
மரியா சுமார் மூன்று மாதங்கள் [எலிசபெத்துடன்] தங்கியிருந்துவிட்டுத் தம் வீட்டிற்குத் திரும்பினார். லூக்கா 1:56
நம் தூய அன்னையிடம் நிறைவாக விளங்கிய ஓர் அழகிய பண்பு பற்றுறுதி. தம் மகனிடம் அவர் கொண்டிருந்த இந்தப் பற்றுறுதி, முதலில் எலிசபெத்திடம் அவர் காட்டிய பற்றுறுதியில் வெளிப்பட்டது.
அன்னை மரியா தாமும் கருவுற்றிருந்தபோதிலும், கருவுற்றிருந்த எலிசபெத்தைப் பராமரிக்கச் சென்றார். எலிசபெத்தின் கர்ப்பகாலத்தின் இறுதி மாதங்கள் நலமாகக் கழிவதற்குத் தம்மால் இயன்றதைச் செய்து, தமது நேரத்தில் மூன்று மாதங்களை அவருக்காக அர்ப்பணித்தார். அவர் சொல்வதைக் கேட்கவும், அவரைப் புரிந்துகொள்ளவும், அறிவுரை வழங்கவும், பணிவிடை செய்யவும், அவர்மீது தமக்குள்ள அக்கறையை எளிமையாக வெளிப்படுத்தவும் அன்னை அங்கே இருந்திருப்பார். அந்த மூன்று மாதங்களிலும் இறைவனின் தாய் தம்முடன் இருந்ததால் எலிசபெத்து மிகுந்த ஆசிபெற்றிருப்பார்.
பற்றுறுதி என்னும் நற்பண்பு ஒரு தாயிடம் சிறப்பான வலிமையுடன் விளங்குகிறது. இயேசு சிலுவையில் உயிர்விட்டுக்கொண்டிருந்தபோது, அவருடைய அன்புத் தாய் கல்வாரியைத் தவிர வேறு எங்கும் இருந்திருக்க மாட்டார். அவர் எலிசபெத்துடன் மூன்று மாதங்களையும், சிலுவையடியில் நீண்ட மூன்று மணிநேரங்களையும் செலவிட்டார். இது அவரது அர்ப்பணிப்பின் பேராழத்தை வெளிப்படுத்தியது. அவர் தம் அன்பில் தளராமல், இறுதிவரை பற்றுறுதியுடன் இருந்தார்.
பிறர் துன்பத்தை எதிர்கொள்ளும்போது, நம் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்க்கப்படும் நற்பண்பு பற்றுறுதி. தேவையில் இருப்போரையும், துன்புறுவோரையும், துயரப்படுவோரையும், துன்புறுத்தப்படுவோரையும் காணும்போது, நாம் ஒரு முடிவெடுக்க வேண்டும். பலவீனத்தாலும் தன்னலத்தாலும் நாம் அவர்களைவிட்டு விலகிச் செல்லலாம்; அல்லது அவர்களை அணுகி, அவர்களோடு சேர்ந்து அவர்களுடைய சிலுவைகளைச் சுமந்து, ஆதரவையும் வலிமையையும் அளிக்கலாம்.
நம் அருள்நிறைந்த அன்னையின் பற்றுறுதியைக் குறித்து இன்று சிந்தியுங்கள். தம் வாழ்நாள் முழுவதும் அவர் பற்றுறுதியுள்ள தோழியாகவும், உறவினராகவும், மனைவியாகவும், தாயாகவும் திகழ்ந்தார். சுமை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும், தம் கடமையை நிறைவேற்றுவதில் அவர் ஒருபோதும் தளரவில்லை. பிறரிடம் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்படக் கடவுள் உங்களை எவ்வாறு அழைக்கிறார் என்பதைச் சிந்தியுங்கள். அதற்கு நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? தயக்கமின்றிப் பிறருக்கு உதவ முன்வரத் தயாராக இருக்கிறீர்களா? இரக்கமுள்ள இதயத்துடன் அவர்களுடைய காயங்களைப் புரிந்துகொள்ள மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? நம் அருள்நிறைந்த அன்னையின் இந்தப் புனித நற்பண்பை ஏற்று வாழ முயலுங்கள். தேவையில் இருப்போரை அணுகவும், நீங்கள் அன்பு செய்யும்படி உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் சிலுவைகளின் அருகில் நிற்கவும் முடிவு செய்யுங்கள்.
அன்புமிகு அன்னையே, அந்த மூன்று மாதங்களிலும் எலிசபெத்திடம் நீர் காட்டிய பற்றுறுதி, பராமரிப்பு, அக்கறை, சேவை ஆகியவற்றிற்கு அழகிய முன்மாதிரியாக அமைந்தது. உமது முன்மாதிரியைப் பின்பற்றவும், தேவையில் இருப்போரை அன்பு செய்ய எனக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை நாள்தோறும் தேடவும் எனக்கு உதவும். பெரிய வழிகளிலும் சிறிய வழிகளிலும் சேவை செய்ய நான் திறந்த மனத்துடன் இருப்பேனாக; அன்பு செய்வதற்கான என் அழைப்பில் ஒருபோதும் தளராதிருப்பேனாக.
அன்புமிகு அன்னையே, உம் மகனின் சிலுவைக்கு முன் முழுமையான பற்றுறுதியுடன் நின்றபோது, நீர் இறுதிவரையும் பற்றுறுதியுள்ளவராக இருந்தீர். வேதனையில் இருந்த உம் அன்பு மகனை உற்றுநோக்கியவாறு அங்கே நிற்கும் வலிமையை உமக்குத் தந்தது உமது தாயுள்ளமே. என் சிலுவைகளைக் கண்டோ, பிறர் சுமக்கும் சிலுவைகளைக் கண்டோ நான் ஒருபோதும் விலகிச் செல்லாதிருப்பேனாக. என் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நானும் பற்றுறுதியுள்ள அன்பின் ஒளிமிகு முன்மாதிரியாக விளங்க, எனக்காக வேண்டிக்கொள்ளும்.
என் அன்பிற்கினிய ஆண்டவரே, என் முழு இதயத்தோடும், ஆன்மாவோடும், மனத்தோடும், வலிமையோடும் உமக்கு என்னை அர்ப்பணிக்கிறேன். உமது வேதனையிலும் வலியிலும் உம்மை உற்றுநோக்கியிருக்க உறுதிகொள்கிறேன். பிறரிலும் அவர்களுடைய துன்பங்களிலும் உம்மைக் காண எனக்கு உதவும். தேவையில் இருப்போருக்கு நான் வலிமை தரும் தூணாக விளங்கும்படி, உமது அன்பு அன்னையின் பற்றுறுதியைப் பின்பற்ற எனக்கு உதவும். என் ஆண்டவரே, நான் உம்மை அன்பு செய்கிறேன். என் முழுமையோடும் உம்மை அன்பு செய்ய எனக்கு உதவும்.
அன்னை மரியே, எனக்காக வேண்டிக்கொள்ளும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
ஒன்பதாம் நாள் – உலகால் வரவேற்கப்படாமை
மின்னூல் & மென் அட்டைப் புத்தகமாகக் கிடைக்கிறது!

