சிறுவயதில் நாம் முதலில் கற்றுக்கொள்ளும் செபங்களில் ஒன்று ஆண்டவர் கற்பித்த செபம். “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே” என்ற நெருக்கம் நிறைந்த தொடக்கம், இந்தச் செபத்தை நம் தனிப்பட்ட உறவின் வெளிப்பாடாக ஆக்குகிறது. கடவுளை அனைத்தையும் கடந்த, எல்லாம் வல்லவராக மட்டுமல்லாமல், நம் விண்ணகத் தந்தையாகவும் காண உதவுகிறது. நாம் அவருக்குச் சொந்தமானவர்களாக இருப்பதால், அவரது குடும்பத்தின் உறுப்பினர்களாகிறோம்.
ஆண்டவர் கற்பித்த செபம், இயேசுவே நமக்குக் கற்றுக்கொடுத்த செபமாகும். ஆனால், அது நமக்கு மிகவும் பழக்கமானதாக இருப்பதால், அதன் பொருளை முழுமையாக உணராமலேயே நாம் அதைச் சொல்லக்கூடும்.
ஆண்டவர் கற்பித்த செபத்தை நீங்கள் செபிக்கும்போது, அதன் ஒவ்வொரு மன்றாட்டின் ஆழத்தையும் எந்த அளவுக்கு முழுமையாக உணர்கிறீர்கள்? இயேசுவின் நிறைவான செபத்தைப் பற்றிய புரிதலில் வளர்ந்து, அவர் விரும்பிய முறையில் அதைச் செபிப்பதன் வழியாக, நம் அன்புக் கடவுளோடு நம் ஆன்மாக்களை இன்னும் நெருக்கமாக ஒன்றிணைக்க முடியும்.
ஆண்டவர் கற்பித்த செபம்: விருப்பங்களைப் பயிற்றுவிக்கும் பள்ளி
புனித அகுஸ்தினார் மற்றும் புனித தாமஸ் அக்குவினார் ஆகியோரின் கருத்துப்படி, ஆண்டவர் கற்பித்த செபம் வெறும் சொற்களின் தொகுப்பு அல்ல; அது நம் விருப்பங்களைப் பயிற்றுவிக்கும் பள்ளியாகும். அனைத்திற்கும் மேலாகக் கடவுளையும் அவரது திருவுளத்தையும் நாடி ஏங்குமாறு அது நம் ஆன்மாக்களை உருவாக்குகிறது. எதைக் கேட்க வேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது; சரியானவற்றை விரும்புமாறு நம் ஆன்மாக்களைப் பண்படுத்துகிறது; கடவுளின் முன்னிலையில் நம் விருப்பங்கள் எந்த முறையில் அமைந்திருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு மன்றாட்டும் நாம் நாட வேண்டியவற்றைக் கேட்பதாக மட்டுமல்லாமல், நம் உள்ளத்தின் பற்றுதல்களை மீண்டும் ஒழுங்குபடுத்தும் வழியாகவும் அமைகிறது. இவ்வாறு, கடவுள் அன்பு செய்வதுபோல் அன்பு செய்யவும், முழுமையாக நம்பவும், முற்றிலும் நம்மை ஒப்படைக்கவும் நம்மைப் பயிற்றுவிக்கிறது.
இந்த மாற்றத்திற்கு உதவியாக, இந்நூல் எளிய மூன்று கூறுகளைக் கொண்ட ஒரு வழிமுறையை முன்வைக்கிறது:
- அறிவைப் பண்படுத்துதல்: ஒவ்வொரு மன்றாட்டையும் ஆராய்வதன் வழியாக, இயேசு வெளிப்படுத்திய உண்மைகளை நாம் புரிந்துகொள்கிறோம்.
- விருப்பத்தை இசைவாக்குதல்: இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு, நம்பிக்கையோடு அறிக்கையிடுவதன் வழியாக, அருளின் துணையுடன் அவற்றைத் தேர்ந்துகொள்ளத் தொடங்குகிறோம்.
- ஆசைகளை மாற்றியமைத்தல்: அருளின் துணையுடன், நம்பிக்கையையும் அன்பையும் வெளிப்படுத்தும் செயல்களை மீண்டும் மீண்டும் செய்வதன் வழியாக, நற்பண்புகளை வளர்த்துக்கொள்கிறோம். காலப்போக்கில், ஆண்டவர் கற்பித்த செபம், நாம் சொல்லும் சொற்களாக மட்டுமே இல்லாமல், புனிதமடைந்த நம் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மாறுகிறது.
இந்நூலின் அமைப்பு
ஒன்பது அத்தியாயங்கள், ஒரு முடிவுரை, செபங்கள் மற்றும் ஒரு பின்னிணைப்பு ஆகியவற்றின் வழியாக, ஆண்டவர் கற்பித்த செபத்தின் ஆன்மிக மற்றும் இறையியல் வளத்தை இந்நூல் முழுமையாக வெளிக்கொணர்கிறது:
- முன்னுரை: ஆண்டவர் கற்பித்த செபத்தின் இறையியல் பின்னணியையும் அமைப்பையும் விளக்குகிறது.
- அத்தியாயங்கள் 1–2: கடவுள் யார் என்பதும், “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே” என்பதன் பொருளும்.
- அத்தியாயங்கள் 3–9: ஏழு மன்றாட்டுகள் ஒவ்வொன்றும் ஆழமாக ஆராயப்படுகின்றன.
- முடிவுரையும் சுருக்கமும்; அவற்றைத் தொடர்ந்து, ஆண்டவர் கற்பித்த செபத்தைப் பற்றிய சிந்தனைகளை வழங்கும் ஒரு தியானமும் செபங்களும்.
- பின்னிணைப்பு: புனித அகுஸ்தினார் மற்றும் புனித தாமஸ் அக்குவினார் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்புகள்
ஒவ்வொரு அத்தியாயமும் மறைநூல், இறையியல், ஆன்மிகச் சிந்தனை மற்றும் நடைமுறைப் பயன்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்தபடி செபிப்பதற்கான முழுமையான வழிகாட்டுதலை வழங்குகிறது.

மென் அட்டைப் பதிப்பு – Kindle மின்னூல் – Audible – Google Play – Apple Books – மேலும் பல தளங்களில்!
