
“உழைத்துக் களைத்துச் சுமைகளால் அழுந்தியிருப்பவர்களே, நீங்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்; அப்போது நீங்கள் இளைப்பாறுதல் காண்பீர்கள். ஏனெனில் என் நுகம் சுமக்க எளிதானது; என் சுமையும் இலகுவானது.” மத்தேயு 11:28-30
சிலுவையின் பாரத்தால் இயேசு தரையில் விழுந்தார். இயேசு தம் சிலுவையைச் சுமக்க உதவுமாறு அயல்நாட்டவரான சீமோன் கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால் சீமோனின் உதவி இருந்தபோதிலும், இயேசு மீண்டும் மீண்டும் விழுகிறார்.
உடல் சோர்ந்து, தொடர்ந்து நடக்கவும் இயலாத நிலையில் தம் மகன் மூன்று முறை தரையில் விழுந்ததை நம் அன்னை மரியா துயரத்துடன் பார்த்தபோது, இயேசு தமது பொதுப்பணியின் தொடக்கத்தில் கூறிய வார்த்தைகளை அவர் நினைவுகூர்ந்திருக்கலாம்: “உழைத்துக் களைத்து, சுமைகளால் அழுந்தியிருப்பவர்களே, நீங்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” இந்த வார்த்தைகள் அவரது மாசற்ற இதயத்தில் எதிரொலிப்பதை அவர் எவ்வளவு ஆழமாக உணர்ந்திருப்பார்! “என் மகனே, என் அன்பு மகனே, என்னிடம் வா, என் இதயத்திடம் வந்து இளைப்பாறு.”
தம் மகன் சிலுவையைச் சுமக்க உடலளவில் உதவ முடியாவிட்டாலும், இயேசு தொடர்ந்து செல்ல உதவுவதற்காகக் காவலர்கள் சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோனைக் கட்டாயப்படுத்தியதைக் கண்டபோது, அன்னையின் உள்ளம் மிகுந்த நன்றியால் நிறைந்திருக்கும். சீமோன் விருப்பமின்றி உதவியபோதிலும், அவரது உதவி ஒளிமிக்க ஒரு சாட்சியாக விளங்கியது. சீமோன் வழியாகத் தம் இதயத்தின் வேண்டுதலுக்குப் பதில் கிடைத்ததை நம் அன்னை மரியா அறிந்தார். விண்ணகத் தந்தை இந்த அயல்நாட்டவரின் துணையோடு, சிலுவையின் பாரத்தைச் சுமக்க இயேசுவுக்கு உதவுகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார்.
அன்னை மரியா இயேசுவின் சிலுவைக்கு முன்னால் நின்று, சீமோன் செய்த உதவியை நினைவுகூர்ந்தபோது, அவர் மக்கள் அனைவருக்கும் வலிமையானதோர் எடுத்துக்காட்டைத் தந்துள்ளார் என்பதை அறிந்திருப்பார். சீமோனின் செயலைக் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ஓர் அடையாளமாக அவர் சிந்தித்துப் பார்த்திருப்பார். கிறிஸ்துவின் சிலுவையைச் சுமக்க உதவ நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம். சிலுவையிலிருந்து யாருக்கும் விலக்கு இல்லை. “என்னைப் பின்பற்ற விரும்புகிறவர் தன்னையே மறுத்துத் தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும்” (மத்தேயு 16:24) என்று கூறியபோது, இயேசுவே நமக்குச் சிலுவையை வாக்களித்தார். சிலுவை என்பது நாம் விரும்பினால் மட்டும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல; அது வாழ்வின் ஓர் உண்மை. குறிப்பாக, மரணம் என்னும் சிலுவையும் அத்தகையதே.
சிலுவையை நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்வோமா அல்லது மனக்கசப்புடன் ஏற்றுக்கொள்வோமா என்பதே அனைவருக்கும் முன் நிற்கும் உண்மையான கேள்வி. சிலுவையின் பெருஞ்சுமையைத் தூக்க நம் அன்னை மரியா முழு உள்ளத்தோடும் விரும்பினார். சீமோன் தயக்கத்துடன் அவ்வாறு செய்தபோதிலும், அவர் உதவுவதென முடிவெடுத்து, தேவைப்பட்ட நேரத்தில் பணிபுரிந்தார்.
பிறர் தங்கள் வாழ்வில் சுமக்கும் பெருஞ்சுமைகளைப் பற்றி இன்று சிந்தியுங்கள். அவர்களைக் கண்டு, அவர்களுடைய போராட்டங்களை அறியும்போது, உங்கள் பதில் என்னவாக இருக்கிறது? அவர்களிடமிருந்து விலகி, அவர்களுடைய போராட்டத்திலிருந்து ஓடிவிடுகிறீர்களா? அல்லது அவர்கள் சுமக்கும் சிலுவையை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவர்களை நோக்கிச் செல்கிறீர்களா? சீமோன் சிலுவையைச் சுமந்த செயலைப் பின்பற்ற முயலுங்கள். நிறைவான அன்போடு அவ்வாறே செய்ய வேண்டுமென்ற நம் அன்னை மரியாவின் தணியாத ஆவலைப் பின்பற்ற முயலுங்கள். தயக்கமின்றி அவ்வாறு செய்யுங்கள்; பிறருடைய சுமையை நீங்கள் குறைக்கும்போது, கிறிஸ்துவின் சிலுவையின் இனிமையைக் கண்டறிவீர்கள்.
என் பேரன்புக்குரிய அன்னையே, உம் மகன் தமது சிலுவையைச் சுமக்க உதவுவதற்காகச் சீமோன் கட்டாயப்படுத்தப்பட்டதை நீர் கண்டபோது, உமது இதயம் நன்றியால் நிறைந்தது. உம் மகன் தொடர்ந்து செல்வதற்குத் தேவையான உடல் வலிமையைத் தந்தை வழங்கியபோது, உமது வேண்டுதலுக்குப் பதில் கிடைத்தது. சீமோன் அந்த வலிமையாகவும், பிறருக்குச் செய்யும் பணியின் அடையாளமாகவும் ஆனார்.
அன்பு அன்னையே, என் வாழ்வில் உதவி தேவைப்படுவோர் யார் என்பதை எனக்குக் காட்டியருளும். கனமான சிலுவைகளைச் சுமப்போரைத் தேடிச் சென்று, மனமுவந்து, மகிழ்ச்சியோடும் எந்தக் கட்டாயமுமின்றியும் அவர்களுக்கு உதவ முன்வர எனக்குத் துணைபுரியும். பலருடைய சுமை நீங்கும்படி, சீமோனின் கரங்களையும் உமது கனிவான இதயத்தையும் எனக்குத் தந்தருளும்.
களைத்துப்போன என் ஆண்டவரே, வாழ்வில் நான் விழும் நேரங்கள் உண்டு. உடல் வலிமையை இழப்பதால் அல்ல, என் பாவத்தினாலேயே நான் விழுகிறேன். எனக்கு உதவி தேவைப்படும்போது பிறருடைய உதவியை ஏற்றுக்கொள்ளத் திறந்த மனத்துடன் இருக்க எனக்குத் துணைபுரியும். மேலும், பெருஞ்சுமைகளால் அழுந்தியிருப்போரை அணுகி உதவ எனக்குத் தேவையான ஞானத்தையும் அன்பையும் தந்தருளும்.
மின்னூலாகவும் & மென் அட்டைப் புத்தகமாகவும் கிடைக்கிறது!

