தமிழ்

பதினான்காம் நாள் – “அவர் உங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்”


காணொளி வடிவம்

திராட்சை இரசம் தீர்ந்துபோனபோது, இயேசுவின் தாய் அவரிடம், “அவர்களிடம் திராட்சை இரசம் இல்லை” என்றார். [அப்போது] இயேசு அவரிடம், “அம்மா, உமது அக்கறைக்கும் எனக்கும் என்ன தொடர்பு? எனது நேரம் இன்னும் வரவில்லை” என்றார். அவருடைய தாய் பணியாளர்களிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்” என்றார். யோவான் 2:3-5

இயேசு செய்த முதல் புதுமையின்போது நம் புனித அன்னை கூறிய வார்த்தைகள் இவை: “அவர் உங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்.” ஆழமும் வல்லமையும் மிக்க இவ்வார்த்தைகள் நம் ஆன்மிக வாழ்வின் அடித்தளமாக எளிதில் அமையக்கூடும்.

சிலுவையின் அடியில் நம் புனித அன்னை தம் மகனிடம் ஏதேனும் பேசியிருந்தால், என்ன சொல்லியிருப்பார்? நம்பிக்கையின்மை அல்லது குழப்பம், வேதனை அல்லது கோபம் நிறைந்த வார்த்தைகளைப் பேசியிருப்பாரா? இல்லை, கானா திருமணத்தில் கூறிய அதே வார்த்தைகளைத்தான் சொல்லியிருப்பார். ஆனால் இம்முறை, பணியாளர்களிடம் சொல்வதற்குப் பதிலாகத் தம் மகனிடம் இவ்வார்த்தைகளைக் கூறியிருப்பார். “என் முழு உள்ளத்தோடு நான் அன்புசெய்யும் என் அன்பு மகனே, விண்ணகத் தந்தை உமக்குச் சொல்வதையெல்லாம் செய்யும்.”

நிச்சயமாக, இயேசுவுக்கு இந்த அறிவுரை தேவைப்படவில்லை. இருந்தாலும், அதைத் தம் தாயிடமிருந்து பெற அவர் விரும்பினார். நிறைவான அன்பை வெளிப்படுத்தும் இந்த வார்த்தைகளைத் தம் தாய் தம்மிடம் சொல்வதைக் கேட்க அவர் விரும்பினார். கானாவில் முன்பு சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைச் சிந்தித்தவாறு, சிலுவையில் அவர் மரண வேதனையுற்றபோது, நம் புனித அன்னையும் அவரது இறைமகனும் ஒருவரையொருவர் நோக்கியபடி ஆழ்ந்த ஒன்றிப்பைப் பகிர்ந்துகொண்டிருந்திருப்பார்கள். இதுவரை அறியப்பட்டவற்றிலேயே மிகப் பெரிய நன்மையை அவரது மரணம் நிறைவேற்றுகிறது என்பதைத் தாயும் மகனும் அறிந்திருந்தனர். விண்ணகத் தந்தையின் திருவுளம் நிறைவானது என்பதை இருவரும் அறிந்திருந்திருப்பார்கள். இந்தப் புனிதத் திருவுளத்தை இருவரும் ஏக்கத்துடன் நாடி, எவ்விதத் தயக்கமுமின்றி ஏற்றுக்கொண்டிருந்திருப்பார்கள். மௌனமாக ஒருவரையொருவர் நோக்கியபோது, இந்த வார்த்தைகள் இருவரது இதயங்களிலும் ஒலித்துக்கொண்டிருந்திருக்கும்:

“என் அன்பு அன்னையே, நம் தந்தை உமக்குச் சொல்வதையெல்லாம் செய்யும்.”

“என் அன்பு மகனே, உமது விண்ணகத் தந்தை உம்மிடம் விரும்புவதையெல்லாம் செய்யும்.”

இன்று இவ்வார்த்தைகளைச் சிந்தித்து, அன்னையும் மகனும் இவற்றை உங்களிடமே கூறுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். வாழ்வில் நீங்கள் எதை எதிர்கொண்டாலும், அன்பும் கீழ்ப்படிதலும் நிறைந்த இந்த மாட்சிமிக்க கட்டளையின்படி வாழ நம் புனித அன்னையும் அவரது இறைமகனும் உங்களை அழைக்கிறார்கள். எல்லாப் போராட்டங்களிலும், நல்ல காலங்களிலும் கடினமான காலங்களிலும், துன்பத்திலும் மகிழ்ச்சியிலும் நீங்கள் பிரமாணிக்கமாக நிலைத்திருக்குமாறு உங்களை வலியுறுத்துகிறார்கள். வாழ்வில் நீங்கள் எதை அனுபவித்தாலும், இவ்வார்த்தைகள் உங்கள் மனத்திலும் இதயத்திலும் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும். “அவர் உங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்.” இந்தப் புனித வார்த்தைகளைக் கேட்டு ஏற்றுக்கொள்ளத் தயங்காதீர்கள்.

மிக அன்பான அன்னையே, நிறைவான ஞானம் நிறைந்த வார்த்தைகளை நீர் வழங்குகிறீர். விண்ணகத் தந்தையின் நிறைவான திருவுளத்தை ஏற்றுக்கொள்ள உமது அன்புப் பிள்ளைகள் அனைவரையும் அழைக்கிறீர். இவ்வார்த்தைகள் எனக்கு மட்டுமே சொல்லப்பட்டவை அல்ல. முதலில் உமது இதயத்தின் ஆழத்தில் இவை உமக்குச் சொல்லப்பட்டன. நீரும், உம்மைச் சந்தித்த அனைவருக்கும் இந்த அன்புக் கட்டளையை எடுத்துரைத்தீர். உமது சொந்த இறைமகனிடமும் அமைதியாக இவ்வார்த்தைகளைக் கூறினீர்.

என் அன்பு அன்னையே, நீர் என்னிடம் கூறும் இவ்வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க எனக்கு உதவும். என் வாழ்வில் கடவுளின் நிறைவான திருவுளத்தை ஏற்றுக்கொள்வதற்கான இந்த அழைப்புக்குப் பதிலளிக்க, உமது வேண்டுதல்களின் வல்லமையால் எனக்கு உதவும்.

என் விலைமதிப்பற்ற இயேசுவே, நீர் எனக்குக் கட்டளையிடுவதையெல்லாம் செய்ய நான் தேர்ந்துகொள்கிறேன். எந்தத் தயக்கமுமின்றி உமது திருவுளத்தைத் தேர்ந்துகொள்கிறேன்; உமது அடிச்சுவடுகளைப் பின்பற்ற நீர் என்னை அழைக்கிறீர் என்பதை நான் அறிவேன். சிலுவையின் துன்பங்கள் ஒருபோதும் என்னைத் தடுத்து நிறுத்தாதிருக்கட்டும்; மாறாக, உமது நிறைவான திருவுளத்தின் வல்லமையால் நான் உருமாற்றம் பெறுவேனாக.

அன்னை மரியே, எனக்காக வேண்டிக்கொள்ளும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

நாள் பதினைந்து – இறைவார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடித்தல்

பொருளடக்கம்

மின்னூல் & மென் அட்டைப் புத்தகமாகக் கிடைக்கிறது!

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: