தமிழ்

திருவருகைக் காலத்தின் “ஓ” பல்லவிகள்

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்குத் தயாரிப்பாக, டிசம்பர் 17–23 ஆகிய 7 நாட்களில் “ஓ பல்லவிகள்” செபிக்கப்படுகின்றன. திருப்புகழ்மாலையை அறிந்தவர்களுக்கு, இவை ஒவ்வொரு நாளும் மரியாவின் புகழ்ப்பாடலுடன் பயன்படுத்தப்படும் பல்லவிகள் என்பது தெரியும். இவை எசாயாவின் இறைவாக்குகளை அடிப்படையாகக் கொண்டவை; மெசியாவுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு சிறப்புப் பெயர்களை வெளிப்படுத்துகின்றன.

ஓ சப்பியென்சியா (ஓ ஞானமே) எசாயா 11:2–3; 28:29
ஓ அதோனாய் (ஓ ஆண்டவரே) எசாயா 11:4–5; 33:22
ஓ ராதிக்ஸ் யெஸ்ஸே (ஓ ஈசாயின் வேரே) எசாயா 1:1; 11:10
ஓ கிளாவிஸ் தாவீத் (ஓ தாவீதின் திறவுகோலே) எசாயா 9:6; 22:22
ஓ ஓரியென்ஸ் (ஓ உதய சூரியனே) எசாயா 9:1
ஓ ரெக்ஸ் ஜென்தியும் (ஓ மக்களினங்களின் அரசரே) எசாயா 9:5; 2:4
ஓ இம்மானுவேல் (கடவுள் நம்முடன் இருக்கிறார்) எசாயா 7:14

ஒவ்வொரு பல்லவியும் சுருக்கமாக இருப்பதால், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்கு உடனடி ஆன்மிகத் தயாரிப்பாக, ஒவ்வொரு நாளும் அதனை வாசிக்க நேரம் ஒதுக்கி, ஆழ்ந்து சிந்தித்து, நாள் முழுவதும் தியான மனநிலையுடன் செபிப்பது பயனளிக்கும்.

டிசம்பர் 17

படைப்பை வல்லமையோடும் அன்போடும் வழிநடத்தும்
எங்கள் உன்னத இறைவனின் ஞானமே,
வாரும், அறிவின் வழியை எங்களுக்குக் கற்பித்தருளும்!

+++

டிசம்பர் 18

சீனாய் மலையில் மோசேக்குத் திருச்சட்டத்தை வழங்கிய
இஸ்ரயேல் குலத்தின் தலைவரே,
வாரும், உமது மாபெரும் வல்லமையால் எங்களை மீட்டருளும்!

+++

டிசம்பர் 19

ஈசாயின் தண்டுக்கு வேரானவரே,
தம் மக்கள் அனைவர்மீதும் கடவுள் கொண்டுள்ள அன்பின் அடையாளமே,
தாமதமின்றி வாரும், எங்களை மீட்டருளும்!

+++

டிசம்பர் 20

கடவுளின் நித்திய அரசின் வாயில்களைத் திறக்கும்
தாவீதின் திறவுகோலே,
வாரும், இருளில் சிறைப்பட்டிருப்போரை விடுவித்தருளும்!

+++

டிசம்பர் 21

ஒளிமிகு வைகறையே,
நித்திய ஒளியின் சுடரே, நீதியின் கதிரவனே,
இருளிலும் சாவின்
நிழலிலும் வாழ்வோர்மீது வந்து ஒளிவீசும்.

+++

டிசம்பர் 22

அனைத்து மக்களினங்களின் அரசரே, திருஅவையின் மூலைக்கல்லே,
வாரும், நீர் புழுதியிலிருந்து உருவாக்கிய மனிதனை மீட்டருளும்!

+++

டிசம்பர் 23

இம்மானுவேலே, எங்கள் அரசரே, திருச்சட்டம் வழங்குபவரே,
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, வாரும், எங்களை மீட்டருளும்!

+++


திருவருகைக் காலத்திற்கான மேலும் சில வளங்கள்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: