பொருளடக்கத்திற்குத் திரும்புக
ஐந்தாம் கட்டளை:
கொலை செய்யாதே. (விடுதலைப் பயணம் 20:13)
“கொலை செய்யாதே; கொலை செய்கிற எவரும் தீர்ப்புக்கு உள்ளாவார்” என்று உங்கள் முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர்மீது கோபம் கொள்ளும் எவரும் தீர்ப்புக்கு உள்ளாவார் (மத் 5:21–22)
நீங்கள் எந்தத் தொலைக்காட்சி அலைவரிசையிலாவது இரவுச் செய்திகளைப் பார்த்தாலோ, உள்ளூர்ச் செய்தித்தாளைப் புரட்டினாலோ, அண்மையில் நிகழ்ந்த ஒரு கொலையைப் பற்றிய செய்தியைக் காண்பதற்கான வாய்ப்பு அதிகம். எவ்வளவு துயரமான உண்மை! கொலை கொடூரமானது; மனித வாழ்வின் மிகப் பெரும் துயரங்களில் ஒன்று. ஒருவேளை அதனால்தான், செய்தியாக வெளியிடப்படக்கூடியவற்றில் மிகவும் கவனத்தை ஈர்க்கும் தலைப்புகளில் ஒன்றாகவும் அது இருக்கிறது.
திருவிவிலியத்தில்கூட, நாம் வாசிக்கும் தொடக்க நிகழ்வுகளில் ஒன்று, காயின் ஆபேலைக் கொன்ற நிகழ்வாகும் (தொநூ 4:8). காலத்தின் தொடக்கத்திலிருந்தே கொலை இருந்துவருகிறது; நம் உலகில் மிகவும் அதிர்ச்சியூட்டும், கொடூரமான செயல்களில் ஒன்றாக அது என்றென்றும் இருக்கும்.
ஆனால், ஐந்தாம் கட்டளை நம்மிடம் பேசுவது கொலையைப் பற்றி மட்டும்தானா? நிச்சயமாக இல்லை. குற்றமற்ற உயிரை வேண்டுமென்றே பறிப்பதாகிய கொலை, இந்தக் கட்டளை மீறப்படும் மிகக் கடுமையான வழியாக இருக்கலாம். ஆனால், இந்த உச்சகட்ட அழிவிலிருந்து குறைந்த அளவிலான செயல்களை நோக்கிப் பார்த்தால், வெறுப்பு, கோபம், மனித உயிரின் புனிதத்தன்மையை மதிக்காமை ஆகியவற்றின் பல வடிவங்களும் உள்ளன.
இந்தக் கட்டளை மீறப்படும் அடிப்படையான வழிகளிலிருந்து தொடங்குவோம். அங்கிருந்து, கொல்வது உண்மையில் நியாயமானதாகவும் ஒரு கடமையாகவும் இருக்கக்கூடிய சூழல்களைப் பார்ப்போம். அமைதியை நாடவும் ஒவ்வொருவரின் மாண்பை மதிக்கவும் இந்தக் கட்டளை நம்மை எவ்வாறு அழைக்கிறது என்பதைப் பார்த்து நிறைவு செய்வோம்.
அடிப்படை வரம்பு: கொலை செய்யாதே
இந்தக் கட்டளையை மிக நேரடியாக மீறுவது வேண்டுமென்றே செய்யப்படும் கொலையாகும். இக்குற்றத்துடன் தொடர்புடைய பல்வேறு காரணிகளையும் சூழ்நிலைகளையும் ஆராய வேண்டியுள்ளது. மேலும், செய்ய வேண்டியவற்றைச் செய்யத் தவறுவதாலும் அலட்சியத்தாலும் பிறரின் இறப்புக்கோ அவர்களுக்கு ஏற்படும் தீங்குக்கோ வழிவகுக்கும் பாவங்களும் கடுமையான தீமைகளும் உள்ளன. இவையும் இந்தக் கட்டளையின் மீறல்களே. இந்தக் கட்டளை நேரடியாகவும் மறைமுகமாகவும் மீறப்படும் முக்கிய வழிகளின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே செய்யப்படும் கொலை: ஒருவர் குற்றமற்ற ஒருவரின் உயிரை நேரடியாகவும், முழு விருப்பத்துடனும், வேண்டுமென்றே பறிப்பது பாவங்களிலேயே மிகக் கொடியதாகும். இது “பழிவாங்குமாறு விண்ணகத்தை நோக்கிக் கூக்குரலிடும்” பாவம் என்று குறிப்பிடப்படுகிறது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது; இது அளவிட முடியாத தீங்கை விளைவிக்கிறது. இத்தகைய கடுமையான பாவங்களுள் மிகக் கொடியது குடும்ப உறுப்பினர்களைக் கொல்வதாகும். ஏனெனில், மதிக்கப்பட வேண்டிய இயற்கையான உறவுப் பிணைப்பையும் இது மீறுகிறது. இருப்பினும், எந்த வகையான கொலையும் கடுமையானதும், மிகவும் தவறானதும் ஆகும்.
கருக்கலைப்பு: மனித உயிர் கருத்தரிக்கும் தருணத்திலேயே தொடங்குகிறது. இது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஓர் அடிப்படை உண்மை. பகுத்தறிவின் அடிப்படையில் மட்டுமே பார்த்தாலும் இது பொருத்தமானது; அறிவியலின் அடிப்படையிலும் இது பொருத்தமானதே. கருத்தரிக்கும் தருணத்திலேயே அந்தப் புதிய உயிரின் டி.என்.ஏ. தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இது மனித உயிராகும். எனவே, கருத்தரிக்கும் தருணத்திலிருந்தே அந்தப் புதிய மனித உயிருக்கும் மற்ற எந்த மனிதருக்கும் உள்ள அதே மாண்பும் உரிமைகளும் உள்ளன என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கருப்பையில் புதிதாக உருவாகியுள்ள மனித உயிர் ஏதோ ஒருவகையில் தாயின் உடலின் ஒரு பகுதி மட்டுமே என்பது இன்றைய உலகில் பரவலாகக் காணப்படும் ஒரு திரிபான கருத்தாகும். குழந்தையால் தாயின் உடலைவிட்டுத் தனியாக வாழ முடியாது என்பது உண்மைதான். புதிய உயிர் தோன்றுவதைக் கடவுள் இவ்வாறுதான் வடிவமைத்துள்ளார். ஆனால், புதிதாக உருவாகியுள்ள குழந்தையால் தனித்து வாழ முடியாது என்பதற்காக, அதன் புனிதத்தன்மை எந்த விதத்திலும் குறைந்துவிடுவதில்லை; அதற்குரிய மதிப்பும் பாதுகாப்பும் சிறிதும் குறைந்துவிடுவதில்லை. ஒவ்வொரு உயிரும் ஒரே அளவில் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்பட வேண்டும்.
பாலியல் வன்முறை மற்றும் நெருங்கிய இரத்த உறவினரிடையேயான பாலுறவு ஆகியவற்றால் ஏற்படும் கர்ப்பங்களில் மட்டுமே கருக்கலைப்பை ஆதரிப்பதாகச் சிலர், குறிப்பாக அரசியல்வாதிகள், கூறுவதை நாம் சில நேரங்களில் கேட்கிறோம். இவை கொடூரமான செயல்கள் என்பதில் ஐயமில்லை. பாலியல் வன்முறையும் நெருங்கிய இரத்த உறவினரிடையேயான பாலுறவும் எப்போதும் எங்கும் கண்டிக்கப்பட வேண்டும். இச்செயல்களைச் செய்பவர்கள் அவற்றுக்குப் பொறுப்பேற்கச் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீண்டும் இவ்வாறு செய்யாதபடி சமுதாயம் அவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறியபோதிலும், புதிதாக உருவான மனித உயிர் ஒரு புதிய மனித உயிர்தான் என்ற உண்மை மாறுவதில்லை. பாலியல் வல்லுறவு அல்லது நெருங்கிய இரத்த உறவினரிடையேயான பாலுறவு என்னும் துயரமான நிகழ்வின் வழியாக இந்தப் புதிய உயிர் உருவாகியிருந்தாலும், அது மனித உயிரே. இத்தகைய சூழலில், அந்தப் புதிய உயிரைப் பெற்றெடுக்கத் தாய்க்கு உதவுவதற்குத் தேவையான உணர்வுரீதியான, ஆன்மிகரீதியான, ஏன் பொருளாதாரரீதியான ஆதரவைக்கூட முழுமையாக வழங்க, உறவினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தச் சமூகமும் கட்டாயம் முயல வேண்டும். குழந்தை பிறந்த பின்னரும், அதைத் தாமே வளர்ப்பதா, தம் குடும்பத்தினர் வளர்ப்பதா அல்லது தத்துக்கொடுப்பதன் வழியாக வளர்க்கப்படுவதா என்பது குறித்துத் தாய் சரியான முடிவை எடுக்க உதவுவதற்குச் செய்யக்கூடிய அனைத்தையும் செய்ய வேண்டும்.
தாயின் உடல்நலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அரிதான சில நேரங்களில் கருக்குழாயில் கரு உருவாகிறது. இத்தகைய கர்ப்பங்கள் வெற்றிகரமாக நிறைவடைவதற்கான வாய்ப்பு, இன்றைய மருத்துவ அறிவியலின்படி, பூஜ்ஜிய சதவீதமே. இந்தச் சூழலில், இந்தச் சூழலில் மட்டுமே, “இரட்டை விளைவுக் கொள்கை” எனப்படும் பாரம்பரியக் கொள்கை பயன்படுத்தப்படுகிறது. இரட்டை விளைவு என்பதன் பொருள் இதுதான்: தாயின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, விரைவில் வெடிக்கவிருக்கும் கருக்குழாயின் பகுதியை மருத்துவர் அகற்ற அனுமதிக்கப்படுகிறார்; இதனால் குழந்தை உடனடியாக இறந்துவிடும் என்பதை அவர் அறிந்திருந்தாலும் அவ்வாறு செய்யலாம். ஆயினும், இந்தச் சூழலில் நோக்கம் கருக்கலைப்பு அல்ல; எனவே குழந்தையின் இறப்பு நோக்கமாகக் கொள்ளப்படுவதில்லை. மாறாக, குழந்தை இறந்துவிடும் என்பது தெரிந்திருந்தாலும், வேறு வழி இல்லாததால் இச்செயல் அனுமதிக்கப்படுகிறது. மேலும், கருக்குழாயில் ஒட்டியிருக்கும் குழந்தை அதற்குப் பதிலாகக் கருப்பையில் ஒட்டிக்கொள்ள உதவ மருத்துவருக்கு ஏதேனும் வழி இருந்தால், அதைச் செய்தாக வேண்டும். மருத்துவ ரீதியாக அது சாத்தியமில்லை என்றால், கருக்குழாயின் அந்தப் பகுதியை அகற்றுவதே ஒரே வழி. மீண்டும் கூறுவதானால், இந்தச் சூழலில் குழந்தையின் இறப்பு நேரடியாக நோக்கமாகக் கொள்ளப்படுவதில்லை; அது நோக்கமாகக் கொள்ளப்படாத, துயரமான, தவிர்க்க முடியாத ஒரு விளைவு மட்டுமே.
கர்ப்பத்தினால் வேறு பல உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படலாம். இத்தகைய சூழல்களில், தாய்க்கும் குழந்தைக்கும் உதவ எல்லாவித அக்கறையும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஆனால், தாயின் உடல்நலத்தைப் பாதுகாக்க உதவுவதற்காகக் குழந்தையின் உயிரை வேண்டுமென்றே நேரடியாகப் பறிப்பது எப்போதும் தவறானதே. இது மிகவும் கடினமான சூழல்; எனவே, மீண்டும் கூறுவதானால், தாயும் குழந்தையும் உயிர்வாழவும் நலமுடன் இருக்கவும் உதவ எல்லாவித அக்கறையும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
அண்மைக் காலங்களில் நிலவும் ஒரு துயரமான நடைமுறை, குழந்தையின் நிலையைப் பொறுத்துத் தேர்ந்தெடுத்துக் கருக்கலைப்புச் செய்வதாகும். தங்கள் கருவிலுள்ள குழந்தை நலமாக இருக்கிறதா அல்லது ஏதேனும் மரபணுக் குறைபாடோ வேறு கடுமையான குறைபாடோ உள்ளதா என்பதைப் பெற்றோர் அறிய முற்படும்போது இது நிகழ்கிறது. தெளிவாகத் தெரியும் உடல் “குறைபாடுகள்” உள்ள குழந்தையாக இருந்தால், பல நேரங்களில் மருத்துவர்கள் கருக்கலைப்பைப் பரிந்துரைக்கிறார்கள். இதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பெற்றோரைத் தயார்படுத்துவதே நோக்கம் என்றால், இத்தகைய நியாயமான பரிசோதனைகளைச் செய்துகொள்வது ஏற்கத்தக்கதாக இருக்கலாம். ஆனால், எந்த வகையான குறைபாடுள்ள குழந்தையையும் வேண்டுமென்றே கருக்கலைப்புச் செய்வது கருக்கலைப்புதான்; ஆகவே, அது மாற்றுத்திறனுள்ள ஒரு குழந்தையைக் கொல்வதாகும்.
மறைமுகக் கொலை: வேண்டுமென்றே செய்யப்படும் கொலையுடன் தொடர்புடைய மற்றொரு பாவம், ஒருவர் தம் கடமையில் காட்டும் அலட்சியத்தின் விளைவாக மற்றொருவரின் இறப்புக்குக் காரணமாவதாகும். எடுத்துக்காட்டாக, தந்தையோ தாயோ தம் குழந்தையைக் கவனிக்காமல் புறக்கணிப்பதால் அக்குழந்தை இறக்க நேர்ந்தால், அது இந்த வகையைச் சேர்ந்த பாவங்களிலேயே மிகக் கடுமையானதாகக் கருதப்பட வேண்டும்.
அரசு அதிகாரம் உடையவர்கள், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களின் தேவைகளைக் கவனிக்கத் தவறும்போதும் இத்தகைய புறக்கணிப்பு நிகழலாம். எடுத்துக்காட்டாக, ஒரு சமுதாயத்தில் கடும் வறுமையும் பசியும் நிலவும்போது, அதைச் சீர்செய்ய உதவும் திறன் அரசு அதிகாரிகளுக்கு இருந்தும், சுயநல நோக்கத்தால் அவர்கள் அதைச் செய்யத் தவறினால், அது கடுமையான புறக்கணிப்பும் பாவமும் ஆகும்.
இதைவிடக் குறைந்த அளவில், நாம் அனைவருமே ஓரளவுக்கு நம் “சகோதரரின் காவலராக” இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். அதாவது, பிறருடைய நலனில் அக்கறை கொள்ள நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம். பிறரின் பொதுநலனுக்கு உதவ வேண்டிய நமது கடமையை நாம் புறக்கணித்தால், தீர்வு காண நம்மால் உதவ முடிந்த பிரச்சினைகளுக்கு நாமும் ஓரளவு பொறுப்பாளிகள் ஆகிறோம். இது பிறரின் இறப்புக்குக் காரணமாகும் புறக்கணிப்பாக மட்டுமல்லாமல், அவர்களை வறுமை, நம்பிக்கையின்மை, தனிமை, மனவேதனை ஆகியவற்றில் விட்டுவிடும் புறக்கணிப்பாகவும் இருக்கலாம். இது பல வடிவங்களில் வெளிப்படக்கூடும். எனவே, இங்கு நாம் பொதுவான கொள்கைகளோடு நிறுத்திக்கொள்வோம்; உங்கள் வாழ்வின் ஒவ்வொரு குறிப்பிட்ட சூழலிலும் அக்கொள்கைகளை இன்னும் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். பிறரின் பராமரிப்புக்கும் நல்வாழ்வுக்கும், குறிப்பாக மிகுந்த தேவையில் இருப்போருக்கு உதவுவதற்கும், நீங்கள் ஆற்ற வேண்டிய கடமை என்னவாக இருக்கலாம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
தற்கொலை: தற்கொலை என்பது ஒருவர் தம் உயிரை வேண்டுமென்றே மாய்த்துக்கொள்வதாகும். இந்தப் பொருளைப் பற்றி நேரடியாகப் பேச வேண்டியது அவசியம்; அதே வேளையில், மிகுந்த நுட்பமான புரிதலுடனும் அக்கறையுடனும் இதை அணுக வேண்டும். முதலில், தற்கொலை எப்போதும் தவறானதே. கடவுளே உயிரை அளிப்பவர்; நமது உயிரை எடுத்துக்கொள்ளும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. நாம் வாழ்வதா இறப்பதா என்பதைத் தீர்மானிக்கும் முழு உரிமையும் நமக்கு இல்லை.
இதைச் சொன்ன அதே வேளையில், ஒருவர் தம் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவைச் சூழ்ந்துள்ள வேறு பல கேள்விகளையும் மிகுந்த கவனத்துடன் கண்டறிய வேண்டும். ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும்போது, பெரும்பாலும் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த வேதனையிலும் குழப்பத்திலும் இழப்புத் துயரிலும் விடப்படுகிறார்கள். பலர், “என் பிள்ளை, வாழ்க்கைத்துணை, நண்பர் போன்றவர் இப்போது நரகத்தில் இருக்கிறாரா? அவர் சாவான பாவம் செய்துவிட்டாரா? அதனால் நரகத்தில் இருக்கிறாரா?” என்று எண்ணுவார்கள். இப்படிப்பட்ட கேள்வியைச் சிந்தித்துப் பார்ப்பதே நல்லதல்ல. அந்தக் கேள்விக்குச் சரியான பதில் இதுதான்: அந்தச் சிந்தனைக்கே இடம் கொடுக்காதீர்கள்!
அந்தக் கேள்வியைக்கூட ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் இதுதான். ஆம், நம் உயிரை நாமே மாய்த்துக்கொள்வது கடுமையான பாவத்திற்குரிய செயல் என்பது உண்மைதான். அது மிகவும் தவறானது. எனினும், ஒருவர் முழு அறிவுடனும் தமது விருப்பத்தின் முழுமையான சம்மதத்துடனும் தற்கொலை செய்துகொள்வது மிகவும் அரிது, ஒருவேளை சாத்தியமற்றதும்கூட என்று தொடர்ந்து கூறுவதே நேர்மையானதாக இருக்கும். ஏன்? ஏனெனில், தற்கொலை செய்துகொள்ளும் ஒருவர் ஏதோவொரு கடுமையான மனக்காயம், மனச்சோர்வு, குழப்பம் அல்லது அதுபோன்ற ஒன்றால் துன்புறுகிறார் என்பது ஏறக்குறைய உறுதி. அந்தச் செயலுக்கான அவரது குற்றப்பொறுப்பை முழுமையான குற்றப்பொறுப்பைவிட மிகக் குறைவானதாக ஆக்கும் ஏதோவொரு சூழ்நிலை பெரும்பாலும் இருக்கவே செய்கிறது.
தற்கொலை ஆழ்ந்த காயங்களையும் பல கேள்விகளையும் விட்டுச்செல்கிறது. இழப்பைச் சந்திக்கும் அன்புக்குரியவர்கள், தாங்கள் ஏதாவது தவறு செய்துவிட்டார்களா, இன்னும் ஏதாவது செய்திருக்க முடியுமா, அல்லது இப்படி நடக்கப்போவதை முன்பே உணர்ந்திருக்க வேண்டுமா என்று பெரும்பாலும் எண்ணுவார்கள். “அப்படிச் செய்திருந்தால்…”, “செய்திருக்க வேண்டுமே…”, “செய்திருக்க முடியுமே…” என்பவைதான் இந்த எண்ணங்கள். தாங்கள் இதையோ அதையோ “செய்திருக்க வேண்டும்” என்ற ஆழ்ந்த வருத்தத்தில் ஒருபோதும் விழுந்துவிடாதிருக்கக் குடும்பத்தினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
காலப்போக்கில், அன்புக்குரிய ஒருவரின் இழப்பு, பிறர்மீது, குறிப்பாக வேதனையில் இருக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்கள்மீது, அதிக அக்கறையும் இரக்கமும் காட்ட உங்களுக்கு உதவக்கூடும் என்பது உண்மைதான். ஆனால், வருத்தங்களிலும் இனி மாற்ற முடியாதவற்றிலும் மனதை ஆழ்த்திக்கொண்டிருப்பது உங்கள் அன்புக்குரியவரை மீண்டும் கொண்டுவராது. இதைக் கடவுளிடம் ஒப்படைக்கத் தொடர்ந்து முயலுங்கள்; இதைக் கையாள்வதை அவரிடமே விட்டுவிடுங்கள். தற்கொலை செய்துகொண்டவரைக் கடவுள் வேறு எவரையும்விட மிக அதிகமாக அன்பு செய்கிறார். முழு அன்பும் இரக்கமும் நிறைந்த இந்தக் கடவுள் சரியானதையே செய்வார்.
கருணைக்கொலை: தற்கொலையின் ஒரு வடிவமான கருணைக்கொலை சிறப்புக் கவனம் பெற வேண்டியதாகும். இதைப் பலர் “இரக்கத்தால் செய்யப்படும் கொலை” என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மையில், இதில் இரக்கமுள்ள எதுவும் இல்லை. ஒருவர் கடுமையாகத் துன்புறும்போது, அவரது துன்பத்தைப் போக்க விரும்புவது இயல்புதான். சில வேளைகளில், அவரது துன்பம் மிகவும் கொடியதாக இருப்பதால், அது முடிவுக்கு வருவதற்காக அவரது உயிரை மாய்த்துவிடலாம் என்ற முடிவுக்கு மக்கள் வருகிறார்கள். ஆனால், இங்கு செயல்படுவது இரக்கத்தைப் பற்றிய ஒரு தவறான உணர்வே.
ஒருவர் துன்புறும்போது, அவருக்குத் தேவையான அளவுக்கு இரக்கம் காட்டுவதே சிறந்த வழி. “இரக்கம்” என்ற சொல்லின் உண்மையான பொருள் “உடன் துன்புறுதல்” என்பதாகும். மனிதர்கள் பிறருடைய வாழ்வில் ஆழமாகப் பங்குகொண்டு, அவர்களின் துன்பத்தில் அவர்களோடு உடனிருப்பதையே இது குறிக்கிறது. அவர்கள் துன்புறும் வேளையில் அவர்களை அன்பு செய்து, அவர்கள் சுமக்கும் கனமான சுமையைத் தாங்க உதவுவதையே இது குறிக்கிறது.
அன்பு மிகவும் தேவைப்படுவோருக்கு, அவர்களுக்குத் தேவைப்படும் விதத்தில் அன்பு காட்டுவதே உண்மையான இரக்கம். அவர்களது உயிரைப் பறிப்பது துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான மிக விரைவான, எளிதான வழியாக இருக்கலாம். ஆனால், அவர்களை நடத்துவதற்கான மிகுந்த பரிவுள்ள வழி அதுவல்ல. மிகக் கடுமையான துன்பத்தின் நடுவிலும்கூட அவர்கள் கண்ணியமான வாழ்வு வாழ உதவுவதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதே உண்மையான பரிவு. அவர்கள் தங்கள் துன்பத்திலும்கூட பொருள் காணவும், அந்தத் துன்பத்தைக் கிறிஸ்துவின் சிலுவையோடு இணைக்கக் கற்றுக்கொள்ளவும் நாம் உதவ வேண்டும். இயேசுவுக்கு வலியும் துன்பமும் தெரியும். அவர் அவற்றை அனுபவித்தார்; அவற்றோடு தம்மை ஒன்றிணைத்துக்கொள்கிறார்; அவற்றை மாற்றியமைக்கவும் அவரால் முடியும். ஒருவர் தமது துன்பங்களைக் கிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுக்க உதவுவதே உண்மையான பரிவின் நோக்கம். அப்போது இயேசுவே அந்தத் துன்பங்களைத் தமது சிலுவைக்கு எடுத்துச்சென்று, அந்த நபர் கண்ணியத்துடனும் மனவலிமையுடனும் தொடர்ந்து வாழத் தேவையான அமைதியை அளிப்பார்.
எனவே, ஒருவர் இறக்க விரும்பினாலும், அவரது உயிரை நேரடியாகப் பறிப்பது எப்போதும் தவறானதே. கடவுளே உயிரை அளிப்பவர்; கடவுள் மட்டுமே அதை எடுத்துக்கொள்ள முடியும். ஏதோ ஒரு வகையான துன்பத்திலிருந்து விடுபடும் வழியாகத் தோன்றினாலும், நமது உயிரை நாமே மாய்த்துக்கொள்ளவோ, நமது இறப்புக்கு உதவுமாறு மற்றொருவரைக் கேட்கவோ நமக்கு ஒருபோதும் உரிமை இல்லை.
இறுதியாக, ஒருவர் தமது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும்போது, வலி நிவாரண மருந்தைப் பெறுவது அவருக்குப் பெரிதும் பயனளிக்கக்கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சில நேரங்களில் வலி நிவாரண மருந்து அவரது இறப்பை விரைவுபடுத்தும். இங்கும் இரட்டை விளைவுக் கோட்பாடு பொருந்தும். இந்நிலையில், தற்போதைய துன்பத்தைத் தணிக்க வலி நிவாரண மருந்து கொடுக்கப்பட்டால், வலியைத் தணிப்பது மட்டுமே நோக்கமாக இருக்கும்வரை அது அனுமதிக்கத்தக்கது. இதன் நோக்கமற்ற விளைவாக அவர் இன்னும் விரைவாக இறந்தாலும், இவ்வாறு செய்வது அனுமதிக்கத்தக்கது; ஒருவேளை நல்லதாகவும் இருக்கலாம். ஆனால், இது படிப்படியாகத் தவறான நடைமுறைக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால் மிகுந்த கவனம் தேவை. கொடுக்கப்படும் வலி நிவாரண மருந்தின் அளவு அதிகமாக இருப்பது, அதன் மூலம் மரணம் இன்னும் விரைவாக நிகழச் செய்வதற்காக இருக்கக் கூடாது என்பதை மருத்துவ நிபுணர்கள் உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அளவுக்கு அதிகமாகக் கொடுப்பது அடிக்கடி நிகழ்கிறது. எனவே, வலி நிவாரண மருந்து நியாயமான அளவுக்கு மட்டுமே கொடுக்கப்படுவதை உறுதிசெய்ய, வழக்கமான கண்காணிப்புகளும் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருக்க வேண்டும்.
கருணைக்கொலையைப் பற்றிய நமது சிந்தனைக்கு இது போதுமானது. இருப்பினும், இந்த அத்தியாயத்தின் பிற்பகுதியில், “வாழ்வின் இறுதிக்கட்டம்” சார்ந்த பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றையும் பற்றிய தொடர்புடைய பிற கேள்விகள் குறித்து இன்னும் விரிவாகப் பேசப்படும்.
கவனத்தில் கொள்ள வேண்டிய பிற அம்சங்கள்: மேலும், கடுஞ்சொல், அவதூறு, கேலி, புறணி பேசுதல் போன்றவை இந்தக் கட்டளையை மீறுகின்றன. ஏனெனில், அவை மற்றொருவரின் குணநலனையும் நற்பெயரையும் “கொலை” செய்கின்றன. இது அவரது அடிப்படை மனித மாண்பை மீறுவதாகும். கோப எண்ணங்கள்கூட இந்தக் கட்டளையை உள்ளத்தில் மீறுவதாக அமையலாம். அன்பு செய்யவும் மன்னிக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அன்பையும் மன்னிப்பையும் வழங்க மறுக்கும்போது, நாம் இந்தக் கட்டளையை மீறுகிறோம்.
சட்டவிரோதமான போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல் அல்லது மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல், உடலை முறையாகப் பராமரிக்காமல் புறக்கணித்தல், அளவுக்கு அதிகமாக உண்ணுதல், அளவுக்கு அதிகமாகத் தூங்குதல், மதுபானங்களை அளவுக்கு அதிகமாக அருந்துதல், உடல்நலம் அல்லது தோற்றத்தைப் பற்றி அளவுக்கு மீறிக் கவலைப்படுதல், இனவெறி, விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல் போன்றவையும் இந்தக் கட்டளையை மீறும் செயல்களாகும்.
மனித மாண்பு மதிக்கப்பட வேண்டும்
பிறரின் மீட்புக்கு மதிப்பளித்தல்: பிறரின் நலனை வளர்க்க உதவும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. நமது சொற்களாலும் முன்மாதிரியாலும், அவர்கள் நன்மை செய்யவும் தீமையைத் தவிர்க்கவும் நாம் உதவ வேண்டும். ஒருவர் மற்றொருவரைப் பாவம் செய்யத் தூண்டும்போது, அது இடறலாகும். கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி இடறலை இவ்வாறு வரையறுக்கிறது: “இடறல் என்பது பிறரைத் தீமை செய்யத் தூண்டும் மனப்பாங்கு அல்லது நடத்தை ஆகும். இடறல் விளைவிப்பவர் தமக்கு அடுத்திருப்பவரைச் சோதனைக்கு உட்படுத்துபவராகிறார்” (#2284).
மறுபுறம், பிறரை மேம்படுத்தவும், புனித வாழ்வின் பாதையில் அவர்களை ஊக்குவிக்க உதவவும் விடுக்கப்படும் அழைப்பாக இக்கட்டளையை நாம் காண வேண்டும். நம் சொற்களாலும் செயல்களாலும் நன்மைக்குச் சாட்சியாக இருப்பதே இதன் நோக்கம்.
உடல்நலத்திற்கும் உடலுக்கும் மதிப்பளித்தல்: நமது உடல்கள் தூய ஆவியாரின் ஆலயங்கள்; அந்த உணர்வுடன் அவற்றைப் பேண வேண்டும். எனவே, உணவு அல்லது பானம், மது அல்லது போதைப்பொருள்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்தி நமது உடல்களுக்குத் தீங்கு விளைவிப்பது இந்தக் கட்டளையை மீறுவதாகும். நமது உடல்நலத்தை நன்கு பேணுவதும் பிறரின் உடல்நலம் மேம்பட உதவுவதுமே நோக்கமாகும்.
கடவுள் திட்டமிட்டுப் படைத்த உலகின் மறைபொருள்களை வெளிப்படுத்துவதால், அறிவியல் ஒரு மாபெரும் ஆசீர்வாதமாக இருக்கிறது. ஆனால் அறிவியலுக்கும் அறநெறி சார்ந்த வரம்புகள் உள்ளன. இதற்கான குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகள், இவ்வத்தியாயத்தின் பிற்பகுதியில் வரும் “மருத்துவ அறநெறி” என்ற பகுதியில் விளக்கப்படுகின்றன.
தகவல்களைப் பெறுவதற்காக உடலுக்கோ மனத்திற்கோ நேரடியாகத் தீங்கு விளைவிப்பதால், சித்திரவதையையும் இத்தலைப்பின்கீழ் சேர்க்கலாம். இது மனித ஆளின் மாண்பிற்கு எதிரானது. முக்கியமான தகவல்களைப் பெறுவதற்கு இது பயனளிக்கும் என்று கருதப்பட்டாலும், இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. குற்றவாளிகளாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதரின் மாண்பும் எப்போதும் மதிக்கப்பட வேண்டும்.
இறுதியாக, தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக ஓர் உறுப்பை அகற்றுவது போன்ற மருத்துவ நோக்கங்களுக்காக அன்றி, உடல் உறுப்புகளை நேரடியாகச் சிதைப்பது ஒருபோதும் அனுமதிக்கப்படுவதில்லை.
இறந்தோருக்கு மதிப்பளித்தல்: இவ்வுலகை விட்டுப் பிரிந்தவர்கள் இனி தங்கள் உடல்களில் வாழ்வதில்லை. இருப்பினும், உடல் கடவுளால் படைக்கப்பட்டது என்பதாலும், இறுதி நாளில் அது உயிர்த்தெழச் செய்யப்படும் என்பதாலும், அது இன்னும் புனிதமானதே. எனவே, உடலின் உயிர்த்தெழுதலில் நமக்குள்ள நம்பிக்கையை அறிக்கையிடும் வகையில், நம் அன்புக்குரியவரின் உடலை முறையாக அடக்கம் செய்வதில் அக்கறை காட்ட வேண்டும்.
உயிரைப் பறிப்பது கொலையாகாதபோது
உயிரைப் பறிப்பதற்கும் கொலை செய்வதற்கும் வேறுபாடு உள்ளதா? ஆம், உள்ளது. அது முக்கியமான வேறுபாடும்கூட. ஐந்தாம் கட்டளை நாம் உயிரைப் பறிப்பதைத் தடைசெய்யவில்லை; மாறாக, கொலை செய்வதையே தடைசெய்கிறது.
நியாயமான காரணமின்றி ஒரு குற்றமற்ற உயிரைப் பறிப்பதே கொலை ஆகும். சில சூழ்நிலைகளில் ஓர் உயிரைப் பறிப்பதற்கு நியாயப்படுத்தக்கூடிய காரணம் இருக்கிறது என்பதை இந்த வரையறை தெளிவுபடுத்துகிறது. அது உயிரைப் பறிக்கும் செயலாக இருந்தாலும், கொலையாகாது. இந்த வேறுபாட்டையும் சில எடுத்துக்காட்டுகளையும் பார்ப்போம்.
நியாயமான தற்காப்பு: தற்காப்பு என்பது நம் அனைவருக்கும் உள்ள ஓர் உரிமை; அது ஒரு கடமையும்கூட. ஒழுக்க நெறிச்சட்டம் முழுவதையும் தொகுத்துரைக்கும் இயேசுவின் இரண்டாவது கட்டளை கூறுகிறது: “உனக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய், நீ உன்னையே அன்பு செய்வதுபோல.” தன்னையே அன்பு செய்வது என்பது, பிறரின் அநீதியான தாக்குதலிலிருந்து நம்மைத் தற்காத்துப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் நிச்சயமாகக் குறிக்கிறது. எனவே, ஒருவர் நமக்குக் கடுமையான தீங்கு விளைவிக்க முயன்றால், தற்காப்புக்கான உரிமை முழுமையானதாகும்.
எனினும், தற்காப்பு மற்றும் தன்னுயிரைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமையில் ஒரு முக்கியமான நுட்ப வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். ஒருவர் உங்கள்மீது கோபமடைந்து உங்களைக் குத்துகிறார்; ஆனால் உங்களைக் கடுமையாகக் காயப்படுத்தும் எண்ணம் அவருக்குச் சிறிதும் இல்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போதே அவரைத் துப்பாக்கியால் சுட உங்களுக்கு உரிமை உண்டா? இல்லை; அது உங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான அளவை மீறிய செயலாக இருக்கும். உங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையானதை மட்டுமே செய்யத் தற்காப்பு உரிமை உங்களை அனுமதிக்கிறது. இருப்பினும், உங்கள் பாதுகாப்புக்கும் தற்காப்புக்கும் உங்களைத் தாக்குபவர் மீது உயிரைப் பறிக்கக்கூடிய அடி கொடுக்க வேண்டிய தேவை ஏற்படும் அரிதான, ஆனால் நிகழக்கூடிய சூழ்நிலைகள் பல உள்ளன. இத்தகைய நிலையில், உங்கள் நோக்கம் கொல்வதாக இல்லாமல், தற்காப்பாக இருப்பது முக்கியம். இவற்றுக்கிடையே வேறுபாடு உள்ளது. தற்காப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பது என்பது, உங்களைத் தாக்குபவரைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையானதை மட்டுமே செய்வதாகும். நல்லதும் நியாயமானதுமான ஒரே வழி, அந்த நபரின் இறப்புக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு செயலாக இருந்தால், அவர் உங்களைக் கொல்லும் அல்லது உங்களுக்குக் கடுமையான தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் உங்களைத் தாக்க வரும்வரை, அச்செயல் அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், உங்கள் நோக்கம் தற்காப்பாகும்; அதேவேளையில், நீங்கள் நோக்கமாகக் கொள்ளாத இரண்டாம் நிலை விளைவாக அந்த நபரின் உயிர் பறிபோகக்கூடும் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
பிறரின் உரிமைகளையும் உயிர்களையும் பாதுகாக்கச் சிலர் அழைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்வது முக்கியம். எடுத்துக்காட்டாக, ஒரு தந்தைக்கோ தாய்க்கோ தமது பிள்ளையைப் பாதுகாக்கும் கடமை உண்டு. அநீதியாகத் தாக்கும் ஒருவர் தமது பிள்ளைக்குத் தீங்கு விளைவித்தால், தந்தையோ தாயோ தலையிட வேண்டும்; அந்தத் தலையீடு நியாயமானதாக இருந்து, நோக்கமாகக் கொள்ளப்படாமலேயே தாக்கியவரின் உயிரைப் பறிப்பதில் முடிந்தால் (அதாவது, பிள்ளையைப் பாதுகாப்பதே நோக்கமாக இருந்தால்), அது அனுமதிக்கப்படுகிறது. காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் போன்ற, சமூகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கும் இதுவே பொருந்தும். இதைப் பற்றிக் கீழே மேலும் காண்போம்.
இந்த எடுத்துக்காட்டுகளில், தற்காப்பு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் சூழ்நிலைகளைப் பற்றியே நாம் பேசுகிறோம். தங்கள் வாழ்வில் இந்த அளவிலான தற்காப்பு தேவைப்படும் நிலையை மிகச் சிலரே எதிர்கொள்வார்கள். இருந்தாலும், நடைமுறையில் இதற்கான தேவை ஒருபோதும் ஏற்படாவிட்டாலும்கூட, இதன் அடிப்படைக் கொள்கையைப் புரிந்துகொள்வது முக்கியம்.
சமூகத்தைப் பாதுகாத்தல்: சமூகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்கள் உள்ளனர். உள்நாட்டில், சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் காவல்துறையினர் முன்னணியில் நிற்கின்றனர். தேசிய அளவில், நம்மைப் பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த இரு பிரிவினருக்கும் மேலே கூறப்பட்ட கொள்கைகள் பொருந்தும்; பிறரைப் பாதுகாப்பதற்குப் பொருத்தமான ஒரே வழியாக இருக்கும்போது, உயிரைப் பறிப்பது அனுமதிக்கப்படுகிறது.
காவல்துறை அதிகாரிகளுக்கும் அவர்களைப் போன்றவர்களுக்கும், சமூகத்தில் உள்ள முறையான அதிகார அமைப்பே அவர்களுடைய பொறுப்பை வழங்குகிறது. சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் குறிப்பிட்ட நடைமுறைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றுமாறு உள்ளாட்சி, மாநில அல்லது கூட்டாட்சி அரசு அவர்களைப் பணியமர்த்துகிறது. சில நேரங்களில், அந்த நடைமுறைகளில் அநீதியாகத் தாக்குபவரை உயிரைப் பறிக்கும் வலிமையைப் பயன்படுத்தித் தடுப்பதும் அடங்கும். அளவுக்கு மீறிய வலிமை பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, தகுந்த கட்டுப்பாடுகளும் கண்காணிப்பு முறைகளும் எப்போதும் இருக்க வேண்டும். ஆனால், ஓர் அதிகாரி தமக்குள்ள முறையான அதிகார வரம்பிற்குள் செயல்படும் வரை, தம் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள குடிமக்களைக் காப்பதற்காக உயிரைப் பறிக்கும் வலிமையைப் பயன்படுத்துவது சில நேரங்களில் அவரது உரிமை மட்டுமல்ல, கடமையும்கூட.
இராணுவமும் இதே தற்காப்புக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். ஒரு குழுவோ மற்றொரு நாடோ மேற்கொள்ளும் அநீதியான ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக, முறையான அதிகாரம் பெற்றவர் (எடுத்துக்காட்டாக, குடியரசுத் தலைவர்) போரை அறிவிக்கும்போது, போரில் ஈடுபடுவது நீதியானதாகும். இங்கு இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவதாக, இது நீதியான போரா இல்லையா என்பதைப் படைகளின் தலைமைத் தளபதி விவேகத்துடன் தீர்மானிக்க வேண்டும். இரண்டாவதாக, முறையான அதிகாரம் பெற்றவர் (படைகளின் தலைமைத் தளபதி) அனுமதி அளித்திருக்கும்போது, இராணுவத்தினர் அவசியமான நேரத்தில் மட்டுமே, அதுவும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோரைத் தடுப்பதற்காக மட்டுமே உயிரைப் பறிக்கும் வலிமையைப் பயன்படுத்த வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டு, “நீதியான போர்க் கோட்பாட்டின்” அறநெறி அடிப்படைகளை இப்போது காண்போம்.
நீதியான போர்க் கோட்பாடு: கீழே தரப்பட்டுள்ளவை கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி (#2309) ஒரு போரை நீதியானதாக ஏற்றுக்கொள்வதற்கு வகுத்துள்ள நிபந்தனைகள்:
—ஆக்கிரமிப்பாளர் ஒரு நாட்டிற்கோ நாடுகளின் சமூகத்திற்கோ ஏற்படுத்தும் சேதம் நீடித்ததாகவும், கடுமையானதாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும்;
—அதற்கு முடிவுகட்டுவதற்கான மற்ற எல்லா வழிகளும் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை அல்லது பயனற்றவை என்பது நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும்;
—வெற்றிக்கான வலுவான வாய்ப்புகள் இருக்க வேண்டும்;
—ஆயுதங்களைப் பயன்படுத்துவது, அகற்றப்பட வேண்டிய தீமையைவிடக் கடுமையான தீமைகளையும் சீர்குலைவுகளையும் ஏற்படுத்தக் கூடாது. இந்த நிபந்தனையை மதிப்பிடுவதில், நவீன அழிவுச் சாதனங்களின் ஆற்றல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
அடிப்படையில், அநீதியான ஓர் ஆக்கிரமிப்பாளரால் ஏற்படும் கடுமையான, தொடர்ச்சியான தீங்கிலிருந்து நாட்டைக் காப்பதற்குப் போர் அவசியமாக இருக்க வேண்டும்; அமைதியைக் கொண்டுவர மற்ற எல்லா வழிகளும் முயன்று பார்க்கப்பட்டிருக்க வேண்டும்; அநீதியான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரப் போர் ஒரு முறையான வழியாகத் தோன்ற வேண்டும்; அதன் இறுதி விளைவு தற்போதைய நிலையைவிடச் சிறந்ததாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இவை அனைத்தும் நிறைவேறும்போது மட்டுமே போரில் ஈடுபட அனுமதி உண்டு. எந்த ஒரு நாட்டின் படைகளின் தலைமைத் தளபதியும் போரை அறிவிப்பதற்கு முன் இந்த நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேறியிருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகள் நிறைவேறாவிட்டால் என்ன செய்வது? அப்போதும் இராணுவத்தில் இருப்பவர்கள் போருக்குச் செல்லக் கடமைப்பட்டவர்களா? இது தெளிவாகத் தீர்மானிக்க முடியாத ஒரு பகுதிக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. இருப்பினும், பொதுவான விதியாக, படைகளின் தலைமைத் தளபதியின் கட்டளைகள் வெளிப்படையாக அறநெறிக்கு முரணாக இருந்தாலன்றி, இராணுவத்தில் பணிபுரிபவர்கள் கட்டளைகளைப் பின்பற்றுவதில் மனத்தயக்கம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், போர் குறித்த முடிவுகளின் விவரங்கள் பெரும்பாலும் பொதுமக்களுக்குத் தெரிவதில்லை. “மிக இரகசியமானவையாகவும்” நாட்டின் தலைவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடியவையாகவும் பல காரணிகள் உள்ளன. எனவே, படைகளின் தலைமைத் தளபதி ஒரு போர் நீதியானது என்று கூறும்போது, அது நீதியற்றது என்பது தெளிவாகத் தெரிந்தாலன்றி, அதை நீதியானதாகவே கருத வேண்டும். போர் நீதியற்றது என்பது தெளிவாகத் தெரிந்தால், இராணுவத்தில் பணிபுரிபவர்கள் படைகளின் தலைமைத் தளபதியின் உத்தரவுகளைப் பின்பற்றக் கூடாது. எனினும், இத்தகைய சூழல் ஏற்பட்டால், இராணுவத்தில் பணிபுரிபவர்கள் முதலில் திருஅவையை அணுகி, அந்தக் குறிப்பிட்ட சூழல்களில் போரின் அறநெறித்தன்மை குறித்து ஆயர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.
மரண தண்டனை: சில சூழ்நிலைகளில், அரசு மனிதர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது முறையானதாகும். ஆனால் இன்றைய காலத்தில் இது அரிதானது. ஒரே ஒரு சூழ்நிலையில் மட்டுமே மரண தண்டனை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது. மரண தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்த குற்றவாளி சமூகத்திற்குக் கடுமையான அச்சுறுத்தலாக இருக்கிறார் என்றும், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதே சமூகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி என்றும் அரசு தீர்மானித்திருந்தால் மட்டுமே அது ஏற்றுக்கொள்ளத்தக்கது. எனினும், இதைப் பரிசீலிப்பதில் கவனம் தேவை. உண்மை என்னவென்றால், இன்றைய காலத்தில் பெரும்பாலான நாடுகள், ஆபத்தான ஒரு குற்றவாளியை அவரது வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்திருக்க முடியும் என்பதில் நியாயமான உறுதியைப் பெறுவதற்கு முழுத் திறன் கொண்டுள்ளன. இதனால், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டிய அவசியமின்றிச் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
இங்கு முக்கியமானது என்னவென்றால், அந்த நபர் ஒருபோதும் தப்பிக்க மாட்டார் என்பதில் அரசுக்கு முழுமையான உறுதி இருக்க வேண்டியதில்லை—அந்த அளவிலான உறுதி சாத்தியமற்றது. கொடூரமான குற்றத்தைச் செய்தவரின் மாண்பை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், சமூகத்திற்கு நியாயமான பாதுகாப்பை வழங்குவதே இங்கு செயல்படும் கொள்கையாகும். அவர் மனமாற்றம் அடைந்து, தம் பாவங்களுக்காக மனம் வருந்துவார் என்பதே நம்பிக்கை.
இவ்வாறு கூறியிருந்தாலும், சில பண்பாட்டுச் சூழல்களில் ஒரு குற்றவாளியை நிரந்தரமாகச் சிறையில் வைத்திருப்பது அவ்வளவாகச் சாத்தியமில்லாமல் இருக்கலாம் என்பதை எண்ணிப் பார்க்க முடியும். அத்தகைய நிலையில், இந்தக் குற்றவாளியிடமிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கு மரண தண்டனை மட்டுமே ஒரே வழி என்று அரசு நேர்மையாகவும் நியாயமாகவும் தீர்மானித்தால், அது அனுமதிக்கத்தக்கதாக இருக்கலாம்.
இந்தச் சூழ்நிலையில், இது குற்றமற்ற உயிரைப் பறிப்பதாக இல்லாததாலும், முறையான அதிகாரம் பெற்றவர்களால் நிறைவேற்றப்படுவதாலும், இது கொலை அல்ல.
“மருத்துவ நெறிமுறைகள்” குறித்த பிற கருத்துகள்
இன்றைய அறநெறிசார் முடிவுகளில் ஒரு முக்கியமான துறை மருத்துவ அறநெறியாகும். இயேசுவின் காலத்தில் மருத்துவம் இன்றிருப்பதைப் போல இருக்கவில்லை என்பது தெளிவு. இதன் காரணமாக, நவீன அறிவியல் பரிசீலனைக்குரிய பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. சிறப்புக் கவனம் தேவைப்படும் பல்வேறு விவகாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எனினும், இந்தப் பட்டியல் எவ்வகையிலும் முழுமையானதல்ல. ஆகவே, நவீன மருத்துவத்தில் எழும் குறிப்பிட்ட எல்லாக் கேள்விகளிலும் நல்ல அறநெறிசார் முடிவுகளை எடுக்க, பொதுவான அறநெறிக் கொள்கைகளைப் புரிந்துகொள்வது இன்றியமையாதது.
சோதனைக் குழாய்க் கருத்தரித்தல்: சோதனைக் குழாய்க் கருத்தரித்தல் (IVF) என்பது ஒரு பெண்ணிடமிருந்து கருமுட்டைகளை எடுத்து, ஓர் ஆணின் விந்தணுக்களைக் கொண்டு அவற்றைச் செயற்கையாகக் கருவுறச் செய்யும் அறிவியல் செயல்முறையாகும். ஆய்வகச் சூழலில் கருவுறுதல் நிகழ்ந்ததும், கருவுற்ற முட்டைகள் அந்தப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்றாவது கருப்பைச் சுவரில் பதிந்து, கர்ப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் இது செய்யப்படுகிறது. இரண்டு அடிப்படைக் காரணங்களால் இந்தச் செயல்முறை அறநெறிக்கு முரணானதாகும்.
முதலாவதாக, இத்தகைய செயற்கையான சூழலில் கருத்தரிப்பு சாத்தியம் என்றாலும், குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்காகக் கடவுள் ஏற்படுத்திய இயற்கை நியதிகளுக்கு இது முரணானது. குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஆழ்ந்த ஏக்கம் கொண்டிருந்தும், அவ்வாறு இயலாத தம்பதியர் பலர் உள்ளனர். இது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி, வேறு வழிகளை ஆராயத் தம்பதியரைத் தூண்டலாம். இந்நிலையில், ஓர் அறிவியல் செயல்முறை பயனளிக்கக்கூடும் என்பதாலேயே, அதைப் பயன்படுத்துவது தானாகவே அறநெறிப்படி அனுமதிக்கத்தக்கதாகிவிடாது என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியம். IVF முறை, படைப்புச் செயலை நம் கைகளிலேயே எடுத்துக்கொள்வதற்கு ஒப்பானது. உயிரின் ஊற்றாகிய கடவுள், உயிர் உருவாவதற்கு ஓர் இயற்கையான வழியை அளித்துள்ளார். இந்த இயற்கையான வழியில் கருத்தரிப்பு நிகழவில்லை என்றால், கருத்தரிப்புக்கு உதவக்கூடிய, அறநெறிப்படி அனுமதிக்கப்பட்ட வழிகள் உள்ளன; கருவளத்தை மேம்படுத்தும் மருந்துகளும் இயற்கைக் குடும்பக் கட்டுப்பாடும் அவற்றுள் அடங்கும். குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான இயற்கை அமைப்பிலிருந்து கருத்தரிப்பை IVF முறை பிரிக்கிறது. கணவன் மனைவியின் தாம்பத்திய உறவிலிருந்து கருத்தரிப்பைப் பிரிப்பதால், இது கடவுளின் இயற்கையான திட்டத்திற்கு முரணான ஒரு நடைமுறை என்றும், இதைப் பயன்படுத்தக்கூடாது என்றும் திருஅவை பகுத்தறிந்து முடிவு செய்துள்ளது.
இரண்டாவதாக, IVF முறை மனித உயிர் இழப்பிற்கான கடுமையான ஆபத்தைத் தன்னுடன் கொண்டுவருகிறது. பெரும்பாலும், பல கருமுட்டைகள் கருத்தரிக்கச் செய்யப்பட்டு கருப்பையில் பதிக்கப்படுகின்றன; புதிதாகத் தொடங்கியுள்ள இந்த மனித உயிர்களில் சிலவோ பெரும்பாலானவையோ உயிர்வாழாது என்பதை அறிந்தே இது செய்யப்படுகிறது. ஆகவே, உயிர்வாழும் வாய்ப்பு குறைவாக உள்ள மனித உயிர்களை உருவாக்குவதன் மூலம், கருத்தரிக்கும் தருணத்திலிருந்தே ஒவ்வொரு மனித உயிருக்கும் உள்ள புனிதத்தன்மையை இம்முறையின் பயன்பாடு புறக்கணிக்கிறது. உயிர் எப்போது தொடங்குகிறது என்ற கேள்வியின் மையத்தை இது தொடுகிறது. திருஅவை போதிப்பதும் அறிவியல் உறுதிப்படுத்துவதும் போல, கருத்தரிக்கும் தருணத்திலேயே உயிர் தொடங்குவதால், புதிதாக உருவான அந்தக் கருக்களில் ஒன்றாவது உயிர்வாழும் என்ற நம்பிக்கையில், மிகவும் ஆபத்தான நிலையில் மனித உயிரை உருவாக்குவது பொறுப்பற்றதும் அறநெறிப்படி முற்றிலும் அனுமதிக்க முடியாததுமாகும்.
இவ்வாறு கூறியபோதிலும், இம்முறையைப் பயன்படுத்தி ஒரு குழந்தை கருத்தரிக்கப்பட்டு கருப்பையில் பதிக்கப்பட்டு, முழு வளர்ச்சி அடைந்து பிறந்தால், அது கருத்தரிக்கப்பட்ட விதத்தின் காரணமாக அதன் புனிதத்தன்மையோ மாண்போ எவ்விதத்திலும் குறைந்துவிடுவதில்லை என்பதை அறிந்திருப்பது முக்கியம். உயிர் என்பது உயிரே; எல்லா உயிரும் புனிதமானதும் விலைமதிப்பற்றதும் ஆகும். அடையப்படும் முடிவு, அதற்காகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகளை நியாயப்படுத்துவதில்லை. இருப்பினும், அந்த “முடிவு” ஒரு குழந்தையாக இருக்கும்போது, அக்குழந்தை புனிதமானது; மிக உயர்ந்த மாண்புடன் நடத்தப்பட வேண்டியது.
நகலாக்கம்: ஒரு மனிதரை நகலாக்க முயல்வது எப்போதுமே அறநெறிக்கு முரணானது. இதற்கான காரணம், IVF முறை குறித்து மேலே குறிப்பிடப்பட்ட முதல் கருத்துடன் மிகவும் ஒத்துள்ளது. புதிய உயிரை உருவாக்குவதற்கான கடவுளின் இயற்கையான அமைப்பை நகலாக்கம் சீர்குலைக்கிறது; எனவே, அது இயற்கைக்கும் மனித மாண்புக்கும் முரணானது. மீண்டும் கூறுவதானால், ஒன்றைச் செய்வதற்கான திறன் அறிவியலுக்கு இருக்கக்கூடும் என்பதாலேயே, அதைச் செய்வது சரியானது என்று பொருளல்ல. இவ்வகையில், மனித நகலாக்கச் சோதனைகள் அறநெறிக்குக் கடுமையாக முரணானவை; அவற்றை ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது.
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை: “ஒருவர் தம் நண்பர்களுக்காகத் தம் உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவரிடமும் இல்லை” (Jn 15:13) என்று இயேசு கூறினார். இந்த உயர்ந்த அழைப்பைப் பல வழிகளில் நிறைவேற்றலாம். மற்றொருவரின் உயிருக்கும் உடல்நலனுக்கும் உதவும் வகையில், முறைப்படி உறுப்புகளைத் தானமாக வழங்க அனுமதிப்பது அவற்றுள் ஒரு வழியாகும்.
நிச்சயமாக, ஓர் உறுப்பைத் தானமாக வழங்குவது ஒருவரின் நேரடி மரணத்திற்குக் காரணமாகுமானால், அது குற்றமற்ற ஓர் உயிரைப் பறிப்பதாக இருப்பதால் அறநெறிக்கு முரணானது. ஆனால், ஒருவர் இறந்துவிட்டாலோ, அவருக்கு “மூளைச்சாவு” ஏற்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டாலோ, பிறரின் நலனுக்காக அவரது உறுப்புகளைப் பயன்படுத்துவது அனுமதிக்கத்தக்கது.
இவ்வாறு கூறியபோதிலும், உறுப்புகளை அகற்றி எடுப்பதற்கு முன், மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டது என்பது மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப்பட்டிருப்பது முக்கியம். ஒருவருக்கான உயிர்காக்கும் ஆதரவு சாதனங்கள் அகற்றப்பட்டால் அவர் உடனடியாக இறந்துவிடுவார் என்ற நியாயமான, உறுதியான முடிவின் அடிப்படையில் எடுக்கப்படும் மருத்துவத் தீர்மானமாக இது இருக்கும். இதுவே முக்கியமான அம்சம். இதில் தெளிவற்ற நிலை ஏற்படக்கூடும்; மேலும், செயற்கையான உயிர்காக்கும் ஆதரவில் இதயம் இன்னும் துடித்துக்கொண்டிருக்கும்போதே பெரும்பாலான உறுப்புகள் “அகற்றி எடுக்கப்பட” வேண்டியிருப்பதால், மிகுந்த கவனம் தேவை. மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாகத் தீர்மானிக்கப்பட்ட பின்னரே, அந்த நபர் இன்னும் உயிர்காக்கும் ஆதரவில் இருக்கும்போது அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அறநெறிப்படி அனுமதிக்கத்தக்கதாகும். இந்நிலையில், உடல் மட்டுமே உயிருடன் உள்ளது; ஆனால் அந்த நபர் உண்மையில் இறந்துவிட்டார் என்று புரிந்துகொள்ளப்படுகிறது.
“வாழ்வின் இறுதிக்கட்டம்” குறித்த பிற முடிவுகள்
நம் அனைவருக்கும் வாழ்வின் முடிவு வரும். மேலும், பெரும்பாலானோர் தங்கள் அன்புக்குரியவரின் வாழ்வின் முடிவு தொடர்பான சில அறநெறித் தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும். வாழ்வின் இறுதிக்கட்டம் குறித்தும், எத்தகைய பராமரிப்பும் சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும் அல்லது தவிர்க்கப்படலாம் என்பது குறித்தும் அறநெறிப்படி நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கு, இவற்றில் பயன்படுத்தப்படும் அடிப்படைச் சொற்களை அறிந்திருப்பது முக்கியம்.
பராமரிப்பும் சிகிச்சையும்: முதலில், “பராமரிப்பு” என்பதற்கும் “சிகிச்சை” என்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் கவனிப்பது முக்கியம். பராமரிப்பு எப்போதும் அளிக்கப்பட வேண்டும். இது அடிப்படை மனித மாண்பு கோரும் கடமையாகும். பராமரிப்பு என்றால் என்ன? உணவு, தண்ணீர், அன்பு, ஆறுதல், அடிப்படை மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை மனிதத் தேவைகளையும் நிறைவு செய்வது பராமரிப்பில் அடங்கும். உடலுக்குள் அதிக அளவில் தலையீடு செய்யும் அனைத்து வகையான மருத்துவச் செயல்முறைகளும் மருந்துப் பயன்பாடுகளும் சிகிச்சையில் அடங்கும்.
சாதாரண முறைகளும் அசாதாரண முறைகளும்: மருத்துவம் சார்ந்த அறநெறி முடிவுகளை எடுக்கும்போது, சாதாரண முறைகளுக்கும் அசாதாரண முறைகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். சாதாரண பராமரிப்பு எப்போதும் வழங்கப்பட வேண்டும்; நமது மனித மாண்பின் பொருட்டு நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்து அடிப்படைத் தேவைகளும் இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக, ஊட்டச்சத்தும் நீர்ச்சத்தும் வழங்குவது ஏறக்குறைய எல்லா வேளைகளிலும் இவ்வகையிலேயே அடங்கும் (இதைப் பற்றி மேலும் பின்னர் காண்போம்). அடிப்படைச் சுகாதாரம், உணர்வுரீதியான மற்றும் ஆன்மிக ஆதரவு, நோயாளியின் துயரத்தைக் குறைத்து ஆறுதல் அளிக்கும் பராமரிப்பு, அளவுக்கு மீறிய சுமையாக இல்லாத மருத்துவச் செயல்முறைகள் அல்லது மருந்துகள் ஆகியவையும் சாதாரண பராமரிப்பில் அடங்கும்.
ஒருவருக்கு ஏதோ ஒரு வகையில் சுமையை ஏற்படுத்தும் பெரும்பாலான மருத்துவச் செயல்முறைகள் அசாதாரண பராமரிப்பிலும் சிகிச்சையிலும் அடங்கும். இங்கு முக்கியமானது, சிகிச்சையே ஒரு சுமையாக இருப்பதுதான். பல சூழல்களில் அசாதாரண பராமரிப்பை வழங்குவது அறநெறிப்படி அவசியமாக இருக்கும்; ஆனால் சில சூழல்களில் அசாதாரண பராமரிப்பை மறுக்கலாம். சில எடுத்துக்காட்டுகள் இதை விளக்க உதவும்.
ஒருவர் நான்காம் நிலைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நிச்சயமாக இறந்துவிடுவார் என்று வைத்துக்கொள்வோம். புற்றுநோய் பரவும் வேகத்தைக் குறைக்க அதிக அளவில் வேதிச்சிகிச்சை அளிக்கலாம்; ஆனால் அது பெரும்பாலும் அவரது உடல்நிலையை மிகவும் பாதித்து, அவருக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தும். அவருக்கு 95 வயது என்றும், இயேசுவைச் சந்திக்க மனதளவிலும் ஆன்மிக நிலையிலும் தயாராக இருக்கிறார் என்றும் வைத்துக்கொள்வோம். இந்நிலையில், இயற்கை அதன் போக்கில் செயல்பட அனுமதிப்பதற்காக, உடலில் தீவிரமாகச் செயல்பட்டு பெரும் சுமையை ஏற்படுத்தும் அசாதாரண சிகிச்சையான வேதிச்சிகிச்சையை அவர் மறுத்தால், அது புரிந்துகொள்ளத்தக்கதே.
மறுபுறம், பல சிறு குழந்தைகளைக் கொண்ட 35 வயதுள்ள ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்குப் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகிறது; பரிந்துரைக்கப்படும் வேதிச்சிகிச்சை பயனளிக்க ஓரளவு நல்ல வாய்ப்பும் இருக்கலாம். சிகிச்சைகள் பெரும் சுமையாக இருக்கும் என்றும், உடல்நிலையைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் மருத்துவர்கள் விளக்குகிறார்கள்; இருப்பினும் அதுவே மிகச் சிறந்த வழி என்கிறார்கள். இந்நிலையில், அசாதாரண பராமரிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
முடிவெடுப்பதில் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது, உண்மையில் அந்த சிகிச்சை தானே ஒருவருக்கு அளவுக்கு மீறிய சுமையை ஏற்படுத்துகிறதா இல்லையா என்பதுதான். சுமை என்பது உடல்ரீதியானதாகவோ, உளவியல்ரீதியானதாகவோ, பொருளாதார ரீதியானதாகவோகூட இருக்கலாம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அந்தச் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்பது அளவுக்கு மீறிய ஒன்றாக இருக்கிறதா? அந்தச் சிகிச்சை அளவுக்கு மீறியதாகவும், மிகுந்த சுமையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது என்பதே விவேகத்துடன் எடுக்கப்படும் மிகச் சிறந்த முடிவாக இருந்தால், அதை மறுக்கலாம்.
கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு காரணி, மருத்துவச் சிகிச்சையின் வெற்றி வாய்ப்பாகும். அளிக்கப்படும் சிகிச்சை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவோ அறவே இல்லாமலோ இருந்து, அது பயனற்றது என்று மருத்துவர் மதிப்பிட்டால், இறுதி முடிவை எடுக்கும்போது இதைத் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். பெரும் சுமையை ஏற்படுத்தும் பயனற்ற சிகிச்சையை மறுக்கலாம்.
மறுபுறம், அசாதாரண முறைகளை அவசியம் மறுத்தே ஆக வேண்டும் என்பதில்லை. ஒருவர் அந்தச் சிகிச்சையைத் தாங்கக்கூடிய நிலையில் இருந்து, அதை விரும்பி, அதன் பயன் அது ஏற்படுத்தும் சுமையைவிட அதிகம் என்று நம்பினால், அதை நாடுவதில் தவறில்லை.
ஏதாவது ஒன்று அளவுக்கு மீறிய சுமையாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்போது, ஒரு முக்கியமான வேறுபாட்டை உணர வேண்டும். சில சமயங்களில், என் வாழ்வே அளவுக்கு மீறிய சுமையாக இருக்கிறது என்று தவறாக முடிவெடுத்து, அதன் காரணமாக இறப்பை விரைவுபடுத்துவதற்காகப் பல்வேறு சிகிச்சைகள் மறுக்கப்படுகின்றன. இது தவறானது; ஏனெனில், “வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையிலான முடிவுகள்” என்று நாம் குறிப்பிடுபவற்றை ஒருபோதும் எடுக்கக் கூடாது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், என் “வாழ்க்கைத் தரம்” மிகவும் மோசமாக இருப்பதால், என் துன்பத்தைக் குறைப்பதற்காகவோ, என் வாழ்வு என் அன்புக்குரியவர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய “சுமையை” நீக்குவதற்காகவோ, சாதாரண சிகிச்சைகளைக்கூட மறுப்பேன் என்று கூறுவது முறையல்ல.
இங்கு வேறுபடுத்திக் காண வேண்டியது, பரிந்துரைக்கப்படும் சிகிச்சை அளவுக்கு மீறிய சுமையாக இருக்கிறதா இல்லையா என்பதுதான். இது, என் வாழ்வு அளவுக்கு மீறிய சுமையாக இருக்கிறது என்று சொல்வதிலிருந்து வேறுபட்டது. எடுத்துக்காட்டாக, ஒருவருக்குக் கடுமையான நோய் ஏற்பட்டு, அது மிகுந்த வலியைத் தருகிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு வழங்கக்கூடிய ஒரு மருத்துவச் சிகிச்சை (மருந்து போன்றது) இருக்கிறது; அந்தச் சிகிச்சை மிகக் குறைந்த சுமையையே ஏற்படுத்துகிறது அல்லது சுமையே ஏற்படுத்துவதில்லை. அந்த நபர் இறந்து தனது துன்பத்திலிருந்து விடுபட விரும்புகிறார் என்பதற்காக அந்தச் சிகிச்சையை மறுப்பது அனுமதிக்கத்தக்கதா? இல்லை, அது முறையானதாக இருக்காது. இந்நிலையில், சுமை ஏற்படுத்தாத சிகிச்சையை வழங்குவதோடு, அவரது துன்பத்தில் அவருக்கு உதவ இயன்ற அனைத்தையும் செய்வதே நோக்கமாக இருக்க வேண்டும். துன்புறும் அந்த நபருக்கு உதவ உணர்வுரீதியான, உளவியல்ரீதியான, ஆன்மிக மற்றும் உடல்ரீதியான பராமரிப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், மிகக் குறைந்த சுமையையே ஏற்படுத்தும் அல்லது சுமையே ஏற்படுத்தாத அடிப்படைச் சிகிச்சையை மறுப்பது, புறக்கணிப்பின் மூலம் செய்யப்படும் கருணைக்கொலையின் ஒரு வடிவமாகும். இத்தகைய சாதாரண சிகிச்சைகள் பயனற்றவை (பலனளிக்காதவை) என்று தீர்மானிக்கப்படும்போது மட்டுமே அவற்றை மறுக்கலாம்.
ஊட்டச்சத்தும் நீர்ச்சத்தும்: ஊட்டச்சத்தும் நீர்ச்சத்தும் வழங்குவது சிறப்புக் கவனம் தேவைப்படும் ஒரு பகுதி. ஊட்டச்சத்தும் நீர்ச்சத்தும் சாதாரண முறைகளில் எப்போதும் வழங்கப்பட வேண்டும். அதாவது, ஒருவர் உண்ணவும் குடிக்கவும் முடிகிறவரை, அவருக்கு உணவும் தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். ஒருவரைப் பட்டினி போடுவது தவறு. உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பாக மக்கள் முடிவெடுக்க மிகவும் சிரமப்படும் பொதுவான விஷயம், செயற்கை முறையில் ஊட்டச்சத்தும் நீர்ச்சத்தும் வழங்குவதைச் சார்ந்தது. பெரும்பாலும் இது உணவூட்டும் குழாயைப் பொருத்துவதைக் குறிக்கும்.
ஒருவர் தாமாகவே உண்ணவோ குடிக்கவோ முடியாதபோது, அவருக்குத் தேவையான அடிப்படைப் பராமரிப்பைத் தொடர்ந்து வழங்க உணவூட்டும் குழாய்கள் வழிவகுக்கின்றன. குறிப்பாக, நிரந்தரத் தாவரநிலையில் உள்ள ஒருவருக்கு இது பொருந்தும். இதைப் பற்றிய திருஅவையின் தெளிவான போதனை என்னவென்றால், இரண்டு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நிறைவேறினாலன்றி, உணவூட்டும் குழாய் வழியாகப் பராமரிப்பதைச் சாதாரண பராமரிப்பாகவே கருத வேண்டும் என்பதாகும்.
உணவூட்டும் குழாயைப் பயன்படுத்த மறுக்கக்கூடிய முதல் நிலை, அது பயனற்றதாக இருப்பதாகும். பயனற்றது என்றால், எடுத்துக்காட்டாக, ஒருவர் உணவிலிருந்து ஊட்டச்சத்தைப் பெற இயலாத நிலையில் இருப்பதைக் குறிக்கும். உடல் உணவை உறிஞ்சிக்கொள்ள முடியாதபடி செய்யும் கடுமையான வயிற்றுப் புற்றுநோய் அவருக்கு இருந்தால் இவ்வாறு நிகழலாம். இந்நிலையில், உணவூட்டும் குழாயைப் பயன்படுத்துவது உதவாது; எனவே, அது அவசியமில்லை. உண்மையில், அது தீங்கு விளைவிப்பதாகக்கூட இருக்கலாம்.
உணவூட்டும் குழாயை மறுக்கக்கூடிய இரண்டாவது நிலை, ஒருவர் மிகவும் பலவீனமாகவோ முதுமையடைந்தவராகவோ இருப்பதால், உணவூட்டும் குழாயைப் பொருத்தும் மருத்துவச் செயல்முறையே அவருக்கு அளவுக்கு மீறிய சுமையாக அமைவதாகும். இந்நிலையில், அந்தச் செயல்முறை தாங்க முடியாத அளவுக்குச் சுமையானது என்று தீர்மானிக்கப்படுகிறது; எனவே, அதை ஏற்க மறுப்பது அனுமதிக்கத்தக்கது. ஆனால், உணவூட்டும் குழாய் ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்து, அதன் வழியாகக் கிடைக்கும் ஊட்டச்சத்தால் அந்த நபர் உடல்ரீதியாகப் பயனடைகிறார் என்றால், அவருக்கு உணவு அளிக்கப்பட வேண்டும்.
மேலே விளக்கியபடி, “வாழ்க்கைத் தரத்தின்” அடிப்படையிலான அனைத்து முடிவுகளையும் தவிர்க்க வேண்டும். ஒருவர் பட்டினியால் இறக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு உணவும் நீர்ச்சத்தும் அளிப்பதை மறுக்கக்கூடாது; அவை செயற்கை முறையில் அளிக்கப்படுவதாக இருந்தாலும் அவ்வாறே.
மேலே கூறப்பட்ட எல்லா முடிவுகளிலும், மருத்துவ உண்மைகளைக் கண்டறிய மருத்துவரிடம் கவனமாக ஆலோசனை பெறுவது இன்றியமையாதது. இது பயனற்ற சிகிச்சையா? இந்தச் சிகிச்சை எந்த அளவுக்குச் சுமையாக உள்ளது? வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன? இந்த உண்மைகளை அறிந்த பின், மேலே விவரிக்கப்பட்ட மருத்துவ அறநெறிக் கோட்பாடுகளின் அடிப்படையில் நல்லதொரு முடிவை எடுப்பது, அன்புக்குரியவர்களின் சிறந்த மதிப்பீட்டிற்கு விடப்படுகிறது.
உச்ச வரம்பு
மதிப்பு: இந்தக் கட்டளையில் நாம் அடைய அழைக்கப்படும் இறுதி இலக்கு, மனிதரை மதிப்பதே ஆகும். கருவுற்ற கணம் முதல் இயற்கையான இறப்பின் கணம் வரை எல்லா மனித உயிர்களையும் நாம் மதிக்க வேண்டும். உயிரை மதிப்பது என்பது ஒவ்வொருவரிடமும் இயல்பாக அமைந்துள்ள மாண்பைக் கண்டுணர்வதாகும். பிறக்காத குழந்தைகள், ஒதுக்கப்பட்டோர், ஏழைகள், பசியால் வாடுவோர், முதியோர், நோயுற்றோர் ஆகியோர்மீது நாம் அக்கறை கொள்கிறோம். நம் குடும்பத்தினரையும் அயலாரையும் எல்லா மக்களையும் கடவுளின் சாயல்களாக மதித்து அன்பு செய்கிறோம்.
அமைதியை நாடுதல்: ஒரு சமூகமோ நாடோ அடையக்கூடிய உயர்ந்த நிலை, அமைதியை நாடுவதாகும். இது முதன்மையாக, ஆயுத மோதல்களிலிருந்தும் மக்களை ஒடுக்குவதிலிருந்தும் விடுபட்டிருப்பதைக் குறிக்கிறது. ஆனால், குடிமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நலன் பேணுவதற்கான வாய்ப்புகளை வளர்க்கும் சூழலையும் சமூகத்தையும் உருவாக்குவதையும் இது குறிக்கிறது. மோதலுக்கு முடிவு ஏற்படுத்துவது மட்டுமன்றி, அன்பும் ஒற்றுமையும் கொண்ட பண்பாட்டையும் உருவாக்கும் வகையில், நாடு முழுவதும், நாட்டு எல்லைகளைக் கடந்தும்கூட, பிறரன்புப் பணியாற்றும் அமைப்புகள் ஊக்குவிக்கப்பட்டு ஆதரிக்கப்பட வேண்டும்.
நடைமுறையில் கவனிக்க வேண்டியவை
ஐந்தாம் கட்டளைக்குப் பொருந்தும் வகையில், சாவான பாவத்திற்குரிய மூன்று நிபந்தனைகளை இப்போது பார்ப்போம்:
கனமான காரியம்: மேலே விளக்கப்பட்டபடி, இந்தக் கட்டளை கடுமையான முறையில் மீறப்படுவதற்குப் பல வழிகள் உள்ளன. குற்றமற்றவர்களை நேரடியாகவும் வேண்டுமென்றே கொல்வது எதுவாயினும் கனமான காரியமாகும். மேலும், வன்முறை, சினம் அல்லது புறக்கணிப்பு சார்ந்த கடுமையான செயல்கள், கனமான செயல்களாகவோ செய்ய வேண்டியதைச் செய்யத் தவறுதல்களாகவோ அமைகின்றன.
முழு அறிவு: கொலை, கடுமையான வன்முறை அல்லது கடுமையான புறக்கணிப்பு ஆகியவை மிகக் கடுமையான தவறுகள் என்பது பெரும்பாலான அனைவருக்கும் தெரியும். மற்றவருக்குத் தீங்கு செய்யக்கூடாது என்பதை நாம் இயல்பாகவே அறிந்திருக்கிறோம். ஒருவருக்கு எவ்வாறு முழு அறிவு இல்லாமல் இருக்கலாம் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு, முதல் அத்தியாயத்தில் “தவறான மனச்சான்று” என்ற தலைப்பின்கீழ் விளக்கப்பட்டது. அந்த எடுத்துக்காட்டை இங்கே மீண்டும் கூறுவதற்குப் பதிலாக, அதை நினைவுபடுத்திக்கொள்ள நீங்கள் அந்தப் பகுதியை மீண்டும் பார்க்கலாம்.
மனவிருப்பத்தின் முழுச் சம்மதம்: சாவான பாவத்திற்குரிய இந்தக் கூறை, குற்றப்பொறுப்பைக் குறைப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ள ஒரு கூறாகப் புரிந்துகொள்வது ஒருவேளை மிகவும் எளிதாக இருக்கலாம். பெரும்பாலும், வன்முறை நிகழ்த்தப்படுவது கடுஞ்சினமும் தீவிர உணர்ச்சியும் மேலோங்கும் ஒரு தருணத்தில்தான். நம் உணர்ச்சிகளையும் உணர்வு வேகங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய கடமை நமக்கு இருப்பதால், இது அச்செயலை நியாயப்படுத்தாது. இருப்பினும், திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் சூழ்நிலையில், ஒருவர் உண்மையில் சிந்தித்துப் பார்க்காமலேயே கடுமையான தீங்கு விளைவிக்கும் விதத்தில் செயல்பட்டிருக்கக்கூடிய நிலையை நாம் புரிந்துகொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாக, ஒருவர் வீட்டிற்கு வரும்போது தம் வாழ்க்கைத் துணை மணத்துரோகச் செயலில் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இது அதிர்ச்சியூட்டுவதோடு தீவிர உணர்ச்சியையும் எழுப்புகிறது. அதிர்ச்சியடைந்த வாழ்க்கைத் துணை, முன்கூட்டிய திட்டம் எதுவுமின்றி திடீர் கோபத்தில் எதிர்வினையாற்றுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தத் திடீர் கோபச் செயலில், மணத்துரோகம் செய்தவர் கொல்லப்படுகிறார்.
இது மிகவும் துயரமான நிலை என்பது வெளிப்படை; இந்நிலையில் கொலை செய்வதை நியாயப்படுத்த முடியாது. இருப்பினும், அந்தத் தீவிர உணர்ச்சியின் காரணமாக, அந்த நபரின் பாவம் சாவான பாவம் என்ற நிலையை எட்டாமல் இருக்கலாம். பெரும்பாலான நாடுகளின் குடிமைச் சட்டங்கள்கூட, முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யப்படும் கொலைக்கும் “தற்காலிக மனப்பிறழ்வுக்கும்” இடையிலான வேறுபாட்டை ஏற்றுக்கொள்கின்றன.
மேலும், கடுமையான எந்தக் காரணிகளும், குறிப்பாக உணர்ச்சிசார்ந்தவை, இந்தக் கட்டளையைக் கனமான முறையில் மீறும் ஒருவரின் தனிப்பட்ட குற்றப்பொறுப்பைக் குறைக்கக்கூடும். எப்போதும்போல, இது அச்செயலை நல்லதாகவோ, நன்மையும் தீமையும் அற்ற ஒன்றாகவோகூட மாற்றுவதில்லை; தனிப்பட்ட குற்றப்பொறுப்பை மட்டுமே குறைக்கிறது.
அற்பப் பாவங்கள்: ஐந்தாம் கட்டளை, அற்பப் பாவங்களாக அமையும் பல வழிகளில் மீறப்படலாம். எடுத்துக்காட்டாக, கடுமையாகவோ சிறுமைப்படுத்தும் விதமாகவோ பிறரைத் தாழ்வாகக் கருதிப் பேசும் விதமாகவோ ஏளனமாகவோ கூறப்படும் சொற்கள், மற்றவரின் மனவுறுதியை “கொல்லக்கூடும்.” சொற்களால் இழைக்கப்படும் கொடுமை மற்றவர்களுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கிறது; குறிப்பாக, குடும்பத்திற்குள் அது நிகழும்போது இவ்வாறு ஆகிறது.
எல்லா வகையான கோபமும், மறைமுகமாக வெளிப்படும் பகைமையும், தீய மனப்பான்மையிலிருந்து எழும் செயல்களும் இந்தக் கட்டளையை மீறுகின்றன. உடல், மனம், ஆன்மா ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய முழு மனிதரையும் அன்புசெய்து மதிக்க நாம் முயல வேண்டும். ஒருவருக்கு மனரீதியாகவோ, ஆன்மிகரீதியாகவோ, உடல்ரீதியாகவோ தீங்கு விளைவிக்கப்படும்போது, இந்தக் கட்டளை மீறப்படுகிறது. சொல்லாலும், உணர்ச்சிரீதியாகவும், ஆன்மிகரீதியாகவும் துன்புறுத்துவதும் கனமான காரியம் என்ற நிலையை எட்டக்கூடும் என்பது உண்மையே; ஆனால் மிகப் பெரும்பாலும் அது குறைந்த தீவிரமுள்ள அற்பப் பாவமாகவே இருக்கிறது.
அழுக்காறும் இந்தக் கட்டளையை மீறுவதாகும். பொறாமை என்பது பிறரிடம் இருப்பதைத் தாமும் அடைய வேண்டும் என்ற பேராசையும் நலமற்ற விருப்பமுமாக இருப்பதால், அழுக்காறு அதிலிருந்து வேறுபடுகிறது. அவர்களுடைய உடைமைகள், தனிப்பட்ட பண்புகள், சமூக அந்தஸ்து அல்லது அவை போன்றவற்றைக் குறித்த பொறாமையாக இது இருக்கலாம். அழுக்காறு பெரும்பாலும் ஒருவகைப் பொறாமையுடன் தொடங்குகிறது; ஆனால் அதனுடன், மற்றவருக்குத் தீங்கு விளைவிக்கும் ஏதோவொரு செயலும் சேர்ந்துகொள்கிறது. அழுக்காறு என்பது பிறருடைய நன்மையைக் கண்டு ஆழ்ந்த வருத்தம் அடைவதாகும்; அதன் விளைவாக, அவர்களுக்குத் தீங்கு செய்ய முயலும்படி அது ஒருவரைத் தூண்டுகிறது. அழுக்காற்றில் எப்போதும் சினம் கலந்துள்ளது; ஆனால் அது பெரும்பாலும் உள்ளத்திற்குள்ளேயே இருப்பதால், பகைமை நேரடியாக வெளிப்படாமல் மறைமுகமாகவும் நுட்பமாகவும் அமைகிறது.
இறுதியாக, நாம் அலட்சியமாகச் செயல்பட்டு, மற்றவர்கள் உரிய முறையில் வளர்ச்சி பெற உதவத் தவறும்போதுகூட இந்தக் கட்டளை மீறப்படுகிறது. பிறரை அன்பு செய்து ஆதரிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. நாம் அவ்வாறு செய்யத் தவறும்போது, அதனால் அவர்களுக்கு ஏற்படும் தீய விளைவுகளுக்கு நாமும் ஓரளவு பொறுப்பாகிறோம். ஆகவே, மற்றவர்களைப் புறக்கணிப்பதாலும் அவர்களுக்கு நாம் காட்ட வேண்டிய அன்பைக் காட்டத் தவறுவதாலும் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்க முடியும்.
அடுத்த அத்தியாயம்: அத்தியாயம் 6 – கற்பு, தூய்மை, பாசம் மற்றும் தாம்பத்திய அன்பு
மின்னூல் & மென் அட்டை நூல் வடிவங்களிலும் கிடைக்கிறது
Amazon.com – Google Play – iTunes – Barnes and Noble

