தமிழ்

முன்னுரை

தம்பதியருக்கான வார இறுதி ஆன்மிக நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோது, என் வாழ்க்கைத்துணைக்கு ஒரு கடிதம் எழுதச் சிறிது நேரம் ஒதுக்கினேன். அந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருந்தபோது, நான் பயன்படுத்திய குறிப்பேட்டில் திடீரென “நீ அனுமதித்தால் நான் உன் வாழ்வில் நுழைய முடியும்” என்ற சொற்களை எழுதினேன். அவற்றை எழுதியவுடனேயே நான் வியப்படைந்து, உள்ளத்தின் ஆழத்தில் அதிர்வுற்றேன். ஏனெனில் அவை என் வாழ்க்கைத்துணைக்கு நான் எழுதிய கடிதத்தின் பகுதியல்ல, மாறாகக் கடவுள் என்னிடம் நேரடியாகத் தெரிவித்த சொற்கள் என்பதை அறிந்தேன். அதே வேளையில், அதுவரை நான் அனுபவித்திராத அளவுக்கு ஆழ்ந்த அமைதி என்னை ஆட்கொண்டதை உணர்ந்தேன்.

நாங்கள் வீடு திரும்பிய பிறகு, என்னை அமைதிப்படுத்தி, செபித்து, ஒரு குறிப்பேட்டை எடுத்து, பேனாவைக் கையில் பிடித்து எழுதத் தொடங்கிய போதெல்லாம், ஆன்மிகச் சிந்தனைகளைத் தொடர்ந்து எழுத முடிந்தது. நான் எழுதும்போது, வழக்கமாக எழுதும் வேகத்தைவிட ஏறத்தாழ ஐந்து மடங்கு வேகத்தில் சொற்கள் பெருக்கெடுத்து வருவதுபோல் தோன்றியது. என் மனத்திலிருந்து வெளிப்பட்டவற்றைப் பற்றி நான் சிந்திக்கக்கூட வேண்டியிருக்கவில்லை. சொற்கள் தாமாகவே பெருக்கெடுத்து வந்தன. பிற்காலத்தில் ஒருநாள், என்னிடம் சொல்லப்பட்ட இந்தச் சொற்களைத் தெளிவாகக் கேட்டேன்: “நீ ஒரு நூலை எழுதுவாய்; அதை ஏராளமானோர் வாசிப்பார்கள்.”

அதற்கடுத்த பல ஆண்டுகளாக மேற்கொண்ட இந்த முயற்சிகளின் விளைவே இந்நூலில் உள்ள எழுத்துகள். இது கடவுளிடமிருந்து வந்தது என்று நான் நம்புகிறேன். ஏனெனில் ஆழ்ந்த அமைதியை அனுபவிக்கும்போது, அது இவ்வுலகைச் சார்ந்ததல்ல, மேலிருந்து அருளப்பட்டது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.

இந்தக் கொடையை ஏற்றுக் கொண்டு வாழ்வதில் பல ஆண்டுகளாகப் போராடினேன்; இன்றும் போராடுகிறேன். இந்தக் கொடை எனக்குள் பதிக்கப்பட்டிருந்தது; அது என்னுள் இருப்பதை எப்போதும் அறிந்திருந்தேன். அது ஒருபோதும் என்னைவிட்டு நீங்கவில்லை. அது நிலையானதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில், என் குறிப்பேட்டிலிருந்த மூல எழுத்துகளைப் பார்த்துப் பல நண்பர்கள் இந்தச் சிந்தனைகளைத் தட்டச்சு செய்தனர். ஆனால் இவற்றை எப்படி வெளியிடுவது என்று எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. உரிய நேரம் வரும்போது உதவி செய்து வழிகாட்டுமாறு கடவுளிடம் வேண்டினேன். வெளியிடுவதற்கான வழி தென்படுவதற்கு முப்பத்தேழு ஆண்டுகள் கடந்தன. நான் பெற்ற அறிவுறுத்தல் இதனால் நிறைவேறுவதால், இதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இந்நூல் பலராலும் நல்ல முறையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், இது அளிக்கும் உந்துதல்கள் பல நற்பயன்களை விளைவிக்கும் என்றும் நம்புகிறேன். காலப்போக்கில் நான் பெற்ற மிகச் சிறந்த அறிவுரை, அது விளைவிக்கும் கனிகளைக் கொண்டு அதை மதிப்பிட வேண்டும் என்பதே.

இந்த எழுதும் திறன் கடவுள் தந்த உண்மையான கொடை என்பதையும், இதைக் கவனத்துடனும் மரியாதையுடனும் கையாள வேண்டும் என்பதையும் அறிவேன். பெருமைக்கு இடமளிக்கக் கூடாது; தாழ்ச்சியே மேலோங்க வேண்டும். இதயத்தின் ஆழத்திற்குச் செவிசாய்ப்பதற்குப் பதிலாக, நம்முடைய சொந்தக் கருத்துகளை அதில் புகுத்துவதே நாம் கவனமாக இருக்க வேண்டிய பலவீனம். என்றாவது ஒருநாள் தூய ஆவியாரின் வழிநடத்துதலோடு மீண்டும் இவ்வாறு எழுத இயல வேண்டும் என்று செபிக்கிறேன். இந்த முடிவை ஆவியாரின் வழிநடத்துதலுக்கு விட்டுவிடுகிறேன்.


அர்ப்பணம்

இந்த எழுத்துகளை வெளியிட எனக்கு ஊக்கமளித்த என் மனைவிக்கு. இந்நூலை வெளியிடுவதற்கான வழியை ஏற்படுத்தித் தந்த என் மகனுக்கும், என் குடும்பத்தினர் அனைவருக்கும். எனக்கு உந்துதலளிப்பதில் தன் பங்கை ஆற்றிய, விண்ணகத்தில் இருக்கும் என் மகளுக்கு. இந்தப் பக்கங்களை வாசித்து, திருத்தி, இந்த எழுத்துகளால் உந்துதல் பெற்ற சில நண்பர்களுக்கு.

ஆவியாரின் சொற்களுக்குச் செவிசாய்க்கும் திறனை எனக்குக் கொடையாக அளித்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு.

இந்த எழுத்துகள் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரை மாட்சிப்படுத்துவனவாக.


எழுதியவர்: ராபர்ட் ரேமண்ட்

“ராபர்ட் ரேமண்ட்” என்பது இந்நூலாசிரியர் தேர்ந்தெடுத்த புனைபெயர். ராபர்ட் என்பது ஆசிரியரின் உறுதிப்பூசுதல் பெயர்; இப்பணியின்மீது பென்யாஃபோர்ட் புனித ரேமண்டின் ஆசிகளை வேண்டுவதற்காக ரேமண்ட் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

புனித ரேமண்ட் இருபது வயதிலேயே மெய்யியல் கற்பித்துக்கொண்டிருந்தார். முப்பதுகளின் தொடக்கத்திலேயே குடிமைச் சட்டத்திலும் திருஅவைச் சட்டத்திலும் பட்டங்கள் பெற்றார். புனித ரேமண்டின் திறமைகள் மிகவும் சிறந்து விளங்கியதால், அரசர்கள், திருத்தந்தையர்கள், ஆயர்கள் அனைவரும் அவரது பணியை நாடினர். திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி அவரது நல்லெண்ணத்தைப் பெற்றார். பென்யாஃபோர்ட் புனித ரேமண்ட், திருஅவைச் சட்டங்களின் மிகப்பெரிய தொகுப்பை ஒழுங்குபடுத்தியதன் மூலம் திருஅவைக்கு நிலையான பங்களிப்பைச் செய்தார். இருபதாம் நூற்றாண்டு வரை திருஅவைச் சட்ட வல்லுநர்களுக்கு அது ஓர் அடிப்படை மேற்கோள் நூலாகப் பயன்பட்டது.

வாழ்வின் நிகழ்வுகளில் சிறப்பான பாதுகாப்பு வேண்டி, இந்நூலாசிரியர் பல ஆண்டுகளாகப் புனித ரேமண்டிடம் நாள்தோறும் நவநாள் செபம் செய்து வந்துள்ளார்.

புனித ரேமண்டே, இவ்வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் அனைத்துச் சவால்களையும் சந்திக்கத் தேவையான ஞானத்தை இன்று எங்களுக்குக் கற்பித்து உதவியருளும். எங்களுக்காகப் பரிந்துரையாடும். இவ்வுலகிலிருந்து எங்களுக்காகக் காத்திருக்கும் விண்ணரசை நோக்கி நாங்கள் செல்லும்போது எங்களோடு இருந்தருளும்.

பதிப்புரிமை © 2019 ராபர்ட் ரேமண்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வணிக நோக்கமின்றி மறுபதிப்பு செய்ய எந்தவொரு திருஅவைக்கும் நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.


பொருளடக்கம்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: