குறிப்பு: இந்தத் தியானம் புனித மணிநேரம் முழுவதற்கும் எளிதாக நீடிக்கக்கூடும். இது புனித இஞ்ஞாசியாருக்கே உரிய தனித்துவமான தியானம். இயேசுவின் குழந்தைப் பருவம் மற்றும் மறைவாழ்வு பற்றிய தியானங்களின் முடிவில், அடுத்துவரும் “மூன்று வகையான மனிதர்கள்” என்ற சிந்தனையோடு இதையும் அவர் இங்கே சேர்க்கிறார். இந்த இரு சிந்தனைகளுக்குப் பிறகு, இயேசுவின் பொதுப்பணியை நீங்கள் தியானிக்கத் தொடங்குவீர்கள்.
லூசிஃபரின் கொடி: முதலில், தீயவனின் கொடூரமான, திகிலூட்டும் அரசை உங்கள் கற்பனையில் காண முயலுங்கள். அந்த இடம் பாபிலோனின் பரந்து விரிந்த சமவெளி (நரகம்) எனக் கற்பனை செய்யுங்கள். சாத்தான் தனது ஆணவத்தில், அச்சுறுத்தித் தன் அதிகாரத்தைத் திணிப்பதற்காக, நெருப்பும் புகையும் சூழ்ந்த ஓர் உயர்ந்த அரியணையில் அமர்ந்திருக்கிறான். குறியீட்டுப் படிமங்களின் வழியாக நோக்கும்போது, இந்த இடம் எப்படித் தோன்றுகிறது? அங்கு என்ன ஒலிகள் கேட்கின்றன, என்ன மணம் வீசுகிறது, எத்தகைய உணர்வு ஏற்படுகிறது? (அமைதியான சிந்தனை)
தீயவன் தன் எண்ணற்ற பேய்களைத் தனது அரியணையிடம் அழைத்து, உலகெங்கும் உள்ள ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வோர் இடத்திற்கும் அவற்றை அனுப்புவதாகக் கற்பனை செய்யுங்கள். பேய்களின் இந்த மாபெரும் படை, சாவையும் அழிவையும் விளைவிக்கும் தன் பணிக்காகப் புறப்பட்டுச் செல்வதைக் கற்பனை செய்யுங்கள். (சிறிதுநேர அமைதியான சிந்தனை)
அவற்றின் பணி என்ன? கடவுளின் மக்களுக்குக் கண்ணிகளை அமைத்து, அவர்களை அவர்களுடைய பாவங்களில் சிறைப்படுத்துவதே. இந்தத் தீய ஆவிகள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு, மனித இனத்தை ஏமாற்றுவதில் முழுமையாக ஈடுபட்டுள்ளன. அவை திட்டமிடுகின்றன, சதிசெய்கின்றன, ஆயத்தம் செய்கின்றன, உத்திகளை வகுக்கின்றன, தங்கள் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. கடவுளின் மக்களைத் தொடக்கத்தில் மூன்று வழிகளில் சோதிக்குமாறு சாத்தான் தன் பேய்களுக்கு அறிவுறுத்துகிறான் என்று புனித இஞ்ஞாசியார் கூறுகிறார்:
முதலில், தங்கள் உள்ளத்தில் செல்வங்களை விரும்பச் செய்வது.
வீண்புகழையும் மதிப்புமரியாதைகளையும் உலக அங்கீகாரத்தையும் நாடச் செய்வது.
அவர்களுடைய ஆணவத்தைப் பெருகச் செய்வது.
உங்கள் வாழ்வில் இந்த மூன்று சோதனைகளைப் பற்றிச் சிறிதுநேரம் சிந்தியுங்கள். இந்தப் பொய்களை நீங்கள் நம்பி ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? (அமைதியான சிந்தனை)
செல்வங்கள்மீதான பற்றிலும் வீண்புகழிலும் தன்னலமிக்க ஆணவத்திலும் ஒருவரைத் தீயவன் ஈர்த்துவிட்டால், மற்ற எல்லா வகையான தீய ஏமாற்றங்களிலும் ஈர்க்கப்படுவதற்கு அவர் எளிதில் இடமளிப்பவராகிவிடுகிறார். இந்த மூன்று தொடக்கச் சோதனைகளிலிருந்தே மற்ற எல்லாத் தீமைகளும் பிறக்கின்றன. உங்கள் சொந்த வாழ்வில் உள்ள இந்தப் போராட்டங்களைப் பற்றி மீண்டும் சிந்தியுங்கள்.
கிறிஸ்துவின் கொடி: தீயவனுக்கு நேர்மாறாக, எருசலேமுக்கு அருகில் எளிமையான, தாழ்வான ஒரு சமவெளியில் கிறிஸ்து காணப்படுகிறார். மக்கள் கூட்டம் அவரைச் சூழ்ந்திருக்க, அவர் அங்கே நின்றுகொண்டிருக்கிறார். அது அழகும் அமைதியும் நிறைந்த இடம். பற்றுறுதியுடன் அவரைப் பின்பற்றுவோரின் கூட்டம் அவரைச் சூழ்ந்திருக்கும் காட்சியைக் கற்பனை செய்யுங்கள். (அமைதியான சிந்தனை)
இயேசு தமது இறைப்பணியில் பங்குகொள்ள ஒவ்வொருவராகத் தேர்ந்தெடுக்கிறார். கனிவோடும் உள்ளார்ந்த வலிமையோடும் அதிகாரத்தோடும் அவர்களைத் தம்மிடம் அழைக்கிறார். பின்னர் ஒரு பணிக்காக அவர்களை அனுப்புகிறார். அவர்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் அழைப்பைக் கண்டுணர்ந்திருக்கிறார்கள்; அவரது அருளின் உள்ளார்ந்த செல்வங்களைக் கண்டுணர்ந்திருக்கிறார்கள். அன்பால் பற்றியெரியும் உள்ளங்களோடு, அவரது இரக்கத்தையும் உண்மையையும் மகிழ்ச்சியுடன் பரப்ப ஆர்வமாகப் புறப்பட்டுச் செல்கிறார்கள். பிறரைக் கிறிஸ்துவிடம் ஈர்ப்பதற்காக அவர்கள் உலகின் எல்லா மூலைகளுக்கும் செல்கிறார்கள்.
இயேசு அவர்களை அனுப்பும்போது, அவர்களுக்குக் கற்பிப்பதிலும் அவர்களை ஆயத்தப்படுத்துவதிலும் மிகுந்த நேரத்தைச் செலவிடுகிறார். தம் இதயத்தின் ஆழத்திலிருந்து எழும் வல்லமையான மறையுரைகளை வழங்குகிறார்; உவமைகள் வாயிலாகக் கற்பிக்கிறார்; அவர்களுடைய உள்ளங்களையும் மனங்களையும் வெல்கிறார். பின்னர் புறப்பட்டுச் சென்று போதிக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். அவரது செய்தியின் எளிமையாலும் வல்லமையாலும் மக்களைக் கவர்ந்து ஈர்ப்பதே அவர்களது பணி. அவர்கள் போதிக்க வேண்டியதும் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டியதும் இதுவே. அந்தக் காட்சியையும் பின்வரும் ஒவ்வொரு செய்தியையும் பற்றிச் சிந்தியுங்கள்:
- அவர்கள் ஏழ்மையைப் பற்றிப் போதிக்க வேண்டும். உள்ளார்ந்த ஆன்மிக ஏழ்மையைப் பற்றியும், கிறிஸ்துவுக்காக அனைத்தையும் துறப்பதன் மதிப்பைப் பற்றியும்கூடப் போதிக்க வேண்டும்.
- சிலர் அவர்களைப் புறக்கணித்தால், மக்கள் அவர்களையும் அவர்களது செய்தியையும் இகழ்ந்தாலும்கூட, அவர்கள் மனம் தளராமல் மகிழ வேண்டும்.
- அவர்கள் தாழ்ச்சியுள்ளவர்களாக இருந்து, எந்த அவமானத்தையும் அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அனுப்பப்படுவதன் வழியாக, தீயவனின் பொய்களை எதிர்த்துப் போராட ஆயத்தப்படுத்தப்படுகிறார்கள். பணத்தாசையை எதிர்க்க அவர்கள் ஏழ்மையைப் போதிக்கிறார்கள்; உலக அந்தஸ்துக்கான ஆசையை எதிர்க்கப் புறக்கணிப்பைத் தாங்கிக்கொள்கிறார்கள்; தாங்களே நீதிமான்கள் என்று கருதும் ஆணவத்தின் தீமையை எதிர்க்கத் தாழ்ச்சியைப் போதித்து, அதன்படி வாழ்கிறார்கள்.
சிந்தனை: எந்தச் செய்தி உங்களை அதிகமாக ஈர்க்கிறது? எந்த அரசின் அங்கமாக இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள்? இது கடினமான ஒரு கேள்வி. ஏனெனில், பலர் நேர்மையாகத் தங்களையே நோக்கினால், அரசராம் கிறிஸ்துவின் செய்தியைவிடத் தீயவனும் அவனுடைய பேய்களும் கூறும் செய்தியையே தாங்கள் விரும்புவதைக் கண்டுகொள்வார்கள். இயேசு ஏழ்மை, புறக்கணிப்பு, தாழ்ச்சி ஆகியவற்றைப் போதிக்கிறார். சாத்தான் செல்வங்கள், மதிப்புமரியாதைகள், ஆணவம் ஆகியவற்றைப் போதிக்கிறான். இந்த வலுவான முரண்பாட்டை அமைதியாகச் சிந்தியுங்கள். எது உங்களை அதிகமாக ஈர்க்கிறது என்பதை நேர்மையாக மதிப்பிடுங்கள். கிறிஸ்துவுக்காக ஏழ்மை, புறக்கணிப்பு, அவமானமும்கூட அளிக்கும் செல்வங்களுக்கு உங்களையே ஒப்படையுங்கள்.
உங்கள் சொந்த வாழ்க்கை, விருப்பங்கள், தேர்வுகள், செயல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பின்வரும் முரண்பாட்டைப் பற்றிச் சிந்திக்கக் கணிசமான நேரம் செலவிடுங்கள்.
முரண்பாட்டை ஆராய்தல்:
சாத்தானின் அரசு
மண்ணுலகச் செல்வங்கள்
உலக மதிப்புமரியாதைகள்
ஆணவம்
அதைத் தொடர்ந்து வரும் மற்ற எல்லாத் தீயொழுக்கங்களும்
+++
கிறிஸ்துவின் அரசு
அருளின் செல்வங்கள்
நல்லொழுக்கத்தின் மறைவான மதிப்பு
தாழ்ச்சி
அதைத் தொடர்ந்து வரும் மற்ற எல்லா நற்பண்புகளும்
கிறிஸ்துவையும் அவரது அரசையும் தேர்ந்தெடுப்பதற்கு முழுமையான, தீவிரமான அர்ப்பணிப்பு தேவை. அவரது அரசின் கனிகள் சாத்தானின் அரசின் கனிகளைவிட மிக மேலானவை என்பதை அறிந்து நம்புவதற்கு ஆழ்ந்த விசுவாசம் தேவை. அறிவளவில் இதை நம்புவது எளிதாக இருக்கலாம். ஆனால், சாத்தானின் அரசைவிடக் கிறிஸ்துவின் அரசை உங்கள் சித்தத்தாலும், இறுதியில் உங்கள் ஆன்மாவின் ஒவ்வோர் உணர்வெழுச்சியாலும் தேர்ந்தெடுப்பதற்கு, ஆழமும் உறுதியும் கொண்ட, தீயவனின் சோதனைகளால் அசைக்க முடியாத விசுவாசம் தேவை. இந்தத் தியானம் புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் போதனையில் மைய இடம் வகிக்கிறது; இதற்குப் போதிய அளவு நேரம் ஒதுக்க வேண்டும். கடினமாக இருந்தாலும், இப்போதே கிறிஸ்துவையும் அவரது அரசையும் தேர்ந்தெடுக்கத் தொடங்குங்கள். காலப்போக்கில் இந்தத் தேர்வு உங்கள் செயல்களிலும், ஏன், உங்கள் ஆசைகளிலும்கூட வெளிப்பட வேண்டுமென்று செபியுங்கள்.
சிறப்புப் படம்: பெலிக்ஸ் ஜோசப் பாரியாஸ் – சாத்தானால் கிறிஸ்து சோதிக்கப்படுதல்
பொதுக்காலத் தியானங்களுக்கு அறிமுகம்
- ஆண்டவரின் திருமுழுக்கு
- இரு கொடிகள்
- மூன்று வகை மனிதர்கள்
- சோதனை
- திருத்தூதர்களின் அழைப்பு
- கானாவூர் திருமணம்
- கோவிலைத் தூய்மைப்படுத்துதல்
- மலைப்பொழிவு
- புயலை அமைதிப்படுத்துதல்
- தண்ணீர்மீது நடத்தல்
- நற்செய்தியை அறிவிக்கத் திருத்தூதர்கள் அனுப்பப்பட்டனர்
- மகதலா மரியாவின் மனமாற்றம்
- கிறிஸ்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்த விதம்
- கிறிஸ்துவின் தோற்றமாற்றம்
- இலாசரின் உயிர்த்தெழுதல்
- பெத்தானியாவில் இரவு விருந்து
- தாழ்ச்சியின் மூன்று வழிகள்
