கே. நான் திருமணமான ஓர் ஆண். வேறு பெண்களை நாடுவதற்கும் அடிக்கடி விபசாரத்தில் ஈடுபடுவதற்கும் அடிமையாகிவிட்டேன். பாவசங்கீர்த்தனம் செய்தாலும், என் மனைவிக்கு மிகவும் நம்பிக்கையற்றவனாக நடந்துகொள்கிறேன். இந்த அடிமைப்பழக்கத்தால் பலமுறை அதே தவறைச் செய்கிறேன். இந்தப் பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு என் ஆண்டவரிடம் திரும்புவதன் மூலம் கடவுளின் மீட்பைப் பெற முடியுமா? தயவுசெய்து பதிலளிக்கவும்.
ப. உங்கள் ஆலயத்தில் உங்கள் அருள்பணியாளரிடமோ, நல்ல கத்தோலிக்க ஆலோசகர் ஒருவரிடமோகூட பேசி, இந்தக் கேள்வியை இன்னும் முழுமையாக அணுகுவதே சிறந்தது. இருப்பினும், சரியான வழியில் செல்ல உங்களுக்கு உதவக்கூடிய, நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சில சுருக்கமான கருத்துகள் இங்கே உள்ளன.
முதலாவதாக, கடவுளின் இரக்கம் முற்றிலும் நிறைவானதும் எல்லையற்றதுமாக இருப்பதால், ஒவ்வொரு பாவத்திலிருந்தும் உங்களை விடுவிக்க அவர் ஆழமாக விரும்புகிறார். விபசாரத்தில் ஈடுபடுவது பாவம்; அது ஓர் அடிமைப்பழக்கமாகவும் மாறலாம். இவ்வாறு நிகழும்போது, பாவசங்கீர்த்தனம் இன்றியமையாதது. ஆனால், அந்த அடிமைப்பழக்கத்தை மேற்கொள்வதற்கு வேறு வழிகளிலும் முயற்சி செய்யும்போது, பாவசங்கீர்த்தனத்தின் அருள் பெரும்பாலும் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. உங்கள் அருள்பணியாளரைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கேளுங்கள் அல்லது நல்ல ஆலோசகர் ஒருவரை நாடுங்கள். மற்றொரு சிறந்த உதவி இங்கே கிடைக்கிறது: www.reclaimsexualhealth.com. தயவுசெய்து இந்த இணைப்புக்குச் சென்று, இந்தப் பணித்தளம் வழங்கும் ஞானமிக்க வழிகாட்டுதல்களை ஆராயுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள்; விடுதலை பெற ஊக்கத்துடன் முயலுங்கள்.
இரண்டாவதாக, விபசாரம் திருமண உறவில் ஆழமான காயத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் கடவுளிடம் உண்மையான மனதுடன் பாவங்களை அறிக்கையிடும்போது அவர் எளிதில் மன்னித்தாலும், உங்கள் வாழ்க்கைத்துணையுடனும் மற்ற குடும்ப உறுப்பினர்களுடனும் உள்ள உறவில் ஏற்பட்ட காயம் ஒரே இரவில் ஆறிவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவர்களிடம் இவ்வாறு எதிர்பார்ப்பது நியாயமற்றது. காயங்கள் ஆறுவது நிச்சயமாகச் சாத்தியம்; ஒப்புரவை நாட வேண்டும், அது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். ஆனால், அதற்குக் காலம், பொறுமை, இரக்கம், மன்னிப்பு, மனமாற்றம் ஆகியவை தேவைப்படும். இதை எண்ணித் தளர்ந்துவிடாதீர்கள். நம்பிக்கையுடன் இருந்து, காயங்கள் ஆறவும் நம்பிக்கை மீண்டும் ஏற்படவும் நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய உங்களை அர்ப்பணியுங்கள். இதற்குப் பல வாரங்களோ, மாதங்களோ, ஆண்டுகளோகூட ஆகலாம். ஆனால், இந்த உண்மையான ஒப்புரவை நாடுவது இன்றியமையாதது.
நம்பிக்கையுடன் இருங்கள்! உங்கள் அடிமைப்பழக்கத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தாதீர்கள். இதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கலாம்; ஆனால் உங்கள் செயல்களுக்கு நீங்களே பொறுப்பேற்பது இன்றியமையாதது. கடவுளின் இரக்கத்தையும், ஒவ்வொரு பாவத்திலிருந்தும் உங்களை விடுவிக்கும் அவரது எல்லையற்ற வல்லமையையும் சார்ந்து இதைச் செய்யுங்கள். அவரில் நம்பிக்கை வைத்து, ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வை அவரிடம் ஒப்படையுங்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், ஆண்டவர் உங்களைக் கைவிடமாட்டார்.
மீண்டும் சொல்கிறேன், தயவுசெய்து இந்த இணைப்புக்குச் செல்லுங்கள். உங்களுக்கு உதவக்கூடிய நல்ல தகவல்கள் பல இங்கே கிடைக்கும்: www.reclaimsexualhealth.com
மேலும் கத்தோலிக்கக் கேள்விகள் & பதில்கள்
