தமிழ்

கே. கடந்த காலப் பாவங்களை நான் பாவசங்கீர்த்தனத்தில் அறிக்கையிட வேண்டுமா?

கே. எனக்கு வயது 64. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருக்கக்கூடிய பாவங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து, அவற்றைப் பாவசங்கீர்த்தனத்தில் அறிக்கையிட்டேனா என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். இனி நான் எவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்?

ப. நாம் ஒரு அருள்பணியாளரிடம் பாவசங்கீர்த்தனம் செய்யும்போது, அண்மையில் செய்த பாவங்களைச் சொல்லி முடித்த பிறகு, பின்வருவதைப் போன்ற வார்த்தைகளைச் சேர்த்துச் சொல்வது நல்லது: “என் கடந்தகால வாழ்வின் அனைத்துப் பாவங்களுக்காகவும்”“நான் மறந்திருக்கக்கூடிய எந்தப் பாவங்களுக்காகவும்.”  இதனால், நாம் வேண்டுமென்றே சில பாவங்களைப் பாவசங்கீர்த்தனத்தில் சொல்லாமல் விட்டுவிடலாம் என்றோ, அவற்றைத் தெளிவாகவும் குறிப்பாகவும் சொல்லாமல் இருக்கலாம் என்றோ பொருளல்ல. ஒரு பாவத்தைச் சொல்ல மறந்துவிட்டாலும், நல்ல பாவசங்கீர்த்தனத்தில் அதுவும் மன்னிக்கப்படுகிறது. இதுவரை அறிக்கையிடாத ஒரு கனமான பாவம் பின்னர் உங்களுக்குத் தெளிவாக நினைவுக்கு வந்தால், அடுத்த பாவசங்கீர்த்தனத்தில் அதைச் சொல்லுங்கள். நீங்கள் ஏற்கெனவே அறிக்கையிட்ட பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்று நம்பலாம்.

கடந்தகாலப் பாவங்கள், வெகுகாலத்திற்கு முன்பு செய்த பாவங்கள்கூட, இன்னும் நம் நினைவில் இருந்தால் அவை உண்மையிலேயே மன்னிக்கப்பட்டுவிட்டனவா என்ற கவலையும் உங்கள் கேள்வியில் ஓரளவு இருக்கலாம். அந்தக் கவலையைப் பற்றிச் சுருக்கமாகப் பேசுகிறேன். அருளடையாளங்களுக்கு ஒரு நோக்கம் உண்டு. நினைவாற்றலுக்கு வேறொரு நோக்கம் உண்டு. பாவசங்கீர்த்தன அருளடையாளம் ஒருவகையான மூளைச்சலவை அல்ல. அது நம் மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஓர் அடைப்பைத் திறந்து, நம் நினைவுகள் அனைத்தையும் வெளியே வடித்துவிடுவதில்லை. சில வேளைகளில் நம் கடந்தகாலப் பாவங்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த பாவங்கள்கூட, நம் நினைவுக்கு வருகின்றன. கடந்தகாலப் பாவ நிகழ்வுகளின் சுவடுகளாக நம் நினைவில் எஞ்சியிருக்கும் காட்சிகளுக்கு இறையியல் அடிப்படையில் எந்தப் பொருளும் இல்லை. நினைவுகள் நரம்பியல் அல்லது உளவியல் சார்ந்த உண்மைநிலை. பாவசங்கீர்த்தனம் இறையியல் சார்ந்த உண்மைநிலை.

நம் பாவங்களை அறிக்கையிட்டு அவற்றுக்கு மன்னிப்புப் பெறுவதே உண்மையில் இருக்கின்ற காலப் பயணத்தின் ஒரே வடிவம். காலத்தில் பின்னோக்கிச் செல்வதற்கான வழிகளை எழுத்தாளர்களும் திரைக்கதை ஆசிரியர்களும் எத்தனையோ கற்பனை வளமிக்க முறைகளில் சித்தரிக்க முயன்றிருந்தாலும், இறையியல் அடிப்படையில் மட்டுமே நம்மால் அவ்வாறு செல்ல முடியும். அருள்பணியாளர் கூறும் பாவமன்னிப்பு வார்த்தைகள் காலத்தில் பின்னோக்கிச் செல்கின்றன. அந்தத் தருணத்தில் அருள்பணியாளர் கிறிஸ்துவின் பதிலாளராகச் செயல்படுவதால், காலத்தைக் கடந்து, அதற்கு அப்பாற்பட்டு இருக்கும் கடவுளின் வல்லமையுடன் செயல்படுகிறார். கடவுள் காலத்தைப் படைத்தார்; அவர் காலத்திற்குக் கட்டுப்பட்டவர் அல்ல. “உங்கள் பாவங்களிலிருந்து நான் உங்களை விடுவிக்கிறேன்” என்று அருள்பணியாளர் கூறும் வார்த்தைகள் வழியாகக் கிறிஸ்து நம் பாவங்களின் குற்றப்பழியை மன்னித்து, அவற்றுக்குரிய நித்திய தண்டனை எதுவாயினும் அதை நீக்குகிறார். தற்காலிகத் தண்டனை எஞ்சியிருக்கலாம். நீங்கள் மனிதர் என்பதால் உங்கள் பாவங்கள் இன்னும் உங்கள் நினைவில் இருக்கலாம். உங்கள் பாவங்கள் கடவுளின் நினைவில் இல்லை. இறுதியாக, கடந்த காலப் பாவங்களை அறிக்கையிட்டுவிட்ட பின்னரும் அவற்றின் நினைவு உங்களைத் தொந்தரவு செய்தால், ஒன்றை மனதில் கொள்ளுங்கள்: உங்கள் பாவத்தின் நினைவோடு, அதே அளவு தெளிவான மற்றொரு நினைவும் இருக்க வேண்டும் — நீங்கள் பாவசங்கீர்த்தனம் செய்த நினைவு. அதுவும் நடந்ததுதானே!


மேலும் கத்தோலிக்கக் கேள்விகளும் பதில்களும்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: