திருத்தூதர்களும், அவர்களைத் தொடர்ந்து திருஅவையும் உலகிற்கு அறிவிக்க வேண்டிய நற்செய்தியின் மையமாக விளங்குவது கிறிஸ்துவின் சிலுவை மற்றும் உயிர்ப்பின் பாஸ்கா மறைபொருளே. (கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி #571)
இயேசுவின் வாழ்வைப் பற்றிய நிகழ்வுகளில் மிகவும் பரவலாக அறியப்படுவது, அவர் சிலுவையில் அறையப்பட்டதே எனலாம். ஆனால், உண்மையிலேயே இதுதான் மிகவும் நன்றாக அறியப்பட்ட நிகழ்வா? நிச்சயமாக, அந்த நிகழ்வு நமக்கு மிகவும் பழக்கமானது; நம் வீடுகளிலும் ஆலயங்களிலும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திருவுருவம் தொங்குவதைக் காண்கிறோம். ஆனால், இந்தச் செயலின் பொருளையும் முக்கியத்துவத்தையும் நாம் உண்மையிலேயே “அறிந்திருக்கிறோமா”? இது எதைப் பற்றியது என்பதை உண்மையிலேயே அறிந்திருக்கிறோமா? இயேசு ஏன் துன்புற்று இறக்க வேண்டியிருந்தது என்பதைப் புரிந்துகொள்கிறோமா? அல்லது, இந்த மையமான உண்மையை மேலோட்டமாகக் கடந்துவிட்டு, வழக்கமாக உயிர்ப்பையும் விண்ணகத்தில் கடவுளின் பிரசன்னத்தையும் மட்டுமே நோக்குகிறோமா?
நிச்சயமாக, கிறிஸ்துவின் உயிர்ப்பை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்; விண்ணகத்திலிருந்து நமக்குத் தொடர்ந்து பணிபுரியும் அவரது நித்திய பிரசன்னத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அவர் துன்புற்று இறந்த அந்த உண்மையான வரலாற்று நிகழ்வின் முக்கியத்துவத்தை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. அதன் பொருளையும் வல்லமையையும் நம் வாழ்வில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் நாம் தவறவிடக்கூடாது. இயேசு ஒரு காரணத்திற்காகவே இறந்தார். அவர் அத்தகைய மரணத்தைத் தழுவியதற்கும் ஒரு காரணம் இருந்தது. ஆகவே, அந்த உண்மையையும் நிகழ்வையும் சிறிது நேரம் சிந்தித்து, நம் வாழ்வில் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பார்ப்போம்.
முதலில், இதன் பின்னணியை ஓரளவு புரிந்துகொள்ள, இயேசுவின் துன்பத்திற்கும் இறப்பிற்கும் முன்பு அவரது வாழ்வு எவ்வாறு அமைந்திருந்தது என்பதிலிருந்து தொடங்குவோம்.
இயேசுவுக்குச் சிலர் பகைவராகிறார்கள்
நிறைவான அன்பைக் கொண்ட ஒருவர் மற்றொருவருக்கு எவ்வாறு மனவருத்தத்தை ஏற்படுத்த முடியும்? தந்தையின் நித்திய மகனாகிய இயேசுவைச் சிலர் எதிர்த்து, அவர் இறக்க வேண்டும் என்று விரும்பும் அளவுக்கு அவரை வெறுத்தது எப்படி? இது வியப்பாகத் தோன்றுகிறது. “நான் நல்லவனாகவும் அன்புள்ளவனாகவும் இருந்தால் போதும், எல்லாரும் என்னை நேசிப்பார்கள்” என்று நாம் எளிதாக நினைத்துவிடுகிறோம். ஆனால், இயேசுவின் வாழ்வில் அப்படி நடக்கவில்லை.
அன்பு உண்மையானதாகவும் மெய்யானதாகவும் இருக்க வேண்டுமென்றால், அது உண்மையில் வேரூன்றியிருக்க வேண்டும். சில வேளைகளில் உண்மை மனத்தைப் புண்படுத்தலாம். ஒருவர் உண்மையை ஏற்காதபோது, அந்த உண்மையின் உள்ளடக்கம் அவரது செருக்கைப் புண்படுத்தலாம். தம்முடைய அதிகாரத்தைவிட மேலான அதிகாரத்துடன் முன்வைக்கப்படும் உண்மையை ஒருவர் எதிர்கொள்ளும்போது, அது எடுத்துரைக்கப்படும் விதமும் அவரது செருக்கைப் புண்படுத்தலாம். இயேசு எதிர்கொண்ட சவால்கள் இவையே.
காலங்காலமாக வழிவழியாக வழங்கப்பட்டு, மாபெரும் இறைவாக்கினர்களால் வெளிப்படுத்தப்பட்ட திருச்சட்டம் முழுவதற்கும், தந்தையோடும் தூய ஆவியாரோடும் இணைந்து இயேசுவே பொறுப்பானவர் என்பது தெளிவு. பழைய ஏற்பாட்டில் கடவுளிடமிருந்து வந்த சட்டங்கள் அனைத்தும் உண்மையிலேயே கடவுளிடமிருந்து வந்தவையே. ஆனால், அவற்றிற்கு விளக்கம் அளிக்கப்பட்ட விதத்தில் தவறுகளுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் இடமிருந்தது. பரிசேயரும் சதுசேயரும் திருச்சட்டத்தில் வல்லுநர்களாக இருந்தனர்; அதைப் பற்றிய தங்களது புரிதலுக்கும் விளக்கத்திற்கும் ஏற்ப மக்களுக்குப் போதித்தனர். அப்போது இயேசு வருகிறார். அவர் திருச்சட்டத்திற்கும், பழைய ஏற்பாட்டின் இறைவாக்குகள் அனைத்திற்கும், உறுதியானதும் அதிகாரப்பூர்வமானதுமான விளக்கத்தை அளிக்கிறார். இது அவர்களுக்குப் பெரும் அடியாக இருந்தது! அக்கால சமயப் போதகர்களில் பலரால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை! இயேசு தம்மை யார் என்று நினைத்துக்கொண்டார்? அவர் போதித்த விளக்கங்களை அவருக்குக் கொடுத்தது யார்? அவரது ஆழ்ந்த உறுதி எங்கிருந்து வந்தது?
மனித இயல்பு எப்படிப்பட்டதென்றால், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த திருச்சட்டப் போதகர்களுக்கு அவரது பிரசன்னமே போதுமானதாக இருந்தது; அவர்களது செருக்கு புண்பட்டது. இயேசுவைக் கண்டு மக்கள் அடைந்த பிரமிப்பை அவர்கள் தங்களைக் கண்டு அடையவில்லை. இயேசுவின் ஒவ்வொரு சொல்லையும் மக்கள் ஆவலுடன் கேட்டதுபோல, அவர்களது சொற்களைக் கேட்கவில்லை. இது அவர்களை உறுத்தியது; அவர்கள் சினமடைந்தனர். இயேசு போதித்த அனைத்தையும் நுணுகி ஆராய்ந்து குறைகாணத் தொடங்கினர்; அவர் சொன்னவற்றில் குற்றம் கண்டுபிடிக்க முயன்றனர். இது பெரும் மோதலை உருவாக்கியது. இயேசுவோ, நிச்சயமாகப் பின்வாங்கவில்லை. அவர் வேண்டுமென்றே குழப்பத்தைத் தூண்டவில்லை; மாறாக, மக்கள் கேட்க வேண்டிய உண்மையை மட்டுமே மிகுந்த அமைதியுடனும் உறுதியுடனும் தெளிவுடனும் போதித்தார். மக்களும் அதற்குப் பதிலளித்தனர். பரிசேயரும் பதிலளித்தனர். அவரைத் தடுத்து நிறுத்தும்படி அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்ததே அவர்களது பதிலாக இருந்தது. வருத்தத்திற்குரிய வகையில், இதற்குக் காரணம் புண்பட்ட அவர்களது செருக்கே.
சில வேளைகளில், பரிசேயரின் புரிதலுக்கு அப்பாற்பட்டவற்றை இயேசு போதிப்பார். எடுத்துக்காட்டாக, தாம் பெரிதும் மதித்த கோவிலைப் பற்றி அவர், “இந்தக் கோவிலை இடித்துவிடுங்கள்; மூன்று நாள்களில் இதை நான் எழுப்புவேன்” (யோவா 2:19) என்றார். அவரது விசாரணையின்போது, இது நினைவுகூரப்பட்டு, இறைநிந்தனையாக முன்வைக்கப்பட்டது. ஆனால், இயேசு உண்மையில் என்ன சொன்னார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், அவர் உண்மையையே இறைவாக்காக உரைத்தார் என்பதை உணர்வீர்கள். அவரே புதிய கோவில்; அவர்கள் அவரை அழிப்பார்கள், அவரோ மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார். ஆகவே, இயேசு கூறிய சில கூற்றுகள் முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன; ஆயினும், அவை முற்றிலும் உண்மையானவையாகவே இருந்தன.
வேறு சில வேளைகளில், இயேசு மறைநூல் அறிஞரையும் பரிசேயரையும் நேரடியாக எதிர்கொண்டார். “வெளிவேடக்காரரான மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு…” என்று கூறி, தொடர்ந்து அவர்களைக் “குருட்டு வழிகாட்டிகளே” என்றும் “குருட்டு அறிவிலிகளே” என்றும் அழைத்தார் (மத் 23:15–17). இங்கும் அவர் கூறியவை உண்மையே. ஆனால், அவை புண்படுத்தின. இயேசு அளவுக்கு மீறிக் கடுமையாகவோ மரியாதையின்றியோ பேசியதால் அவை புண்படுத்தவில்லை; மாறாக, யாரை நோக்கி இந்த வார்த்தைகள் கூறப்பட்டனவோ, அவர்களது செருக்கின் காரணமாகவே அவை புண்படுத்தின. உண்மையில், இயேசுவைப் பொறுத்தவரை இது அன்பின் ஒரு செயலாக இருந்தது.
பாவிகள்மீது இயேசு காட்டிய அன்பும் பரிவும் அவர் ஏற்படுத்திய மற்றொரு “இடறலாக” இருந்தன. அவர் வரிதண்டுவோருடன் உணவருந்தினார். பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள் அவரைப் பின்தொடர்ந்து, அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். செருக்கும் ஆணவமும் கொண்டவர்களை அவர் பொருட்படுத்தாமல், தாழ்நிலையில் இருந்தவர்களுடனும் பாவிகளுடனும் உறவாடினார். இது அவருடைய பகைவர்களின் சினத்தீக்கு எரிபொருளாக அமைந்தது.
இறுதியாக, இயேசு செய்தவற்றுள் அவர்களுடைய சினத்தை மிகவும் தூண்டியது, அவர் தம்மைக் கடவுளாக அடையாளப்படுத்திக் கொண்டதுதான். அவர் பாவங்களை மன்னித்தார். தம்முடைய செயல்களைத் தந்தையின் செயல்கள் என்று கூறினார். “இருக்கிறவர் நானே” என்று தம்மை அடையாளப்படுத்தினார். மேலும், “தந்தையும் நானும் ஒன்றாய் இருக்கிறோம்” என்று கூறினார். இதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இவை அனைத்தும் உண்மையே; அழகிய உண்மைகளே. ஆனால் இவற்றை நம்புவதும் புரிந்துகொள்வதும் அவர்களுக்கு இயலாததாக இருந்தது. இதற்கும் குறிப்பாக அவர்களுடைய செருக்கும் கடினப்பட்ட இதயங்களுமே காரணமாக இருந்தன. இவை அனைத்தும் இயேசுவுக்குப் பகைவர்களை உருவாக்கின; இறுதியில் அவர் தம் உயிரையே இழக்க நேர்ந்தது.
அவர் சிலுவையில் அறையப்பட்டதற்கு யார் பொறுப்பு?
இயேசுவை எதிர்த்தவர்கள் பலர் இருந்தாலும், அவருக்கு ஆதரவாக இருந்து அவரைப் பின்பற்றியவர்களும் பலர் இருந்தனர். அவருடைய காலத்தில் வாழ்ந்த சாதாரண மக்கள் பலரும், முக்கியமான யூதத் தலைவர்கள் சிலரும் இவர்களில் அடங்குவர். எனவே, இயேசுவுக்கு எதிரான சதித்திட்டம் வளர்ந்தபோது, அதற்குக் குறிப்பிட்ட ஒரு குழுவோ ஒருவரோ மட்டும் பொறுப்பல்ல. ஆம், தலைமைச் சங்கத்திற்குள் ஒரு சதி நடந்தது; யூதாசு அவரைக் காட்டிக்கொடுத்தார்; பிலாத்து இறுதி முடிவை எடுத்தார். ஆனால் இவர்களில் ஒருவரையோ குறிப்பிட்ட ஒரு குழுவையோ குற்றம் சாட்டுவது தவறாகும். ஏன்? ஏனெனில் இயேசு தம் உயிரை விருப்பத்துடன் கொடுத்தார். அவர் அனைவருக்காகவும் இறக்க வேண்டும் என்பது, நிகழ்வுகளை அனுமதிக்கும் தந்தையின் திருவுளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. எனவே, ஒரு வகையில், இதற்குப் பின்னால் தந்தையின் திருவுளமே இருந்தது என்று நாம் கூறலாம். ஆனால் இதனால் மேலான ஒரு நன்மை விளையும் என்பதால்தான் தந்தை இதை அனுமதிக்கத் திருவுளம் கொண்டார். தம் மகன் சிலுவையில் அறையப்படுவதை அனுமதிப்பதன் வழியாக, அந்தத் தியாக அன்பின் செயல் இறுதியில் வெற்றிபெறும் என்பதை அவர் அறிந்திருந்தார். இறுதியாக, தந்தை இச்செயலை அனுமதித்திருந்தாலும், பாவம் செய்த அனைவரும் கிறிஸ்துவின் இரத்தத்தைச் சிந்திய குற்றத்திற்கு ஆளானவர்கள் என்று கூறுவதே உண்மை. எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுவதற்காகவே இச்செயல் அனுமதிக்கப்பட்டது; ஆகவே, பாவம் செய்த ஒவ்வொருவரும் குற்றமுள்ளவர்களே. அது நாம்தான்! “அப்படிப்பட்ட ஒரு செயலில் நான் ஒருபோதும் பங்கேற்றிருக்க மாட்டேன்; அதை ஆதரித்திருக்கவும் மாட்டேன்!” என்று நாம் கூறலாம் என்பது உண்மைதான். ஒருவேளை அப்படியே இருந்திருக்கலாம். ஆனாலும் நம் பாவத்தைக் கழுவிப் போக்குவதற்கான அன்பின் செயலே இயேசுவின் இறப்புக்குக் காரணமானது; எனவே நாமும் குற்றமுள்ளவர்களே.
ஓர் ஒப்புமையை முன்வைக்கிறேன். ஒப்புமைகள் ஒருபோதும் முற்றிலும் பொருந்துவதில்லை; இருப்பினும், இந்தச் சிக்கலை ஓரளவாவது புரிந்துகொள்ள இது உதவும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு இருக்கும் ஒரு குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்தும் புதிய மருந்து ஒன்று சந்தைக்கு வந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பயனளிப்பதாக அறியப்பட்ட ஒரே மருந்து அதுதான். ஆனால் அது ஒழுக்கநெறிக்கு மாறான ஏதோ ஒரு செயல்முறையின் வழியாகத் தயாரிக்கப்பட்டது. “அந்தச் செயல்முறையை நான் எதிர்க்கிறேன்; இருந்தாலும் அந்த மருந்தை வாங்கப்போகிறேன்” என்று சொல்ல முடியுமா? உண்மையில் முடியாது. அந்த மருந்தை வாங்குவதே, அதை உருவாக்கும் ஒழுக்கநெறிக்கு மாறான செயல்முறையில் உங்களை ஒத்துழைப்பவராக்குகிறது. மீண்டும் சொல்கிறேன், இது முற்றிலும் பொருந்தும் ஓர் ஒப்புமை அல்ல; ஆனால் மையக் கருத்தை விளக்க இது உதவுகிறது. அந்த மையக் கருத்து இதுதான்: நோய்க்கான தீர்வை அதன் மூலத்திலிருந்து பிரிக்க முடியாது. இயேசுவின் இறப்பே நமக்கான மருந்து; நாமோ நோயுற்றிருக்கிறோம். அவர் சிலுவையில் அறையப்பட்ட தீச்செயலே நமக்குக் குணமளிக்கும் வழியாக அமைந்தது. ஆகவே, அவர் சிலுவையில் அறையப்பட்டதற்கு நாமே பொறுப்பு என்பதுதான் முடிவு. நாம் அவரை அன்புசெய்யலாம், ஆராதிக்கலாம், அவருக்குப் பணிசெய்யலாம்; இருப்பினும் நாமும் பொறுப்புள்ளவர்களே. கடவுள் இதை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அவருடைய துன்பம் மற்றும் இறப்பின் பயனைப் பெற்றுக்கொள்ள நம்மை மனமுவந்து அழைக்கிறார். ஆனால் அவருடைய இறப்பில் நமக்குள்ள பொறுப்பையும் அதற்கு நாம் ஒத்துழைத்திருப்பதையும் ஒப்புக்கொள்ளும்போதுதான் நாம் நேர்மையுடன் இருக்கிறோம்.
கீழ்ப்படியாமை விளைவித்த பேரழிவு
அப்படியானால், இயேசு இவ்வாறு துன்புற்றுச் சிலுவையில் இறந்ததால் நிறைவேறியது என்ன? அவர் கைது செய்யப்பட்டபோது, தமக்கு உதவ வருமாறு விண்ணகத்திலுள்ள எண்ணற்ற வானதூதர்களை எந்த நேரத்திலும் தம்மால் அழைத்திருக்க முடியும் என்று பேதுருவிடம் கூறியதை நினைவுகூருங்கள். அவர்களும் வந்து, மிக எளிதாக அவரைப் பாதுகாத்திருப்பார்கள்! ஆனால் அவர் அவர்களை அழைக்கவில்லை. தாம் கைது செய்யப்படவும், ஏளனத்திற்கும் கேலிக்கும் உள்ளாக்கப்படவும், சித்திரவதை செய்யப்படவும், அடிக்கப்படவும், தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகவும், சிலுவையில் அறையப்படவும் அவர் அனுமதித்தார். இவை அனைத்திற்கும் பிறகு, மனிதருக்குரிய இறப்பை அவர் ஏற்றார்.
அவரைப் பின்பற்றியவர்களில் பெரும்பாலோருக்கு இது நெஞ்சை நொறுக்குவதாக இருந்திருக்கும். அவர்கள் முற்றிலும் குழம்பிப்போயிருப்பார்கள்; ஒருவேளை நம்பிக்கையில் இடறலும் அடைந்திருப்பார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டுத் தவறாக வழிநடத்தப்பட்டதாகச் சிலர் உடனடியாக நம்பத் தொடங்கினர். இயேசு இறந்துவிட்டார்; அதுவும் கொடூரமான முறையில் இறந்தார். இப்படிப்பட்டவர் எவ்வாறு மெசியாவாக இருந்திருக்க முடியும்?
இந்த நிகழ்வுகளின் முடிவு நமக்குத் தெரியும் என்பதால், இதில் அடங்கிய மனித அனுபவங்களையும் மனப்போராட்டத்தையும் நம்மால் உணர்ந்துகொள்வது கடினமாக இருக்கலாம். துன்பத்தையும் இறப்பையும் எளிதாகக் கடந்து, நேராக உயிர்த்தெழுதலுக்குச் சென்றுவிடுகிறோம். ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதலையும் நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவருடைய துன்பத்தையும் இறப்பையும் முழுமையாகவும் ஆழமாகவும் சிந்திப்பது இன்றியமையாதது. எனவே, மீண்டும் கேட்போம்: ஏன்? அவர் ஏன் இவ்வாறு செய்தார்? இதனால் நிறைவேறியது என்ன?
இந்தக் கேள்விக்கான பதிலைப் புரிந்துகொள்வதில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, பாவத்தின் தொடக்கக் காரணமான கீழ்ப்படியாமையை நோக்குவதாகும். ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை. இந்தக் கீழ்ப்படியாமையால் அவர்களுடைய இயல்பும் நம்முடைய இயல்பும் வீழ்ச்சியுற்றன. கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது, அவரது நிறைவான திட்டத்திற்கு “இல்லை” என்று சொல்வதாகும். “நான் என் வழியிலேயே செய்வேன்!” என்று கடவுளிடம் சொல்வதாகும். ஆனால் இதில் உள்ள சிக்கல், கடவுள் நம்மீது கோபப்பட்டு நம்மைத் தண்டிக்கிறார் என்பதல்ல; மாறாக, அவர் நமது முடிவை மதித்து, நம் விருப்பப்படியே செயல்பட நம்மை அனுமதிக்கிறார் என்பதே. அவர் தமது திருவுளத்தையும் திட்டத்தையும் நம்மீது திணிப்பதில்லை. ஆகவே, நம் முதல் பெற்றோரின் கீழ்ப்படியாமை, அவர்களைத் தங்கள் சொந்தப் பயணத்தில் செல்ல வைக்கிறது; அதன் விளைவாக அவர்கள் வழிதவறிப் போகிறார்கள். தங்களுக்கான வழியையும் வாழ்வின் பொருளையும் தாங்களே கண்டறிய முயன்று வழிதவறுகிறார்கள். அவர்கள் வீழ்ச்சியுற்ற ஒரு நிலைக்குள் நுழைகிறார்கள்; அது அவர்களுடைய வாழ்வைச் சீர்குலைக்கிறது. அவர்களால் இனி வழியைக் காணவும் நன்மையைத் தேர்ந்தெடுக்கவும் முடிவதில்லை. கடவுளின் குரலைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அவருக்குப் பதிலளிக்கவும் அவர்களால் இனி முடிவதில்லை. அவர்கள் வழிதவறிப் போயிருக்கிறார்கள்.
ஆனால் கடவுள் அவர்களையோ நம்மையோ அப்படியே கைவிடுவதில்லை. வீழ்ச்சியுற்று வழிதவறிய இந்த நிலையை நாமும் அனுபவிக்கிறோம். இதுவே ஜென்மப் பாவம். வாழ்வில் தெளிவையும் திசையையும் இழந்து நாம் தவிக்கிறோம். நம்மால் நமது வழியைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. இதன் விளைவாக நாமும் பாவம் செய்து, கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போகிறோம். மீண்டும் கடவுள் நமது சுதந்திரத்தை மதித்து, நாம் விரும்பியபடி அவரைவிட்டு விலகிச் செல்ல நம்மை அனுமதிக்கிறார். நமக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்படாவிட்டால், இதன் விளைவாக நாம் நித்திய மரணத்தை அடைவோம். உயிர் அளிப்பவரிடம் திரும்பிச் செல்லும் வழியை நாமாக ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும் கடவுள் நம்மைக் கைவிடுவதில்லை. இந்த நிலையில்தான் இயேசு வருகிறார்!
சுதந்திரமான, நிறைவான கீழ்ப்படிதல் கீழ்ப்படியாமையின் சிக்கலை அவிழ்க்கிறது
ஆகவே, நமது தொடக்கக் கேள்விக்குத் திரும்புவோம்: “இயேசு இவ்வாறு துன்புற்றுச் சிலுவையில் இறந்ததால் நிறைவேறியது என்ன?” இங்கே ஓர் ஒப்புமை உதவியாக இருக்கலாம். நீ ஒரு சிறுபிள்ளை என்றும், அருகிலுள்ள காட்டிற்குச் சென்று சுற்றிப் பார்க்க விரும்புகிறாய் என்றும் கற்பனை செய்துகொள். அங்கே போகக்கூடாது என்று உன் பெற்றோர் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும், அம்மாவிடமும் அப்பாவிடமும் சொல்ல வேண்டாம் என்று உன் சகோதரியிடம் கூறிவிட்டு, நீ யாருக்கும் தெரியாமல் அங்கே சென்றுவிடுகிறாய். காட்டிற்குள் நுழைந்ததும் வியப்படைகிறாய். ஓக் மரங்களையும் பைன் மரங்களையும் கடந்து உலவுகிறாய்; ஓர் ஓடையைக் கடக்கிறாய்; சில மரங்களில் ஏறுகிறாய்; அங்கே சில மணி நேரம் மகிழ்ச்சியாகக் கழிக்கிறாய். திடீரென்று இருட்டத் தொடங்குவதைக் கவனித்து, வீட்டிற்குத் திரும்ப முடிவு செய்கிறாய். ஆனால் வீடு எந்தத் திசையில் இருக்கிறது என்பதே உனக்குத் தெரியவில்லை என்பதைச் சட்டென்று உணர்கிறாய்! பதற்றமடையும் நீ, சில முட்புதர்களுக்கு நடுவே சிக்கி வழிதவறி, இன்னும் அதிகமாகப் பயப்படுகிறாய். ஒரு மணி நேரம் சுற்றிச் சுற்றி அலைந்த பிறகு, எங்கும் கும்மிருட்டாகிவிடுகிறது; இரவின் ஓசைகள் கேட்கத் தொடங்குகின்றன; நீ பயந்து அழுதபடி அங்கே உட்கார்ந்திருக்கிறாய்.
இப்போது உனக்கு மிகப் பெரிய நம்பிக்கை யார்? உன் பெற்றோர்தான். அவர்கள் உன்னை மீட்பார்கள் என்று நம்புகிறாய். நீ எங்கே சென்றாய் என்பதை உன் சகோதரி அவர்களிடம் சொல்லியிருப்பாள் என்றும், அவர்கள் உன்னைத் தேடி வந்துகொண்டிருப்பார்கள் என்றும் நம்புகிறாய். வழிதவறிய நிலையில் நம்பிக்கையுடன் அமர்ந்திருக்கும்போது, தொலைவில் ஒரு கைவிளக்கின் ஒளியைக் காண்கிறாய்; உன் பெயரைச் சொல்லி அழைக்கும் குரலைக் கேட்கிறாய். அது உன் அப்பாதான். அவரது குரலைக் கேட்டு, அவர் வருவதைக் கண்டதும் உனக்கு முழு நிம்மதி ஏற்படுகிறது; உன்னைக் கண்டுபிடித்துவிட்டாரே என்று நன்றியுணர்வு கொள்கிறாய். நீங்கள் பேசுகிறீர்கள்; அவர் உடனே உன்னை மன்னிக்கிறார். ஆனால் அந்த இரவை நீ காட்டில்தான் கழிக்க வேண்டும் என்று விளக்குகிறார். உடனேயே, தானும் உன்னுடன் தங்கப்போவதாகச் சொல்கிறார். இப்போது திரும்பிச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருட்டாக இருப்பதால், காலை வெளிச்சம் வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். நல்லவேளையாக, உன் அப்பா இதை எதிர்பார்த்து, உறங்குவதற்கான இரண்டு பைகளையும் கொஞ்சம் உணவையும் உடன் கொண்டுவந்திருக்கிறார். இறுதியில், உன் அப்பாவால் அந்த இரவு உன் வாழ்வில் மறக்க முடியாத இரவுகளில் ஒன்றாக அமைந்துவிடுகிறது.
இப்போதும், எப்போதும்போலவே, இயேசுவின் துன்பமும் மரணமும் குறித்த கேள்விக்கான பதிலின் ஒரு பகுதியை மட்டுமே இந்த ஒப்புமை விளக்குகிறது. உண்மை என்னவென்றால், நாம் முற்றிலும் வழிதவறிப் போயிருந்தோம்; வீட்டிற்குத் திரும்பும் வழியைக் கண்டுபிடிக்க நம்மால் முடியவில்லை. கடவுளோடு இருப்பதே நமது இல்லம்; ஆனால் நமது கீழ்ப்படியாமையின் காரணமாக, நாமாகவே அவரைக் கண்டடைய முடியவில்லை. ஆகவே, கடவுள் நம்மிடம் வரவேண்டியிருந்தது. நாம் எங்கே இருந்தோம்? வேதனையிலும், துன்பத்திலும், அவலத்திலும், இறுதியாக மரணத்திலும் வழிதவறிக் கிடந்தோம். ஆம், அதுதான் உண்மை. இந்த உண்மையை நாம் எளிதில் கவனிக்கத் தவறிவிடக்கூடும்; எனவே மீண்டும் சொல்கிறேன். நாம் வேதனையிலும், துன்பத்திலும், அவலத்திலும், இறுதியாக மரணத்திலும் வழிதவறிக் கிடந்தோம். இயேசு கிறிஸ்துவாகக் கடவுள் நம்மைச் சந்திக்க வந்து, நமது துன்பத்திலும் மரணத்திலும் நம்முடன் “இரவைக் கழித்திருக்காவிட்டால்”, காலையில் நம்மால் ஒருபோதும் வீடு திரும்பியிருக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த உலகம், காட்டில் கழியும் அந்த இருள்சூழ்ந்த இரவைப் போன்றது. தனியாக இருக்கும்போது நாம் அச்சமுற்று, திகிலடைந்து, வழிதவறி நிற்கிறோம். ஆனால் இயேசு நம்மைக் கண்டுபிடித்து, நாம் அவரைக் கூப்பிட்டதும், நாம் செல்லும் அதே பயணத்தில்—பாவத்தின் விளைவாக ஏற்பட்ட துன்பம் மற்றும் மரணத்தின் பயணத்தில்—நம்முடன் சேர்ந்துகொள்ள அவர் முடிவு செய்திருப்பதை உணர்கிறோம். பாவத்தின் இந்த விளைவுகளுக்குள் நம்மோடும் நமக்காகவும் நுழைவதன் வழியாக, “காலையில்” நமது கையைப் பிடித்து நம்மை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரால் முடிகிறது. அந்தக் காலை என்பது, காலத்தின் முடிவில் கிறிஸ்துவோடு நாம் இறுதியாக உயிர்த்தெழுவதைக் குறிக்கிறது.
இதைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல், கீழ்ப்படியாமையால்தான் நாம் வழிதவறிப் போனோம் என்பதை உணர்வதாகும். ஆனால் இறைமகன் கீழ்ப்படிதலுள்ள அன்பின் ஒரு பணிக்காக அனுப்பப்பட்டார்; அவர் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டார். நம்மைக் கண்டுபிடிப்பதற்காக அவர் துன்பமும் மரணமும் நிறைந்த “காட்டிற்குள்” நுழையவேண்டியிருந்தது. நம்முடன் மரண உறக்கத்திற்குள் அவர் செல்லவேண்டியிருந்தது. அன்பின் காரணமாகவும், தந்தையின் திருவுளத்திற்கு அளித்த முழுமையான “ஆம்” என்ற பதிலாகவும் இது நிறைவேற்றப்பட்டது. அவரது மரண உறக்கத்தில் நாம் அவரைப் பற்றிக்கொண்டால் போதும்; நாமும் அவரோடு உயிர்த்தெழுவோம். ஆனால் இங்கே நாம் கவனம் செலுத்தவேண்டியது, நம்மிடம் வருவதற்குக் கடவுள் எடுத்த முடிவின் மீதுதான். வழிதவறி அச்சமுற்றிருந்த நம்மை அவர் தனியாகவே விட்டிருக்கலாம் என்பது உண்மைதான். அவர் நம்மைக் கைவிட்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. நமது கீழ்ப்படியாமையின் விளைவுகளைத் தாமே ஏற்று அனுபவிக்க அவர் முடிவு செய்தார். நம்மை மீண்டும் தம்மோடு ஒன்றிணைப்பதற்கான அவரது நிறைவான வழி இதுவே. இது மிகப்பெரும் அன்பும் தாராள உள்ளமும் வெளிப்படும் ஒரு செயல். இதை எல்லா வகையிலும் அனுபவிக்க அவர் தயங்கவில்லை.
மேலும் தத்துவ நோக்கிலான ஒரு விளக்கம்
தத்துவ நோக்கில் சிந்திப்பவர்களுக்காக, இதை இவ்வாறு பார்ப்போம். மனித இயல்பு வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளது. இது கடவுளின் தொடக்க நோக்கத்திற்கு முரணான ஒரு வாழ்நிலை. அதிகாரம் 2-இல் விளக்கப்பட்டுள்ளபடி, கடவுளோடு இந்த இயற்கையான இன்பவனத்தில் வாழ்வதற்காகவே நாம் படைக்கப்பட்டோம். இதுவே ஆதிக் குற்றமின்மை நிலை. நமது முதல் பெற்றோரின் கீழ்ப்படியாமையின் விளைவாக, மனிதகுலம் முழுவதும் இந்தக் குற்றமின்மை நிலையை இழந்து, இப்போது அதன் விளைவுகளை அனுபவிக்கிறது. அந்த விளைவுகள் என்ன? துன்பமும், இறுதியாக மரணமும். இது கடவுளின் தவறல்ல. நமது விருப்பப்படி செயல்பட்டதன் இயல்பான விளைவே இது. ஆயினும், மீண்டும் சொல்கிறேன், கடவுள் நம்மைக் கைவிடவில்லை. நமது மனித இயல்பைத் தாமே ஏற்று, நமது பாவத்தின் எல்லா விளைவுகளுக்குள்ளும் நுழையக் கடவுள் முடிவு செய்தார். நம்மில் ஒருவராகி, நாம் அனுபவிக்கும் அனைத்துத் துன்பங்களுக்குள்ளும் நுழைவதன் வழியாக, இறைத்தன்மையை வீழ்ச்சியடைந்த மனித இயல்புடன் ஒன்றிணைக்க அவர் முடிவு செய்தார்.
ஆகவே, இதைப் புரிந்துகொள்வதற்கான முதல் திறவுகோல், இறைவன் மனிதரானதன் வியத்தகு விளைவைப் புரிந்துகொள்வதாகும். கடவுள் நமது மனித இயல்பை ஏற்று, அந்த மனித இயல்பைத் தமது இறை இயல்போடு ஒன்றிணைத்ததால், நாம் மீண்டும் அவரோடு ஒன்றிணையத் தொடங்குகிறோம் என்பதை உணரவேண்டும். ஆனால், வீழ்ச்சியடைந்த நமது நிலையில் நாம் அனுபவிக்கும் அனைத்தையும் கடவுளும் தமது மனித இயல்பில் அனுபவித்தாலன்றி, இந்த ஒன்றிணைவு முழுமையடையாது. அதில் மரணமும் அடங்கும். இப்போது அவர் பாவத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் நம்மைப் போல் இருக்கிறார். ஆனால், பின்னர் நாம் உயிர்த்தெழுதலைப் பற்றிப் பார்க்கும்போதுதான் நற்செய்தி வருகிறது. இது நற்செய்தியாக இருப்பதற்குக் காரணம், நமது துன்பத்திலும் மரணத்திலும் அவர் நம்மைப் பற்றிக்கொள்ள நாம் அனுமதித்தால், நாமும் அவரது உயிர்த்தெழுதலில் அவரைப் பற்றிக்கொள்ள முடியும் என்பதே. இதைப் பற்றிப் பின்னர் மேலும் பார்ப்போம். ஆனால் இப்போது நாம் கவனிக்கவேண்டியது இதுதான்: கடவுள் துன்புற்று இறந்த செயல், நம்மை மீண்டும் கடவுளோடு ஒன்றிணைப்பதற்காகச் செய்யப்பட்ட தூய அன்பின் செயல். இதை அவர் வேறு விதமாகச் செய்திருக்க முடியுமா? ஒருவேளை முடிந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் செய்தது இதுவே; அவர் செய்ததை நாம் புரிந்துகொள்ளும்போது, அளவற்ற நன்றியுணர்வைத் தவிர வேறெதுவும் நம்மை நிரப்பக்கூடாது.
புதியதும் நிறைவானதுமான பலி
காலத்தின் தொடக்கத்திலிருந்தே, ஆதாம் ஏவாளின் பிள்ளைகளிடமிருந்தே, கிறிஸ்துவின் ஒரே பலியை முன்னறிவிக்கும் “முன்னடையாளங்கள்” என்று நாம் அழைப்பவற்றைக் காண்கிறோம். இவை பாவப் பரிகாரக் காணிக்கைகள். உணவு போன்ற, ஒருவர் தமது உழைப்பால் பெற்றவற்றைக் காணிக்கையாகச் செலுத்துவதும் இதில் அடங்கும். ஆனால், குறிப்பாக விலங்குகளைக் கடவுளுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பதே இங்கு குறிப்பிடப்படுகிறது. பாவத்திற்குப் பரிகாரம் செய்யக் குருக்கள் கடவுளுக்கு ஆட்டுக்குட்டிகளைப் பலியிட்ட திருக்கோவிலில் இந்த வழக்கம் சிறப்பாகக் காணப்படுகிறது. உண்மையில், இந்த விலங்குப் பலிகளில் எதுவுமே பாவத்திற்குப் பரிகாரம் செய்ய முடியாது. ஆயினும், அவற்றுக்கு ஒரு நோக்கம் இருந்தது. எல்லாப் பாவங்களுக்காகவும் நிறைவான பலியாகவிருந்த ஒரே “ஆட்டுக்குட்டியை” ஏற்றுக்கொள்ள நம்மைத் தயாரிப்பதே அவற்றின் நோக்கம். இந்த விலங்குப் பலிகள் அனைத்தும் முன்னறிவித்தவர் இயேசுவே. பாவத்தை உண்மையாகவே போக்கும் ஒரே பலியும் அவரே.
“கடவுளின் ஆட்டுக்குட்டி” என்ற சொற்றொடர் நமக்கு நன்கு தெரிந்ததே. இந்த “ஆட்டுக்குட்டியாக”, எல்லாப் பாவங்களின் மன்னிப்புக்காகவும் இயேசு தமது இரத்தத்தைச் சிந்துகிறார். மேலும், தமது உயிரைத் தாமே விரும்பிப் பலியாக ஒப்புக்கொடுப்பவர் அவரே என்பதால், அந்தப் பலியை ஒப்புக்கொடுக்கும் ஒரே குருவும் அவரே. சிலுவை அவரது பலிபீடமாகிறது. விவிலியப் போதனையின் கண்ணோட்டத்தில் இதைப் பற்றி இன்னும் பலவற்றைக் கூறலாம் என்றாலும், நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் இயேசு “உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டி” என்பதே.
இயேசு அடக்கம் செய்யப்படுகிறார்
இயேசு உண்மையாகவே இறந்தார். அதாவது, அவரது உடலும் ஆன்மாவும் பிரிந்தன. ஆனால், நமது இறப்பைப் போலன்றி, அவரது இறப்பில் வியப்புக்குரிய ஒன்று உள்ளது. அது அவரது அடக்கத்துடன் தொடர்புடையது.
இயேசுவின் உடலில் பல்வேறு எண்ணெய்களும் நறுமணத் தைலங்களும் பூசப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் இறந்தபோது பாஸ்கா விழா தொடங்கிக்கொண்டிருந்ததால், இதைச் செய்வதற்கு நேரம் கடந்துவிட்டது. ஆகவே, மாற்கு நற்செய்தி நமக்குக் கூறுகிறது: “ஓய்வுநாள் முடிந்ததும், மகதலா மரியாவும் யாக்கோபின் தாய் மரியாவும் சலோமியும் சென்று அவருக்கு நறுமணப் பொருள்களைப் பூசுவதற்காக அவற்றை வாங்கினர்” (Mk 16:1). ஆனால் அவர் அங்கு இல்லை! அவர் உயிர்த்தெழுந்துவிட்டார்!
இயேசுவின் உடலில் நறுமணத் தைலம் ஒருபோதும் பூசப்படவில்லை என்பது ஏன் முக்கியமானது? ஏனெனில், அவரது உடலுக்கு அது ஒருபோதும் தேவைப்படவில்லை. கடவுளின் பராமரிப்பின்படி, அவரது உடலில் நறுமணத் தைலம் பூசும் செயல் நடைபெறவே இல்லை; ஏனெனில், இயேசுவின் உடல் அழியத் தொடங்கவே இல்லை. இயேசுவின் உடலுக்குரிய தனித்துவமான அம்சங்களில் இதுவும் ஒன்று; அவரது தாய்க்கு மட்டுமே இதே சிறப்பு இருந்தது. நமது உடல் அழிவுறுவது, நாம் இருக்கும் வீழ்ச்சியுற்ற பாவநிலையின் விளைவாகும். இருப்பினும், உடல் அழிவுறுவது நமது உடல்களைக் குறித்த கடவுளின் தொடக்ககாலத் திட்டத்திலும் வடிவமைப்பிலும் இடம்பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இயேசு துன்புற்று இறந்தாலும், அவரது உடல் பாவமற்றதாகவே இருந்தது; எனவே பாவத்தின் விளைவுகள் எதையும் அது ஒருபோதும் அனுபவிக்கவில்லை. ஆகவே, அவரது உடலும் ஆன்மாவும் பிரிந்தபோது, அவரது உடல் அழிவுறவே இல்லை.
நம் புனித அன்னைக்கும் இதுவே பொருந்தும். அத்தியாயம் 3 இல் விளக்கப்பட்டுள்ளபடி, அவர் அமலோற்பவ அன்னை; அதாவது, எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர் பாதுகாக்கப்பட்டார்; பாவம் செய்ய அவர் ஒருபோதும் தேர்ந்துகொள்ளவில்லை. எனவே, அவரும் உடல் அழிவிலிருந்து விடுபட்டிருந்தார். இதனால்தான், மண்ணுலகில் அவரது வாழ்வு நிறைவடைந்ததும், அவர் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று நாம் எப்போதும் அறிக்கையிட்டு வந்துள்ளோம்.
அவர் எங்கே இறங்கிச் சென்றார்?
திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கையில், கிறிஸ்து “நரகத்தில் இறங்கினார்” என்று சொல்கிறோம். இதன் பொருள் என்ன? இயேசு எப்படி நரகத்திற்குச் செல்ல முடியும்? நரகம் என்பது கடவுளிடமிருந்து என்றென்றும் பிரிந்திருக்கும் இடம்; ஆகவே, இயேசு அங்கே சென்றார் என்று சொல்வது விநோதமாகத் தோன்றுகிறது, அல்லவா?
இதுவே புனித சனியின் மாபெரும் மறைபொருள். அன்றைய நாளில் கல்லறையின் அமைதியை நாம் தியானிக்கிறோம். அதோடு, மற்றொரு மாபெரும் மறைபொருளையும் தியானிக்கிறோம். இயேசு நிறைவேற்றுவதற்காக அனுப்பப்பட்ட பணியின் இறுதிக்கட்டம், அவரது உடல் கல்லறையில் கிடந்தபோதுதான் நிறைவேறியது என்ற உண்மையை நாம் தியானிக்கிறோம்.
அக்காலத்தில் “நரகம்” என்பது, ஏற்கெனவே இறந்தவர்கள் அனைவரும் இருந்த “இடம்” என்று சொல்லலாம். ஆபிரகாம், மோசே, மாபெரும் இறைவாக்கினர்கள், பெரும் பாவிகள் ஆகியோர் இருந்த இடம் அது. அது இறந்தோரின் உறைவிடம். கடவுள் அங்கு இல்லை என்ற பொருளில் மட்டுமே அது “நரகம்” என்று அழைக்கப்பட்டது. இயேசு இன்னும் மனிதகுலத்தைக் கடவுளுடன் ஒப்புரவாக்காததால், கடவுள் அங்கு இல்லை. ஆகவே, இறந்தோரின் இந்த உறைவிடத்திற்கு அவர் இறங்கிச் சென்றது, அவர்களுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்லும் அவரது வழியாக இருந்தது. அதுவே அவரது இறுதிப் பணி. இந்த இடத்தில் இருந்த நீதிமான்கள் இயேசுவைச் சந்தித்தபோது, அவரது உயிர்த்தெழுதலில் அவரைப் பின்தொடர்ந்து வாழ்வோரின் நாட்டிற்குச் செல்ல முடிந்தது.
இந்தச் செயல் நிறைவேறியதும், “நரகம்” புதியதொரு வடிவம் பெற்றது. இப்போது நரகம் என்பது, கடவுளைத் தங்கள் சுதந்திர விருப்பத்தால் புறக்கணித்து, அவரிடமிருந்து பிரிந்து என்றென்றும் வாழும் தண்டனைத் தீர்ப்புக்குள்ளானவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் இடமாகும். ஆகவே, அவர் “இறந்தோரிடம் இறங்கிச் சென்றார்” என்று சொல்வது நமக்குக் கூடுதல் தெளிவைத் தரலாம். ஆயினும், கடவுளிடமிருந்து பிரிந்திருக்கும் இந்தத் தற்காலிக இடத்திற்கும் நிரந்தர இடத்திற்கும் இடையிலான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ளும் வரை, “நரகம்” என்ற சொல்லைப் பயன்படுத்துவது நிச்சயமாகப் பொருத்தமானதே.
அடுத்து: அத்தியாயம் 5 – சாவுக்கு வெற்றி இல்லை
மின்னூல் & மென் அட்டை நூல் வடிவங்களிலும் கிடைக்கிறது
Amazon.com – Google Play – iTunes – Barnes and Noble

