தமிழ்

பொதுக்காலத்தின் பதின்மூன்றாம் வாரம்

4 தொகுதிகளும் மென்மையான அட்டையுடன் கூடிய அச்சுநூல் & மின்னூல் வடிவங்களில் கிடைக்கின்றன!

பொருளடக்கம்

தன்னலமற்ற வாழ்வு

பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு (ஆண்டு A)

“தம் உயிரைக் காத்துக்கொள்பவர் அதை இழந்துவிடுவார்; என் பொருட்டுத் தம் உயிரை இழப்பவரோ அதைக் கண்டடைவார்.” மத்தேயு 10:39

நீங்கள் சற்றே நின்று சிந்திக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட சொல் விளையாட்டு இது என்பது தெளிவாகிறது. உங்கள் கவனத்தை ஈர்த்து, நீங்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பது பற்றிய மிக ஆழமான, அடிப்படையான உண்மையை எடுத்துரைக்க இயேசு கூறிய புனிதமானதொரு புதிர்போல இது அமைந்துள்ளது. தன்னலத்தோடும் தம்மையே மையமாகக் கொண்டும் வாழ்பவர்கள் தங்கள் இலக்கை அடைவதில்லை என்பதே இக்கூற்றின் அடிப்படைப் போதனை. தம்மை உயர்த்திக்கொள்வதே தமக்கு மிகச் சிறந்தது என்று எண்ணி, அதையே இலக்காகக் கொண்டு தன்னலமுள்ளவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால், பிறரைவிட உங்களை உயர்த்திக்கொள்ள முயன்று தன்னலத்துடன் வாழும்போது, வாழ்வில் மிக முக்கியமானதை நீங்கள் இழக்கிறீர்கள் என்பதை இயேசு தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார். உங்கள் ஆன்மாவையே நீங்கள் இழக்கிறீர்கள். மாறாக, உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை கொடுத்துத் தன்னலமின்றி வாழ்ந்தால், அந்தச் செயலில்தான் உங்கள் வாழ்வின் உண்மையான நோக்கத்தைக் கண்டடைகிறீர்கள்; மிக ஆழமான நிலையில் நிறைவும் அடைகிறீர்கள்.

எடுத்துக்காட்டாக, இயேசுவை நினைத்துப் பாருங்கள். அவர் கடவுள்; தந்தையோடும் தூய ஆவியாரோடும் முழுமையான ஒன்றிப்பில் என்றென்றும் நிலைத்திருக்கும், அதிபுனித மூவொரு கடவுளின் இரண்டாம் ஆள். அவரது ஆன்மா தூய அன்பை ஒளிரச் செய்கிறது. அந்த அன்பின் காரணமாகவே அவர் மனிதராகி, பெரிதும் துன்புற்று, கொல்லப்படுவதைத் தேர்ந்தெடுத்தார். அது நம் ஆண்டவருக்கு நிறைவளித்ததா? நிச்சயமாக. ஏன்? ஏனெனில், அவரது தியாகம் அவர் யார் என்பதன் மையத்தையே தொட்டது. அவர் அன்பே உருவானவர். அன்பு எப்போதும் தன்னையே கொடுப்பதாகும். அது எப்போதும் நிறைவளிப்பதாகும். அது எப்போதும் பிறரது நன்மையை நாடுகிறது. அன்பு தூய்மையானதாகவும் புனிதமானதாகவும் தன்னலமற்றதாகவும் முழுமையானதாகவும் இருக்கும்போது, அன்பு செய்பவருக்கு அது நிறைவளிக்கிறது. சிலுவையில் இயேசு தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்து ஏற்ற மரணம் நம்மை மீட்டது மட்டுமல்ல; இறைமகன் தமது மனித இயல்பில் அடைந்த முழுமையான நிறைவையும் மனநிறைவையும் வெளிப்படுத்தியது. ஏனெனில், அவரது மரணம் தூய அன்பின் செயலாக இருந்தது.

பாவம் நம்மைக் குழப்புகிறது. குறிப்பாகத் தன்னலம் நம் சிந்தனையை மழுங்கடிக்கிறது. அதன் விளைவாக, இயேசுவின் முழுமையான தியாகத்தைப் பின்பற்றி, அதனுடன் ஒன்றித்து, நம் வாழ்வைப் பிறருக்காக முழுமையாகவும் மனந்தளராமலும் தியாகம் செய்வதே வாழ்வில் நிறைவடைவதற்கான வழி என்பதைத் தெளிவாகக் காண்பது கடினமாகிறது. முதலில் நம்மைப் பற்றியே சிந்திக்கப் பாவம் நம்மைத் தூண்டும் அந்தக் கணத்திலிருந்தே, நாம் யார் என்பதையும், நமக்கு உண்மையான நிறைவளிப்பது எது என்பதையும் காண இயலாதவர்களாக மாறத் தொடங்குகிறோம்.

கிறிஸ்துவுக்காக, அதாவது உண்மையான அன்பிற்காக, உங்களையே இழக்கும்படி உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறைப்பணியைப் பற்றி இன்று சிந்தியுங்கள். இத்தகைய தூய்மையான முறையில், தன்னலமின்றிக் கடவுளையும் பிறரையும் அன்பு செய்வதன் வழியாக, நீங்கள் உண்மையில் யாரோ அவராகவும், யாராக இருக்கும்படி படைக்கப்பட்டீர்களோ அவராகவும் ஆகிறீர்கள். இவ்வுலகில் உங்களையே இழக்கத் தேர்ந்தெடுப்பதன் வழியாக மட்டுமே உங்களையே கண்டடைகிறீர்கள். இந்த ஆழமான மறைபொருளைச் சிந்தித்து, அதை நம்புங்கள். அதை நம்பியவுடன், எல்லாச் சந்தேகங்களையும் ஒதுக்கிவிட்டுத் தியாக வாழ்வு வாழ உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது, அனைவரையும் தியாக அன்புடன் அன்பு செய்ய நீங்கள் ஒருபோதும் தயங்க மாட்டீர்கள். ஏனெனில், தன்னலமற்ற அன்பின் இந்த வேரூன்றிய செயலில்தான், நீங்கள் யாராக இருக்கும்படி படைக்கப்பட்டீர்களோ அவரைக் கண்டறிந்து, அவராக மாறுவீர்கள்.

தம்மையே தியாகமாக அளித்த என் ஆண்டவரே, நீர் மனித அன்பின் முழுமையான முன்மாதிரி மட்டுமல்ல; உமது தியாக அன்பே மனித வாழ்வின் நிறைவுக்கு ஊற்றாகவும் இருக்கிறது. எல்லா மனிதர்களையும் முழுமையாகவும் தன்னலமின்றியும் அன்பு செய்வதற்கும், அச்செயலின் வழியாக நான் யாராக இருக்கும்படி படைக்கப்பட்டேனோ அவரைக் கண்டறிந்து, அவராக மாறுவதற்கும் தேவையான அருளை எனக்குத் தந்தருளும். இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.


யாயிரின் நம்பிக்கை

பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு (ஆண்டு B)

அவர் சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். இதற்கு, “சிறுமியே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு!” என்பது பொருள். பன்னிரண்டு வயதான அச்சிறுமி உடனே எழுந்து நடமாடினாள். அதைக் கண்ட அவர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். இது யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர் கண்டிப்பாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுக்குமாறு கூறினார். மாற்கு 5:41–43

யாயிர் கப்பர்நாகூமில் இருந்த தொழுகைக்கூடத்தின் தலைவராக இருந்தார். அந்தப் பொறுப்பில் இருந்ததால், இயேசுவை எதிர்க்கும்படி அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அவரது மகள் நோயுற்றிருந்தாள்; அக்காலத்து மற்ற சமயத் தலைவர்களின் கருத்துகளைவிடத் தமது மகளே அவருக்கு முக்கியமானவளாக இருந்தாள். ஆகவே, அவர் தாழ்மையுடன் தாமாகவே இயேசுவிடம் வந்து, அவரது கால்களில் விழுந்து, தம் மகளைக் குணமாக்குமாறு அவரிடம் மன்றாடினார்.

யாயிர் இரண்டு செயல்களின் வழியாக இயேசுவிடம் தமக்கிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். நோயுற்றிருந்த தம் மகளை இயேசு குணமாக்க வேண்டும் என்று கேட்டது முதல் செயல். ஆனால் இரண்டாவது செயலுக்கு இன்னும் அதிக நம்பிக்கை தேவைப்பட்டது. தம் மகளைப் பார்க்க இயேசுவுடன் சென்றுகொண்டிருந்தபோது, தம் மகள் இறந்துவிட்டாள் என்ற துயரச் செய்தியை அவர் பெற்றார். இதற்குப் பதிலாக இயேசு யாயிரை நோக்கி, “அஞ்சாதீர்; நம்பிக்கை மட்டும் கொள்ளும்” என்றார். அன்புமிக்க இந்தக் கட்டளைக்கு யாயிர் நம்பிக்கையுடன் செவிசாய்த்து, இயேசு தம் மகளை இறப்பிலிருந்துகூட உயிர்த்தெழச் செய்ய முடியும் என்று உறுதியாக நம்பினார் என்பது தெளிவாகிறது.

யாயிரின் நம்பிக்கையைப் பற்றிச் சிந்திக்கும்போது, அவர் உள்ளத்தில் அனுபவித்திருக்கக்கூடிய இந்தப் போராட்டத்தையும் எண்ணிப் பாருங்கள். இயேசுவை எதிர்த்த மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் கொடுத்த அரசியல் அழுத்தமும், தமக்கு இணையானவர்களின் அழுத்தமும் அவருக்குச் சோதனையாக இருந்தன. தம் மகளின் நோய் மேலும் மேலும் மோசமானபோது, நம்பிக்கையிழக்கும் சோதனைக்கு அவர் ஆளானார். அவள் இறந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டபோது, இயேசு வருவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதாகத் தோன்றிய நிலையை எதிர்கொண்டு, அவர் இன்னும் அதிகமாக நம்பிக்கையிழக்கும் சோதனைக்கு ஆளாகியிருப்பார். ஆனால் அவர் இந்தச் சோதனைகளுக்கு இடங்கொடுக்கவில்லை. அவர் எதிர்நோக்கிலும் நம்பிக்கையிலும் நிலைத்திருந்தார்.

இயேசு யாயிரின் வீட்டிற்கு வந்தபோது, பலர் “அழுது உரத்த குரலில் புலம்பிக்கொண்டிருப்பதைக்” கண்டார். நம்பிக்கை இழந்த நிலையில் அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதை இயேசு கேள்விக்கு உட்படுத்தியபோது, “குழந்தை இறக்கவில்லை; உறங்குகிறாள்” என்று அவர்களிடம் கூறினார். ஆனால் இதைக் கேட்டதும் அவர்கள் அவரை ஏளனம் செய்தார்கள். அங்கிருந்த மற்றவர்களுக்கு யாயிரிடம் இருந்த எதிர்நோக்கும் விசுவாசமும் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே, யாயிருக்கும் அங்கிருந்த மற்றவர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை இறைவேண்டலுடன் தியானிப்பதும் பயனுள்ளதாக இருக்கும்.

இயேசு அந்தச் சிறுமையை இறப்பிலிருந்து உயிர்த்தெழச் செய்வதோடு இந்த நிகழ்வு முடிவடைகிறது. பின்னர், இந்தப் புதுமையைப் பற்றி வெளியே சொல்ல வேண்டாம் என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார். புகழ் பெறுவதற்காக இயேசு அவளைக் குணமாக்கவில்லை. நம்பிக்கையிழந்து, விசுவாசமின்றி இருந்தவர்கள் தவறாக எண்ணினார்கள் என்பதை அவர்களுக்கு நிரூபிப்பதற்காகவும் அவர் அவளைக் குணமாக்கவில்லை. மாறாக, அந்தச் சிறுமியின் தந்தை வெளிப்படுத்திய விசுவாசமே அவர் அவளைக் குணமாக்கியதற்கு முதன்மையான காரணம்.

இறுதியாக, “அவளுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்” என்று இயேசு கூறும்போது, அவரது மனித இயல்பின் வழியாக ஒளிரும் அவரது தெய்வீக அன்பு தெளிவாக வெளிப்படுகிறது. அங்கிருந்தவர்களிடமிருந்து பாராட்டை எதிர்பார்த்து இயேசு அங்கே நிற்கவில்லை. மாறாக, இந்தச் சிறுமிக்குப் பசித்திருக்குமே என்ற தமது அக்கறையை வெளிப்படுத்தியபோது, அவரது அன்பும் பரிவும் ஒளிர்ந்தன. இந்தச் சிறிய தேவையையும் கவனித்துக்கொள்ள அவரது அன்பு அவரைத் தூண்டியது.

நீங்கள் யாயிராக இருந்திருந்தால் எவ்வாறு நடந்துகொண்டிருப்பீர்கள் என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள். ஆன்மிக மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த எதிர்ப்பைச் சந்திக்கும்போது நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? நம்பிக்கையுடனும் உறுதியுடனும் நம் ஆண்டவரை நாடியிருப்பீர்களா? மனித அளவில் நம்பிக்கைக்கான வாய்ப்புகள் அனைத்தும் மறைந்துவிட்டதாகத் தோன்றியபோதும், நம் ஆண்டவர்மீது உங்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து வைத்திருப்பீர்களா? யாயிரின் விசுவாசமும் எதிர்நோக்கும் உங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டுமென்று மன்றாடுங்கள்; அவரது புனித முன்மாதிரியைப் பின்பற்ற உங்களை அர்ப்பணியுங்கள்.

பரிவுமிக்க என் ஆண்டவரே, அன்புள்ள தந்தையாகிய இந்த யாயிரின் விசுவாசத்திற்கு இரக்கத்தோடும் பரிவோடும் பதிலளித்தீர். நம்பிக்கையுடன் இருக்க அவரை ஊக்குவித்தீர்; ஒவ்வொரு சிறிய தேவையையும் கவனித்துக்கொண்டீர். வாழ்வில் நான் ஒருபோதும் நம்பிக்கையிழக்காமல், எப்போதும் உம்மில் என் எதிர்நோக்கை வைத்திருக்கும்படி, அதேபோன்ற விசுவாசத்தை எனக்கும் தந்தருளும். இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.


திருஅவைக்குள் ஒற்றுமை

பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு (ஆண்டு C)

வழியில், அவர் அங்கே வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அவர்கள் சமாரியரின் ஓர் ஊருக்குள் நுழைந்தார்கள். ஆனால் அவர் எருசலேமை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்ததால், அவ்வூரார் அவரை வரவேற்கவில்லை. சீடர்களான யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து நெருப்பு இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் சொல்ல வேண்டுமென விரும்புகிறீரா?” என்று கேட்டார்கள். இயேசு திரும்பி அவர்களைக் கடிந்துகொண்டார்; பின்னர் அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள். லூக்கா 9:52–56

லூக்கா நற்செய்தியில் பொதுவாக “எருசலேமை நோக்கிய பயணம்: லூக்காவின் பயண விவரிப்பு” (லூக்கா 9:51–19:27) என்று குறிப்பிடப்படும் பகுதி, மேலே உள்ள வாசகத்துடன் தொடங்குகிறது. எருசலேமை நோக்கிய பயணத்தில் அவர்கள் முதலில் தங்கச் சென்ற இந்த இடத்தில், யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே நீடித்துவந்த கசப்புணர்வின் காரணமாக, சமாரியர்கள் இயேசுவுக்கும் சீடர்களுக்கும் விருந்தோம்பல் அளிக்க மறுத்தார்கள். யாக்கோபும் யோவானும் இந்தப் பகைமையை எதிர்கொண்டபோது, “ஆண்டவரே, வானத்திலிருந்து நெருப்பு இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் சொல்ல வேண்டுமென விரும்புகிறீரா?” என்று இயேசுவிடம் கேட்டார்கள். சமாரியர்களின் புறக்கணிப்பைத் தங்களுக்கு நேர்ந்த தனிப்பட்ட அவமதிப்பாக அவர்கள் எடுத்துக்கொண்டார்கள் என்பதும், தங்கள் மனக்காயத்தாலும் கோபத்தாலும் பழிவாங்க விரும்பினார்கள் என்பதும் தெளிவாகிறது.

கி.மு. எட்டாம் நூற்றாண்டில் அசீரியச் சிறையிருப்பின்போது யூதர்களுக்கும் பிற இனத்தவர்களுக்கும் இடையே நிகழ்ந்த கலப்புத் திருமணங்களின் வழித்தோன்றல்களே சமாரியர்கள். அவர்கள் கலிலேயாவுக்கும் எருசலேமுக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்தார்கள். எருசலேமிலிருந்த யூதர்களிடம் அவர்கள் பொதுவாகப் பகைமை கொண்டிருந்தார்கள். பலி செலுத்துவதற்கான ஒரே இடம் எருசலேம் திருக்கோவில்தான் என்று யூதர்கள் நம்பியதும், சமாரியர்களோ கெரிசிம் மலையில் தங்களுக்கென ஒரு கோவிலைக் கட்டியதும் இந்தப் பகைமைக்குப் பெருமளவில் காரணமாக இருந்தன. சமாரியர்கள், யூத வழக்கங்களுக்கு மாறாக, மோசேயின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதோடு வேறு பல நம்பிக்கைகளையும் கலந்துகொண்டார்கள். எனவே, இரு குழுவினரும் ஒரே கடவுளை வழிபட நாடியபோதிலும், அவர்களிடையே இருந்த வேறுபாடுகள் ஒருவரையொருவர் தொடர்ந்து புறக்கணிப்பதற்கும் பகைமை கொள்வதற்கும் வழிவகுத்தன.

இந்தப் பகைமையில் பங்கேற்க இயேசு அழைக்கப்பட்டபோது, அவர் அதை மறுத்தார். யூதர்களின் நம்பிக்கை சரியானது என்று இயேசு கூறவில்லை; சமாரியர்கள் சரியானவர்கள் என்றும் அவர் கூறவில்லை. மாறாக, அவர்களிடையே நீடித்துவந்த கசப்புணர்வில் தமக்குப் பங்கு இருக்காது என்பதையே அவர் தெரிவித்தார். யோவான் நற்செய்தியில், கிணற்றருகே இருந்த பெண் ஒரு சமாரியர் என்பதையும், இயேசு அவரிடம் மிகுந்த பரிவோடு நடந்துகொண்டார் என்பதையும் நினைவுகூருங்கள். இறுதியில், அவருடைய ஆன்மிகத் தாகத்தைத் தணிக்க இயேசு அவருக்கு “வாழ்வுதரும் தண்ணீரை” அளித்தார்—இது அவருக்கும் மற்ற சமாரியர்களுக்கும் பெரும் வியப்பளித்தது.

சமாரியர்களை இயேசு நடத்திய விதத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முக்கியமான பாடம் இதுதான்: பிறர்மீது கசப்புணர்வு, கோபம், பழிவாங்கும் விருப்பம், கடுஞ்சினம் ஆகியவற்றைக் கொண்டிருப்பது அவரது திருவுளத்திற்கு முற்றிலும் எதிரானது. திருஅவைக்குள் பிளவுகளை நாம் எதிர்கொள்ளும்போது இதைச் சிந்தித்துப் பார்ப்பது குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும். திருஅவைக்குள் சில வேளைகளில் பல்வேறு பிரிவுகள் இருப்பது நிச்சயமாகவே வருந்தத்தக்க உண்மை. ஏதாவது ஒரு குழுவினர் செய்யும் தவறுகளால் அத்தகைய பிளவுகளில் சில ஏற்படக்கூடும் என்றாலும், கசப்புணர்வு, தாக்குதல்கள், கோபம், கடுஞ்சினம் ஆகியவற்றை எப்போதும் தவிர்க்க வேண்டும். இன்று திருஅவையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, யாக்கோபும் யோவானும் விழுந்த அதே சோதனையில் பலரும் விழுவது தெளிவாகத் தெரிகிறது. மற்றவரை “அழிக்கும்படி வானத்திலிருந்து நெருப்பை வரவழைக்க” விரும்புவோர் பலர் உள்ளனர். இவ்வாறு நிகழும்போது, யாக்கோபும் யோவானும் அப்படிச் செய்ய முயன்றபோது நம் ஆண்டவர் அளித்த பதிலே இன்றும் விண்ணகத்திலிருந்து அவர் அளிக்கும் பதிலாக இருக்கும் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளலாம். கோபத்தோடு குறைகூறும் தரப்பினரைக் கடிந்துகொள்வதே இயேசுவின் பதிலாக இருக்கும். பிறர்மீது, குறிப்பாகத் திருஅவைக்குள் இருப்போர்மீது காட்டும் கடுஞ்சினம் கடவுளால் தூண்டப்படுவது அல்ல. எனவே, அந்தச் சோதனை வரும்போதெல்லாம் இத்தகைய மதியீனத்திலிருந்து நாம் விலகி ஓட வேண்டும்.

திருஅவையின் மற்ற உறுப்பினர்களுடன் ஏதாவது ஒரு மோதலுக்குள் நீங்கள் இழுக்கப்பட்டிருக்கிறீர்களா என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள்; அது உள்ளத்தில் மட்டுமே நிகழும் கோபப் போராட்டமாக இருந்தாலும் சரி. நீங்கள் ஒரு தரப்பைச் சார்ந்துகொண்டு, மற்றவர்கள்மீது விண்ணகத்திலிருந்து நெருப்பை வரவழைக்க விரும்பியிருக்கிறீர்களா? அப்படியானால், இந்தச் சீடர்களுக்குக் கற்பிக்கப்பட்ட பாடத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். தீர்ப்பைக் கடவுளிடம் விட்டுவிட்டு, இரக்கத்தையும் பிறரன்பையும் மட்டுமே காட்ட நாடுங்கள். ஒற்றுமையை உருவாக்கும் கருணையை நாடுங்கள். ஒற்றுமை இருப்பதாக ஒரு பொய்யான உணர்வை உருவாக்குவதற்காக உண்மையில் நாம் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது; அதேவேளையில், நமது அகந்தை காயப்பட்டதற்காக மற்றவர்மீது பகைமை கொள்ளவும் கூடாது. திருஅவைக்குள் நீங்கள் கடுஞ்சினம் கொண்டிருக்கும் ஒருவரையோ ஒரு குழுவினரையோ நினைத்துப் பாருங்கள். நம் ஆண்டவர் அவர்களைப் பார்ப்பதுபோலவே நீங்களும் பார்க்கும்படி, அவரது மனமும் இதயமும் உங்களுக்கு அருளப்பட வேண்டுமென மன்றாடுங்கள்.

என் அன்பு ஆண்டவரே, மக்கள் அனைவரையும் உம்மோடும் உம் தந்தையோடும் ஒப்புரவாக்க நீர் தொடர்ந்து நாடினீர். அறிவுக்குப் பொருந்தாத கோபம் மேலும் பிளவுகளை ஏற்படுத்த நீர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. நீர் விரும்பும் ஒற்றுமையின் கருவியாக நான் விளங்கும்படி, உமது இரக்கமுள்ள இதயத்தைப் பின்பற்ற எனக்குத் தேவையான அருளைத் தந்தருளும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.


கடவுள் உங்களை எங்கு வழிநடத்தினாலும்

பொதுக்காலத்தின் பதின்மூன்றாம் வாரம் திங்கள்

“போதகரே, நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.” இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மானிடமகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்று பதிலளித்தார். மத்தேயு 8:19–20

இயேசு இந்த மறைநூல் அறிஞருக்கு ஏன் இவ்வாறு பதிலளித்தார் என்பது இந்தப் பகுதியை மட்டும் கொண்டு தெளிவாகத் தெரிவதில்லை. “போதகரே, நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்ற அந்த மறைநூல் அறிஞரின் கூற்று முதலில் மிகுந்த பக்தியுள்ளதாகத் தோன்றுகிறது. ஆனால் இயேசுவுக்கும் அந்த மறைநூல் அறிஞருக்கும் இடையிலான இந்த உரையாடலைத் தியானித்த திருஅவைத் தந்தையர் பலர், பயனுள்ள ஆழ்ந்த விளக்கங்களை வழங்குகின்றனர்.

முதலில், தம்மைப் பின்பற்ற விரும்புவதாக அந்த மறைநூல் அறிஞர் முன்வைத்ததை இயேசு ஏற்றுக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை என்பதைக் கவனியுங்கள். மாறாக, தம்மைப் பின்பற்றுவதில் உண்மையில் என்ன அடங்கியுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தும் ஒரு கூற்றை மட்டுமே இயேசு கூறுகிறார். இயேசுவைப் பின்பற்றுவதால் தனக்குப் பெரும் வெகுமதிகள் கிடைக்கும் என்று நினைத்ததாலேயே இந்த மறைநூல் அறிஞர் அவரைப் பின்பற்ற விரும்பினார் என்று திருஅவைத் தந்தையர் சிலர் கருதுகின்றனர். ஏனெனில், இயேசு புதுமைகள் செய்பவராகவும், மக்களிடையே பெரிதும் புகழ்பெற்று வருபவராகவும், ஒரு மாபெரும் தலைவராக உருவாகும் ஆற்றலை வெளிப்படுத்துபவராகவும் இருந்தார். எனவே, இயேசு எங்குச் சென்றாலும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற இந்த மறைநூல் அறிஞரின் உள்ளார்ந்த நோக்கம் கேள்விக்குரியதாக இருந்தது. உலகியல் முறையில் ஏதாவது நன்மை கிடைக்கும் என்று எண்ணியதால்தான் அவர் இயேசுவைப் பின்பற்ற விரும்பினாரா?

இந்த மறைநூல் அறிஞருக்கு இயேசு அளித்த பதில் இரண்டு காரியங்களைச் செய்கிறது. முதலாவதாக, இயேசுவைப் பின்பற்றுவது என்றால் என்ன என்பதைப் பற்றிய தவறான எண்ணங்கள் அனைத்தையும் அது அகற்றுகிறது. அந்த மறைநூல் அறிஞர் இயேசுவைப் பின்பற்ற விரும்பினால், செல்வத்தையும் உடைமைகளையும் நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, வறுமையிலும் உறைவிடமற்ற நிலையிலும் அவரைப் பின்பற்றத் தயாராக இருக்க வேண்டும். அவர் எதைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது அவருக்குத் தெளிவாக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். இரண்டாவதாக, இயேசுவின் பதில் நிச்சயமாக அந்த மறைநூல் அறிஞருக்கு அவரைப் பின்பற்ற விடுக்கப்பட்ட அழைப்பாக இருந்தது; ஆனால் புதிதாகப் பெற்ற இந்தப் புரிதலின் அடிப்படையில் மட்டுமே அவர் அதனை ஏற்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இயேசு இவ்வாறு கூறினார்: “ஆம், வந்து என்னைப் பின்பற்று. ஆனால் அதன் பொருள் என்ன என்பதை அறிந்துகொள். என்னைப் பின்பற்றுவதால் நீ இவ்வுலகில் செல்வந்தனாக அல்ல, ஏழையாகவே ஆவாய்.”

நீங்கள் ஏன் இயேசுவைப் பின்பற்றுகிறீர்கள்? அவ்வப்போது உங்கள் நோக்கங்களைச் சிந்தித்துப் பார்ப்பது முக்கியம். சிலர், தாங்கள் அவ்வாறு வளர்க்கப்பட்டதால் மட்டுமே இயேசுவைப் பின்பற்றத் தேர்ந்துகொள்கிறார்கள். மற்றவர்கள், அவ்வாறு செய்வது தங்களுக்கு மனநிறைவைத் தருவதால் அவரைப் பின்பற்றுகிறார்கள். இன்னும் சிலர், பல்வேறு வழிகளில் அது தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று நினைப்பதால் அவரைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் நம் ஆண்டவரைப் பின்பற்றுவதற்கான மிகச் சிறந்த நோக்கம் எது? முழுமையாகவும் உறுதியாகவும் இயேசுவைப் பின்பற்றுவதற்கான மிகச் சிறந்த நோக்கம் மிகவும் எளிமையானது: அவர் கடவுளின் மகனும் உலகின் மீட்பருமாக இருப்பதால் நாம் அவரைப் பின்பற்றுகிறோம். இயேசு நம்மைத் தம்மிடம் அழைக்க வந்தார்; நம்பிக்கையின் வழியாகத் தம்மோடு ஒன்றித்து வாழ நம்மை அழைத்திருக்கிறார். எனவே, அவரைப் பின்பற்றுவதே சரியான செயல் என்பதற்காக மட்டுமே நாம் இயேசுவைப் பின்பற்றுவதுதான் மிகச் சிறந்தது. நன்மைகள் என்று சொல்லப்படுபவற்றுக்காக நாம் அவ்வாறு செய்ய மாட்டோம். அன்பு அதன் தூய வடிவில், தனக்கு என்ன கிடைக்கும் என்பதற்காக மற்றவரை நேசிப்பதில்லை. ஒருவர் நம் அன்பிற்குத் தகுதியானவர் என்பதால் அவருக்கு அளிக்கப்படும் கொடையே தூய அன்பு. இயேசுவைப் பொறுத்தவரை, அவர் யாராக இருக்கிறாரோ அதன் பொருட்டே நம் அன்பிற்கும் ஆராதனைக்கும் தகுதியானவர்.

வறுமைக்கும், அனைத்திலிருந்தும் பற்றின்மைக்கும், எளிய வாழ்வுக்கும், இறுதியில் உங்கள் வாழ்வு முழுவதையுமே தியாகம் செய்வதற்கும் தம்மைப் பின்பற்றுமாறு இயேசு உங்களை அழைப்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள். கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுபவராக இருப்பதன் பொருள் உங்களுக்குப் புரிகிறதா? சுயநல நோக்கங்களுக்காக இயேசுவைப் பின்பற்ற முடியாது என்பதைப் புரிந்துகொள்கிறீர்களா? நம் ஆண்டவருக்கு “ஆம்” என்று சொல்வது, அவரது சிலுவைக்கும் “ஆம்” என்று சொல்வதுதான் என்பதை உணர்கிறீர்களா? இயேசுவின் வாழ்வை ஆழ்ந்து சிந்தித்து, சிலுவையின் வறுமைவரை அவரைப் பின்பற்ற நீங்கள் மனமுவந்து தயாராக இருக்கிறீர்களா என்பதை எண்ணிப் பாருங்கள். எதற்கு “ஆம்” என்று சொல்கிறீர்கள் என்பதை முழுமையாக அறிந்து, நம் ஆண்டவரைப் பின்பற்ற நீங்கள் முடிவெடுக்க முடிந்தால், இறுதியில் அவரது உயிர்த்தெழுந்த வாழ்விலும் மாட்சிமையுடன் பங்குபெறுவீர்கள்.

என் மாட்சிமிகு ஆண்டவரே, வறுமை, புறக்கணிப்பு, துன்பம் ஆகியவற்றின் நடுவே நீர் இவ்வுலகில் நடந்துசென்றீர். மண்ணுலகில் உமக்கென்று சொந்த வீடு எதுவும் இருக்கவில்லை; ஆனால் இப்போது விண்ணகச் செல்வங்களில் வாழ்கிறீர். அன்பு ஆண்டவரே, இந்த வாழ்வில் நீர் என்னை எங்கு வழிநடத்தினாலும் உம்மைப் பின்பற்ற எனக்கு உதவியருளும். உலக வாழ்வில் வறுமைக்கும் துன்பத்திற்கும் நீர் என்னை வழிநடத்தினாலும், உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமக்கு நன்றி செலுத்தி, என்ன நேர்ந்தாலும் உம்மைப் பின்பற்றத் தேர்ந்துகொள்கிறேன். உம்மீது கொண்ட அன்பினால் மட்டுமே உம்மைப் பின்பற்ற எனக்குத் தேவையான அருளைத் தந்தருளும்; ஏனெனில், நீரே கடவுள்; எனது புகழ்ச்சிக்கும் ஆராதனைக்கும் முற்றிலும் தகுதியானவர் நீரே. இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.


ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்!

பொதுக்காலத்தின் பதின்மூன்றாம் வாரம் செவ்வாய்

இயேசு ஒரு படகில் ஏறியபோது, அவருடைய சீடர்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். திடீரெனக் கடலில் கடும் புயல் எழுந்தது; அலைகள் படகை மூழ்கடித்துக்கொண்டிருந்தன. ஆனால் அவர் தூங்கிக்கொண்டிருந்தார். மத்தேயு 8:23–24

இந்த அனுபவம் சீடர்களின் மனத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மூன்று ஒத்தமை நற்செய்திகளிலும் இது பதிவு செய்யப்பட்டிருப்பதே இதற்குச் சான்றாக உள்ளது. இயேசு புயலை அடக்கியபின் வரும் இந்நிகழ்வின் இறுதி வார்த்தைகளிலும் இதைக் காண்கிறோம்: “அவர்கள் வியப்புற்று, ‘காற்றும் கடலும்கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகைய மனிதர்?’ என்று கூறினார்கள்.”

பாரம்பரியமாக, இந்த நிகழ்வு ஒட்டுமொத்தத் திருஅவையின் உருவகமாகவும் தனிப்பட்ட ஆன்மாவின் உருவகமாகவும் விளக்கப்பட்டு வந்துள்ளது. படகு திருஅவையின் உருவகமாக உள்ளது; அதன் வழியாகவே கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வாழ்வின் ஆபத்துகளைக் கடந்து செல்கிறோம். நாம் உயிர்பிழைக்கத் திருஅவைக்குள் நிலைத்திருக்க வேண்டும். படகிலுள்ள ஒவ்வொருவரும் திருஅவையின் உறுப்பினர்களாகிய நம் ஒவ்வொருவரையும் குறிக்கின்றனர். கடும் புயல், வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பல தனிப்பட்ட போராட்டங்களையும், திருஅவை இதுவரை அனுபவித்துள்ளதும் காலத்தின் முடிவுவரை தொடர்ந்து அனுபவிக்கவிருப்பதுமான துன்புறுத்தல்களையும் குறிக்கும் உருவகமாக உள்ளது.

புயல் படகை அலைக்கழித்தபோது, இயேசு உறங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் உறங்கிக்கொண்டிருந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. மனித வரலாற்றை, குறிப்பாகத் திருஅவையின் வரலாற்றை நாம் பார்க்கும்போது, குழப்பங்களும் துன்புறுத்தல்களும் இன்னல்களும் எழுந்த வேளைகளில் கடவுள் அங்கு இல்லாததுபோல அல்லது “உறங்கிக்கொண்டிருப்பதுபோல” தோன்றிய பல தருணங்களைக் காண்கிறோம். எல்லாருக்கும் இல்லாவிட்டாலும், பலருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் இதே அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் புயலைச் சீடர்கள் எதிர்கொள்ளும்போது, வாழ்வில் நம்பிக்கை இழக்கும் சோதனைக்கு நாம் உள்ளாகும் வேளைகளில் எவ்வாறு செபிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த வழியை நமக்குக் காட்டுகிறார்கள். அவர்கள் இயேசுவை எழுப்பி, “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்! நாங்கள் அழிந்துகொண்டிருக்கிறோம்!” என்கிறார்கள். அவர்களது நம்பிக்கைக் குறைவுக்காகவும் அச்சத்திற்காகவும் இயேசு அவர்களைக் கடிந்துகொண்டாலும், அவர்களது மன்றாட்டுகளுக்குச் செவிசாய்த்துப் புயலையும் அடக்குகிறார்.

இந்தச் சூழலில் சீடர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்கள் நம்பிக்கையுடன் இயேசுவைத் தொடர்ந்து உறங்க அனுமதித்திருக்க வேண்டுமா? நம்பிக்கை குறைந்ததற்காக நம் ஆண்டவர் அவர்களைக் கடிந்துகொண்டார் என்றாலும், அச்சத்திற்கு ஆளாகும் சோதனையை நாம் எதிர்கொள்ளும்போது கடவுளின் இரக்கம் எத்தகையது என்பதை வெளிப்படுத்துவதே இந்த நிகழ்வின் முதன்மையான நோக்கம். சில வேளைகளில் நாம் அனைவருமே சுமைகளைத் தாங்க முடியாமல் திணறி, இத்தகைய சோதனைக்கு உள்ளாவோம் என்பதைக் கடவுள் அறிவார். நமது நம்பிக்கை நிறைவானது அல்ல என்பதை அவர் அறிவார்; ஆகவே, அவருடைய சீடர்கள் நமக்கு இந்த எடுத்துக்காட்டை அளிக்க அனுமதித்தார். எனவே, வாழ்வில் சுமைகளைத் தாங்க முடியாமல் திணறி அஞ்சும் போதெல்லாம், நம்மைக் காப்பாற்றும்படி நாம் அவரை நோக்கிக் கூக்குரலிட வேண்டும். நாம் அவரிடம் திரும்ப வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

சீடர்களின் இந்தச் செபத்தை இன்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் தனிப்பட்ட நெருக்கடி ஒன்றையோ, தீர்வு காணப்படாத பெரிய குடும்பச் சிக்கல் ஒன்றையோ எதிர்கொள்வதாக உணர்ந்தால், அல்லது திருஅவையையோ ஒட்டுமொத்தச் சமூகத்தையோ வாட்டும் பிற போராட்டங்களை மேலும் மேலும் உணர்ந்து வந்தால், சீடர்களின் இந்தச் செபத்தைப் பின்பற்ற முயலுங்கள்: “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்! நாங்கள் அழிந்துகொண்டிருக்கிறோம்!” இந்த வார்த்தைகள் முதலில் நம்பிக்கை இழந்தவர்களின் வார்த்தைகளாகத் தோன்றலாம்; ஆனால் உண்மையில் அவை எதிர்நோக்கும் நம்பிக்கையும் நிறைந்த வார்த்தைகளே. நமது ஆன்மாக்களிலும் குடும்பங்களிலும் திருஅவையிலும் நமது உலகிலும் நாம் தேடும் அமைதியின் ஒரே ஊற்றாக இருப்பவரை நோக்கி அவை நம்மை வழிநடத்துகின்றன. நீங்களும் பிறரும் “அழிந்துகொண்டிருப்பதாக” உணரும் பல்வேறு சூழல்களைக் கண்டறிந்து, உங்களையும் தேவையில் உள்ள அனைவரையும் காப்பாற்றும்படி முழு இதயத்தோடும் நம் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுங்கள்.

பேராற்றலுள்ள ஆண்டவரே, உமது இறைவல்லமையையும் உம் மக்களை வாட்டும் புயல்களை முழுமையாக அடக்கும் உமது திறனையும் கண்டு வியக்கிறேன். எனது தேவையில் உம்மிடம் திரும்புவதற்கும், பிறருடைய வாழ்வில் நீர் தொடர்ந்து தலையிட்டுச் செயலாற்றும்படி உம்மை நோக்கிக் கூக்குரலிடுவதற்கும் நான் ஒருபோதும் தயங்காதவாறு, என்னை எதிர்நோக்காலும் தாழ்ச்சியாலும் நிரப்பியருளும். ஆண்டவரே, விழித்தெழுந்து உம் மக்களைக் காப்பாற்றும்; ஏனெனில் உம்மின்றி நாங்கள் உண்மையிலேயே அழிந்துபோவோம்! இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.


பிறரின் நற்பண்புகளில் மகிழ்தல்

பொதுக்காலத்தின் பதின்மூன்றாம் வாரம் புதன்

பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிப்போய், நகரை அடைந்ததும், பேய்பிடித்தவர்களுக்கு நேர்ந்தது உட்பட அனைத்தையும் அறிவித்தார்கள். அப்போது நகரத்தார் அனைவரும் இயேசுவைச் சந்திக்க வெளியே வந்தார்கள். அவரைக் கண்டதும், தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு அவரிடம் கெஞ்சிக் கேட்டார்கள். மத்தேயு 8:33–34

தங்கள் நகரைச் சேர்ந்த இருவரை இயேசு பேய்களிடமிருந்து விடுவித்ததன் விளைவாக, “நகரத்தார் அனைவரும்” அவரைத் தங்கள் பகுதியைவிட்டு அகலுமாறு கெஞ்சிக் கேட்பானேன்? இந்த நிகழ்வு கலிலேயக் கடலின் வடகிழக்குக் கரையில், யூதப் பின்னணி இல்லாத கதரேனரின் நகரம் ஒன்றுக்கு அருகே நடந்தது. அங்கு அவ்வளவு பெரிய பன்றிக்கூட்டம் இருந்ததற்கும் இதுவே காரணம்; யூத மக்கள் பன்றி இறைச்சியை உண்ணவில்லை. கதரேனரில் இருவர் பேய்பிடித்திருந்தனர். “அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்ததால், அந்த வழியாக யாரும் செல்ல முடியவில்லை” என்று மறைநூல் கூறுகிறது. இந்தக் கொடிய நிலையிலிருந்து இயேசு அவர்களை விடுவித்தபோது, நகரத்தார் நன்றியுடன் மகிழ்வதற்குப் பதிலாக, இயேசுவை அங்கிருந்து அகலுமாறு கெஞ்சிக் கேட்டார்கள்.

இயேசுவைப் போன்ற மாபெரும் ஒருவரின் முன்னிலையில் இருக்கத் தாங்கள் தகுதியற்றவர்கள் என்று கருதியதால், அந்த மக்கள் உண்மையில் தாழ்ச்சியோடு அவ்வாறு நடந்துகொண்டிருக்கலாம் என்று புனித எரோணிமு கூறுகிறார். இயேசுவின் காலடியில் விழுந்து, “ஆண்டவரே, என்னைவிட்டு அகலும்; ஏனெனில் நான் பாவியான மனிதன்” (லூக்கா 5:8) என்று கதறிய புனித பேதுருவைப் போல, இந்த நகரத்தாரும் இயேசு தங்களுக்குச் செய்ததைக் கண்டு அவ்வளவு பிரமிப்படைந்ததால், அவரது முன்னிலையில் இருக்கத் தாங்கள் தகுதியற்றவர்கள் என்று எண்ணியிருக்கலாம். ஆயினும், பாவ வாழ்வில் சிக்கிக்கொண்டு, நற்செய்தியையோ இயேசுவையோ நேருக்கு நேர் எதிர்கொள்ள விரும்பாதவர்களையே இந்த நகரத்தார் குறிக்கிறார்கள் என்பதே அதிகச் சாத்தியம் என்று பிற திருஅவைத் தந்தையர் சுட்டிக்காட்டுகின்றனர். உண்மைக்குத் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, அறியாமையும் பாவமும் நிறைந்த தங்கள் வாழ்விலேயே நிலைத்திருக்க அவர்கள் விரும்புகின்றனர்.

அந்த ஊராருக்கும் பேய்பிடித்திருந்த இந்த இருவருக்கும் இடையிலான உறவைப் பற்றிச் சிந்திப்பதும் பயனுள்ளதாக இருக்கும். தங்களை வதைத்த பேய்களிடமிருந்து இந்த இருவரும் முழுமையாக விடுதலை பெற்றதை ஊரார் கண்டபோது, ஊதாரி மகன் தன்னிடம் திரும்பி வந்ததைக் கண்டு அவனுடைய தந்தை மகிழ்ந்ததுபோல அவர்களும் மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால் வருத்தத்திற்குரிய வகையில், பேய்பிடித்திருந்த இந்த இருவரும் பெற்ற விடுதலையைக் குறித்து அவர்களுடைய ஊரார் மகிழ்ச்சியடையவே இல்லை என்பதுபோல் தெரிகிறது. அந்த ஊரில் இந்த இருவர்மீதும் அன்பு தெளிவாகவே குறைந்திருந்ததை இது காட்டுகிறது. ஒருவேளை ஊராரில் பலர், பல ஆண்டுகளாக இந்த இருவரையும் கேலி செய்வதில் ஒரு விபரீதமான இன்பம் கண்டிருக்கலாம்; அவர்கள் எவ்வளவு பித்துப்பிடித்தவர்களாக இருந்தார்கள் என்பதைப் பற்றிக் கதைகள் சொல்வதில் மகிழ்ந்திருக்கலாம். இப்போது, முற்றிலும் மாறிப்போன இந்த இருவரையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தங்களுடைய செருக்கின் காரணமாக, இவர்களைப் பற்றி நல்லவிதமாகப் பேசுவது அவர்களுக்குக் கடினமாக இருந்திருக்கலாம்.

இந்த ஊராரின் தவறான முன்மாதிரி, தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டு தீமையிலிருந்து நன்மைக்குத் திரும்பியவர்களைப் பற்றி நாம் எவ்வாறு எண்ணுகிறோம், அவர்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பதைச் சிந்திக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது. உண்மையான மனதோடு மாறுவதற்கு முயன்ற ஒரு குடும்ப உறுப்பினர் உங்களுக்கு இருக்கலாம். அல்லது உங்களோடு வேலை செய்யும் ஒருவர், அண்டை வீட்டார், அல்லது உங்களுக்கு அறிமுகமான வேறொருவர் பாவ வாழ்விலிருந்து நற்பண்புகளை நாடும் வாழ்வுக்குத் திரும்பியிருக்கலாம். பிறரிடமுள்ள நன்மையையும், அவர்கள் தொடர்ந்து மனம்மாறுவதையும், புனிதத்தை நாடுவதையும் கண்டு நீங்கள் மகிழ்கிறீர்களா? அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் நன்மைக்காக மாறுவதைக் காணும்போது, உண்மையான மகிழ்ச்சியை வெளிப்படுத்தச் சிரமப்படுகிறீர்களா? இதுவே நாம் சிந்திக்க வேண்டிய உண்மையான கேள்வி. குறைகூறுவது பெரும்பாலும் மிகவும் எளிது; ஆனால் மற்றொருவரில் நிகழும் புனிதமான மாற்றத்தைக் கண்டு மகிழ்வது அதைவிட மிகவும் கடினம்.

உங்கள் வாழ்வில், நம் ஆண்டவரால் ஏதோ ஒரு வகையில் விடுதலை பெற்று, பாவ வாழ்விலிருந்து நற்பண்புகள் நிறைந்த வாழ்வை நோக்கிச் சென்றவர்களைப் பற்றி இன்று சிந்தியுங்கள். அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்களாகவோ, வெறுமனே அறிமுகமானவர்களாகவோ இருக்கலாம். அவர்களிடம் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்? பிறரிடமுள்ள நன்மையைக் கண்டு உங்களால் உண்மையாக மகிழ முடிகிறதா? அல்லது பொறாமை, சினம், பிறரது நலனைக் கண்டு மனம் புழுங்குதல் போன்றவற்றோடு நீங்கள் போராடுகிறீர்களா? பிறரில் கடவுளின் நன்மை செயல்படுவதை நீங்கள் காணும்போது, மேலே புனித எரோணிமுஸ் பரிந்துரைத்த மனப்பாங்கை ஏற்றுக்கொள்ள முயலுங்கள். அவர்களுடைய வாழ்வில் கடவுள் ஆற்றும் செயல்களைக் கண்டு வியந்து நிற்க உங்களை அனுமதியுங்கள். அவ்வாறு செய்யும்போது, கடவுளின் வாழ்வை மாற்றும் வல்லமையின் முன் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள். அவரது மாற்றமளிக்கும் வல்லமையைக் காண நீங்கள் தகுதியற்றவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டாலும், நன்றியுடன் மகிழுங்கள்.

எல்லாம் வல்ல என் ஆண்டவரே, நீர் தீயவனின் வல்லமையை வென்று, பல ஆண்டுகளாக அவனது ஒடுக்குதலால் துன்புற்ற இந்த இருவரிடமிருந்தும் பேய்களை விரட்டினீர். நமது உலகில் நீர் செயலாற்றுவதைக் காணவும், பிறருடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் உமது செயலுக்கு மகிழ்வுடன் சான்று பகரவும் தேவையான பார்வையை எனக்குத் தந்தருளும். மீட்பளிக்கும் உமது செயல்களுக்கு முன்பாக நான் எப்போதும் என்னைத் தாழ்த்திக்கொண்டு, நீர் செய்யும் அனைத்திற்கும் உண்மையான நன்றியை வெளிப்படுத்தக் கற்றுக்கொள்வேனாக. இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.


இறைவேண்டலில் முன்னுரிமைகள்

பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம் வியாழக்கிழமை

இயேசு படகில் ஏறி மறுகரைக்குச் சென்று, தம் சொந்த ஊருக்கு வந்தார். அங்கே முடக்குவாதமுற்ற ஒருவரை மக்கள் படுக்கையில் கிடத்தி அவரிடம் கொண்டுவந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, துணிவுடன் இரு; உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். மத்தேயு 9:1–2

இந்தப் பகுதிக்குச் சற்று முன்னர், கதரேனரின் ஊரைச் சேர்ந்த இருவரிடமிருந்து இயேசு பேய்களை ஓட்டினார். அதன்பின், தங்கள் ஊரைவிட்டு வெளியேறுமாறு ஊரார் அவரிடம் கூறினர். எனவே இயேசு படகில் புறப்பட்டு, நாசரேத்தைவிட்டு வந்தபின் தாம் வாழ்ந்துவந்த கப்பர்நாகுமை அடைந்தார். படகிலிருந்து இறங்கியபோது, படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த முடக்குவாதமுற்ற ஒருவருடனான இந்தச் சந்திப்பே அவருக்காகக் காத்திருந்தது.

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பியபோது, அங்கிருந்தவர்களிடம் நம்பிக்கை இல்லாததால் அவரால் அங்கே எந்தப் புதுமையையும் செய்ய முடியவில்லை என்பதை நினைவுகூருங்கள். அவரை நன்கு அறிந்திருந்ததாலேயே, அவர் தனிச்சிறப்புமிக்க ஒருவர் என்பதை நம்ப மறுக்கும் சோதனைக்கு அவர்கள் உள்ளானார்கள். ஆனால் இப்போது, அவர் அண்மையில் குடியேறியிருந்த புதிய ஊரில், மக்களின் நம்பிக்கை வெளிப்படையாகத் தெரிந்ததால், இயேசுவால் வல்லமையுள்ள புதுமைகளைச் செய்ய முடிந்தது.

மேலுள்ள பகுதியில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுக்குள் உங்களையும் நிறுத்திப் பார்க்க முயலுங்கள். கதரேனரால் சற்றுமுன் புறக்கணிக்கப்பட்ட இயேசு, படகில் கப்பர்நாகுமுக்கு வந்தார். அவர் படகிலிருந்து இறங்கியதும், அவருக்காகக் காத்திருந்தது தெளிவாகத் தெரிந்த ஒரு மக்கள் குழு உடனே அவரைச் சந்தித்தது. இயேசு ஏரியின் மறுகரையில் இருந்தபோது அவர்கள் என்ன பேசிக்கொண்டிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அவர் தமது புதிய இல்லத்திற்குத் திரும்புவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். முடக்குவாதமுற்றவருக்காக ஒரு படுக்கையை ஆயத்தம் செய்து, இயேசு வந்து அவரைக் குணமாக்குவார் என்ற எதிர்நோக்குடன் அவர்கள் காத்திருந்து இறைவேண்டல் செய்தார்கள். இயேசு அவர்களுடைய நம்பிக்கையை உடனே உணர்ந்துகொண்டார் என்பதும், அது அவரது உள்ளத்தை ஆழமாகத் தொட்டது என்பதும் தெளிவாகிறது. உடல் குணமடைவதற்கு வெறுமனே “ஆம்” என்று சொல்லிவிட்டு இயேசு அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை என்பது இந்தப் பகுதியின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று. மாறாக, முடக்குவாதமுற்றவருக்கு அவர் அளித்த மறுமொழி, முதலில் அவருடைய பாவங்களை மன்னிப்பதாக அமைந்தது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் உள்ளது; எவ்வாறு சிறந்த முறையில் இறைவேண்டல் செய்வது என்பதை அறிந்துகொள்ள அது நமக்கு உதவும்.

நாம் செபிக்கும்போது, பல நேரங்களில் நம் ஆண்டவரிடம் ஏதாவது ஓர் உதவியைக் கேட்டுச் செபிக்கிறோம். இயேசு நமக்கு எதைத் தர வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அதற்காகச் செபிக்கிறோம். ஆனால் இயேசு நமக்காக விரும்புவது வேறுபட்டது என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. முதலில், நம் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கவே அவர் விரும்புகிறார். இதுவே அவரது முதன்மையான நோக்கம்; நமக்கும் இதுவே முதன்மையானதாக இருக்க வேண்டும். முடக்குவாதமுற்ற இந்த மனிதரின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பிறகு, பாவங்களை மன்னிக்கத் தமக்கு அதிகாரம் உண்டு என்பதற்குச் சான்றாக இயேசு அவரைக் குணமாக்கவும் செய்கிறார். இயேசு முதன்மைப்படுத்துபவற்றிற்கு ஏற்ப நமது செபத்தின் முன்னுரிமைகளை வரிசைப்படுத்த இந்த நிகழ்வு நமக்கு உதவ வேண்டும். பாவத்திற்காக மனம் வருந்துவதை நாம் முதன்மைப்படுத்தினால், இயேசு நமக்குப் பதிலளிப்பார் என்பதில் உறுதியாக இருக்கலாம். அதற்கப்பால், நமது தேவைகள் அனைத்தையும் இயேசு அறிந்திருக்கிறார். அவற்றை நாம் அவரிடம் எடுத்துரைக்கலாம்; ஆனால் நமது உள்ளத்தில் அவரோடு ஒப்புரவான பிறகே அவ்வாறு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வாறு செபிக்கிறீர்கள் என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் பாவங்களை அன்றாடம் ஆராய்ந்து பார்ப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முயலுங்கள். இதுவே உங்கள் அன்றாடச் செபத்தின் முதலாவதும் மிக முக்கியமானதுமான பகுதியாக மாற வேண்டும். பலரும் தங்கள் பாவங்களை ஆராய்ந்து பார்க்க விரும்புவதில்லை. ஆனால் பாவத்தின்மீது கவனம் செலுத்துவதைவிட, உங்களுக்குத் தேவையான மன்னிப்பின் இரக்கத்தின்மீதும் ஆன்மிகக் குணமளிப்பின்மீதும் கவனம் செலுத்தும்போது, அதைச் செய்வது மிகவும் எளிதாகிறது. உங்கள் அன்றாடப் பாவங்களை நீங்கள் எந்த அளவுக்கு அதிகமாக உணர்கிறீர்களோ, அந்த அளவுக்கு அதிகமான இரக்கத்தைப் பெறுவீர்கள். உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக எந்த அளவுக்கு அதிகமான இரக்கத்தைப் பெறுகிறீர்களோ, அந்த அளவுக்கு மற்ற வழிகளிலும் நம் ஆண்டவர் உங்களை நிறைவாக ஆசீர்வதிக்க முடியும். ஒவ்வொரு நாளும் நம் ஆண்டவரின் இரக்கத்தையும், அந்த இரக்கம் உங்களுக்குத் தேவை என்பதையும் எப்போதும் தொடக்கமாகக் கொள்ளுங்கள்; மற்ற அனைத்தையும் நம் ஆண்டவர் கவனித்துக்கொள்வார்.

இரக்கமுள்ள என் ஆண்டவரே, என் இதயத்தின் ஆழத்தில் நான் உம்மோடு ஒப்புரவாவது, அன்றாடம் என் செபத்தில் முதன்மை பெற வேண்டும் என்று நீர் விரும்புகிறீர். நான் உம்மோடு இன்னும் நெருங்கி வரும்படி, என்னை மன்னித்துக் குணப்படுத்த நீர் விரும்புகிறீர். அன்புள்ள ஆண்டவரே, என் பாவங்களை மன்னித்தருளும்; அன்றாடம் உமக்கும் பிறருக்கும் எதிராக நான் பாவம் செய்யும் விதங்களை இன்னும் கவனமாக உணர்ந்துகொள்ள எனக்கு உதவியருளும். மீட்பளிக்கும் இந்த அருளுக்காகவும் இரக்கத்திற்காகவும் இப்போதே உமக்கு நன்றி கூறுகிறேன். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.


பாவிகளுடன் உணவருந்துதல்

பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை

“நலமாயிருப்பவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை; நோயுற்றவர்களுக்கே தேவை.  நீங்கள் போய், பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்  என்னும் சொற்களின் பொருளைக் கற்றுக்கொள்ளுங்கள். நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்.”  மத்தேயு 9:12–13

உங்களை “நலமாயிருப்பவர்” என்று கூறுவீர்களா, அல்லது “நோயுற்றவர்” என்று கூறுவீர்களா? நீங்கள் “நேர்மையாளர்கள்” மத்தியில் இருக்கிறீர்களா, அல்லது “பாவிகள்” மத்தியில் இருக்கிறீர்களா? இந்தக் கேள்விக்கு எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். பாவத்தால் வீழ்ச்சியுற்ற நமது மனித இயல்போடு வரும் செருக்கு, நாம் “நலமாயிருப்பவர்கள்”, “நேர்மையாளர்கள்” என்று கூறிக்கொள்ள நம்மை அடிக்கடி தூண்டுகிறது என்பது உண்மையே. ஆனால் நாம் “நோயுற்றவர்கள்”, “பாவிகள்” மத்தியில்தான் இருக்கிறோம் என்ற உண்மையைத் தாழ்ச்சி வெளிப்படுத்தும்.

தம்மைப் பின்பற்றுமாறு தாம் சற்றுமுன் அழைத்திருந்த வரிதண்டுபவரான மத்தேயுவின் வீட்டில் இயேசு உணவருந்துவதைக் கண்ட பரிசேயர்களுக்கு அவர் அளித்த பதில்தான் இந்தக் கூற்று. மத்தேயு உண்மையிலேயே அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்; பின்னர் தமது வீட்டில் இயேசுவுக்கு விருந்தளித்தார். அந்த விருந்தில், “வரிதண்டுபவர்கள், பாவிகள் பலர்” வந்து இயேசுவோடும் அவரது சீடர்களோடும் அமர்ந்திருந்தனர். இதனால் பரிசேயர்கள் அவர்கள் அனைவரையும் ஏளனம் செய்தனர்.

இயேசுவின் இந்தப் பதிலுக்கு நாம் செவிசாய்ப்பது மிகவும் முக்கியமானது. நலமாயிருப்பவர்களுக்காகவும் நேர்மையாளர்களுக்காகவும் அல்ல, நோயுற்றவர்களுக்காகவும் பாவிகளுக்காகவுமே தாம் வந்ததாக அவர் கூறுவது, முக்கியமான இரண்டு உண்மைகளை நமக்கு எடுத்துரைக்கிறது. முதலாவதாக, நாம் அனைவரும் ஆன்மிக நிலையில் நோயுற்றவர்களாகவும் பாவமுள்ளவர்களாகவும் இருக்கிறோம் என்பதை அது சொல்கிறது. இரண்டாவதாக, இதைத் தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள முடியாமல், நமது செருக்கினால் நாம் நலமாயிருக்கிறோம் என்றும் நேர்மையாளர்களாக இருக்கிறோம் என்றும் கூறிக்கொண்டால், தெய்வீக மருத்துவரான இயேசுவை நமது வாழ்விலிருந்து அடிப்படையில் புறக்கணிக்கிறோம் என்பதை அது சொல்கிறது. அடிப்படையில் நாம், “ஆண்டவரே, நீர் எனக்குத் தேவையில்லை” என்றே கூறுகிறோம்.

பாவிகளோடு இருப்பதைக் குறித்து இயேசு வெட்கப்படவில்லை என்பதைக் கவனிப்பதும் பயனுள்ளது. அவர் சிறிதும் தயங்கவில்லை; உண்மையில், அவர்களுக்காகவே தாம் வந்திருப்பதாகத் தெளிவாகக் கூறினார். ஆகவே, ஆன்மிக நிலையில் நோயுற்றவர்களாகவும் நம் ஆண்டவரின் உதவி தேவைப்படுபவர்களாகவும் உள்ள பாவிகள் நாம் என்பதை ஒப்புக்கொள்ள நாம் அஞ்சவோ வெட்கப்படவோ கூடாது. அந்த உண்மையை மறுப்பது, எதார்த்தத்தை மறுப்பதும், வாழ்வில் நமக்கு நிச்சயமாகத் தேவைப்படும் தொடர்ச்சியான குணமளிப்பின் ஊற்றையே மறுப்பதும் ஆகும். கிறிஸ்து இயேசுவே நமக்குத் தேவை என்பதை மறுப்பதாக அது அமைகிறது.

நம் ஆண்டவர் உங்களுக்குத் தேவையா? ஒவ்வொரு நாளும் அகத்தூய்மையும் குணமளிப்பும் மன்னிப்பும் உங்களுக்குத் தேவையா? இந்தக் கேள்விக்கு முழு மனத்தோடு “ஆம்” என்று சொல்வது உங்களுக்குக் கடினமாக இருந்தால், நீங்கள் உணர்ந்திருப்பதைவிட அதிகமாகப் பரிசேயர்களின் செருக்கோடு ஒருவேளை போராடிக்கொண்டிருக்கலாம். நீங்கள் எவ்வளவு புனிதமடைந்தாலும், எவ்வளவு ஆழமாகச் செபித்தாலும், எவ்வளவு பிறரன்பு கொண்டிருந்தாலும், ஒவ்வொரு நாளும் தெய்வீக மருத்துவரின் குணமளிப்பும் மன்னிப்பும் உங்களுக்கு எப்போதும் தேவைப்படும்.

இன்று உங்கள் வாழ்வில் மன்னிப்பு எவ்வளவு தேவைப்படுகிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். எந்தப் பாவத்தோடு நீங்கள் மிக அதிகமாகப் போராடுகிறீர்கள்? வியப்புக்குரிய வகையில், ஒருவர் எவ்வளவு அதிகமாகப் புனிதமடைகிறாரோ, அவ்வளவு தெளிவாகத் தமது அன்றாடப் பாவங்களையும் மன்னிப்பும் குணமளிப்பும் தமக்குத் தேவை என்பதையும் காண்கிறார். இதை உணர்வதில் உங்களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால், உங்கள் மனச்சான்றை ஆய்வு செய்ய நேரம் ஒதுக்குங்கள். அதை இன்னும் முழுமையாகவும் நேர்மையாகவும் செய்வதற்கான வழிகளைத் தேடுங்கள். அப்படிச் செய்தால், தெய்வீக மருத்துவரான நம் ஆண்டவர் இன்றும் என்றும் உங்களோடு உணவருந்த ஆழ்ந்த விருப்பம் கொண்டிருப்பார் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.

மன்னிக்கும் என் ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னிக்கவும் எங்கள் நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தவும் வந்த இறை மருத்துவர் நீரே. நான் தாழ்ச்சியால் நிறைந்து, என் வாழ்விலுள்ள பாவத்தைத் தெளிவாகக் காணும்படி, என் ஆணவத்தையும் என்னையே நீதிமானாகக் கருதும் மனப்பான்மையையும் அகற்றியருளும். என் பாவத்தை நான் காணும்போது, உம்மிடம் திரும்பவும் உமது அளவற்ற இரக்கத்தில் நம்பிக்கை வைக்கவும் எனக்கு உதவியருளும். அன்புள்ள ஆண்டவரே, நீர் பாவிகளுக்காகவே வந்தீர்; உமது உதவி தேவைப்படும் அந்தப் பாவிகளுள் நானும் ஒருவன். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.


அருளின் புதுமை

பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம் சனிக்கிழமை

“சுருங்காத துணியை வைத்து எவரும் பழைய மேலாடைக்கு ஒட்டுப்போடுவதில்லை; ஏனெனில் அந்தத் துணி மேலாடையை இழுத்துப் பிய்த்துவிடும்; கிழிசலும் இன்னும் பெரிதாகும். புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோற்பைகளில் மக்கள் ஊற்றுவதில்லை. அப்படிச் செய்தால், தோற்பைகள் வெடித்து, திராட்சை இரசம் சிந்திவிடும்; தோற்பைகளும் பாழாகிவிடும். மாறாக, புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோற்பைகளில் ஊற்றுவார்கள்; இவ்வாறு இரண்டும் பாதுகாக்கப்படும்.” மத்தேயு 9:16–17

மோசே மற்றும் இறைவாக்கினர்கள் வழியாக வழங்கப்பட்ட உண்மையான திருச்சட்டத்தை ஒருவர் பிரமாணிக்கமாகப் புரிந்துகொண்டு அதன்படி வாழ்ந்திருந்தாலும்கூட, அருளைப் பற்றிய இயேசுவின் புதிய போதனையாகிய புதிய திருச்சட்டம் அதிலிருந்து மிகவும் வேறுபட்டது என்பதை மேலுள்ள உவமை நமக்குக் கற்பிக்கிறது. அது பழைய திருச்சட்டத்தை வெறுமனே மேம்படுத்தவில்லை; அதற்குப் பதிலாக முற்றிலும் புதியதாக அமைந்தது. மேலும், பரிசேயர்கள் கற்பித்த பல வழக்கங்கள் மோசேயின் திருச்சட்டத்தை உண்மையாக எடுத்துரைக்கவில்லை. அவர்கள் திருச்சட்டத்தின் பொருளிலிருந்து விலகி, அதற்குப் பதிலாக வெளிப்புறச் செயல்முறைகளை அளவுக்கு மீறிய நுணுக்கத்துடனும் தவறான முறையிலும் பெருக்கிக்கொண்டார்கள். எனவே, இயேசுவின் புதிய திருச்சட்டம் இந்தப் பிறழ்வுகளிலிருந்து முற்றிலும் விலகியிருக்க வேண்டியிருந்தது.

இன்றைய காலத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். உங்களிடம் பயன்பாட்டுக்கு ஒவ்வாத அளவுக்குப் பழையதாகிவிட்ட அல்லது செயலிழந்த ஒரு தொலைபேசி இருந்தால், அதைப் பழுதுபார்ப்பதற்காகப் புதிய தொலைபேசி ஒன்றை வாங்கி, அதிலிருந்து பல்வேறு பாகங்களைக் கழற்றிப் பழைய தொலைபேசியில் பொருத்த முயல மாட்டீர்கள். மாறாக, பழைய தொலைபேசிக்குப் பதிலாகப் புதிய தொலைபேசியையே முழுமையாகப் பயன்படுத்துவீர்கள்.

அருளின் புதிய திருச்சட்டத்தின் மையமான ஒரு பண்பு என்னவென்றால், அது முற்றிலும் புதியதாகவும் உருமாற்றம் அளிப்பதாகவும் இருக்கிறது. எனவே, இந்தப் புதிய திருச்சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் வழியாக, நாம் கிறிஸ்துவில் முற்றிலும் புதிய படைப்புகளாக ஆகிறோம். நம்மில் பலவீனமாகவும் பாவம் நிறைந்ததாகவும் இருப்பவற்றை அருள் வெறுமனே ஒட்டுப்போட்டுச் சரிசெய்வதில்லை. அது நம்மை உருமாற்றி, நமது மனித இயல்பை முற்றிலும் புதியதொரு வாழ்வுநிலைக்கு உயர்த்துகிறது. இந்தப் போதனை, பரிசேயர்கள் பல ஆண்டுகளாக உருவாக்கியிருந்த தவறான போதனைகளை மட்டுமே குறித்ததல்ல; மனித வாழ்வையே குறித்தது. யூத வழக்கங்கள் மட்டுமல்ல, மனிதகுலமே உருமாற்றம் அடைய வேண்டியிருந்தது. கிறிஸ்துவில் அனைத்தும் புதிதாக்கப்படுகின்றன.

இந்தப் போதனை அன்றைய யூத மக்களுக்குப் பொருந்திய அதே அளவுக்கு இன்று நமக்கும் பொருந்துகிறது. இன்று நாம் திருமுழுக்கில் அருளின் புதிய வாழ்வைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அருள் நம்மை இன்னும் ஆழமாகத் தொட்டு, கடவுள் விரும்பும் மனிதர்களாக நம்மை இன்னும் முழுமையாக உருமாற்ற அனுமதிக்கும் ஒவ்வொரு முறையும், அந்த வாழ்வைப் புதிதாகப் பெற்றுக்கொள்கிறோம்; உருமாற்றம் அளிக்கும் இந்தத் தொடர்ச்சியான புதுப்பித்தலிலும் பங்குபெறுகிறோம். “புதிய ஒட்டுத்துணியும்” “புதிய திராட்சை இரசமும்” எப்போதும் உருமாற்றம் அளிக்கின்றன; நம் வாழ்நாள் முழுவதும் இந்தப் புதுமையை நாம் ஆவலுடன் எதிர்நோக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருக்கும் மகிழ்ச்சியான கண்டறிதலைப் பற்றி இன்று சிந்தியுங்கள். அருளின் புதிய திருச்சட்டத்தைக் கண்டறிந்து, அதை உங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டு, அது உங்களை உருமாற்ற அனுமதிக்கும்போது, ஒருபோதும் பழமை தட்டாத கண்டறிதலின் பாதையில் நீங்கள் பயணிப்பீர்கள். இது, இவ்வுலகம் வழங்கக்கூடிய எதையும்விட மிக மேலான, தொடர்ந்து நிகழும் ஒரு கண்டறிதலாகும். நம் வாழ்வில் உயிரோடு செயலாற்றும் கடவுளின் கொடைக்கு எதுவுமே ஒருபோதும் ஈடாக முடியாது. அது ஒருபோதும் பழமை தட்டாது. அது எப்போதும் உருமாற்றம் அளித்துக்கொண்டே இருக்கும். அது எப்போதும் புதியதாகவே இருக்கும். இன்று கடவுள் உங்களுக்கு வழங்கும் இந்தக் கொடையைச் சிந்தித்து, உங்கள் முழு இதயத்தோடு அதற்கு “ஆம்” என்று சொல்லுங்கள்.

என்னை உருமாற்றும் என் ஆண்டவரே, என்னைப் புதுப்பிக்கவும், உருமாற்றவும், அருளின் வாழ்வுக்கு உயர்த்தவும் நீர் தொடர்ந்து முன்வருகிறீர். இந்தக் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன்; இதை என் முழு இதயத்தோடு ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். என்றும் புதியதாக இருக்கும் உமது அருளின் இந்தப் பொக்கிஷத்தை நான் கண்டறியும்போது, உமக்கும் எனக்காகக் காத்திருக்கும் உருமாற்றத்திற்கும் “ஆம்” என்று சொல்ல எப்போதும் தயாராகவும் விருப்பமுள்ளவனாகவும் இருப்பேனாக. இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

பொருளடக்கம்


4 தொகுதிகளும் மென்மையான அட்டையுடன் கூடிய அச்சுநூல் & மின்னூல் வடிவங்களில் கிடைக்கின்றன!

Amazon – Google Play – iTunes – Barnes and Noble

இந்தப் பக்கத்தைப் பகிரவும்: