற நம்பிக்கையால் அந்த அன்பு நம்மை நிரப்ப நாம் இடமளிக்க வேண்டும்.
நீங்கள் தொடர்ந்து போராடிவரும் ஏதேனும் ஒரு பாவத்தைப் பற்றி இன்று சிந்தியுங்கள். அவ்வாறு சிந்திக்கும்போது, உங்கள் மனச்சோர்வு நம்பிக்கையிழப்பிற்கு இட்டுச் செல்கிறதா அல்லது எதிர்நோக்கிற்கு இட்டுச் செல்கிறதா என்று ஆராயுங்கள். நீங்களாகவே பாவத்தை வெல்லும் உங்கள் திறனிலிருந்து எதிர்நோக்கு வருவதில்லை. நம் ஆண்டவரின் இரக்கத்திலிருந்தும், உங்களை மீட்பதாக அவர் அளித்த வாக்குறுதியிலிருந்துமே அது வருகிறது. உங்கள் உள்ளம் கலங்கியிருந்தால், அது நல்லதே. அதுவே எதிர்நோக்கின் தொடக்கப் புள்ளி. கலங்கிய உங்கள் உள்ளத்தை இயேசு உயர்த்தவும், உங்கள் பார்வையை விண்ணகத்தை நோக்கித் திருப்பவும் அவருக்கு இடமளியுங்கள்.
மிகுந்த இரக்கமுள்ள ஆண்டவரே, நான் பாவியாக இருந்தாலும், நீர் என்னிடம் கனிவுடன் பேசுகிறீர்; விண்ணகத்தைப் பற்றிய எதிர்நோக்கு எனக்கு எப்போதும் இருக்கும்படி, மனந்திரும்ப என்னை அழைக்கிறீர். என் பாவங்களுக்காக உண்மையான, புனிதமான மனவருத்தத்தை எனக்குத் தந்தருளும். ஒருநாள் தந்தையின் இல்லத்தின் நிறைவிற்கு நீர் என்னை அழைத்துச் செல்லும்படி, எப்போதும் உம்மிடம் திரும்ப எனக்கு உதவியருளும். இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
கத்தரித்துச் சீராக்கப்பட நாடுதல்
பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு (ஆண்டு B)
இயேசு தம் சீடர்களிடம் கூறினார்: “நானே உண்மையான திராட்சைக் கொடி; என் தந்தையே அதை வளர்ப்பவர். என்னில் கனிகொடாத கிளை ஒவ்வொன்றையும் அவர் அகற்றிவிடுகிறார்; கனிகொடுக்கும் கிளை ஒவ்வொன்றையும் இன்னும் மிகுதியாகக் கனிகொடுக்கும்படி கத்தரித்துச் சீராக்குகிறார். நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையின் காரணமாக நீங்கள் ஏற்கெனவே கத்தரித்துச் சீராக்கப்பட்டிருக்கிறீர்கள்.” யோவான் 15:1–3
ஒரு திராட்சைக் கொடி வளர்ந்து, மிகுதியான கனிகளை மட்டுமல்லாமல், மிகச் சிறந்த கனிகளையும் கொடுக்க உதவுவதில், அதைக் கத்தரித்துச் சீராக்குவது முக்கியமானது. கத்தரித்துச் சீராக்காமல் விட்டுவிட்டால், காலப்போக்கில் திராட்சைக் கொடி குறைவான கனிகளையும் தரம் குறைந்த கனிகளையுமே கொடுக்கும். முறையாகக் கத்தரித்துச் சீராக்குவது, கொடியின் ஊட்டச்சத்து மிகுந்த கனிதரும் புதிய மொட்டுகளைச் சென்றடைய உதவுகிறது.
விசுவாசம் அன்பிற்கு வழிவகுக்க வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள உதவுவதற்காக, மேலே உள்ள இயேசுவின் போதனை, திராட்சைக் கொடியைக் கத்தரித்துச் சீராக்கும் உருவகத்தைப் பயன்படுத்துகிறது. முதலாவதாக, தாமே “உண்மையான திராட்சைக் கொடி” என்று இயேசு கூறுகிறார். அருளின் புதிய வாழ்விற்கு நமக்குத் தேவையான ஊட்டத்தை அளிக்கும் ஒரே ஊற்று அவரே. விண்ணகத்திற்கும் மீட்பிற்கும் ஒரே வழி அவரே. நம் ஆண்டவரை அறிந்து, அவரோடு உறுதியாக இணைந்திருப்பதே விசுவாசம். இரண்டாவதாக, கனிகொடாத கிளை ஒவ்வொன்றையும் தாம் அகற்றிவிடுவதாக நம் ஆண்டவர் கூறுகிறார். அன்பு என்னும் நற்கனி இல்லாத விசுவாசம் இறந்தது என்பதையும், அது திராட்சைக் கொடியில் எதையும் விளைவிக்காத ஒரு கிளையைப் போன்றது என்பதையும் இது காட்டுகிறது. மூன்றாவதாக, நற்கனி கொடுக்கும் ஒரு கிளையை இயேசு காணும்போது, அதை அப்படியே விட்டுவிடுவதில்லை. மாறாக, “இன்னும் மிகுதியாகக் கனிகொடுக்கும்படி” அன்பான அக்கறையோடு அதைக் கத்தரித்துச் சீராக்குகிறார்.
இந்தப் போதனைகளை உங்கள் சொந்த வாழ்வில் செயல்படுத்த, உங்கள் விசுவாசத்தைத் திராட்சைக் கொடியோடு உறுதியாக இணைந்திருக்கும் ஒரு கிளையாகப் பார்ப்பதிலிருந்து தொடங்குங்கள். கடவுள் தமது புனித வார்த்தையின் வழியாகக் கூறிய அனைத்தையும் நீங்கள் நம்புகிறீர்களா? உங்கள் விசுவாசத்தைப் பொறுத்தவரை, தவறாமல் மனச்சான்றாய்வு செய்வது பயனுள்ளது. ஆன்மிக வாழ்வின் முதல் படி விசுவாசம் என்பதால், கடவுள் வெளிப்படுத்திய உண்மையில் அது உறுதியாக வேரூன்றியிருக்க வேண்டும். அதாவது, திருவிவிலியத்தின் வழியாகவும் திருஅவையின் மறைக்கல்விப் போதனைகளின் வழியாகவும் வெளிப்படுத்தப்படும் இறைவார்த்தையை நாம் தவறாமல் கற்றறிந்து, அந்தப் போதனைகளுக்கு நம் முழு மனத்தோடும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அடுத்ததாக, மறுநூல்கள் மற்றும் திருஅவை வழியாகக் கடவுள் கூறியுள்ள அனைத்திலும் உங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்திய பின், உங்களிடமுள்ள அன்பை ஆராய்ந்து பார்க்க முயலுங்கள். உங்கள் நம்பிக்கையிலிருந்து பிறக்கும் உறுதியான அன்புச் செயல்களை உங்கள் வாழ்வில் காண்கிறீர்களா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வெறும் உணர்ச்சியின் அடிப்படையில் நாம் பலவற்றை “நேசிக்க” முடியும். ஆனால் அன்பு என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது; நம் உணர்வுகளை அல்ல. அன்பு என்பது நம்பிக்கையின் கனி. உங்கள் வாழ்வில் எந்த அன்புச் செயல்களை உங்களால் சுட்டிக்காட்ட முடியும்? தன்னலமற்ற முறையிலும் தியாக மனப்பான்மையுடனும் எதைச் செய்யக் கடவுள் உங்களை அழைப்பதாக உணர்ந்திருக்கிறீர்கள்? அதைச் செய்திருக்கிறீர்களா?
இறுதியாக, உங்களுக்குள் அன்பு எவ்வாறெல்லாம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதைக் கண்டறியும்போது, அங்குதான் கடவுள் தமது கத்தரித்துச் சீர்செய்யும் பணியில் கவனம் செலுத்துவார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். கத்தரித்துச் சீர்செய்வது வேதனை தரலாம். அதற்குத் தியாகமும், சோதனைகளை எதிர்கொள்ளும்போது பொறுமையும், தன்னலத்தை வெல்வதும், உங்களுக்குச் செய்ய மனமில்லாதவற்றைச் செய்வதும் தேவைப்படும். உண்மையில், உங்கள் உள்நோக்கங்களைச் சீர்செய்து, அவை உணர்ச்சியைவிட நம்பிக்கையை அதிகமாகச் சார்ந்து இன்னும் தூய்மையானவையாக மாறுவதற்காக, சில வேளைகளில் அன்புச் செயல்கள்கூட இனிமையற்றவையாகத் தோன்றும்படி கடவுள் செய்கிறார். ஆனால் இது நல்லதே.
இயேசு தரும் இந்தப் புனிதமான உருவகத்தை இன்று சிந்தித்துப் பாருங்கள். அருளின் இயற்கைக்கு அப்பாற்பட்ட வாழ்வு எவ்வாறு செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் இயற்கைப் பாடம் இது. கடவுள் உங்களைக் கத்தரித்துச் சீர்செய்ய விரும்புவதைக் கண்டு பின்வாங்காதீர்கள். துன்பத்தை அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள்; அநீதிக்கு மன்னிப்பால் பதிலளியுங்கள்; இரக்கம் காட்ட மனமில்லாதபோதும் இரக்கம் காட்டுங்கள்; தகுதியற்றவர்களாகத் தோன்றுவோருக்குத் தன்னலமின்றிப் பணிபுரிய நாடுங்கள். இவ்வாறு செய்வது உங்களைக் கத்தரித்துச் சீர்செய்யும்; இதனால் உங்கள் வழியாகக் கடவுள் தமது அரசை மாட்சிமையான வழிகளில் கட்டியெழுப்ப முடியும்.
மிகுந்த மாட்சிமையுள்ள திராட்சைக் கொடியே இயேசுவே, வாழ்வுக்குத் தேவையான அனைத்து ஊட்டத்திற்கும் நீர், நீர் மட்டுமே ஊற்றாக இருக்கிறீர். நன்மைகள் அனைத்தும் உம்மிடமிருந்தே வருகின்றன. உம்மீதும், நீர் வெளிப்படுத்தியுள்ள அனைத்தின்மீதும் உறுதியான நம்பிக்கை கொள்ள எனக்கு உதவியருளும். இந்த நம்பிக்கை துளிர்விட்டு, உமது அரசை மாட்சிமையுடன் கட்டியெழுப்ப ஏராளமான நற்கனிகளைத் தருவதாக. இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
நித்திய மாட்சி
பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு (ஆண்டு C)
யூதாசு அவர்களை விட்டு வெளியேறியபின், இயேசு கூறினார்: “இப்போது மானிடமகன் மாட்சிப்படுத்தப்படுகிறார்; கடவுளும் அவரில் மாட்சிப்படுத்தப்படுகிறார். கடவுள் அவரில் மாட்சிப்படுத்தப்படுகிறார் என்றால், கடவுளும் அவரைத் தம்மில் மாட்சிப்படுத்துவார்; உடனே அவரை மாட்சிப்படுத்துவார்.” யோவான் 13:31–32
இங்கே இப்போது நாம் வாழும் இந்த வாழ்வு மட்டுமே நமக்குக் கிடைக்கும் ஒரே வாழ்வு என்றால், மரணமே நமது மிகக் கொடிய எதிரி என்று நம்புவது பொருத்தமானதே. ஆனால் நாம் அறிந்திருப்பதுபோல, நித்தியத்துடன் ஒப்பிடும்போது இந்த வாழ்வு கடலில் உள்ள ஒரு மணல் துகளே. எனவே, நமக்காகக் காத்திருக்கும் மாட்சிமைகளுக்குள் நாம் கடந்து செல்வதாகவே மரணத்தைக் காண வேண்டும். அன்புக்குரிய ஒருவரின் மரணம் நிச்சயமாகத் துயரமானதே. நமது சொந்த மரணத்தை எதிர்கொள்ளும்போதும், நமக்குத் தெரியாததை எண்ணி அஞ்சுவதற்குப் பல சோதனைகள் எழலாம். ஆனால் இறைமகனே மரணத்தைத் தாங்கிக்கொள்ளத் தேர்ந்தெடுத்தார் என்றால், மரணத்தை வேறுவிதமாகக் காண நாம் முயல வேண்டும்.
இன்றைய நற்செய்திப் பகுதி, இயேசுவுக்கு வரவிருக்கும் மரணத்தை அவர் மாட்சிப்படுத்தப்படுவதாகக் கூறுகிறது. “இப்போது மானிடமகன் மாட்சிப்படுத்தப்படுகிறார்; கடவுளும் அவரில் மாட்சிப்படுத்தப்படுகிறார்.” இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாசு இறுதி இராவுணவை விட்டு வெளியேறிய உடனேயே இயேசு இந்த வார்த்தைகளைக் கூறினார். உலகக் கண்ணோட்டத்தில், தாம் காட்டிக்கொடுக்கப்படுவதையும் கொடூரமாக இறப்பதையும் கடவுள் மாட்சிப்படுத்தப்படும் தருணமாக யாரும் கருதுவது அரிது. ஆனால் விண்ணக மற்றும் நித்தியக் கண்ணோட்டத்தில், இயேசுவின் மரணமே அவர் தந்தைக்கு அளிக்கக்கூடிய மிகப் பெரிய மாட்சியாக இருந்தது. கடவுளின் சிந்தையை நமதாக்கிக்கொள்ளும்போதுதான் இதன் பொருள் விளங்கும்.
பாஸ்கா காலத்தை நாம் தொடர்ந்து கொண்டாடும்போது, கிறிஸ்துவின் பாடுகளைக் கடந்து, அவரது பாடுகளின் கனியைக் காண்கிறோம். மரணம் தோற்கடிக்கப்பட்டதையும், இயேசு இப்போது மாட்சிப்படுத்தப்பட்ட, உயிர்த்தெழுந்த தமது உடலில் விண்ணகத்தில் என்றென்றும் வாழ்வார் என்பதையும் காண்கிறோம். தமது கைகளிலும் கால்களிலும் விலாவிலும் உள்ள காயத்தழும்புகளை அவர் என்றென்றும் தாங்கியிருப்பார்; அந்தத் தழும்புகள் தந்தையை என்றென்றும் மாட்சிப்படுத்தும். கிறிஸ்துவின் உயிர்ப்பு, மரணம் உட்பட அனைத்தையும் மாற்றுகிறது. எனவே, கடவுளின் சிந்தையை நமதாக்கிக்கொள்ளவும், அவர் நமது மனித வாழ்வைக் காண்பதுபோலவே நாமும் காணவும் தொடர்ந்து முயல வேண்டும்.
இந்த வாழ்வில் நீங்கள் எதற்காக வாழ்கிறீர்கள்? உங்கள் இலக்குகளும் பேராவல்களும் என்ன? உடனடி இன்பங்கள், பொருட்செல்வம், தன்னல நோக்கங்கள், நிலையற்ற பேராவல்கள் ஆகியவற்றில் அளவுக்கு அதிகமாகக் கவனம் செலுத்துவதை நீங்கள் கண்டால், இயேசு மாட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வு தரும் பாடத்தைச் சிந்திக்க வேண்டிய நேரம் இதுவே. தந்தையை மாட்சிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகத் தமது மரணத்தை எதிர்கொண்டதன் மூலம், நாமும் அவ்வாறே செய்ய இயேசு வழிவகுத்தார். அன்புக்குரிய ஒருவரின் மறைவோடு இயல்பான துயரம் எப்போதும் இணைந்திருந்தாலும், விண்ணகத்தையும் நித்திய மாட்சியையும் பற்றிய எதிர்நோக்கே இந்த வாழ்வில் அனைத்தையும் நாம் காணும் கண்ணோட்டமாக மாற வேண்டும்.
உங்கள் வாழ்வை நோக்கும்போது, கடவுள் உங்களுக்குத் தந்துள்ள சிலுவையை நீங்கள் கண்டுணர்வது இன்றியமையாதது. ஏனெனில், உங்கள் சிலுவையே இந்த நிலைவாழ்வின் மாட்சிக்கான நுழைவாயில். ஒவ்வொருவரின் சிலுவையும் வேறுபட்டதாக இருக்கும். சிலுவை என்பது வெறுமனே நமது துன்பம் மட்டுமல்ல; தியாக வாழ்வு வாழ்வதற்கான நமது அழைப்பும் ஆகும். இதுவே அன்பு. பிறருக்காக நம் உயிரைக் கையளிக்கவும், பிறருக்குப் பணிபுரியவும், ஒவ்வொரு தவறையும் மன்னிக்கவும், ஒவ்வொரு பாவியையும் அன்பு செய்யவும், தேவையில் இருப்போரிடம் இரக்கமும் பரிவும் காட்டவும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அழைப்பு இது. இவை அனைத்தையும் கடவுளின் நிறைவான திருவுளத்திற்குப் பதிலளிக்கும் வகையில் நாம் செய்ய வேண்டும். நம் வாழ்வில் உள்ள சிலுவைகள், மிகத் தூய வடிவில் அன்பு செய்வதற்கான வாய்ப்புகள். இயேசு தமது சிலுவையை இப்படித்தான் கண்டார்; நாமும் நமது சிலுவைகளை இப்படித்தான் காண வேண்டும்.
இன்று இறப்பைப் பற்றிச் சிந்தியுங்கள். ஆனால், அன்பினால் உங்களையே தியாகமாகக் கையளிப்பதற்கான ஓர் அழைப்பாக அதைக் காண முயலுங்கள். மாட்சிமிக்க ஓர் இறப்புக்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளச் சிறந்த வழி, இங்கே, இப்போதே கடவுளின் அன்பில் வாழ்வதுதான். நீங்கள் அவ்வாறு வாழும் அளவிற்கு, கிறிஸ்துவுக்கு அளிக்கப்பட்ட மாட்சியில் நீங்கள் பங்குபெறும்போது கடவுள் மாட்சிப்படுத்தப்படுவார்.
அன்புமிக்க என் ஆண்டவரே, இறப்பையே நீர் உமது தந்தைக்கு மாட்சி அளிப்பதற்கும், நீரே மாட்சிப்படுத்தப்படுவதற்குமான நிறைவான வழியாக மாற்றினீர். நீர் என் வாழ்வைக் காண்பதுபோல நானும் அதைக் காணவும், நான் அழைக்கப்பட்டுள்ள அந்த நிலைவாழ்வின் மாட்சிக்காக வாழவும், உமது சிந்தனையைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
கடவுளின் வெளிப்பாடுகளை நினைவுகூர்தல்
பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் திங்கள்
“நான் உங்களோடு இருக்கும்போதே இதை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். தந்தை என் பெயரால் அனுப்பவிருக்கும் துணையாளராம் தூய ஆவியார் உங்களுக்கு அனைத்தையும் கற்பிப்பார்; நான் உங்களுக்குச் சொன்ன அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.” யோவான் 14:25–26
சில வேளைகளில் கடவுள் நம்மிடம் பேசிய அனைத்தையும் நாம் மறந்துவிடுகிறோம். எடுத்துக்காட்டாக, நமது வாழ்வில் கடவுளின் உடனிருப்பை நாம் தெளிவாக அனுபவித்திருக்கலாம். செபத்தின் வழியாகப் பெற்ற ஆழ்ந்த ஆன்மிகப் புரிதல், மறையுரையின் வழியாக ஒலித்த அவரது குரல் நம்முள் ஏற்படுத்திய ஆழ்ந்த உறுதி, ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாகக் கிடைத்த வாழ்வை மாற்றும் விடுதலை, அல்லது திருவிவிலியத்தை வாசித்ததன் வழியாகக் கிடைத்த ஐயத்திற்கு இடமில்லாத தெளிவு போன்ற அனுபவங்களாக அவை இருக்கலாம். கடவுள் தமது உண்மையையும் வலிமையையும் மன்னிப்பையும் மற்ற எல்லா வகையான அருளையும் நமக்கு அளித்து நம்மிடம் பேசும்போது, அவரது நெருக்கத்தை உணர்வதால் நாம் ஆன்மிக ஆறுதல் அடைகிறோம். ஆனால், நமக்குத் துன்பம் வரும்போது, தெளிவு பெற்ற அந்தத் தருணங்கள் நம் நினைவிலிருந்து எளிதாக மறைந்துவிடக்கூடும்.
இயேசுவின் பொதுப்பணிக் காலமான அந்த மூன்று ஆண்டுகளில் சீடர்கள் தெளிவு அளிக்கும் பல அனுபவங்களைப் பெற்றிருப்பார்கள். அவரது மறையுரைகளில் வெளிப்பட்ட ஆன்மிக அதிகாரத்தைக் கண்டு அவர்கள் வியந்தார்கள்; எண்ணற்ற புதுமைகளுக்குச் சாட்சிகளாக இருந்தார்கள்; பாவிகள் விடுதலை அடைவதைக் கண்டார்கள்; இயேசு மாட்சியுடன் தோற்றமாற்றம் அடைந்ததைக் கண்டார்கள்; நம் ஆண்டவர் தந்தையோடு ஆழ்ந்த செபத்தில் ஒன்றித்திருப்பதையும் பார்த்தார்கள். கடவுளின் வல்லமை செயல்படுவதை அவர்கள் அனுபவித்த ஒவ்வொரு முறையும், இயேசுவே மெசியா, இறைமகன், உலகின் மீட்பர் என்ற அவர்களது உறுதி வளர்ந்திருக்கும். ஆனால், இந்தச் சீடர்கள் தம்மீது கொண்டுள்ள நம்பிக்கை விரைவில் ஆட்டங்காணும் என்பதையும் இயேசு அறிந்திருந்தார். தாம் கைது செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, கொல்லப்படுவதை அவர்கள் அச்சத்தோடு தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, முன்பு தாங்கள் அனுபவித்த அனைத்தையும் அவர்கள் மறக்கத் தொடங்குவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அச்சம் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்; தமது சீடர்கள் விரைவில் அந்தக் கண்ணியில் விழுவார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். இதனால்தான் இயேசு மேலே உள்ள வார்த்தைகளைத் தமது சீடர்களிடம் கூறினார். தூய ஆவியார் விரைவில் அவர்கள்மீது வந்து, அவர்களுக்கு அனைத்தையும் கற்பிப்பார் என்றும், தாம் அவர்களிடம் சொன்ன அனைத்தையும் அவர்களுக்கு நினைவூட்டுவார் என்றும் அவர் வாக்களித்தார்.
கடவுளிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட ஒவ்வொரு பாடமும் நம் வாழ்வில் எப்போதும் முதன்மையான இடத்தில் நிலைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! கடவுள் பல்வேறு வழிகளில் நம்மிடம் பேசிய அனைத்தையும் நாம் மறந்துவிடும்படி அச்சம் நம்மைக் குழப்புவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்காமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! சீடர்கள் நினைவுகூர்வதற்குத் தூய ஆவியாரின் உதவி தேவைப்படும் என்பதை இயேசு அறிந்திருந்ததுபோலவே, தூய ஆவியாரிடமிருந்து அதே உதவி நமக்கும் தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஆகவே, மேலே சீடர்களுக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகள் நமக்கும் சொல்லப்படுகின்றன. “தந்தை என் பெயரால் அனுப்பவிருக்கும் துணையாளராம் தூய ஆவியார் உங்களுக்கு அனைத்தையும் கற்பிப்பார்; நான் உங்களுக்குச் சொன்ன அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.”
கடந்த காலத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட நம்பிக்கை சார்ந்த எந்தப் பாடங்கள் உங்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட வேண்டும்? நமக்கு அவை தேவைப்படும் ஒவ்வொரு முறையும் அவற்றை நினைவுக்குக் கொண்டுவருவதே தூய ஆவியாரின் பணி. ஆகவே, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவை மாட்சியுடன் கொண்டாடும் நாளை நாம் நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், தூய ஆவியாரிடம் செபிப்பதும், கடவுள் தம்மை நமக்கு வெளிப்படுத்திய பல்வேறு வழிகளை நினைவுகூரும் கொடையைக் கேட்பதும் பொருத்தமானது. தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூவரும் ஒருவரோடு ஒருவர் முழுமையான இசைவுடன் செயல்படுகிறார்கள்; எனினும், நமது வாழ்வில் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பணி உள்ளது. கிறிஸ்து இயேசு என்னும் இறை ஆளுக்கு முற்றிலும் ஒத்தவர்களாக நாம் மாற வேண்டும் என்பதே தந்தையின் திருவுளம். அந்தத் திருவுளம் நிறைவேறுவதற்குள் நாள்தோறும் நம்மை வழிநடத்துவதே தூய ஆவியாரின் சிறப்பான பணி.
நம் ஆண்டவர் தம் சீடர்களுக்கும் நமக்கும் அளித்த இந்த வல்லமைமிக்க வாக்குறுதியை இன்று சிந்தித்துப் பாருங்கள். தூய ஆவியாரிடம் மன்றாடுங்கள். உங்கள் வாழ்வில் ஆவியார் தொடர்ந்து அளிக்கும் வழிநடத்துதலுக்கு உங்களைத் திறந்துகொடுங்கள்; அச்சம் உங்களைக் குழப்பத்திற்கு இட்டுச்செல்ல ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். மாறாக, எல்லாக் குழப்பங்களையும் அகற்றி, உங்கள் வாழ்நாள் முழுவதும் கடவுள் உங்களிடம் பேசிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்ட அவரை அனுமதியுங்கள்.
மாட்சிமைமிக்க ஆண்டவராகிய இயேசுவே, நீர் வெளிப்படுத்திய அனைத்தையும் எங்களுக்கு நினைவூட்டத் தூய ஆவியார் எங்களிடம் அனுப்பப்படுவார் என்று சீடர்களுக்கும் உம் மக்கள் அனைவருக்கும் வாக்களித்தீர். தூய ஆவியாரே, தொடர்ந்து என்மீது இறங்கிவந்து, எனக்குக் கற்பித்து என்னை வழிநடத்தும். அச்சம் என்னைக் குழப்பத்திற்கு இட்டுச்செல்ல நான் ஒருபோதும் இடமளிக்காதபடி, எனக்குக் கற்பிக்கப்பட்ட பல படிப்பினைகளை ஒருபோதும் மறவாதிருக்க எனக்கு உதவும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
கிறிஸ்துவின் அமைதி
பாஸ்கா காலம் ஐந்தாம் வாரத்தின் செவ்வாய்க்கிழமை
இயேசு தம் சீடர்களிடம் கூறினார்: “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன். உலகம் அளிப்பதுபோல் நான் உங்களுக்கு அளிப்பதில்லை.” யோவான் 14:27
இயேசு உங்களுக்கு அளிக்கும் அமைதி, உலகம் அளிக்கும் அமைதிபோன்ற தோற்றத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? நாம் அனைவரும் வாழ்வில் அமைதியை விரும்புகிறோம். உள்ளார்ந்த அமைதிக்கான ஏக்கம் நமது இயல்பிலேயே பதிந்துள்ளது. பலர் உள்ளத்தில் சீர்குலைவையும் பெரும் குழப்பத்தையும்கூட ஏற்படுத்தும் முடிவுகளை எடுத்தாலும், உண்மையில் எது நிறைவை அளிக்கிறது என்பதைப் பற்றிய குழப்பமான புரிதலாலேயே பெரும்பாலும் அத்தகைய முடிவுகளை எடுக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, போதைப்பொருள் அல்லது மதுவுக்கு அடிமையாகும் பழக்கத்தைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்பவர்கள், மகிழ்ச்சியை நாடிய தவறான தேடலால்தான் பெரும்பாலும் அந்தப் பழக்கத்தைத் தொடங்கியிருப்பார்கள். அதனால் கிடைக்கும் தற்காலிக நிவாரணம், நலமாக இருப்பதுபோன்ற தற்காலிக உணர்வை அளிக்கிறது. ஆனால், உண்மை நிலையைப் பார்க்கும்போது, இச்செயல்களால் ஒருவர் பெறும் தற்காலிக “அமைதி”, இறுதியில் அவர் விரும்பும் அதே அமைதியை இழக்கவே வழிவகுக்கிறது என்பது மிகவும் தெளிவாகிறது. இத்தகைய தேர்வுகள் அடிமைப் பழக்கங்களாக மாறும்போது, மேலும் மேலும் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் சுழலில் சிக்கிக்கொண்டிருப்பதை ஒருவர் பெரும்பாலும் உணர்கிறார்.
மக்கள் வாழ்வில் திருப்தியையும் நிறைவையும் தேடும் வேறு எண்ணற்ற வழிகளும் உள்ளன. பணத்தை நாடுதல், கட்டுப்பாடற்ற பாலுறவுகள், மோசடி, தன்னலம், கோபம், வஞ்சனை போன்ற செயல்கள் அனைத்தும் ஏதோ ஒரு திருப்தியைப் பெறும் நோக்கத்துடன் செய்யப்படுகின்றன. இத்தகைய ஏமாற்றும் செயல்களின் முகத்திரையை அகற்றி, அவற்றின் உண்மைத் தன்மையையும் அவை விளைவிக்கும் கனிகளையும் காண்பதே நமது அன்றாட இலக்காக இருக்க வேண்டும். “உலகம்” நமக்கு அமைதியை வழங்கும் பல வழிகளில் இவையும் அடங்குகின்றன என்பது தெளிவு.
வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியைப் பொறுத்தவரை, நாம் சரியான பாதையில் செல்கிறோம், சரியான முடிவுகளை எடுக்கிறோம் என்பதற்கான மிகத் தெளிவான அடையாளங்களில் ஒன்று, உண்மையான உள்ளார்ந்த அமைதி என்னும் கொடை. ஒவ்வொரு நாளும் கடவுளின் திருவுளத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்தத் தேர்வுகள் கடினமானவையாக இருக்கலாம்; தொடக்கத்தில் பெரும் தியாகத்தையும் கோரலாம். அன்பு செய்வது கடினமாக இருக்கலாம். கடவுளின் அறநெறிச் சட்டத்திற்கு உண்மையாயிருப்பது சவாலாக இருக்கலாம். பாவத்தை மறுத்து வாழ்வதும் கடினமே. ஆனால், ஒவ்வொரு நாளும், நாள் முழுவதும் கடவுளின் திருவுளத்தைத் தேர்ந்தெடுப்பது, ஆறுதலும் தாங்கும் வலிமையும் அளிக்கும் கிறிஸ்துவின் அமைதி என்னும் கொடையை நமக்குள் விளைவிக்கத் தொடங்கும்.
உண்மையான அமைதி வலிமையைத் தருகிறது. அது உள்ளார்ந்த நேர்மைக்கும் முழுமைக்கும் வழிவகுக்கிறது. சிந்தனையில் தெளிவையும் நம்பிக்கைகளில் உறுதியையும் ஏற்படுத்துகிறது. கடவுளின் அமைதி மேலும் மிகுந்த அமைதிக்கு வழிவகுக்கிறது. நன்கு சிந்தித்துச் செய்யப்படும் அன்புச் செயல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க அது வழிகாட்டுகிறது. அமைதி நம்மைக் கடவுளின் திருவுளத்திற்கு இட்டுச் செல்கிறது; கடவுளின் திருவுளம் அமைதிக்கு இட்டுச் செல்கிறது. இவ்வாறு ஒன்றையொன்று வளர்க்கும் சுழற்சியின் பயன் பன்மடங்காகப் பெருகுகிறது; வாழ்வில் மகிழ்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும் மிகத் தெளிவான வழிகாட்டிகளில் இதுவும் ஒன்றாகும்.
உங்கள் இதயத்தில் உண்மையிலேயே அமைதி இருக்கிறதா என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் ஆன்மாவினுள் அமைதியாகவும் வலிமையுடனும் உங்களைத் தாங்கிக்கொண்டும் இருக்கும் கடவுளின் உடனிருப்பை உணர்கிறீர்களா? உங்கள் அன்றாடத் தேர்வுகள் இதயத்தில் மேலும் மிகுந்த நேர்மையையும் மனத்தில் தெளிவையும் ஏற்படுத்துகின்றனவா? வாழ்வின் மிகப் பெரிய சவால்களுக்கு நடுவிலும்கூட உங்களிடம் மகிழ்ச்சியும் அமைதியும் இருப்பதைக் காண்கிறீர்களா? இந்த அமைதியை நாடுங்கள். ஏனெனில், அவ்வாறு செய்யும்போது, உங்கள் இதயத்தில் இந்த மாட்சிமிகு கொடையை விளைவிக்கும் நல்ல கடவுளையே நீங்கள் நாடுவீர்கள்.
உண்மையான அமைதியின் ஆண்டவரே, என் வாழ்வின் அனைத்து ஏக்கங்களும் ஆழமாக நிறைவேறுவதற்கான ஒரே வழி நீரும் உமது திருவுளமுமே. சீர்குலைவுக்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கும் தவறான தெரிவுகளை நான் செய்யும்போது, முழு இதயத்தோடு உம்மிடம் திரும்ப எனக்கு உதவும். நான் போராடிக்கொண்டிருக்கும் எந்தவொரு வஞ்சகத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, உம்மையும் உமது அமைதியையும் மட்டுமே நாடுவதற்குத் தேவையான வலிமையை எனக்குத் தந்தருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
கிறிஸ்துவோடு உறுதியாக இணைந்திருத்தல்
பாஸ்கா காலம் ஐந்தாம் வாரத்தின் புதன்கிழமை
“நானே திராட்சைக்கொடி; நீங்கள் அதன் கிளைகள். என்னுள் நிலைத்திருப்பவரும், நான் அவருள் நிலைத்திருப்பவரும் மிகுந்த கனி தருவார்; ஏனெனில் என்னையன்றி உங்களால் எதுவும் செய்ய இயலாது.” யோவான் 15:5
இந்தப் பகுதியில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய முதல் வியப்புக்குரிய உண்மை எளிமையானது: உங்கள் வாழ்வில் நல்ல கனிகளை விளைவிக்கக் கடவுள் விரும்புகிறார். உங்கள் வழியாகத் தமது அருளையும் இரக்கத்தையும் உலகிற்கு வழங்கவும் அவர் விரும்புகிறார். திராட்சைக் கொடி தனியாகக் கனி தருவதில்லை; கிளைகளைக் கருவியாகக் கொண்டே கனி தருகிறது. ஆகவே, இந்தப் போதனையை அதன் நேரடியான பொருளில் எடுத்துக்கொண்டால், உங்கள் வாழ்விலும், உங்கள் வழியாக உலகிலும் தமது அருளையும் இரக்கத்தையும் வழங்கத் தாம் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கடவுள் கூறுகிறார்.
நம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புனிதப் பணியை மேலும் தெளிவுபடுத்த, இயேசு மிகவும் ஆழமான ஒரு கருத்தைக் கூறுகிறார். “என்னையின்றி உங்களால் எதுவும் செய்ய இயலாது” என்று அவர் கூறுகிறார். நம் ஆண்டவர் கூறிய இந்தச் சொற்களைச் சிந்திக்கும்போது, “எதுவும்” என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதை எண்ணிப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். நாமாகவே, நமது சொந்த முயற்சியால், “சிறிதளவு” நல்ல கனியைக்கூட விளைவிக்க முடியாது என்பதை வலியுறுத்தவே, “உங்களால் எதுவும் செய்ய இயலாது” என்று இயேசு சேர்த்துக் கூறினார் எனப் புனித அகுஸ்தினார் சுட்டிக்காட்டுகிறார். எடுத்துக்காட்டாக, இது ஓர் ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு சிறு கிளையை வெட்டிவிட்டு, அந்தக் கிளை ஓர் ஆப்பிள் கனியைத் தரும் என்று எதிர்பார்ப்பதைப் போன்றது.
கடவுள் விளைவிக்க விரும்பும் கனி, தூய ஆவியாரின் கனிகளாக உங்கள் ஆன்மாவிற்குள்ளும் விளைகிறது. அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்மை, நம்பிக்கைக்குரிய தன்மை, கனிவு, தன்னடக்கம் ஆகியவையே இக்கனிகள் (கலாத்தியர் 5:22–23 காண்க). கடவுளிடமிருந்து வரும் இந்தக் கொடைகள் ஒவ்வொன்றும், நம் உலகில் கடவுளின் சாயலாக நீங்கள் இன்னும் முழுமையாக மாறுவதற்கு உதவும். தூய ஆவியாரின் இந்தக் கனிகள் ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்க்கச் சிறிது நேரம் ஒதுக்க முயலுங்கள். இவை ஒவ்வொன்றும் மிகவும் விரும்பத்தக்கவை. இவற்றின்மீதான உங்கள் ஏக்கம் வளரும்போது, உங்கள் வாழ்வில் தூய ஆவியாருக்கான ஏக்கமும் வளர அது உதவும்.
மேலே மேற்கோள் காட்டப்பட்ட நற்செய்திப் பகுதியின் இரு பகுதிகளையும் கருத்தில் கொள்ளும்போது, கடவுளிடமிருந்து நம்மைப் பிரித்துக்கொண்டால், தூய ஆவியாரின் கனிகளில் ஒன்றைக்கூட அனுபவிக்க இயலாது என்பதும் தெளிவாகிறது. நம் கடவுளோடு உறுதியான இணைப்பு இல்லாவிட்டால், நம்மிடம் அன்பும் மகிழ்ச்சியும் பொறுமையும் பரிவும் போன்றவை இருக்காது. கிறிஸ்துவே ஆகிய திராட்சைக் கொடியோடு நமது வாழ்வு உறுதியாக இணைந்திருந்தாலன்றி இவற்றில் எதுவும் சாத்தியமில்லை. ஆகவே, இந்த நல்ல கனிகளைப் பெறுவதற்கான நல்விருப்பத்தையும், அவற்றை இழந்துவிடக்கூடாது என்ற புனித அச்சத்தையும் வளர்த்துக்கொள்வது பயனுள்ளது.
இயேசு நமக்குத் தந்துள்ள திராட்சைக் கொடியும் கிளைகளும் பற்றிய அழகிய, பொருள்மிக்க உருவகத்தை இன்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு திராட்சைக் கொடியை மனத்தில் கொண்டு வாருங்கள்; பின்னர், அந்தக் கொடியோடு நீங்கள் உறுதியாக இணைந்திருப்பதாக எண்ணிப் பாருங்கள். இந்த உருவகத்தை மனத்தில் நிறுத்தி, செப மனநிலையில் அமைதியாக அமர்ந்து, கடவுள் உங்களோடு பேச இடமளியுங்கள். உங்களுக்குள்ளும் உங்கள் வழியாகவும் அவர் மாபெரும் செயல்களைச் செய்ய விரும்புகிறார். நீங்கள் முழு இதயத்தோடு அவரைப் பற்றிக்கொண்டால் போதும்; ஏராளமான நற்கனிகள் விளையும்.
திராட்சைக்கொடியாகிய இயேசுவே, எல்லா நன்மைகளுக்கும் ஊற்று நீரே; உம்மையன்றி என்னால் எதுவும் செய்ய இயலாது. என் வாழ்வில் நீர் எனக்கு எவ்வளவு ஆழமாகத் தேவைப்படுகிறீர் என்பதை எப்போதும் நினைவில்கொள்ளவும், எந்நேரமும் உம்மைப் பற்றிக்கொள்ளவும் எனக்கு உதவும். என் வாழ்விலும், என் வழியாக உலகிலும் நல்ல கனிகள் மிகுதியாக விளையச் செய்தருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
கீழ்ப்படிதலின் நற்கனி
பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் வியாழக்கிழமை
“நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.” யோவான் 15:10
மேலே உள்ள வார்த்தைகளை இயேசு கூறியபின், “என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவுபெறவும் இவற்றை உங்களுக்குச் சொன்னேன்” என்றார். இந்த இரு கூற்றுகளையும் இணைத்துப் பார்க்கும்போது, அவருக்குத் தூய கீழ்ப்படிதலுடன் வாழ்வது பற்றிய இயேசுவின் போதனையை ஒருங்கிணைத்துப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
முதலில், இயேசு தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றிப் பேசுகிறார். இந்தக் கூற்றைத் தனியாக எடுத்துக்கொண்டால், சிலருக்கு அது சுமையாகவும், சர்வாதிகாரமாகவும், அடக்கி ஒடுக்குவதாகவும், சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் தோன்றலாம். ஆனால் உண்மையில் அது அப்படித்தானா? தொடர்ந்து வாசிக்கும்போது இதற்கான விடை தெளிவாகக் கிடைக்கிறது.
இயேசு அடுத்ததாகக் கற்பிப்பது இதுதான்: அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் பயனாக நாம் “அவரது அன்பில் நிலைத்திருக்கிறோம்.” தாமே செய்ய மனமில்லாத எதையும் நம்மிடம் செய்யச் சொல்லவில்லை என்பதையும் அவர் விளக்குகிறார். அவர் தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து, தந்தையின் கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடித்தார். எனவே, கீழ்ப்படிந்து வாழ்வதற்குத் தாமே சுதந்திரமாக எடுத்த முடிவிலிருந்து பிறக்கும் கட்டளையாக அவரது கட்டளையை நாம் கேட்க வேண்டும். மனிதரான இறைமகனாகிய அவர், தமது மனித இயல்பில் தந்தைக்குப் பரிபூரணமாகக் கீழ்ப்படிந்தார். அதன் பயனாக, அவர் தந்தையின் அன்பால் முழுமையாக நிறைந்திருந்தார். ஆனால், அத்துடன் முடிந்துவிடவில்லை. இயேசுவின் பரிபூரணக் கீழ்ப்படிதலை நாம் பின்பற்றும்போது, மகிழ்ச்சியையும் “நிறைவாக” அனுபவிக்கிறோம்.
நம் ஆண்டவரின் போதனையின் ஒளியில், கடவுளின் திருவுளத்திற்குப் புனிதமான முறையில் கீழ்ப்படிவதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? எடுத்துக்காட்டாக, பத்துக் கட்டளைகளில் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றிற்கு உறுதியாகக் கீழ்ப்படிவதில் நீங்கள் போராடுகிறீர்களா? அவற்றின் உண்மையான இயல்பை உணராமல், உங்களை ஒடுக்குவதற்காகத் திணிக்கப்பட்ட வரம்புகளாக அவற்றை அனுபவிக்கிறீர்களா? சரியாகப் புரிந்துகொள்ளும்போது, பத்துக் கட்டளைகளும் கடவுளின் திருவுளம் வகுக்கும் மற்ற ஒவ்வொரு நெறியும் நமக்குத் தேவையானவையே; அதற்கும் மேலாக, வாழ்வில் நாம் ஆழமாக ஏங்குபவையும் அவையே. நாம் உள்ளத்தில் குழப்பத்தையல்ல, ஒழுங்கையே விரும்புகிறோம். உறுதியின்மையையல்ல, முழுமையையே விரும்புகிறோம். துயரத்தையல்ல, மகிழ்ச்சியையே விரும்புகிறோம். கடவுளை இழப்பதையல்ல, அவரது அன்போடு ஒன்றித்திருப்பதையே விரும்புகிறோம். நாம் இவ்வளவு ஆழமாக ஏங்கும் வாழ்வுக்கான பாதை, அனைத்திலும் கடவுளின் திருவுளம் வகுக்கும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே.
தூய கீழ்ப்படிதலைப் பற்றிக் கேட்கும்போது உங்கள் உள்ளத்தில் உடனடியாக எழும் உணர்வை இன்று சிந்தித்துப் பாருங்கள். இயேசுவின் இந்தப் போதனையை ஏதாவது ஒரு வகையில் நீங்கள் எதிர்ப்பதாக உணர்ந்தால், நீங்கள் அறிந்திருப்பதைவிட இந்தப் போதனை உங்களுக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதற்கு அதுவே ஒரு நல்ல அறிகுறி. உண்மையின் ஒளியில் கீழ்ப்படிதலைக் காண முயலுங்கள். உங்கள் ஆன்மா தனது ஆழத்தில் கீழ்ப்படிதலுக்காகவும், அது கொண்டுவரும் உள்ளார்ந்த ஒழுங்குக்காகவும் ஏங்குவதை உணர முயலுங்கள். குறிப்பாக, கீழ்ப்படிவதில் நீங்கள் போராடும் பகுதிகளை ஆராய்ந்து, நம் ஆண்டவரின் ஒவ்வொரு கட்டளைக்கும் உறுதியாகவும் தளராமலும் கீழ்ப்படிய உங்களை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்ளுங்கள்.
கீழ்ப்படிதலுள்ள என் ஆண்டவரே, விண்ணகத்திலுள்ள உம் தந்தையின் திருவுளத்திற்கு நீர் முழுமையாகக் கீழ்ப்படிந்தீர். இந்தக் கீழ்ப்படிதலின் வழியாக, உமது மனித இயல்பில் தந்தையின் அன்பையும் மகிழ்ச்சியையும் நீர் முழுமையாக அனுபவித்ததோடு, புனித வாழ்வுக்கான நிறைவான எடுத்துக்காட்டையும் முன்மாதிரியையும் எங்களுக்கு அளித்தீர். நானும் உமது புனித வாழ்விலும் தந்தையின் புனித வாழ்விலும் பங்குபெறும்படி, என் வாழ்வில் இன்னும் அதிகமாகக் கீழ்ப்படிய வேண்டிய பகுதிகளைக் கண்டுணர எனக்கு உதவும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
உண்மையான நட்பு
பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை
“நான் உங்களுக்குக் கட்டளையிடுவதை நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள். இனிமேல் நான் உங்களை அடிமைகள் என்று அழைப்பதில்லை; ஏனெனில் தம் தலைவர் என்ன செய்கிறார் என்பது அடிமைக்குத் தெரியாது. நான் உங்களை நண்பர்கள் என்று அழைத்தேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து கேட்ட அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.” யோவான் 15:14–15
இயேசு நட்பிற்கு அளிக்கும் விளக்கம், சிலருக்கு முதல் பார்வையில் விநோதமாகத் தோன்றலாம். அவர் நமக்குக் கட்டளையிடுவதை நாம் செய்யும்போதுதான் நாம் அவரது நண்பர்கள் என்று அவர் கூறுகிறார். உங்கள் நெருங்கிய நண்பர்களில் ஒருவரிடம் நீங்கள் இப்படிச் சொல்வதாகக் கற்பனை செய்து பாருங்கள். பெரும்பாலும் அவர் அதைக் கேட்டுச் சிரித்து, முட்டாள்தனமான பேச்சு என்று ஒதுக்கிவிடுவார். அப்படியானால், உண்மையான நட்பு எப்போதுமே கீழ்ப்படிதலை அடிப்படையாகக் கொண்டதா?
உங்கள் நட்பைப் பெறுவதற்காக உங்கள் நண்பர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, எந்தவொரு உண்மையான நட்பிற்கும் அடிப்படையாக இருக்க முடியாது என்பது தெளிவு. தமது தூய திருவுளத்திற்கு நீங்கள் கீழ்ப்படிவதை, உங்களுடனான தமது நட்பிற்கு அடிப்படையாக வைக்கக்கூடியவர் இயேசு ஒருவர் மட்டுமே. ஏன்? அவர் உங்களைச் செய்யச் சொல்லும் காரியங்களின் தன்மையே அதற்குக் காரணம்.
இயேசு கலப்பற்ற உண்மை. அவர் விரும்புவது அன்பின் நிறைவே. எனவே, அவர் உங்களுக்குக் கட்டளையிடுவதைச் செய்தால் மட்டுமே நீங்கள் அவரது நண்பர் என்று அவர் கூறுவது, நட்பு உண்மையை அடிப்படையாகக் கொண்டது என்பதைப் போதிக்கிறது. அது அன்பு, நன்மை, பரிவு, தன்னலமற்ற தியாகம், தன்னையே கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த உண்மைகள் அனைத்தையும் செயல்படுத்தவே இயேசு நமக்குக் கட்டளையிடுகிறார். ஆகவே, அவரோடு நாம் கொள்ள விரும்பும் நட்பிற்கான பாதையை அவரது திருவுளம் மட்டுமே வழங்குகிறது என்பதையே இயேசு நமக்குக் கூறுகிறார்.
பிறருடன் நீங்கள் கொள்ளும் நட்பைப் பொறுத்தவரை, நண்பர்களுக்காகக் கடவுள் திருவுளம் கொள்வதை மட்டுமே ஒவ்வொரு உண்மையான நட்பும் அடிப்படையாகக் கொண்டிருக்க முடியும். அந்த வகையில், உங்கள் நட்புகளில் கடவுளின் திருவுளம் நிறைவேற வேண்டும் என்று நீங்கள் “கட்டளையிடலாம்.” அதாவது, உண்மையின் அடிப்படையில் மட்டுமே நட்பை ஏற்படுத்திக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள். தன்னலமற்ற, தியாகமிக்க, தன்னையே அளிக்கும் இரக்கம், பரிவு, நேர்மை, அன்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உறவில் மட்டுமே பங்கேற்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதே இதன் பொருள்.
நட்பைப் பற்றிய உங்கள் புரிதலை இன்று சிந்தித்துப் பாருங்கள். முதலில் கடவுளுடனான உங்கள் நட்பைச் சிந்தியுங்கள்; பின்னர் பிறருடனான உங்கள் நட்பையும் ஆழ்ந்து எண்ணிப் பாருங்கள். நம் ஆண்டவர் கட்டளையிடும் விதத்தில் நீங்கள் அவரை அன்பு செய்கிறீர்களா? பிறருடனான உங்கள் நட்பைச் சிந்திக்கும்போது, ஒவ்வொரு நட்பும் கடவுளின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிவதாக அமைந்துள்ளதா என்பதையும் ஆராய்ந்து பாருங்கள். உண்மையான அன்பின் நெறிகளுக்கு ஏற்ப நீங்கள் கடவுளையும் பிறரையும் அன்பு செய்ய முடிந்தால், உங்கள் நட்புகள் நித்தியத்திற்கும் நீடிக்கும் ஆழ்ந்த நிறைவைத் தரும்.
என் தெய்வீக ஆண்டவரே, தூய்மையும் புனிதமும் நிறைந்த அன்பின் நெறிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட நட்புறவுக்கு நீர் என்னை அழைக்கிறீர். அன்பின் இந்தக் கட்டளைக்காக உமக்கு நன்றி கூறி, இந்த அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆண்டவரே, அன்பின் உண்மைகளுக்கு ஏற்ப உம்முடனான என் நட்பைத் தொடர்ந்து ஆழப்படுத்த எனக்கு உதவியருளும். என் நட்புகள் அனைத்தையும் இந்தப் புனித அன்பின் கட்டளைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைத்துக்கொள்ளவும் எனக்கு உதவியருளும். இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
உலகின் வெறுப்பு
பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் சனிக்கிழமை
இயேசு தம் சீடர்களிடம் கூறினார்: “உலகம் உங்களை வெறுத்தால், அது உங்களுக்கு முன்பே என்னை வெறுத்தது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்தால், உலகம் தனக்குரியவர்களை அன்பு செய்யும்; ஆனால் நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல; நானே உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் உலகம் உங்களை வெறுக்கிறது.” யோவான் 15:18–19
இது நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் ஓர் எண்ணம்: “உலகம் உங்களை வெறுக்கிறது.” அதாவது, ஒருவேளை நம் ஆண்டவரால் இந்த உலகிலிருந்து வெளியே அழைத்துவரப்பட்டவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உலகம் உங்களை வெறுக்கும் என்று இயேசு கூறுகிறார்.
பிறரால் வெறுக்கப்பட யாரும் விரும்புவதில்லை. மற்றொருவரின் சினம், துன்புறுத்தல், தாக்குதல் அல்லது கேலிக்கு ஆளாக யாரும் விரும்புவதில்லை. வெறுப்பு அருவருப்பானது, வேதனை தருவது, தாங்குவதற்குக் கடினமானது. ஆனால் இதுவே வெறுப்பின் இயல்பில் ஒரு பகுதியாகும். அது துன்புறுத்தலின் ஒரு வடிவம் மட்டுமல்ல; பிறரைத் தன் விருப்பத்திற்கேற்ப ஆட்டுவிக்கும் ஒரு வழியுமாகும். வெறுப்பு என்பது மற்றொருவர் மீதான தாக்குதல்; அதன் வழியாக, வெறுப்பவர் அவருக்குத் தீங்கிழைக்கவும், அவரை மாற்றித் தன் விருப்பத்திற்கு இணங்கச் செய்யவும் முயல்கிறார். உலகியல் சார்ந்த, கிறிஸ்தவ நெறிகளுக்கு மாறான இந்த “உலகம்”, உங்களைத் தன் பக்கம் இழுத்துக் கடவுளிடமிருந்து விலக்க விரும்புகிறது. உலகத்தின் வெறுப்பை நாம் அனுபவிக்கும்போது, அதனால் பாதிக்கப்படாமலும், அதன் தூண்டுதலுக்கு ஆளாகி அவரிடமிருந்து விலகாமலும் இருக்க நம்மைத் தயார்படுத்துவதும் இயேசு இந்தப் போதனையை வழங்குவதற்கான காரணங்களில் ஒன்றாகும். எனவே, இந்தப் போதனை நம் ஆண்டவரின் மிகுந்த இரக்கத்தை வெளிப்படுத்துகிறது.
நம் ஆன்மாவின் மூன்று பகைவர்களைப் பற்றி இயேசு பேசியதை நினைவில் கொள்ளுங்கள்: ஊனியல்பு, அலகை, உலகம். இந்த நற்செய்திப் பகுதியில், “உலகைச் சார்ந்திருப்பது” என்பது, உலகில் பொதிந்துள்ள எண்ணற்ற பொய்கள் தம்மீது தீய தாக்கத்தை ஏற்படுத்த ஒருவர் அனுமதிப்பதைக் குறிக்கிறது. உலகியல் சார்ந்த ஊடகங்கள், பரவலாகச் செல்வாக்குப் பெற்றுள்ள பண்பாடு, ஒருதலைப்பட்சமான கருத்துகள், சமூக அழுத்தங்கள், மகிழ்ச்சியைப் பற்றிய பொய்யான பிம்பங்கள் போன்றவை தொடர்ந்து நம்மைத் தவறாக வழிநடத்தவும் தம் பக்கம் ஈர்க்கவும் முயல்கின்றன. பணம், நமது உடல் தோற்றம், நம் சாதனைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம், இன்னும் பலவற்றில் நிறைவு கிடைக்கும் என்று நம்பும் சோதனைக்கு நாம் அடிக்கடி உள்ளாகிறோம். நமது கருத்துகள் இக்காலத்தின் உலகியல் மதிப்பீடுகளுக்கு இணங்க வேண்டும் என்று உலகம் நமக்குச் சொல்கிறது. அப்படி இணங்காவிட்டால், நாம் பிறரைத் தீர்ப்பிடுபவர்கள், திறந்த மனமற்ற தீவிரவாதிகள் என்றும், நாம் ஒதுக்கப்படவும் “சமூக ஏற்பை இழக்கச் செய்யப்படவும்” அல்லது மௌனமாக்கப்படவும் வேண்டும் என்றும் கூறுகிறது.
உலகம் தரும் இந்தச் சோதனைகளும் அழுத்தங்களும் உண்மையானவை; அதனால்தான் இயேசுவின் வார்த்தைகள் நமக்கு விடுதலை அளிக்கின்றன. அனைவரும் காணும்படி நம் விசுவாசத்தை வெளிப்படையாக வாழும்போது, நாம் எதிர்கொள்ளும் சூழ்ச்சிகளிலிருந்தும் ஏமாற்று வேலைகளிலிருந்தும் அவை நம்மை விடுவிக்கின்றன. அவ்வாறு நாம் வாழும்போது, உலகம் நம்மை வெறுக்கும். ஆனால், இதை அறிந்திருப்பது, அப்படி நிகழும்போது நம் இதயத்திற்கு அமைதி அளிக்கிறது.
வல்லமையும் ஆறுதலும் அளிக்கும் இயேசுவின் இந்த வார்த்தைகளை இன்று சிந்தித்துப் பாருங்கள். உலகத்திடமிருந்து எந்த வடிவிலான வெறுப்பையும் நீங்கள் அனுபவிக்கவில்லை என்றால், அது நீங்கள் அக்கறையுடன் கவனித்துச் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். ஏதோ ஒரு வடிவில் வெறுப்பை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்றால், நம் ஆண்டவர் இதற்காக உங்களைத் தயார்படுத்தியுள்ளார் என்பதையும், அதை மகிழ்ச்சியுடன் தாங்கிக்கொள்ளத் தமது வலிமையையும் துணிவையும் உங்களுக்கு அளிக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இறுதியில், நம் ஆண்டவர் என்ன நினைக்கிறார் என்பதே முக்கியம்; வேறு எதுவும் அல்ல. இறுதியில், உலகம் எந்த வடிவிலாவது உங்களை வெறுத்தால், அது உங்களைக் கிறிஸ்துவைப் போலவே இன்னும் அதிகமாக ஆக்குகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
துன்புறுத்தப்பட்ட என் ஆண்டவரே, உலகின் பொய்யான மதிப்பீடுகளில் மூழ்கியிருந்த பலரின் வெறுப்பையும் கேலியையும் நீர் தாங்கிக்கொண்டீர். அன்பும் இரக்கமும் நிறைந்த உமது வாழ்வில் மட்டுமல்லாமல், நானும் உலகின் வெறுப்பைத் தாங்கும் வேளைகளில் உமது வலிமையிலும் பங்குபெற வேண்டுகிறேன். என்னையே உம்மிடம் ஒப்படைக்கிறேன். நீர் தொடர்ந்து என்னை உலகிலிருந்து வெளியே அழைத்து, உமக்கு அருகில் கொண்டுவர வேண்டுகிறேன். இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
4 தொகுதிகளும் மென்மையான அட்டையுடன் கூடிய அச்சுநூல் & மின்னூல் வடிவங்களில் கிடைக்கின்றன!
Amazon – Google Play – iTunes – Barnes and Noble

