தமிழ்

வாழ்வுரிமைக்கு ஆதரவான இறைவேண்டல்களும் உதவித் தகவல்களும்

2022 ஜூன் 24 அன்று, இயேசுவின் திருஇருதயப் பெருவிழாவின்போது, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்த தீர்ப்புகள் Roe v. Wade மற்றும் Planned Parenthood v. Casey ஆகியவையாகும். Dobbs v. Jackson வழக்கின் தீர்ப்பு, கருக்கலைப்பு குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை இப்போது மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களிடமே மீண்டும் ஒப்படைக்கிறது. எனவே, ஒவ்வொரு மாநிலமும் கருக்கலைப்பை ஒழிக்கவும், பிறக்காத ஒவ்வொரு குழந்தையின் உரிமைகளையும் மாண்பையும் பாதுகாக்கவும் செயல்படுமாறு, முன்பைவிட இப்போது இறைவேண்டல் அதிகம் தேவைப்படுகிறது. இதற்கு உதவும் சில இறைவேண்டல்களும் உதவித் தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

செபிப்போமாக…

விண்ணகத் தந்தையே, Roe v Wade தீர்ப்பு முடிவுக்கு வந்ததைக் கொண்டாடும் இந்நாளில், நாங்கள் மகிழ்ந்து உமக்கு மாட்சி அளிக்கிறோம். பிறக்காத பல குழந்தைகள் இனி காப்பாற்றப்படுவார்கள் என்பதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்த இலக்கை அடைவதற்காகப் பல ஆண்டுகளாக அயராது உழைத்த வாழ்வுரிமை ஆதரவுத் தலைவர்கள் பலருக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். துணிவுமிக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்காகவும், குறிப்பாக உமது இறைச் சட்டத்தின்படி செயல்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம்.

வாழ்வுரிமைக்காகத் துணிந்து நிற்கப் பலரைத் தொடர்ந்து தூண்டியருளும். கருக்கலைப்பு குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இப்போது ஒவ்வொரு மாநிலத்திடமும் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலச் சட்டமன்ற உறுப்பினரும் நேர்மையுடனும் ஒழுக்க உறுதியுடனும் மாண்புடனும் பரிவுடனும் உண்மையுடனும் செயல்பட வேண்டுமென்று செபிக்கிறோம். அவர்களுடைய சிந்தனைகளையும் மனவிருப்பங்களையும் உமது திருவுளத்தால் நிரப்பியருளும். கருவுற்ற கணம் முதல் இயற்கையான மரணம் வரை உயிரைப் பாதுகாக்க அவர்களுக்குத் தேவையான துணிவை அளித்தருளும். உமது உண்மையை அவர்கள் தங்கள் இதயங்களில் உறுதியாக ஏற்கச் செய்தருளும்.

உலகின் மீட்பரான ஆண்டவர் இயேசுவே, கருக்கலைப்பால் எண்ணற்றோர் பலியாக வேண்டுமென விரும்பும் சாத்தானையும் அனைத்துத் தீய ஆவிகளையும் உமது அதிபுனிதப் பெயரால் கட்டுகிறோம். ஒவ்வொரு பேயின் ஆவியையும் கட்டியருளும். அவை செயல்படுவதைத் தடுத்தருளும். அவற்றின் தீய செயல்பாடுகளை அகற்றியருளும். அவற்றின் பொய்களிலிருந்து எல்லா மக்களையும் காத்தருளும். அவற்றின் அடக்குமுறையிலிருந்து எங்கள் நாட்டை விடுவித்தருளும்.

அன்னை மரியே, இவ்வுலகில் இறைமகனின் மிக மாட்சிமிக்க கருவியாக நீர் விளங்கினீர். நித்திய மகனை உமது புனித உதரத்தில் சுமந்தீர். எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். கருவுற்றிருக்கும் தாய்மார்கள் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளும். தங்கள் குழந்தைகளை அன்புசெய்து பராமரிக்க அவர்களைத் தூண்டியருளும். அச்சத்திலிருந்தும் கவலையிலிருந்தும் அவர்களை விடுவித்தருளும். தாய்மார் என்ற தங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ள அவர்களுக்குத் தேவையான உதவியை அளித்தருளும்.

மீட்பரின் பாதுகாவலரான புனித சூசையப்பரே, இயேசுவைப் பாதுகாத்துப் பராமரிக்கும் சிறப்புப் பொறுப்பு உமக்கு அளிக்கப்பட்டது. பிறந்த, பிறக்காத அனைத்துக் குழந்தைகளுக்கும் அதே பராமரிப்பை வழங்கியருளும். இயேசுவின்மீது நீர் கொண்டிருந்த அதே அன்பை ஒவ்வொரு தந்தையும் தம் குழந்தைகள்மீது கொள்ளத் தூண்டியருளும்.

தூய ஆவியாரே, வாரும்! எங்கள் நாட்டையும் உலகின் எல்லா நாடுகளையும் முழுமையாக ஆட்கொள்ளும். எல்லாவற்றுக்கும் முதன்மையாக, எங்களை மீட்பின் பாதையில் வழிநடத்தியருளும். எங்களை விண்ணகத்திற்கு அழைத்துச் சென்றருளும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஒவ்வோர் ஆன்மாவையும் பாவத்திலிருந்து காத்தருளும்; ஒவ்வொரு மனித உயிரையும் கருக்கலைப்பின் கொடுமையிலிருந்து காப்பாற்றியருளும்.

ஆமென்.


மேலும் இறைவேண்டல்களும் உதவித் தகவல்களும்

அனைத்து உயிர்களுக்கும் தந்தையான கடவுளிடம் இறைவேண்டல்

திருநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் இயேசுவிடம் வாழ்வுரிமைக்கு ஆதரவான இறைவேண்டல்கள்

துணையாளரான தூய ஆவியாரிடம் இறைவேண்டல்

கன்னி மரியாவிடம் வாழ்வுரிமைக்கு ஆதரவான இறைவேண்டல்

கருக்கலைப்பால் குழந்தையை இழந்தவர்களுக்காக இறைவேண்டல்

வாழ்வுரிமைக்கு ஆதரவான செபமாலைத் தியானங்கள்

வாழ்வுரிமைக்கு ஆதரவான சிலுவைப் பாதைத் தியானங்கள்

உதவித் தகவல்கள்

கீழுள்ள இறைவேண்டல்களின் மூலம்: priestsforlife.org/prayers


அனைத்து உயிர்களுக்கும் தந்தையான கடவுளிடம் இறைவேண்டல்

நித்திய இறைவா, அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக உம்மை வெளிப்படுத்தியுள்ளீர். படைப்புகள் அனைத்தின்மீதும், குறிப்பாக உமது உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டுள்ள எங்கள்மீதும், தந்தைக்குரிய அக்கறையைப் பொழிவதற்காக உம்மைப் போற்றுகிறோம்.

தந்தையே, கருக்கலைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்போர்மீது உமது பாதுகாப்புக் கரத்தை நீட்டி, அதன் அழிவுச் சக்தியிலிருந்து அவர்களைக் காப்பாற்றியருளும். கருக்கலைப்புகளுக்குத் துணைபோகத் தூண்டக்கூடிய அச்சங்களுக்கு ஒருபோதும் இடங்கொடுக்காதவாறு, தந்தையர் அனைவருக்கும் உமது வலிமையை அளித்தருளும்.

எங்கள் குடும்பங்களையும் எங்கள் நாட்டையும் ஆசீர்வதித்தருளும். நீரே ஊற்றும் நித்திய தந்தையுமாக இருக்கும் உயிரை வரவேற்று வளர்த்துப் பேணுவதன் மகிழ்ச்சியை நாங்கள் அடையச் செய்தருளும். ஆமென்.


திருநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் இயேசுவிடம் வாழ்வுரிமைக்கு ஆதரவான இறைவேண்டல்கள்

“என் உடல்”

“இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.” ஆண்டவர் இயேசுவே, திருப்பலியில் ஒவ்வொரு நாளும் உமது இவ்வார்த்தைகளைக் கேட்கிறோம். எங்கள்மீது நீர் கொண்டுள்ள அன்பின் பொருளை எங்களுக்குக் கற்பிக்க இவ்வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளீர். நாங்கள் வாழ்வதற்காக உமது உயிரைக் கொடுக்க உம்மைச் சிலுவைக்கு அழைத்துச் சென்ற அன்பு அது. நாங்கள் ஒருவர் மற்றவர்மீது கொள்ளும் அன்பின் பொருளைக் கற்பிக்கவும் இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர். பிறர் வாழ்வதற்காக எங்களையே கையளிக்க வழிநடத்தும் அன்பு அது.

“இது என் உடல்.” ஆண்டவரே, ஓர் உயிர் தங்கள் உடலுக்குள் வளர்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அந்த உயிரைப் பறிக்கலாம் என்று நினைப்பவர்களும் இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் கேட்கிறோம். கருக்கலைப்பை ஆதரிப்பவர்கள் இவ்வார்த்தைகளைத் திரித்துக் கூறுவதைக் கேட்கிறோம்.

பிறரை ஒதுக்கித் தள்ளுவதால் மனித வாழ்வின் நிறைவை ஒருபோதும் அடைய முடியாது; நம்மையே ஒதுக்கிக்கொண்டு பிறருக்கு இடமளிப்பதால்தான் அதை எப்போதும் அடைய முடியும் என்பதை உம் மக்கள் அனைவரும் கற்றுக்கொள்ள அருள்புரியும். “இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்!” என்ற உமது அதிபுனித வார்த்தைகளின்படி உம் மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வை வாழ்வார்களாக!

ஒன்றிப்பு

ஆண்டவர் இயேசுவே, உமது திருவுடலாகிய திருநற்கருணைக் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். அதன் வழியாக எங்களை உம்மில் ஒரே உடலாக ஒன்றிணைக்கிறீர். “நாம் பலராயினும் ஒரே உடலாக இருக்கிறோம்; ஏனெனில் நாம் அனைவரும் ஒரே அப்பத்தில் பங்குபெறுகிறோம்”(1 கொரி. 10:17) ஆண்டவரே, நாங்கள் உம்மை ஏற்றுக்கொள்ளும்போது, நீரும் எங்களை ஏற்றுக்கொள்கிறீர். எங்களை உம்மிடம் ஈர்த்துக்கொள்ளும்போது, ஒருவரோடு ஒருவர் ஒன்றிக்கவும் எங்களை ஈர்க்கிறீர். “நீங்கள் கிறிஸ்துவின் உடல்; நீங்கள் ஒவ்வொருவரும் அதன் உறுப்புகள்” (1 கொரி. 12:27).

ஆண்டவரே, உமது உடலின் மற்ற உறுப்பினர்கள் எவரையும் எங்கள் அன்பிலிருந்து விலக்கிவிடாதிருக்க எங்களுக்கு அருள்தாரும். திருவிருந்தில் உமது உடலை நாங்கள் ஏற்றுக்கொள்வதுபோல, உமது உடலின் உறுப்பினர்கள் அனைவரையும், அவர்களால் எங்களுக்கு எவ்வளவு இடையூறு ஏற்பட்டாலும், ஏற்று வரவேற்கச் செய்தருளும். எங்கள் உலகில் மிகவும் வரவேற்கப்படாதவர்களாகிவிட்ட உறுப்பினர்களை, அதாவது, இவ்வுலகில் இப்போதுதான் நுழைந்திருப்பவர்களை வரவேற்க எங்களுக்குச் சிறப்பாக உதவியருளும். தாயின் கருவறையில் இருக்கும் எங்கள் சகோதர சகோதரிகளை ஆசீர்வதியும். பெற்றோரைத் தங்கள் சொந்தப் பிள்ளைகளிடமிருந்தும், ஒருவரையொருவரிடமிருந்தும், தங்களிடமிருந்துமே, ஆண்டவரே, உம்மிடமிருந்தும் பிரிக்கும் கருக்கலைப்பு என்னும் பாவத்தை எங்கள் உலகிலிருந்து அகற்றியருளும்.

நற்கருணையில் நாங்கள் காணும் ஒற்றுமையின் வல்லமை, பிறவாக் குழந்தையைப் பற்றிய அச்சத்தை வென்று, அந்தக் குழந்தையை ஒரு சகோதரனாக, ஒரு சகோதரியாக, உமது உடலின் ஓர் உறுப்பினராக வரவேற்க எங்களுக்கு ஆற்றல் அளிக்க அருள்தாரும். ஆமென்.

விசுவாசம்

ஆண்டவராகிய இயேசுவே, திவ்விய நற்கருணை உமது திருவுடலும் திருஇரத்தமும் ஆன்மாவும் இறைத்தன்மையுமே என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த வியப்புக்குரிய உண்மையைப் புலன்களால் உணர முடியாது. ஆனால், நம்பிக்கை கண்களால் காணக்கூடியவற்றைக் கடந்து சென்று, நீர் பிரசன்னமாயிருக்கிறீர் என்பதை எங்களுக்கு உறுதிப்படுத்துகிறது.

ஆண்டவரே, நற்கருணையில் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கை, ஒவ்வொரு மனித உயிரின் மாண்பையும் கண்டுணரும் எங்கள் திறனையும் வலுப்படுத்த அருள்தாரும். இதிலும் புலன்கள் எங்களை ஏமாற்றக்கூடும் என்பதை நாங்கள் அறிவோம். சிலர் கவர்ச்சியான தோற்றமற்றவர்களாக இருக்கலாம்; வேறு சிலர் மிகச் சிறியவர்களாகத் தோன்றலாம்; இன்னும் சிலர் மனிதரைவிடத் தாழ்ந்தவர்களாகத் தோன்றலாம்.

ஆனால், புனித நற்கருணை அப்பத்தில் உம்மைக் காணக்கூடிய நாங்கள், எங்கள் சகோதர சகோதரிகளிலும் நிச்சயமாக உம்மைக் காண முடியும். ஆண்டவரே, கருவறையில் இருக்கும் குழந்தைகளிலும் நாங்கள் உம்மைக் காண முடியும். பலரும் இக்குழந்தைகளை மறந்து, பிறந்தவர்களைவிட மதிப்புக் குறைந்தவர்களாக இவர்களைப் புறக்கணிக்கும் இக்காலத்தில், இவர்களின் மாண்பையும் மதிப்பையும் பற்றிய எங்கள் உறுதி மேலும் மேலும் வளர அருள்தாரும்.

ஆண்டவரே, அதற்கேற்ப நாங்கள் செயல்படவும் அருள்தாரும். ஆமென்.


துணையாளரான தூய ஆவியாரிடம் இறைவேண்டல்

இறைவனின் தூய ஆவியாரே, விண்ணுலகின் உயரங்களில் எங்கள் சார்பாகப் பரிந்து பேசி, எங்களுக்காக வாதாடும் துணையாளராக ஆண்டவராகிய இயேசு உம்மை எங்களுக்கு வாக்களித்தார். “நான் தந்தையிடம் கேட்பேன்; அவர் என்றென்றும் உங்களோடு இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார்…”(யோவா.14:15).

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பெருமூச்சுகளோடு நீர் எங்களுக்காகப் பரிந்து பேசுகிறீர் என்று திருத்தூதர் பவுல் எங்களுக்குக் கற்பித்துள்ளார் (உரோ. 8:26).

மீட்பு என்னும் கொடைக்காக இன்று உம்மைப் போற்றுகிறோம்; ஏனெனில், எங்களை நாங்களே மீட்டுக்கொள்ள முடியாது என்பதை ஆழமாக உணர்ந்திருக்கிறோம். நாங்கள் பாவம் செய்துள்ளோம்; எங்கள் சொந்த முயற்சியால் மன்னிப்பைப் பெற முடியாது. எங்களுக்காக வாதாடும் ஒரு துணையாளர் எங்களுக்குத் தேவை.

தூய ஆவியாரே, தங்களுக்காக வாதாட எங்கள் உதவி தேவைப்படுவோரைப் பற்றி நாங்கள் மேலும் மேலும் விழிப்புணர்வு பெறச் செய்யுமாறு உம்மை வேண்டுகிறோம். எங்கள் சகோதர சகோதரிகளுள் மிக இளையவர்களும் மிகச் சிறியவர்களுமாகிய, இன்னும் கருவறையில் இருப்பவர்களின் அழுகுரலுக்கு நாங்கள் செவிசாய்க்க அருள்தாரும். அவர்களால் பேசவோ, தங்களைக் காத்துக்கொள்ளவோ, செபிக்கவும்கூட முடியாது.

தூய ஆவியாரே, நீர் எங்களுக்காக வாதாடும் துணையாளராக இருப்பதுபோல, எங்களையும் பிறருக்காக வாதாடுபவர்களாக்கும். இரக்கத்திற்காக எழும் எங்கள் அழுகுரலுக்கு நீர் செவிசாய்ப்பதுபோல, இரக்கத்திற்காக எழும் பிறருடைய அழுகுரலுக்கு நாங்களும் செவிசாய்க்கச் செய்தருளும். பிறருக்குச் செவிசாய்க்காமல் எங்களுக்கு மட்டும் இரக்கம் தேடும் அவல நிலையிலிருந்து எங்களைக் காப்பாற்றும். பெந்தக்கோஸ்து நாளில் திருத்தூதர்களின் நாவுகளை நீர் பேசச் செய்ததுபோல, இன்று பிறவாக் குழந்தைகளுக்காக ஒரு பெந்தக்கோஸ்து நிகழ்வை எங்களுக்கு அருளும். இதனால், பெரியோர் சிறியோர் முன்பாகவும், அரசுகள் மற்றும் நிறுவனங்கள் முன்பாகவும், உமது மக்கள் அனைவரின் முன்பாகவும் அக்குழந்தைகளுக்காக நாங்கள் குரல்கொடுக்கச் செய்தருளும். ஆமென்.


கன்னி மரியாவிடம் வாழ்வுரிமைக்கு ஆதரவான இறைவேண்டல்

இயேசுவின் தாயும் எங்கள் அனைவரின் தாயுமாகிய மரியே, வாழ்வுக்கு “ஆம்” என்று சொன்னவராகிய உம்மை இன்று நாடி வருகிறோம். “நீர் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பீர்” என்று வானதூதர் உம்மிடம் கூறினார். வியப்பும், இது எவ்வாறு நிகழும் என்ற தெளிவின்மையும் இருந்தபோதிலும், நீர் ஆம் என்று சொன்னீர். “உமது வார்த்தையின்படியே எனக்கு நிகழட்டும்.”

மரியே, தாயாவதற்கு அஞ்சும் எல்லாத் தாய்மார்களுக்காகவும் இன்று செபிக்கிறோம். தங்கள் கர்ப்பத்தால் அச்சுறுத்தப்படுவதாகவும், சமாளிக்க முடியாமல் திணறுவதாகவும் உணர்பவர்களுக்காகச் செபிக்கிறோம். ஆம் என்று சொல்லும் அருளையும், தொடர்ந்து முன்னேறும் துணிவையும் கடவுள் அவர்களுக்கு அளிக்கும்படி அவர்களுக்காகப் பரிந்து பேசும். கருக்கலைப்பு என்னும் பொய்யான தீர்வை மறுப்பதற்கான அருளை அவர்கள் பெறுவார்களாக. “உமது வார்த்தையின்படியே எனக்கு நிகழட்டும்” என்று உம்மோடு சேர்ந்து அவர்களும் சொல்வார்களாக. கிறிஸ்தவ மக்களின் உதவியை அவர்கள் அனுபவித்து, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதால் வரும் அமைதியை அறிந்துகொள்வார்களாக. ஆமென்.


கருக்கலைப்பினால் குழந்தையை இழந்தவர்களுக்கான செபம்
அருள்பணி ஃபிராங்க் பவோன் இயற்றியது

அனைத்து உயிர்களுக்கும் ஆண்டவரே,
ஒருவரையொருவர் பேணிக் காக்கும் பொறுப்பில் எங்களை ஒப்படைத்துள்ளீர்,
கிறிஸ்துவில் ஒரே உடலாக இருக்க எங்களை அழைத்துள்ளீர்.

மகிழ்வோருடன் மகிழவும்,
அழுவோருடன் அழவும் எங்களை அழைக்கிறீர்.

கருக்கலைப்பினால் குழந்தைகளை இழந்த எங்கள் சகோதர சகோதரிகளுக்காக
இன்று நாங்கள் எழுப்பும் செபத்தைக் கேட்டருளும்.
அவர்களின் இதயங்களில் இருக்கும் வேதனையை
நாங்கள் புரிந்துகொள்ளவும்,
நீர் அவர்களை வரவேற்பதற்கும், உமது இரக்கத்திற்கும், நீர் அளிக்கும் குணமாக்குதலுக்கும்
அவர்கள் முன் உயிருள்ள அடையாளமாக விளங்கவும் எங்களுக்கு உதவியருளும்.

துயரத்தை எதிர்கொள்ளும் காலத்தையும் குணமடையும் பயணத்தையும்
அவர்கள் துணிவுடன் கடந்து செல்ல உதவியருளும்.
தாங்கள் தனியாக இருப்பதாக அவர்கள் ஒருபோதும் உணர அனுமதியாதேயும்;
உமது ஆவியாரின் உடனிருப்பாலும்,
கிறிஸ்துவில் அவர்களுடைய சகோதர சகோதரிகளின் உடனிருப்பாலும் அவர்களை எப்போதும் புத்துணர்வூட்டும்.

அவர்களுடைய குழந்தைகளை நீர் அன்புசெய்து பராமரிக்கிறீர் என்ற
உறுதியான நம்பிக்கையால் அவர்களுக்கு ஆறுதல் அளித்தருளும்.
அவர்களுக்குப் புதிய வலிமையை அளித்தருளும்;
அவர்கள் இழந்தவற்றுக்காகத் துயரப்படும் வேளையிலும்,
நீர் இன்னும் அவர்களுக்கென வைத்திருக்கும் எல்லா நன்மைகளையும்
அவர்கள் நம்பிக்கையோடு எதிர்நோக்குவார்களாக.

குணமளிப்பவரும் நம்பிக்கை தருபவருமான ஆண்டவரே,
எங்கள் அனைவருக்கும் எங்கள் பாவங்களின் மன்னிப்பையும்,
உமது மீட்பின் மகிழ்ச்சியையும் அளித்தருளும்.

ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் இதைக் கேட்கிறோம். ஆமென்.


மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்

மங்கள வார்த்தை அறிவிப்பு
வானதூதரின் வாழ்த்தைக் கேட்டு மரியா கலங்குகிறார்; ஆயினும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் மகிழ்கிறார். தாங்கள் கருவுற்றிருப்பதால் கலங்குவோர், கடவுளின் திருவுளத்தில் நம்பிக்கை வைக்கும் அருளைப் பெற வேண்டுவோம்.

மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்
திருமுழுக்கு யோவான் தம் தாயின் வயிற்றில் மகிழ்ச்சியால் துள்ளினார். கருக்கலைப்பு என்பது உலகிற்கு வரக்கூடிய குழந்தைகளைப் பற்றியது அல்ல, மாறாக ஏற்கெனவே உலகில் இருப்பவர்களும், தாயின் கருவறையில் உயிருடன் வளர்ந்து வருபவர்களும், கொல்லப்படுவதற்காகக் குறிக்கப்பட்டிருப்பவர்களுமான குழந்தைகளைப் பற்றியது என்பதை மக்கள் உணர வேண்டுவோம்.

இயேசுவின் பிறப்பு
கடவுளே ஒரு குழந்தையாகப் பிறந்தார். ஒருவரின் பெருமை அவரது உடல் அளவைச் சார்ந்ததல்ல; ஏனெனில் புதிதாகப் பிறந்த அரசர் மிகச் சிறியவராக இருக்கிறார். கருக்கலைப்பால் அச்சுறுத்தப்படும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு எதிரான தப்பெண்ணம் முடிவுக்கு வர வேண்டுவோம்.

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்
குழந்தை கடவுளுக்குச் சொந்தமானவர் என்பதால் கோவிலில் அர்ப்பணிக்கப்படுகிறார். குழந்தைகள் தங்கள் பெற்றோரின் சொத்தும் அல்ல, அரசாங்கத்தின் சொத்தும் அல்ல.

அவர்களும் — நாமும் — கடவுளுக்கே சொந்தமானவர்கள்.

கோவிலில் இயேசுவைக் கண்டடைதல்
சிறுவன் இயேசு கடவுளாக இருப்பதால் ஞானத்தால் நிறைந்திருந்தார். உயிரின் மாண்பைப் பற்றிய அவருடைய போதனைகளின் ஞானத்தை மக்கள் அனைவரும் கண்டுணரவும், இப்போதனை ஓர் அபிப்பிராயம் அல்ல, மாறாக உண்மை என்பதைப் புரிந்துகொள்ளவும் வேண்டுவோம்.

 

ஒளி நிறை மறையுண்மைகள்

யோர்தானில் கிறிஸ்து திருமுழுக்குப் பெறுதல்
இயேசு திருமுழுக்குப் பெறும்போது, தந்தையின் குரல் ஒலிக்கிறது: “இவரே என் அன்பார்ந்த மகன்.” திருமுழுக்கின் வழியாகக் கடவுளின் தத்துப் பிள்ளைகளாக, அவருடைய மகன்களும் மகள்களுமாக ஆக அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். கருவறையில் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்படவும், அதனால் அவர்கள் பிறந்து, திருமுழுக்கின் வழியாகக் கிறிஸ்தவச் சமூகத்தில் வரவேற்கப்படவும் வேண்டுவோம்.

கானாவூர் திருமணத்தில் கிறிஸ்து வெளிப்படுத்தப்படுதல்
கானாவூரில் நிகழ்த்திய புதுமையால் இயேசு தமது மாட்சியை வெளிப்படுத்தினார். புதுமணத் தம்பதியர் திராட்சை இரசத்தால் மட்டுமல்ல, கிறிஸ்துவில் கொண்ட நம்பிக்கையாலும் ஆசீர்வதிக்கப்பட்டனர். ஆண்டவரில் வேரூன்றி, புதிய உயிர் என்னும் கொடையை ஏற்கத் திறந்த மனம் கொண்ட உறுதியான திருமண உறவுகளுக்காக வேண்டுவோம்.

கிறிஸ்து இறையாட்சியைப் பறைசாற்றி அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைத்தல்
“மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்.” இயேசுவின் பொதுப்பணியின் இந்த முதல் வார்த்தைகளைக் கருக்கலைப்பு செய்துள்ள அனைவரும் கேட்க வேண்டுவோம். ஆண்டவர் தங்களை மனமாற்றத்திற்கு அழைக்கிறார் என்பதை அவர்கள் அறிந்து, உயிரளிக்கும் மனந்திரும்புதலை அனுபவிப்பார்களாக.

இயேசுவின் தோற்றமாற்றம்
மலையின்மீது கிறிஸ்துவின் தோற்றம் மாறுகிறது; சீடர்கள் அவருடைய மாட்சியைக் காண்கிறார்கள். ஒவ்வொரு மனித உயிரையும் கடவுளின் மாட்சியின் பிரதிபலிப்பாகக் காணும் வகையில் மக்கள் அனைவரின் பார்வையும் மாற்றம் பெறுவதாக.

இயேசு நமக்கு நற்கருணையை அளித்தல்
“இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.” எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு அன்புசெய்ய வேண்டும் என்பதை நற்கருணை நமக்குக் கற்பிக்கிறது. தங்கள் சொந்த நலனுக்காகக் குழந்தைகளைப் பலியாக்கும் பெற்றோர், அதற்கு மாறாகத் தங்கள் குழந்தைகளின் நலனுக்காகத் தங்களையே ஒதுக்கிவைக்கக் கற்றுக்கொள்ள வேண்டுவோம்.

 

துயர் நிறை மறையுண்மைகள்

தோட்டத்தில் இயேசுவின் வேதனை
ஒரு குழந்தையைக் கருக்கலைப்பு செய்யும் சோதனைக்கு உள்ளாகி வேதனைப்படும் தாய்மார்களுக்காகவும் தந்தையர்களுக்காகவும் வேண்டுவோம். வேறு வழிகள் உள்ளன என்ற நற்செய்தி அவர்களுக்கு அறிவிக்கப்படுவதாக; கிடைக்கக்கூடிய உதவிகளை அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களாக.

இயேசு சாட்டையால் அடிக்கப்படுதல்
கிறிஸ்துவைச் சாட்டையால் அடித்தவர்களின் கருவிகள் அவருடைய சதையைக் கிழித்ததுபோல, கருக்கலைப்பு செய்பவர்களின் கருவிகள் கருவறையில் உள்ள குழந்தைகளின் உடல்களைக் கிழிக்கின்றன. குழந்தைகளைக் கொல்லும் இச்செயல்களுக்காகக் கருக்கலைப்பு செய்பவர்கள் மனந்திரும்ப வேண்டுவோம்.

இயேசுவுக்கு முள்முடி சூட்டப்படுதல்
இயேசு தம் தலையில் முட்கள் ஏற்படுத்திய வேதனையை மௌனமாகத் தாங்கினார். கருக்கலைப்பால் கொல்லப்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்காகவும் தந்தையர்களுக்காகவும் வேண்டுவோம். அவர்களில் பலர், தாங்கள் ஒருபோதும் மாற்றியமைக்க முடியாத ஒரு முடிவை எண்ணி ஆழ்ந்த துயரமும் வருத்தமும் அடைகிறார்கள். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று மற்றவர்கள் சொல்வதால், பலர் மௌனமாகவே துன்புறுகிறார்கள்.

இயேசு சிலுவையைச் சுமத்தல்
தீயவர்களின் அதிகாரத்தால் இயேசு தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகவில்லை. நல்லவர்களின் மௌனத்தாலேயே அவர் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளானார். மௌனம் எப்போதும் ஒடுக்குபவருக்கே உதவுகிறது; பாதிக்கப்படுபவருக்கு ஒருபோதும் உதவுவதில்லை. கருக்கலைப்பைப் பற்றி நாம் ஒருபோதும் மௌனமாக இருக்காமல், குழந்தைகளை மரணத்திலிருந்து காப்பாற்றத் தெளிவாகக் குரல் கொடுக்க வேண்டுவோம்.

இயேசு சிலுவையில் அறையப்படுதல்
கிறிஸ்துவின் மரணத்தைச் சிந்திக்கும் வேளையில், “பாதுகாப்பான, சட்டப்பூர்வமான” என்று சொல்லப்படும் கருக்கலைப்புகளால் இறந்துபோன பல பெண்களை நினைவுகூர்வோம். அவர்களுக்காக மன்னிப்பையும் இரக்கத்தையும் வேண்டுவோம். அவர்களைப் பற்றிய நினைவு, துயரமான இந்தத் தவற்றைச் செய்வதிலிருந்து மற்ற பெண்களைக் காப்பாற்றுவதாக.

 

மகிமை நிறை மறையுண்மைகள்

இயேசுவின் உயிர்ப்பு
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்! தமது உயிர்ப்பால் அவர் மரணத்தின் வல்லமையை அழித்துவிட்டார்; எனவே கருக்கலைப்பின் வல்லமையையும் அழித்துவிட்டார். உயிரைக் காப்பதற்கான போராட்டத்தின் முடிவு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது: உயிரே வெற்றி பெற்றது! உயிர் பாதுகாப்பில் ஈடுபடும் அனைவரும் இந்த வெற்றியை நம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமும் பரப்ப வேண்டுவோம்.

இயேசுவின் விண்ணேற்றம்
தந்தையின் அரியணைக்கு ஏறிச் செல்வதன் மூலம், கருவறையில் நமக்கு அளிக்கப்பட்ட மனித இயல்பைக் கிறிஸ்து விண்ணகத்தின் உயரங்களுக்குக் கொண்டு செல்கிறார். மனிதர்கள் விண்ணகத்திற்கு உயர்த்தப்படுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள், குப்பையில் வீசப்படுவதற்காக அல்ல என்பதை அவர் நமக்குக் காட்டுகிறார். உலகம் இந்த உண்மையை அறிந்து, கருக்கலைப்பை நிராகரிக்க வேண்டுமென்று மன்றாடுவோம்.

தூய ஆவியாரின் வருகை
தூய ஆவியார் நமக்காகப் பரிந்து பேசுபவர்: நம்மை நாமே மீட்டுக்கொள்ள இயலாது என்பதால், அவர் நமக்காக வாதாடுகிறார். பேசவோ எழுதவோ வாக்களிக்கவோ எதிர்ப்புத் தெரிவிக்கவோ, ஏன், செபிக்கவோகூட இயலாத குழந்தைகளுக்காக வாதாடுபவர்களாக அவர் நம்மை மாற்ற வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

மரியாவின் விண்ணேற்பு
புனித கன்னி மரியா இறைவனின் தாய் என்பதால், உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். தாயும் குழந்தையும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டியவர்கள் என்பதை மரியாவின் விண்ணேற்பு நமக்கு நினைவூட்டுகிறது. பெண்களின் குழந்தைகளைக் கொன்றுகொண்டே அவர்களை நேசிக்க முடியாது என்பதையும், தாய்மார்களுக்கு உதவாமல் அவர்களின் குழந்தைகளைக் காப்பாற்ற முடியாது என்பதையும் சமூகம் உணர வேண்டுமென்று மன்றாடுகிறோம். உயிர் பாதுகாப்பிற்கான, “அவர்கள் இருவரையும் நாம் ஏன் நேசிக்கக் கூடாது?” என்ற கேள்வி மக்களின் உள்ளங்களைத் தொட வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

மரியாவுக்கு முடிசூட்டுதல்
மரியா அகிலத்தின் அரசி. படைக்கப்பட்ட அனைவரிலும் அவரே உயர்ந்தவர் என்றும், கடவுளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் என்றும் திருஅவை போதிக்கிறது. பெண்களின் மாண்பைத் திருஅவை பாதுகாக்கிறது. உயிருக்கு ஆதரவாக இருப்பது என்பது பெண்ணுக்கு ஆதரவாக இருப்பதே என்பதையும், பெண்ணுக்கு ஆதரவாக இருப்பதற்கு நாம் உயிருக்கு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம் என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.


வாழ்வுரிமைக்கு ஆதரவான சிலுவைப் பாதைத் தியானங்கள்

முதல் நிலை: இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது
குற்றமற்றவராக இருந்தும், அரசின் அதிகாரத்தால் இயேசுவுக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. அதேபோல, கருவறையில் இருக்கும் குற்றமற்ற நம் சகோதர சகோதரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உரிமைகளும் மாண்பும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதில் அவர்கள் இயேசுவுடன் ஒரு சிறப்பான ஒற்றுமையைக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாம் நிலை: இயேசு தமது சிலுவையைச் சுமக்கச் செய்யப்படுகிறார்
உலகின் மீட்புக்காக நம் ஆண்டவர் மிகப் பெரிய விலையாகச் சிலுவையின் கொடிய வேதனையை ஏற்க வேண்டியிருந்தது. அவர் தமது சிலுவையை ஏற்றுக்கொள்ளும்போது, பிறர் வாழ்வதற்காக நாமும் துன்பத்தைத் தாங்கிக்கொள்ளத் தீர்மானிப்போம். இன்னும் பிறக்காத நம் சகோதர சகோதரிகளுக்காகக் குரல் கொடுப்பதால் ஏற்படும் இழப்புகளை ஏற்றுக்கொள்வோம்.

மூன்றாம் நிலை: இயேசு முதல் முறை கீழே விழுகிறார்
எல்லாம் வல்ல கடவுள் நம்மைப் போல இருக்கத் திருவுளம் கொண்டதால் வலுவற்றவரானார். என்றென்றும் வல்லமையும் மாட்சியும் கொண்டிருந்தும், துன்பம் நிறைந்த உலகில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள அவர் திருவுளம் கொண்டார். வாழ்வில் நமக்குள்ள நலன்களும் வசதிகளும், இன்னும் பிறக்காத நம் சகோதர சகோதரிகளை நாம் மறந்துவிடக் காரணமாகிவிடக் கூடாது என்று மன்றாடுகிறோம்.

நான்காம் நிலை: இயேசு துயருற்ற தம் தாயைச் சந்திக்கிறார்
தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவைவிட ஆழமான உறவு வேறெதுவும் இல்லை. அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டியவர்கள். ஒருவர் துன்புறும்போது மற்றவரும் துன்புறுகிறார். ஒருவரை நேசித்துப் பாதுகாப்பது என்பது மற்றவரையும் நேசித்துப் பாதுகாப்பதாகும். உயிருக்கு ஆதரவாக இருப்பது என்பது குழந்தைக்கும் தாய்க்கும் பணிசெய்வதாகும். “அவர்கள் இருவரையும் நாம் ஏன் நேசிக்கக் கூடாது?” என்று நம் சமூகத்தைக் கேட்பதாகும்.

ஐந்தாம் நிலை: சிரேனே ஊரார் இயேசு சிலுவையைச் சுமக்க உதவுகிறார்
ஆண்டவர் துன்புறுவதைப் பலர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் அந்தத் துன்பத்தைக் குறைக்க உதவினார். கருக்கலைப்பைக் குறித்துப் பலர் வருந்துகிறார்கள். சிலரோ அதைத் தடுத்து நிறுத்த உதவுவதற்காக உண்மையிலேயே செயல்படுகிறார்கள். மக்கள் அனைவரும் உயிர் பாதுகாப்பு இயக்கத்தில் தங்களுக்குரிய பங்கைச் செயல்முறையில் ஆற்ற வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

ஆறாம் நிலை: வெரோணிக்கா இயேசுவின் முகத்தைத் துடைக்கிறார்
வெரோணிக்கா காட்டும் பரிவு, தங்கள் நோயாளிகளை மாண்புடன் நடத்தும் எண்ணற்ற மருத்துவர்களும் செவிலியர்களும் காட்டும் பரிவைப் பிரதிபலிக்கிறது. மருத்துவத் துறையில் மனமாற்றமும் புதுப்பித்தலும் ஏற்பட வேண்டுமென்று மன்றாடுகிறோம். குணப்படுத்துவதற்காக உள்ள கருவிகளும் திறன்களும் இனி ஒருபோதும் கொல்வதற்குப் பயன்படுத்தப்படாதிருக்கட்டும்.

ஏழாம் நிலை: இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்
உயிரைப் பாதுகாக்கும் பணியில் பல பின்னடைவுகளும் தடைகளும் உள்ளன. இருந்தாலும், சிலுவையின் பொருளை நாம் அறிவோம். வலுவின்மையில் வல்லமை நிறைவடைகிறது. நம்முடைய வலிமையையும் திறமைகளையும் மட்டுமே நாம் நம்பியிருக்காமல், கிறிஸ்துவையே நம்பியிருக்கிறோம். அவரது வல்லமையே நம்மைத் தாங்கும்.

எட்டாம் நிலை: இயேசு எருசலேம் பெண்களிடம் பேசுகிறார்
தங்களுக்காகவும் தங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுமாறு கிறிஸ்து இந்தப் பெண்களிடம் கூறினார். அவர் விரும்புவது போலியான வழிபாட்டை அல்ல, மனமாற்றத்தையே. தம்மை நோக்கிக் கூக்குரலிட்டுவிட்டு, அநீதியையும் இரத்தம் சிந்தப்படுவதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் சீடர்களை அவர் விரும்புவதில்லை. கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்ட அனைவரும் அவ்வாறே தற்காத்துக்கொள்ள இயலாத குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்கட்டும்.

ஒன்பதாம் நிலை: இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்
கீழே விழுந்தாலும், நம் ஆண்டவரை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது; ஏனெனில் அவர் அன்பின் பணியை நிறைவேற்றச் செல்கிறார். உயிர் பாதுகாப்பு இயக்கம் அன்பின் இயக்கமாக இல்லையென்றால், அது ஒன்றுமே இல்லை; ஆனால் அது அன்பின் இயக்கமாக இருந்தால், எதுவும் அதைத் தடுத்து நிறுத்தாது. அன்பு மரணத்தைவிட வலிமையானது, நரகத்தைவிட ஆற்றல் மிக்கது.

பத்தாம் நிலை: இயேசுவின் ஆடைகள் களையப்படுகின்றன
இன்னும் பிறக்காத நம் சகோதர சகோதரிகளை நாம் நேசிப்பதை யாராலும் தடுக்க முடியாது. நம்மைவிட வலிமை மிக்கவர்கள் நம் புகழையோ உடைமைகளையோ அதிகாரத்தையோ பறித்துக்கொள்ளலாம்; ஆனால் நம் அன்பைப் பறித்துக்கொள்ள முடியாது. கிறிஸ்து நம்மீது காட்டிய அதே அன்பால் நாம் பிறரை நேசிக்கிறோம்.

பதினொன்றாம் நிலை: இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்
இந்த உலகைப் படைத்த கடவுளை இவ்வுலகின் அதிகார சக்திகள் சிலுவையில் அறைந்தன. எல்லா வல்லமையும் அதிகாரமும் கடவுளிடமிருந்தே வருகின்றன. அதிகாரத்தைச் செலுத்தும் அனைவரும் கடவுளின் அரியணை முன் அதற்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், கருவறையில் இருக்கும் குற்றமற்ற குழந்தைகளைப் பாதுகாக்கத் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

பன்னிரண்டாம் நிலை: இயேசு சிலுவையில் உயிர்விடுகிறார்
நம் ஆண்டவர் உயிர்விட்டார். அவருடைய பிள்ளைகளில் எத்தனையோ பேர் அவரோடு உயிர்விட்டுள்ளனர். ஒவ்வொரு கருக்கலைப்பிலும் அவரது பாடுகள் மீண்டும் நிகழ்கின்றன; நம் நாட்டில் இருபது நொடிகளுக்கு ஒரு கருக்கலைப்பு நிகழ்கிறது. கடவுளின் பார்வையில் இந்தச் செயல் எவ்வளவு கொடூரமானது என்பதில் ஒரு சிறு பகுதியையே நாம் அறிந்திருக்கிறோம். கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதன் கொடூரத்திலும் ஒரு சிறு பகுதியையே நாம் அறிந்திருக்கிறோம். கருக்கலைப்பால் கொல்லப்பட்ட நம் சகோதர சகோதரிகள் அனைவரும் கிறிஸ்துவின் அமைதியில் இளைப்பாறி, அவரது சிலுவையால் மீட்புப் பெறுவார்களாக.

பதின்மூன்றாம் நிலை: இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்படுகிறார்
உயிரற்ற தம் மகனை மடியில் தாங்கிய வேதனையை மரியா அனுபவித்தார். கருக்கலைப்புக்குப் பின் எத்தனையோ தாய்மார்கள் துயருறுகின்றனர். மரியா அவர்களுக்கு ஆறுதல் அளித்து, கருக்கலைப்பைப் பற்றிய உண்மையை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவி செய்து, மன்னிப்பையும் குணமடைதலையும் நோக்கி அவர்களை வழிநடத்த வேண்டுமென மன்றாடுகிறோம்.

பதினான்காம் நிலை: இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்
கல்லறை ஒரு நினைவுச் சின்னம். இனி பேச இயலாதவரை நினைவுகூர அது நமக்கு உதவுகிறது. நாமும் நம் சமூகமும் பேச இயலாத குழந்தைகளை நினைவுகூர்வோமாக. நம் ஆண்டவரின் உயிர்ப்பையும், நிலைவாழ்வு குறித்த அவரது வாக்குறுதியையும் நாம் நினைவுகூர்வோமாக. அவர் சாவை வென்றதால் கருக்கலைப்பையும் வென்றுவிட்டார். அவரது வெற்றியை நம் உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச் செல்வோமாக!


தகவல் வளங்கள்:

ஏராளமான தகவல் வளங்கள்: priestsforlife.org

முடிவுக்கு வந்த ரோ: marchforlife.org

உங்கள் மாநிலத்தில் உள்ள சட்டங்கள் என்ன?: familypolicyalliance.com

ரோ எதிர் வேட் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டதற்கு வத்திக்கானின் பதிலுரை

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆயர்களின் பதிலுரை

கருக்கலைப்புக்குப் பின் நம்பிக்கை
ராக்கேல் திட்டம்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: