தமிழ்

குருக்களுக்கான செபங்கள்

குருவின் செபம்

ஆண்டவரே, நீர் என்னைக் குருத்துவப் பணிக்கு அழைத்துள்ளீர்,
வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில்,
முதல் திருத்தூதர்களின் காலத்தில் இருந்ததுபோல,
கிறிஸ்தவர்கள் அனைவரும்,
குறிப்பாக உம் அருள்பணியாளர்களும்,
கடவுளின் வியத்தகு செயல்களுக்கும்
உம் ஆவியாரின் வல்லமைக்கும் சாட்சிகளாக இருக்க வேண்டுமென நீர் விரும்புகின்ற இக்காலத்தில்.
 
மனித வாழ்வின் மாண்புக்கும்,
அன்பின் மேன்மைக்கும்,
நான் பெற்றுள்ள திருப்பணியின் வல்லமைக்கும் சாட்சியாக இருக்க எனக்கு அருளும்.
என் வாழ்வு முழுவதும் உமக்கு அர்ப்பணிக்கப்படுவதாக:
அன்பிற்காக, அன்பிற்காக மட்டுமே, இன்னும் மேலான அன்பிற்காக.
 
கற்புநிலையில் வாழ்வதற்கான எனது அர்ப்பணிப்பு,
உமது திருப்பணியிலிருந்து பிறந்ததாய்,
மகிழ்வும் மனநிறைவும் கொண்ட உறுதிப்பாடாகவும்,
பிறருக்காக என்னையே முழுமையாக அர்ப்பணிப்பதாகவும்,
உமது திருஅவையின் பணியில் விளங்குவதாக.
என் வலுவின்மையில் எனக்கு வலிமையையும்,
எனது உறுதிநிலைக்காக நன்றியுணர்வையும் தந்தருளும்.
 
தூய அன்னை மரியே,
எக்காலத்திலும் மிக உயர்ந்தவரும் வியப்புக்குரியவருமான அன்னையே,
ஒவ்வொரு நாளும் என் வாழ்வை உம்மிடம் ஒப்படைக்க எனக்கு அருளும்.
தாராள மனத்தின், அர்ப்பணிப்பின் ஊற்றாகிய மரியே,
நான் உம்மோடு இணைந்திருக்க அருளும்,
உலகின் மிகப் பெரும் சிலுவைகளின் அடியில்,
உம் திருமகனின் இறப்பால் வரும் மீட்பளிக்கும் வேதனையை அனுபவித்து,
உயிர்ப்பின் வெற்றியில் நான் மகிழ்ந்திருக்கும்படி,
நிலைவாழ்வைப் பெறுவதற்காக. ஆமென்
 
* * *
 
அருள்பணியாளர்கள் அன்றாடம் சொல்லக்கூடிய ஒரு செபம்
 
எல்லாம் வல்ல இறைவா, பணிக்குருத்துவத்தில் நாங்கள் முழுத் தூய்மையுடனும் நல்மனச்சான்றுடனும் தகுதியோடும் பக்தியோடும் உமக்குப் பணிபுரிய உமது அருள் எங்களுக்குத் துணைபுரிய வேண்டுமென்று மன்றாடுகிறோம். இத்தகைய மாசின்மையோடு எங்கள் வாழ்வை நடத்த இயலாவிட்டால், நாங்கள் செய்த தீமைகளுக்காக மனம் நொந்து கண்ணீர் சிந்த அருளும். தாழ்ச்சி நிறைந்த உள்ளத்துடனும் நன்மையை நாடும் நேரிய நோக்கத்துடனும் நாங்கள் எப்போதும் ஆர்வமுடன் உமக்குப் பணிபுரிய அருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
 
வேண்டுதல்
 
நல்ல இயேசுவே, உமது இதயத்திற்கேற்ற குருவாக என்னை உருவாக்கும்.
 
இயேசு கிறிஸ்துவை நோக்கிய செபம்
 
மிகவும் அன்பிற்குரிய இயேசுவே, தனிப்பெரும் பரிவுடன் ஆயிரக்கணக்கான மனிதர்களிடமிருந்து என்னைத் தேர்ந்தெடுத்து, குருத்துவ மாண்பின் மேன்மையில் உம்மைப் பின்பற்ற அழைத்துள்ளீர். எனது திருப்பணியை முறையாக நிறைவேற்றத் தேவையான இறைவலிமையை உம்மிடம் கெஞ்சிக் கேட்கிறேன். ஆண்டவர் இயேசுவே, ஆயர் என்மீது கைகளை விரித்து வைத்ததன் வழியாக எனக்கு அளிக்கப்பட்ட அருளை நாள்தோறும் புதுப்பிக்குமாறு உம்மை இறைஞ்சுகிறேன். ஆன்மாக்களின் வல்லமைமிக்க மருத்துவரே, நான் மீண்டும் தீமையில் விழாமல், எல்லாப் பாவங்களையும் விட்டு விலகி, எனது இறுதி நேரம்வரை உமது பார்வைக்கு உகந்தவற்றையே செய்யுமாறு என்னைக் குணமாக்கும். ஆமென்.
 
கற்பைக் காத்துக்கொள்ளும் அருளை இறைஞ்சும் செபம்
 
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, என் ஆன்மாவின் மணவாளரே, என் இதயத்திற்கும் ஆன்மாவிற்கும் மகிழ்ச்சியானவரே, உமக்கு முன்பாக முழந்தாளிட்டு, உண்மையான விசுவாசத்தில் ஒவ்வொரு நாளும் நிலைத்திருந்து வளர என்னை அனுமதிக்குமாறு ஊக்கமுடன் செபித்து உம்மை இறைஞ்சுகிறேன். இனிய இயேசுவே, இறைப்பற்றின்மை அனைத்தையும் நான் விலக்கவும், என் ஆன்மாவிற்கு எதிராகப் போராடும் உடல் இச்சைகளுக்கும் உலக இச்சைகளுக்கும் இடமளிக்காதவனாக இருக்கவும் அருளும். உமது துணையால் என் கற்பைக் களங்கமின்றிக் காத்துக்கொள்வேனாக.
 
மிகவும் புனிதமும் அமலமுமான கன்னி மரியே, கன்னியருக்கெல்லாம் கன்னியே, மிகவும் அன்பிற்குரிய அன்னையே, நாள்தோறும் என் இதயத்தையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும்; ஆண்டவர்மீது புனிதமான அச்சத்தையும், குறிப்பாக என் சொந்த வலிமையை நம்பியிராத மனநிலையையும் எனக்குப் பெற்றுத்தாரும்.
 
மரியாவின் கன்னிமையின் காவலரான புனித சூசையப்பரே, என் ஆன்மாவை எல்லாப் பாவங்களிலிருந்தும் காத்தருளும்.
 
இறை ஆட்டுக்குட்டியை இடைவிடாது பின்பற்றும் புனித கன்னியர் அனைவரும், பாவியாகிய என்மீது அக்கறை காட்டுங்கள். எண்ணங்களாலும் சொற்களாலும் செயல்களாலும் செய்யக் கடமைப்பட்டவற்றைச் செய்யத் தவறுவதாலும் நான் பாவம் செய்யாமல் இருக்கவும், இயேசுவின் மிகக் கற்புள்ள இதயத்தை விட்டு ஒருபோதும் அகலாமல் இருக்கவும் எனக்குத் துணைபுரியுங்கள். ஆமென்.
 
* * *
 
குருக்களுக்காகச் செபம்
 
மகா பரிசுத்த நற்கருணையில் பிரசன்னமாயிருக்கும் ஆண்டவர் இயேசுவே,
உமது குருக்கள் வழியாக எங்களிடையே என்றும் வாழ்பவரே,
உமது குருக்களின் சொற்கள் உமது சொற்களாக மட்டுமே இருக்க அருளும்,
அவர்களது சைகைகள் உமது சைகைகளாக மட்டுமே இருக்கவும்,
அவர்களது வாழ்வு உமது வாழ்வின் உண்மையான பிரதிபலிப்பாக இருக்கவும் அருளும்.
 
இறைவனுடைய மக்களின் சார்பாக அவரிடம் பேசுபவர்களாக அவர்கள் இருக்க அருளும்,
இறைவனைப் பற்றி அவருடைய மக்களிடம் பேசுபவர்களாகவும் இருக்க அருளும்.
பணிபுரிவதில் அவர்கள் துணிவுள்ளவர்களாக இருக்க அருளும்,
திருஅவை தமக்குச் செய்யுமாறு கேட்கும் விதத்தில் அதற்குப் பணிபுரிய அருளும்.
 
நம் காலத்தில் நித்திய வாழ்வுக்குச் சான்று பகர்பவர்களாக அவர்கள் இருக்க அருளும்,
வரலாற்றுப் பாதைகளில் உமது அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கவும்,
அனைவருக்கும் நன்மை செய்யவும் அருளும்.
 
தாங்கள் ஏற்றுக்கொண்ட கடமைகளுக்கு அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருக்க அருளும்,
தங்கள் அழைப்பிலும் மறைப்பணியிலும் ஆர்வமுள்ளவர்களாக இருக்கவும்,
தங்களது அடையாளத்தைத் தெளிவாகப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக இருக்கவும்,
தாங்கள் பெற்றுக்கொண்ட கொடையின் மகிழ்ச்சியில் வாழவும் அருளும்.
 
உமது புனித அன்னை மரியா,
உமது வாழ்நாள் முழுவதும் உம்முடன் இருந்ததுபோல,
உமது குருக்களின் வாழ்விலும் என்றும் உடனிருக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம். ஆமென்

© பதிப்புரிமை 2008 – வத்திக்கான் பதிப்பகம்
வெளியிட்டது: குருக்களுக்கான பேராயம்
குருக்கள் புனிதமடைவதற்கான உலக செப நாளை முன்னிட்டு, குருக்களுக்கான பேராயம் தனது செய்தியுடன் வெளியிட்ட மூன்று செபங்கள். இயேசுவின் திருஇதயப் பெருவிழாவான ஜூன் 11 அன்று இந்நாள் கொண்டாடப்படும்.
வெளியீட்டாளர் & தேதி
வத்திக்கான், ஏப்ரல் 22, 2008
குருக்கள் புனிதமடைவதற்கான உலக செப நாளை முன்னிட்டு குருக்களுக்கான பேராயம் வெளியிட்ட செய்தியைக் காண்க.

மேலும் செபங்கள்

அன்றாடச் சிந்தனைகள்

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: