தமிழ்

உங்கள் வாழ்வின் நெருங்கிய வழிகாட்டியான கடவுள்

புனித நேரத்திற்கான வழிமுறை

பாடம்: நம்மைப் படைத்த கடவுள் நம்மோடு ஆழ்ந்த தனிப்பட்ட உறவு கொண்டவர். அவர் இந்த உலகிற்கு அப்பாற்பட்டவர், அதாவது இதைக் கடந்து மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் மட்டுமல்ல; இந்த உலகிலும், குறிப்பாக உங்கள் வாழ்விலும், முழுமையாக உடனிருப்பவர். இதன் பொருள், அவர் உங்களோடு இருக்கிறார்; உங்களுக்கு நெருக்கமானவராக, உங்கள் மீது அக்கறையும் அன்பும் கொண்டவராக இருக்கிறார்; உங்கள் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் ஒவ்வொரு பகுதியையும் ஆட்கொள்ள ஏங்குகிறார்.

கடவுள் உங்களை முழுமையாக அறிந்திருந்தாலும், அவர் தம்மை உங்கள்மீது திணிக்கவோ, தமது அன்பையும் வழிநடத்துதலையும் நீங்கள் ஏற்கும்படி கட்டாயப்படுத்தவோ மாட்டார். நீங்கள் அவரை அழைத்து, உங்கள் வாழ்வை அவர் பொறுப்பேற்று நடத்த அனுமதிக்க வேண்டும். இந்தத் தெரிவை நீங்கள் ஒருமுறை, இருமுறை செய்வதோடு நின்றுவிடாமல், உங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் செய்ய வேண்டும்.

மீண்டும் சொல்கிறோம், கடவுள் உங்களை “ஆட்கொள்ள” விரும்புகிறார். அதாவது, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நுழைந்து, உங்கள் கடவுளாகவும் தெய்வீக வழிகாட்டியாகவும் இருக்க, நீங்கள் அவருக்கு வரம்பற்ற அனுமதி அளிக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். அவர் உங்களிலும் உங்கள் வழியாகவும் செயலாற்ற விரும்புகிறார். தமது இதயம் உங்கள் இதயத்தில் வாழவும், தமது எண்ணங்கள் உங்கள் எண்ணங்களாகவும், தமது செயல்கள் உங்கள் செயல்களாகவும் மாறவும் அவர் விரும்புகிறார்.

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் அவரிடம் முழுமையாகவும் உறுதியாகவும் சரணடைவதன் வழியாக மட்டுமே இது நிகழும். கடவுளிடம் ஒப்படைக்க முடியாத அளவுக்குப் பெரியதும் எதுவுமில்லை; ஒப்படைக்கத் தேவையில்லாத அளவுக்குச் சிறியதும் எதுவுமில்லை. மிகச் சிறிய எண்ணம் முதல் வெளிப்படையாகத் தெரியும் செயல் வரை அனைத்தையும், உங்கள் அன்பான படைப்பாளரும் வழிகாட்டியுமான கடவுளின் ஆளுகைக்கு ஒப்படைக்க வேண்டும்.

கடவுள் உங்கள் வாழ்வை வழிநடத்தும்போது, நீங்கள் உங்களையே இழந்துவிடுவதில்லை. மாறாக, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் அவர் வழிநடத்தும்போது, நீங்கள் எத்தகையவராக இருக்கப் படைக்கப்பட்டீர்களோ அத்தகையவராக ஆகிறீர்கள். கடவுளுடன் முழுமையாக இணைந்து, ஒன்றித்து, உறவிலும் ஒற்றுமையிலும் வாழவே நீங்கள் படைக்கப்பட்டீர்கள். நீங்கள் கடவுளிலும் அவர் உங்களிலும் வாழவே நீங்கள் படைக்கப்பட்டீர்கள். எல்லாவற்றிலும் கடவுள் உங்கள் வழிகாட்டியாக இல்லாவிட்டால், உங்கள் வாழ்வு இலக்கற்றதாகவும் குழப்பம் நிறைந்ததாகவும் இருக்கும்.

சிந்தனை: சற்றே நின்று இந்த அழகிய உண்மையைச் சிந்தித்துப் பாருங்கள்: பிரபஞ்சத்தைப் படைத்தவரும் எல்லாம் வல்லவருமான ஒரே கடவுள் உங்கள் இதயக் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். உள்ளே நுழைந்து, உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் உங்களை வழிநடத்தி, நிலைவாழ்வின் மகிழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்ல அவர் விரும்புகிறார். (மௌனச் சிந்தனை)

அவரது அழைப்பை நீங்கள் கேட்கும்போது, படைப்பு அனைத்திற்கும் அரசரும் தலைவரும் ஆண்டவரும் ஆட்சியாளருமான அவருக்கு “ஆம்” என்று சொல்லுங்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு தனிப்பட்ட, நெருக்கமான உறவு கொண்ட கடவுளாகவும் வழிகாட்டியாகவும் இருக்க அவருக்கு “ஆம்” என்று சொல்லுங்கள். நீங்கள் இப்போது இருக்கும் நிலையையும், இனி ஆகப்போகும் அனைத்தையும் அவரிடம் ஒப்படையுங்கள். எதையும் உங்களுக்கென்று வைத்துக்கொள்ளாதீர்கள். (மௌனச் சிந்தனை)

ஆண்டவரே, என் சுதந்திரம் முழுவதையும், என் நினைவாற்றலையும், என் புரிந்துகொள்ளும் திறனையும், என் முழு விருப்பத்தையும், என்னிடம் உள்ள, எனக்குச் சொந்தமான அனைத்தையும் எடுத்துக்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும்…(மௌனச் சிந்தனை)

அடிப்படைத் தியானங்களுக்கு அறிமுகம்

  1. இருப்பவை அனைத்தையும் படைத்த கடவுள்
  2. உங்கள் வாழ்வின் நெருங்கிய வழிகாட்டியான கடவுள்
  3. உங்கள் வாழ்வின் இலக்கும் நோக்கமும் இறுதி நிறைவுமான கடவுள்
  4. வானதூதர்களின் பாவம்
  5. ஆதாம் ஏவாளின் பாவம்
  6. பாவத்தின் பொதுவான விளைவுகள்
  7. ஏழு–ஒன்பதாம் தியானங்களுக்கு அறிமுகம்
  8. தனிப்பட்ட பாவம்: தெய்வீகக் கதிரவனின் ஒளியில்
  9. என் வாழ்வின் தனிப்பட்ட பாவங்கள்
  10. அவமானமும் தாழ்ச்சியும்
  11. இறப்பு
  12. தீர்ப்பு
  13. நரகம்

குறிப்பேட்டுப் பயிற்சிகள்

பொருளடக்கம்

படம்: தந்தையாகிய கடவுளும் தூய ஆவியாரும் — டொமெனிக்கோ அன்டோனியோ வக்காரோவின் ஓவியம், மவுரிட்ஸ்ஹுய்ஸ்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: