
I. பிரிந்து செல்லுதல்
நெற்றி வியர்வை சிந்தி நான் உழைத்தும்
இதுவரை அறுவடை செய்ததெல்லாம் முட்களும் முட்செடிகளுமே.
தந்தையே, எனக்குச் சொல்லும்: இத்தனை தோல்விகள்
உமக்கு மகிழ்வளிப்பது எவ்வாறு இயலும்?
உமது நிலத்தில் மற்றவர்கள் சிறப்பாக விதைக்கக்கூடும்.
என் மதிப்பைவிட எனக்கான செலவு மிகுந்துவிட்டதன்றோ?
உம்மை ஏமாற்றி மேலும் துயரப்படுத்துவதைவிட
இப்போதே நான் விடைபெற்றுச் செல்வதே மேல்.
மூட்டை முடிச்சுகளை எல்லாம் கட்டிக்கொண்டு,
என் சொத்துப் பங்குடன் உமது திருமுன்னிலிருந்து செல்கிறேன்.
வீணாய்ப்போன என் உழைப்பு அனைத்தின் வலியையும்
அயல்நாட்டு இன்பங்கள் மரத்துப்போகச் செய்யும்.
நான் பிரிந்து சென்ற அந்த நாள்முதலே
பஞ்சம் என் உடலையும் உள்ளத்தையும் பட்டினியில் வாட்டுகிறது.
வெற்று வாக்குறுதிகளை நான் நம்பினேன்.
இத்தனை காலமும் நான் ஏமாந்து போனேனோ?
II. திரும்பி வருதல்
மனச்சான்று அழைக்கிறது: “வீட்டிற்குத் திரும்பு!”
அங்கே உழைத்து உணவு பெறலாம் என நம்புவேன்.
விண்ணகம் என் பாவங்களுக்குச் சாட்சியானது.
இனி இந்தப் பன்றிகளுடன் நான் உண்ணமாட்டேன்.
“தந்தையே,” என்பேன், “நான் செய்தவை அனைத்திற்கும் பிறகு,
உமது மகன் என அழைக்கப்படுவது எனக்குத் தகுதிக்கு மீறியதே.
இன்னும் கடினமாக உழைப்பேன் என உமக்கு வாக்களிக்கிறேன்;
நான் ஒரு சிறந்த பணியாளனாக இருப்பேன்.”
கந்தல் உடையுடனும் நானே ஏற்படுத்திக்கொண்ட தழும்புடனும்
தொலைவில் வரும் என்னை நீர் கண்டதும்,
உமது தந்தை உள்ளத்திலிருந்து பொங்கும் இரக்கம்
எனக்கு ஆடை அணிவித்து, இனி பிரியாதிருக்க அழைக்கிறது.
உமது செல்வத்தைப் பாதியாக்கிய எனக்காகவா
கொழுத்த கன்றை நீர் அடிக்கிறீர்?
தந்தையே, நான் இப்படி ஆனதை நானே வெறுக்கிறேன்.
சொல்லும், உம்மால் எப்படிக் கொண்டாட முடிகிறது?
III. கொண்டாட்டம்
என் அன்பு மகனே, முன்பு நீ என்னுடன் இருந்தாய்,
நான் உன்னோடு பொறுமையாய் உழைத்தேன்,
எல்லா நிலத்திலும் விதைகளை விதைத்தேன்,
நீ என்னுடன் இருந்ததில் மகிழ்ச்சி கண்டேன்.
உள்ளத்தின் கலக்கம் உன்னை அச்சத்தில் ஆழ்த்தியது.
நீ பிரிந்து சென்றபோது, நான் இங்கே காத்திருந்தேன்,
மீண்டும் உன்னை என் அருகில் சேர்த்துக்கொள்ள,
தொலைவிலும் எங்கெங்கும் உன்னைத் தேடிப் பார்த்திருந்தேன்.
இப்போது நீ உயிரோடும் நலமோடும் வீடு வந்துவிட்டாய்.
பழைய பொய்களை முற்றிலும் விரட்டிவிடு!
இங்கே நீ என்னோடு நிலைத்திருந்தால்,
எதற்கும் யாருக்கும் நீ அஞ்சத் தேவையில்லை.
தந்தையே, நான் வழிதவறிச் செல்ல விடாதேயும்.
என் அன்றாட உணவை இன்று எனக்குத் தாரும்.
வேறெங்கோ அமைதியின்றி விழித்திருப்பதைவிட
உமது உறுதியான பராமரிப்பில் உறங்குவதே மேல்.
IV. அழைப்பு
வழிதவறிய மகனைப் பற்றி நான் கேட்பதென்ன?
அவன் திரும்பி வந்ததும் விருந்து தொடங்கிவிட்டதா?
நானும் ஒரு விருந்தை அனுபவிக்கும்படி,
வருந்திச் செய்த என் பணியை நிறுத்தியிருக்க வேண்டுமே.
இரவும் பகலும் கடுமையாக உழைத்து,
அனைத்தையும் காணும் உமது பார்வையின்கீழ் அடிமைபோல் பணிசெய்தேன்.
நான் செய்த ஒவ்வொரு தவறும்
இன்னும் அதிக உழைப்பில் என்னைக் கட்டிப்போட்டது.
கண்ணீரும் வியர்வையும் சிந்தி எனக்காக விதைத்ததை எண்ணி,
அன்பு மகனே, நீ வருந்தாதே.
உன் பலன்களைவிட உன் முயற்சிகளையும்
உழைப்பின் வேதனைகளையுமே நான் பெரிதாகக் கருதினேன்.
உன் சகோதரன் இப்போது திரும்பி வந்துவிட்டான்.
வீட்டிற்குள் வா; நீ எங்களுடன் அமர்ந்து உண்ணவும்,
என்னிடம் உள்ளதெல்லாம் உனதே என்று உணரவும்
நான் இங்கே ஏங்கிக் காத்திருக்கிறேன்.
-அருள்பணி திமோத்தி ஜே. டிரேப்பர்
சிறப்புப் படம்: ஊதாரி மகனின் திரும்புதல் — பர்த்தலோமே எஸ்தேபான் முரீயோ வரைந்தது
